சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றி தமிழ்நாடு அரசின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 6, 2023

சிதம்பரம் நடராசர் கோயிலுக்கு வரும் பக்தர்களின் வழிபாட்டு உரிமையை பாதுகாக்க தனிச்சட்டம் இயற்றி தமிழ்நாடு அரசின் முழு கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும்

சிதம்பரத்தில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில் தீர்மானம்

சிதம்பரம், செப். 6- சிதம்பரம் நடராசர் கோயிலை இந்து அறநிலையத் துறையின் கீழ்க் கொண்டுவரக்கோரி, 5.9.2023 செவ்வாய்க் கிழமை அன்று, சிதம்பரம், போல் நாராயணத் தெருவில், மாலை 6 மணியளவில் நடைபெற்ற மாபெரும் மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில்  மார்க்சிய பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் துணைப் பொதுச்செயலாளர் பா. மோகன் வரவேற்று உரையாற்றினார். 

பா.ம.க. மாநில துணைத் தலைவர், சிதம்பரம் மக்கள் நலக் குழு தலைவர், மேனாள் நகர்மன்றத் தலைவர் வி.எம்.எஸ். சந்திர பாண்டியன் தலைமையேற்று உரையாற்றினார். மக்கள் அதிகாரம் பொதுச்செயலாளர் வழக்குரைஞர் இராஜூ, சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பான பல்வேறு சட்டப் போராட்டங்கள் குறித்து விளக்கிப் பேசினார். சி.பி.அய். மாநிலக்குழு மணிவாசகம், ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் குணசேகரன், கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். கழக செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, சி.பி.எம். பொறுப்பாளர் மூசா, புதுவை திராவிடர் கழகத் தலைவர் சிவ. வீரமணி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

சிதம்பரம் நடராசர் கோயில் தனி மத உட்பிரிவுக் கோயிலா?

முன்னதாக பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் `மக்கள் திரள் மாநாட்டினுடைய தீர்மானத்தை வாசித்தார். அதாவது, ”சிதம்பரம் நடராஜன் கோயிலை தமிழ் நாடு அரசின் இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்” என்று அந்த நீண்ட தீர்மானத்தின் சுருக்கம் அமைந்திருந்தது. மேடையில் இருந்த தலைவர்கள் உடபட, மக்கள் அனைவரும் எழுந்துநின்று அந்த சிறப்பான தீர்மானத்தை கையொலி எழுப்பி ஆதரித்து நிறைவேற்றி சிறப்பித்தனர். 'தகைசால் தமிழர்' விருது பெற்ற தமிழர் தலை வருக்கும், 97 ஆவது வயது பிறந்த நாள் காணும் வி.வி.சுவாமி நாதன் அவர்களுக்கும் சிறப்பு செய்ய சிதம்பரம் மக்கள் நலக் குழு ஏற்பாடு செய்திருந்தது. உடல்நலக்குறைவால் வி.வி. சுவாமிநாதன் அவர்களால் வர இயலவில்லை என்று தெரி விக்கப்பட்டு, ஆசிரியருக்கு மட்டும் மரியாதை செய்யப் பட்டது. ஆசிரியர் கூச்சத்தோடு அதை ஏற்றுக்கொண்டார். அப்போதும் மலர் கிரீடம் வைத்ததை மறுத்துவிட்டார். இந்த நிகழ்வின் வெற்றிவிழாவில் வி.வி.சுவாமிநாதன் அவர்களுக்கு சிறப்பு செய்யப்படும் என்றும் மேடையிலேயே அறிவிக்கப் பட்டது. 

அதைத் தொடர்ந்து, டாக்டர் ஜஸ்டிஸ் ஏ.கே.ராஜன் எழுதிய, ‘சிதம்பரம் நடராசர் கோயில் தனித்த மத உட்பிரிவு கோயிலா? என்ற நூல் வெளியிடப்பட்டது. தொடர்ந்து விற்பனையும் நடைபெற்றது. கொண்டு வந்த புத்தகங்கள் அனைத்தும் விற்றுத்தீர்ந்தன. பொதுக்கூட்டம் நடைபெறும் இதே நாளில் டில்லியில், "இண்டியா" கூட்டணியின் அவசரக் கூட்டம், காங்கிரஸ் கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் நடைபெற்றதால், கூட்டத்தில் கலந்துகொள்ளவிருந்த முக்கிய தலைவர்கள் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கலந்துகொண்டு சிறப்பித்த தோழர்கள்!

நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பில் மாவட்ட துணைத் தலைவர் கோவி. பெரியார் தாசன், மாவட்ட துணைச் செயலா ளர் கா. கண்ணன், மாவட்ட அமைப்பாளர் தென்னவன், மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர்  நெடுமாறன், செயலாளர் செங்குட்டுவன் ஆகியோர் சிறப்பாக ஈடுபட்டு, நிகழ்ச்சியை மிகச்   நடத்திக் கொடுத் தனர்.  முன்னதாக தொடக்கத்தில் மக்கள் பாடகர் கோவன் குழுவினரின் பகுத் தறிவு, இனவுணர்வுப் பாடல் பாடும் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இறுதியாக மாவட்ட இணைச் செயலாளர், கழகச் சொற் பொழிவாளர் யாழ். திலீபன் நன்றியுரை கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார். 

நிகழ்ச்சிக்கு சுற்றுவட்டாரமான கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், புதுச்சேரி ஆகிய பகுதிகளிலிருந்து த.சீ.இளந்தி ரையன் உள்ளிட்ட தோழர்கள் பெருவாரியாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர். நிகழ்ச்சி முடியும் வரை கூடியிருந்த மக்கள் கலையாமல் இருந்து தலைவர்கள் பேசிய கருத்துகளை கேட்டுச் செவிமடுத்தனர். இந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானங்கள் வருமாறு:

தீர்மானம்

தீர்மானங்களை முன்மொழிந்தவர் பொதுச்செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் கூட்டத்தில் கலந்துகொண்ட பொதுமக்கள் அனைவரும் எழுந்துநின்று வழிமொழிந்தனர்.

சிதம்பரம் நடராசர் கோவில் பொது மக்களின் உழைப்பில் மன்னர்களால் கட்டப்பட்ட பொதுக்கோவில். சைவர்கள் வழிபடும் நடராசன் சன்னதியும் வைணவர்கள் வழிபடும் கோவிந்தராஜ பெருமாள் சன்னதியும் ஒரே வளாகத்தில் அமைந்த சிறப்புடையது. நடராசர் சன்னதியை தீட்சிதர்கள் பூசை செய்து வருகிறார்கள். பெருமாள் சன்னதியை பட்டாச்சாரியர்கள் பூசை செய்து வருகிறார்கள். தீட்சிதர்களின் ஊழல் முறைகேடு, பக்தர்களின் வழிபாட்டு உரிமையை தடுப்பது, பக்தர்களை தாக்குவது, தேவாரம் பாடி வழிபடு வதைத் தடுப்பது, அறநிலையத்துறை உத்தரவுகளை ஏற்க மறுப்பது போன்ற எதேச்சதிகார போக்கை கண்டித்து பொதுமக்களும் தொடர்ந்து தீட்சிதர்களுக்கு எதிராக போராடி வருகின்றனர். 1888 ஆம் ஆண்டு முதல் 2014 வரை சிதம்பரம் நடராசர் கோவில் நிர்வாகம் தொடர்பாக பல வழக்குகள் நடந்து வந்துள்ளது.

சிதம்பரம் நடராசர் கோவிலில் வழிபட வரும் பல லட்சம் பக்தர்களின் அடிப்படை உரிமைகளை பாதுகாப்பதும். தொன்மையான சிதம்பரம் நடராசர் கோவிலை முழுமையாக பராமரித்து பாதுகாப்பதும் அரசால் மட்டுமே செய்யக்கூடிய காரியமாகும். ஒரு சில தீட்சிதர்கள் கும்பலாக சேர்ந்து கொண்டு கோவிலை வைத்து லட்சகணக்கில் பணம் வசூல் செய்து எந்தவித வரவு செலவு கணக்கு வழக்கும் வெளி உலகிற்கு காட்டுவதில்லை. ஆண்டுக்கு பல கோடி வருமானம் ஈட்டக்கூடிய நடராசர் கோவிலின் ஆண்டு வருமானம் ரூ.30000 மட்டுமே. செலவு போக கையிறுப்பு தீட்சிதர்கள் நீதிமன்றத்தில் காட்டியது வெறும் ரூ.199. அரசுக்கும், பொதுமக்களுக்கும் கணக்கு காட்ட வேண்டும் என்பதற்காக உண்டியல் வைக்காமலும், ரசீதுகள் தராமலும் தீட்சிதர்கள் மோசடியாக நிர்வாகம் செய்து வருகின்றனர். 

தவறு செய்யும் தீட்சிதர்களை...

கோவில் நிர்வாகத்தில் எத்தனை தீட்சிதர்கள் எந்தெந்த  பணிகளில் ஈடுபட்டுள்ளார்கள், தவறு செய்யும் தீட்சிதர்களை யார் விசாரிப்பார்கள், என்ன தண்டனை வழங்குவார்கள், பக்தர்களுக்கு உள்ள குறைகளை தேவைகளை யாரிடம் சொல்வது, அவை மறுக்கப்பட்டால் பக்தர்கள் அடுத்து யாரிடம் முறையிடுவது? போன்ற அடிப்படையான எதற்கும் பதில் தெரியாது. 

உதாரணமாக சிதம்பரம் கோவில் ஆயிரம்கால் மண்ட பத்தை சிவகாசியை சேர்ந்த தனியார் ஒருவரின் இல்லத் திருமண வரவேற்பிற்கு வாடகைக்கு விட்டுள்ளனர். இரவு முழுவதும் பொற்கூரை மீதேறி வெளியூரை சேர்ந்த ஊழியர் கள் அலங்கரித்து உள்ளனர். இந்த செய்தி வெளியே தெரிந்த தும் பொதுமக்கள் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தவுடன். நிர்வாகம் செய்யும் தீட்சிதர்கள் ஒன்று கூடி ஒரே ஒரு தீட்சி தருக்கு ரூ.1000 அபராதம் விதித்து பிரச்சினையை முடித்து விட்டனர். இவ்வாறு அரசையும் பொதுமக்களையும் தீட்சி தர்கள் ஏமாற்றுவதற்கு முடிவு காணப்பட வேண்டும்.

இந்திய அரசமைப்பு சட்டம் இயற்றப்பெற்று, தமிழ்நாடு அரசு இந்து சமய அறநிலையதுறை சட்டம் இயற்றி தமிழ்நாட்டின் அனைத்துக் கோவில்களையும் அதன் சொத்துக் களையும் நிர்வாகம் செய்யும் போது தில்லை கோவில் மட்டும் சட்டப்படி வராது என்பது சரியல்ல. தீட்சிதர்கள் “காலம் கால மாக நாங்கள்தான் நிர்வாகம் செய்கிறோம். இந்த கோவிலை நம்பித்தான் ஜீவாதாரம் செய்து வருகிறோம். இதை விட்டால் எங்களுக்கு வேறு வழியில்லை என்பது உண்மையல்ல. 

தீட்சிதர்கள் பெருமளவில் பாஸ்போர்ட் வைத்துக்கொண்டு மலேசியா - சிங்கப்பூர் என வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் சென்று பெரும் தொழிலதிபர்களிடம் பணம் வசூல் செய்கின்றனர். அரசியல் கட்சிகளில் இருக்கும் தீட்சிதர்கள், சொந்த தொழில் நடத்தும் தீட்சிதர்கள், அரசு மற்றும் தனியார் பணிகளில் இருக்கும் தீட்சிதர்கள், தனியாக டிரஸ்ட் வைத்து அதன் மூலம் பணம் வசூல் செய்யும் தீட்சிதர்கள் என பல வகைகளில் செயல்படுகின்றனர். இன்று கோவிலில் சுமார் நானூறு தீட்சிதர்கள் இருக்கலாம். சட்டப்படியான வெளிப்படையான நிர்வாக முறை இல்லை. தீட்சிதர்கள் பிற்போக்குதனமாக “கும்பல்“ நிர்வாகம் செய் வதை இனியும் அனுமதிக்கக் கூடாது. 

வழிபாட்டிற்கு எதிரான மதவாத சக்திகள்

சிதம்பரம் நடராசர் கோவிலை முறையாக நிர்வாகம் செய்தால் திருவண்ணாமலை, மதுரை மீனாட்சி அம்மன் கோவில் போன்று ஆண்டுக்கு பல கோடி வருமானத்தில் அனைத்து தீட்சிதர்களுக்கும் உரிய வருமானம் சட்டப்படி வழங்க முடியும். கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கும் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்தி தரமுடியும். ஆனால் தீட்சிதர்கள் சிதம்பரம் கோவிலை தங்கள் பூர்வீக சொத்து என தவறாக கருதிக் கொண்டு கோவிலின் வளர்ச்சியை தடுத்து வருகின்றனர். இந்துசமய அறநிலையத் துறையை எதிர்ப்பதற்கு தமிழ்நாட்டு மக்களின் அமைதியான ஆன்மிக வழிபாட்டிற்கு எதிரான மதவாத சக்திகளை கோவி லுக்குள் இழுத்து விடுகின்றனர்.

பரம்பரை வாரிசுரிமை என்பது பணி நியமன முறையிலும், நிர்வாக முறையிலும் நாடு முழுவதிலும் அனைத்து துறைகளிலும் ஒழிக்கப்பட்டுவிட்டது. சிதம்பரம் கோவிலில் மட்டும் பரம்பரை முறைப்படி தீட்சிதர்களே எப்படி அர்ச்சகர்களாகவும், நிர்வாகிகளாகவும் தொடர முடியும்.?. தீட்சிதர்கள் அல்லாத பிற மக்களின் அடிப்படை உரிமைகளை பாதிக்கும் நடவடிக்கை இது.

அது மட்டுமல்ல, தீட்சிதர்கள் தொடர் குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள். அடிதடி கொலை முயற்சி, குழந்தைத் திருமணம், அதிகாரிகளை பணிசெய்யவிடாமல் தடுப்பது, வழிபட வரும் பக்தர்களை தாக்குவது, பெண் பக்தர்களை அவமானப்படுத்தி வன்கொடுமை குற்றம் செய்தது. புகழ்பெற்ற நடராசர் ஆலயத்தின் ஆயிரங்கால் மண்டபத்தை அய்ந்து நட்சத்திர விடுதி போல் அலங்கறித்து பல லட்சங்களுக்கு வாடகைக்கு விட்டது, கோவிலின் தொன்மையை சிதைக்கும் வகையில் பல சட்டவிரோத கட்டுமானங்களை எழுப்பியது. பாண்டிய நாயகம்மாள் சன்னதியை இடித்தது. நடராசர் கோவில் சொத்துக்களை மோசடியாக விற்பனை செய்தது, கோவிலின் வருமானங் களுக்கு கணக்குக் காட்ட மறுப்பது, சட்டப்படி வைக்கப்பட்ட உண்டியலை அகற்றியது, சக தீட்சிதர்களுக்கு சேர வேண்டிய வருமானத்தை தர மறுப்பது, ஒருசில தீட்சிதர்கள் மட்டும் கோவில் வருமானத்தை பங்கு போட்டு கொள்வது. இந்துத்வா மதவாதக் கட்சிகளை தலைவர்களை தங்கள் சார்பில் பேச வைப்பது, அனைத்து மக்களுக்கும் சமமான அமைதியான வழிபாட்டு உரிமை என்பதை சீர்குலைப்பது. இவ்வாறு அடுக்கடுக்கான குற்றச் செயல்களில் தீட்சிதர்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதால் கோவிலை நிர்வாகம் செய்யும் அருகதையை இழந்து விட்டனர். 

கிரிமினல் குற்றம் செய்யும் தீட்சிதர்கள்

இத்தகைய குற்றங்கள் மீது எண்ணற்ற முதல் தகவல் அறிக்கைகள் தீட்சிதர்கள் மீது பதிவு செய்யப்பட்டு சிதம்பரம் காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது. இவ்வாறு கிரிமினல் குற்றம் செய்யும் தீட்சிதர்கள் கோவில் நிர்வாகத் திலும், கருவறையில் அர்ச்சனை செய்வதையும் எப்படி அனுமதிக்க முடியும்?.

சிதம்பரம் நடராசர் கோவில் சிற்றம்பல மேடையில் தேவாரம், திருவாசகம் பாடி வழிபடும் உரிமைக்காக குமுடி முலையை சேர்ந்த சிவனடியார் ஆறுமுகசாமி அவர்கள் தீட்சிதர்களால் கொடூரமாக தாக்கப்பட்டு கை எலும்பு முறிக்க பட்டு, சிவனடியார் தூக்கி கோவிலுக்கு வெளியே தீட்சிதர் களால் வீசப்பட்டார். சிவனடியாருடன் பல்வேறு கட்சி அமைப்புகள் ஒன்றிணைந்து சிற்றம்பலத்தில் தமிழ்பாடும் உரிமைக்காக கடந்த 2000 ஆண்டுமுதல் பல்வேறு சட்டப் போராட்டங்கள் மற்றும் மக்கள் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக, 2008ஆம் ஆண்டு அனைத்து பக்தர்களும் எந்தவித கட்டண மின்றி சிற்றம்பல மேடையில் தேவாரம் பாடி வழிபடலாம் என்ற அரசாணை சிவனடியார் ஆறுமுக சாமி மூலம் நிலை நாட்டப்பட்டது. 

மேலும் சிதம்பரம் கோவில் நிர்வாகத்தை அரசு எடுப்பது தொடர்பாக இருபது ஆண்டுகளாக நிலுவையில் இருந்த வழக்கில் சிவனடியார் ஆறுமுகசாமி மூலம் நீதிமன்றத்தின் படி ஏறி 2009ஆம் ஆண்டு சிதம்பரம் கோவிலை இந்துசமய அறநிலையத்துறை கட்டுபாட்டின் கீழ் கொண்டு வந்து உண்டியல் வைக்கப்பெற்று பக்தர்களின் காணிக்கையால் சிதம்பரம் கோவில் பல கோடி வருமானம் ஈட்டியது. 

இறுதியில் மாண்பமை உச்சநீதிமன்றம் ஜனவரி 6, 2014 ஆம் ஆண்டு சிதம்பரம் கோவிலில் தீட்சிதர்கள் தவறு செய்தால் இந்து சமய அறநிலையத்துறை கோவில் நிர் வாகத்தை கையில் எடுத்து அதை சரி செய்ய வேண்டும். தீட்சிதர்களை நிரந்தரமாக அப்புறப்படுத்திவிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் தீர்ப்பளித்துள்ளது.

1939 நீதிமன்ற தீர்ப்பின் மூலம் உறுதி செய்யபட்ட நிர்வாக திட்டத்தின்படிதான் தீட்சிதர்கள் கோவிலை நிர்வாகம் செய்து வருகின்றனர். இந்த திட்டத்தில் உண்டியல் வைக்க வேண்டும் என உள்ளது. அர்ச்சனை சீட்டு, பலகாரக் கடை, சிறப்பு அபிஷேக கட்டணம் அனைத்தும் வெளிப்படையாக ரசீது தரப்பட வேண்டும் என உள்ளது. இது நாள் வரை தீட்சிதர்கள் அதை அமல் படுத்த வில்லை, இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகளும் அதை வலியுறுத்த வில்லை. 

தீட்சிதர்களின் நிர்வாகம் என்பது கோவிலின் பாதுகாப்பு, பக்தர்களின் வழிபாட்டு உரிமை, பொதுமக்களின் பாதுகாப்பு என அனைத்துடன் சம்பந்தப்பட்டது. கோவில் நிர்வாகம் என்பது தீட்சிதர்களின் சொந்த விவகாரம் அல்ல. தீட்சிதர்கள் எதேச்சதிகாரமாக சிற்றம்பல மேடையை மூடுவதும், பக்தர் களை வழிபட தடுப்பதும், பக்தர்களை இழிவுபடுத்தி தாக்கு வதும், இந்து சமய அறநிலையத்துறை பிறப்பிக்கும் உத்தரவு களை ஏற்க மறுப்பதும், காவல்துறையினரை துச்சமாக மதிப்பதும் நடந்து வருகிறது. எனவே ஒவ்வொரு முறையும் பல நூறு காவல்துறையினர் காவலில் பக்தர்கள் வழிபட வேண்டிய அசாதாரண சூழலை அவ்வப்போது தீட்சிதர்கள் ஏற்படுத்தி வருகின்றனர். இவைகளுக்கு நிரந்தர தீர்வு காணப்பட வேண்டும் என்றால் தமிழ்நாடு அரசு சிதம்பரம் நடராசர் கோவிலை அரசு ஏற்று நிர்வாகம் செய்ய வேண்டும்.

பக்தர்களிடம் நேரில் சந்தித்து பெறப்பட்ட ஆலோச னைகளை அரசின் கவனத்திற்கு சமர்பிக்க விரும்புகிறோம்.

1. அனைத்து விதமான பூசை, அர்ச்சனைகளுக்கும் உரிய ரசீது தரப்பட வேண்டும்.  சிற்றம்பல மேடையில் நின்று நடராசனை தரிசிக்க கட்டணம் வசூலிக்கக் கூடாது. 

3. பக்தர்களின் நலன் கருதி ஒவ்வொரு சன்னதியிலும் பூசை செய்யும் தீட்சித அர்ச்சகர்கள் பெயர் கோவில் அலுவலக  வளாகத்தில் ஒட்டப்பட வேண்டும்.

4. பிற கோவில்களில் உள்ளது போல் அங்கீகரிக்கபட்ட தரமான பிரசாத கடைகள் அமைக்கவேண்டும்.

5.நடராசர் கோவிலுக்கு சொந்தமாக உள்ள நகைகள் பட்டியல், நிலங்கள் மற்றும் சொத்து விவரங்களை அதிகாரப் பூர்வமாக இணைதளத்தில் வெளியிட வேண்டும்.

6.கோவிலுக்கு வரும் பக்தர்களின் குறைகளை கேட்கவும், அதை நிவர்த்தி செய்யவும் உரிய  அலுவலரின் பெயர் மற்றும் போன் நம்பரை பக்தர்களுக்கு தெரிவிக்க வேண்டும். புகார் பெட்டி வைக்க வேண்டும்.

7. கோவிலில் பணிபுரியும் தீட்சிதர்களுக்கு அவரவர் வேலைகளுக்கு ஏற்ப உரிய மாதம் ஊதியம் மற்றும் சட்டப் படியான பணப்பலன்கள் வெளிப்படையாக வழங்கப்பட வேண்டும்.

 8. தினமும் சிற்றம்பல மேடையில் ஒவ்வொரு கால பூசையின் போதும்  தேவார திருமுறைகளை இனிமையான குரலில் பாடும் வகையில் ஓதுவார்களை போதுமான ஊதியம் கொடுத்துபணியமர்த்த வேண்டும்.

9. பரம்பரை வாரிசுரிமைப்படியான பணிநியமனம், நிர்வாக முறை சட்டப்படி ஒழிக்கப் பட்டுவிட்டது. சிதம்பரம் கோவி லில் மட்டும் பரம்பரையாக தீட்சிதர்கள் நிர்வாகம் மற்றும் அர்ச்சகர் முறை ஒழிக்கப்பட வேண்டும்.

10. அனைத்து ஜாதி அர்ச்சகர் பணி நியமனம் சிதம்பரம் நடராசர் கோவிலுக்கும் நியமிக்கப்படவேண்டும்.

11. சிதம்பரம் நடராசர் கோவிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும்.

12. காவல் நிலையத்தில் கிரிமினல் வழக்குகள் உள்ள தீட்சிதர்கள் கோவில் கருவறையில் பூசைசெய்வதிலிருந்தும், நிர்வாகத்திலிருந்தும்  உடனடியாக நீக்கப்பட வேண்டும்.  

13. உலகப்புகழ் பெற்ற சிதம்பரம் நடராசர் கோவிலை இதுவரை நிர்வாகம் செய்துவந்த தீட்சிதர்களால் ஏற்பட்ட விளைவுகள் குறிப்பாக வருமான இழப்பு, சொத்துக்கள் இழப்பு, பக்தர்களுக்கு ஏற்பட்ட துன்ப துயரங்கள் கோவிலுக்கு நன்கொடை வழங்கிய பெரும் செல்வந்தர்கள் குறித்தும் அதன் வரவு செலவு குறித்தும், தீட்சிதர்களின் தனிப்பட்ட வருமானம் குறித்தும் நீதிவிசாரணை நடத்தப்படவேண்டும்.

14. தீட்சிதர்கள் மீது நிலுவையில் உள்ள கொலை கொள்ளை, நகை திருட்டு, அடிதடி, வன்கொடுமை, கோவில் சொத்துக்களை மோசடியாக விற்றது. அரசு அதிகாரிகளை பணி செய்யவிடாமல் தடுத்த வழக்கு, உள்ளிட்ட அனைத்து வழக்குகளையும் உடனடியாக விசாரித்து தீர்ப்பு வழங்க நடவடிக்கை எடுக்க  வேண்டும்.

15. தீட்சிதர்கள் சட்டத்திற்கு புறம்பாக தொடர்ந்து பால்யவிவாகம் செய்து வருகின்றனர். அது குறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

16. அரசியல் கட்சிகளில் இருக்கும் தீட்சிதர்கள், சொந்த தொழில் நடத்தும் தீட்சிதர்கள், அரசு மற்றும் தனியார் பணிகளில் இருக்கும் தீட்சிதர்கள், கிரிமினல் வழக்கில் இருக்கும் தீட்சிதர்கள், தில்லை கோவில் நிர்வாகத்திலிருந்து முழுமையாக நீக்கப்பட வேண்டும்.


No comments:

Post a Comment