பெண்கள் இட ஒதுக்கீடு ஒரு அரசியல் நாடகம்! மக்களவையில் திருமாவளவன் - தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, September 21, 2023

பெண்கள் இட ஒதுக்கீடு ஒரு அரசியல் நாடகம்! மக்களவையில் திருமாவளவன் - தமிழச்சி தங்கபாண்டியன் பேச்சு

புதுடில்லி, செப்.21 மகளிர் இடஒதுக்கீடு மசோதா என்பது எதிர்வரும் மக்களவைத் தேர்தலுக்கான அரசியல் நாடகம் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் விமர்சித்துள்ளார்.

சட்டப் பேரவைகளிலும், நாடாளுமன்றத்திலும் மகளிருக்கு 33% இடஒதுக் கீடு வழங்க வழி வகுக்கும் மகளிர்  இடஒதுக்கீடு மசோதா தொடர்பாக மக்களவையில்  நடைபெற்ற விவாதத் தில் பங்கேற்று திருமாவளவன் பேசி யது: “வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த மசோதாவை நான் வரவேற்று ஆதரிக் கிறேன். நாம் காலம் காலமாக பெண் களை வஞ்சித்து வந்திருக்கிறோம். எக்காலத்திலும் மன்னிக்க முடியாத பெரும் பாவத்தை இழைத்திருக்கிறோம். கல்வி, அதிகாரம், கருத்துரிமை, சொத் துரிமை ஆகியவற்றை நாம் அவர்களுக்கு மறுத்திருக்கிறோம். பெண்கள் ஒடுக்கப் பட்டு, வீட்டிலேயே முடக்கப்பட்டிருக் கிறார்கள். ஆண்களுக்கு பணிவிடை செய்வதே அவர்களின் வாழ்வு என்று மாறிப்போனது. பிறந்தது முதல் இறக்கிற வரை ஆண்களை நம்பியே வாழ வேண்டிய சமூக அமைப்பை இந்த மண்ணில் நாம் உருவாக்கி இருக்கிறோம். 

இதுதான் இன்றைக்கு நமது குடியர சுத் தலைவரையே நாடாளுமன்றத் திறப்பு விழாவுக்கு அழைப்பதற்கு தயக்கத்தை ஏற்படுத்தி இருக் கிறது. அவர் பழங்குடி பெண் என்ப தாலா அல்லது கணவனை இழந்த கைம்பெண் என்பதாலா என்ற கேள்வி எழுந்துள் ளது. பாஜகவைச் சேர்ந் தவர்கள் ஆள் பவர்கள் இதற்கு பதில் சொல்ல வேண் டும். ஒரு பெண்ணை அதிகாரத்தில் அமர வைத்துவிட்டு அவரை செயல் படவிடாமல் இருக்கச் செய்வது பாவத்திலும் பெரும் பாவம்.

அந்த வகையில் இந்த இடஒதுக்கீடு மசோதாவை உடனடியாக அமல்படுத்த முடியாத நிலையை இந்த அரசு உருவாக்கி இருக்கிறது. பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவை 1989இ-ல் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அறிமுகப்படுத்தினார். 33 ஆண்டுகளுக்குப் பிறகு அது தற்போது அவையில் நிறைவேறும் நிலைக்கு வந்திருக்கிறது. மக்கள் தொகையில் பாதியாக இருக்கும் ஒரு சமூகத்துக்கு 33% இடஒதுக்கீடு வழங்க முன்வந்தி ருப்பது அதுவும் ஏதோ இரக்கப்பட்டுத் தருவதைப் போல தருவது சரியா? இந்த மசோதா நிறைவேறப் போகிறது. ஆனால், எப்போது அமலுக்கு வரப் போகிறது என்ற கேள்வி உள்ளது. 2033இ-ல்தான் இது நடைமுறைக்கு வரும் என்ற நிலை உள்ளது.

எப்போது மக்கள் தொகை கணக் கெடுப்பு நடத்தப்போகிறோம், எப் போது தொகுதி மறுவரையறை செய்யப் போகிறோம் என்பது தெரியவில்லை. இந்த மசோதாவை உடனே அமலுக்குக் கொண்டு வர வேண்டும் என்ற முனைப்பு இல்லாமல் இதனை ஏன் அறிமுகப்படுத்த வேண்டும்? எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தலை மனதில் கொண்டு மேற்கொள்ளப்பட்டுள்ள நாடக அரசியல் இது" என்று திருமா வளவன் பேசினார்.

தமிழச்சி தங்கபாண்டியன்

மகளிர் இட ஒதுக்கீடு மசோதா குறித்து திமுக நாடாளுமன்ற உறுப் பினர் தமிழச்சி தங்கபாண்டியன் கூறியுள்ளதாவது; மகளிருக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை திமுக ஆதரிக்கிறது. இருப்பினும், மசோ தாவின் அனைத்து அம்சங்களையும் முழுமையாக பார்க்க வேண்டும்.

பெண்களுக்கான இட ஒதுக்கீடு உரிமை மற்றும் பெண்களுக்கு அதி காரம் அளிப்பதில் தமிழ்நாடு முன்னு ரிமை அளிக்கிறது. இவ்வாறு அவர் கூறியுள்ளார். பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மகளிர் இட ஒதுக்கீடு மசோதா, புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் முதல் அலுவலாக நேற்று தாக்கல் செய்யப்பட்டது. மசோதா தாக்கல் செய்யப்பட்ட நிலையில், மக்களவையில் மசோதா மீது நாளை விவாதம் நடை பெற உள்ளது.

அதேபோல, மாநிலங்களவையில் வியாழக்கிழமை அன்று மகளிர் இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான கட்சிகள் மகளிர் இட ஒதுக்கீடு மசோதாவை ஆதரிப்பதால், மசோதா நிறைவேறுவது உறுதியாகி உள்ளது.


No comments:

Post a Comment