தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 12, 2023

தொல்.திருமாவளவன் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

 ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயம் - பேதமற்ற ஒரு சமுதாயம் - அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய ஒரு சமுதாயம் - அந்த வாய்ப்பை உருவாக்குவதற்கு எழுச்சித் தமிழர் தொல்.திருமா போன்றவர்கள் தேவை!

உங்கள் வாழ்வு உங்களுக்காக அல்ல; மக்களுக்காக - அடிமை விலங்கை உடைத்தெறிவதற்காக - சமத்துவக் கொடி தலைதாழாது பறப்பதற்காக - ஏற்றுவதற்காக!

சென்னை, செப்.12  ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயம் - பேதமற்ற ஒரு சமுதாயம் - அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய ஒரு சமுதாயம் - அந்த வாய்ப்பை உருவாக்குவதற்கு எழுச்சித் தமிழர் தொல்.திருமா போன்றவர்கள் தேவை! எனவேதான், உங்கள் வாழ்வு உங்களுக்காக அல்ல; மக்களுக்காக - அடிமை விலங்கை உடைத்தெறிவதற்காக - சமத்துவக் கொடி தலைதாழாது பறப்பதற்காக - ஏற்றுவதற்காக என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

எழுச்சித் தமிழர் தொல்.திருமாவளவன் 

பிறந்த நாள் விழா!

கடந்த 16.8.2023 அன்று மாலை சென்னை காமராசர் அரங்கில் நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் எழுச்சித் தமிழர் தொல்.திருமாளவன் எம்.பி., அவர்களின் 61 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  வாழ்த்துரையாற்றினார்.

அவரது வாழ்த்துரை வருமாறு:

நம்பிக்கை நட்சத்திரத்தின் 

61 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழா

உங்களையெல்லாம் சந்திக்கக்கூடியதில் மிகப்பெரிய மகிழ்ச்சி ஊற்றாகப் பெருகக்கூடிய நிலையில் - அற்புத மான ஒரு நம்பிக்கை நட்சத்திரத்தின் 61 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவில், இந்த இளைஞருக்கு, இந்த வாலிபருக்கு, இந்தக் கொள்கை முறுக்குக்கு, கொள்கை முறுக்கு அதிகமா? மீசை முறுக்கு அதிகமா? என்பதைப் பற்றி ஒரு பட்டிமன்றமே கூட நடத்தலாம் என்று சொல்லக்கூடிய அளவிற்கு, சிறப்புமிகுந்த எனது அருமைச் சகோதரர் மூன்றாவது குழலின் முக்கியமான, முதன்மையானவராக இருக்கக்கூடிய அருமை எழுச்சித் தமிழர் திருமா அவர்களுடைய 61 ஆம் ஆண்டு பிறந்த நாள் தொடக்கவிழா - இதை நாங்கள் தமிழில் மணிவிழா என்று அழைப்போம்.

இப்பொழுது திராவிடம் வந்த பிறகுதான் மணிவிழா - அதற்கு முன்பு வாயில் அவ்வளவு எளிதாக நுழைய முடியாத சொற்கள் - பண்பாட்டுப் படையெடுப்பினுடைய வெளிச்சங்கள் -நாம் வீழ்ந்ததற்கு அடையாளமாக ‘‘சஷ்டியப்த பூர்த்தி'' என்பார்கள்.

வாயில் நுழைகிறதா?

சஷ்டி என்றால் என்ன?

அப்தமென்றால் என்ன?

பூர்த்தி என்றால் என்ன? என்று தெரியாத அளவிற்கு இருந்த நேரத்தில், யாரோ வந்து அந்த விழாவை நடத்துவார்கள்.

பல்லக்கில் அழைத்து வரப்பட்ட 

பிறந்த நாள் மலர்

அதுமட்டுமல்ல, அவர்களைத்தான் பல்லக்கில் தூக்கிக் கொண்டு வருவார்கள். ஆனால், இங்கே திருமாவைப்பற்றி, எனது அருமைச் சகோதரரைப்பற்றி, பெரியார் திடல் பட்டறையிலிருந்து வார்க்கப்பட்ட, முனை மழுங்காத போர்க் கருவியாக, ஆயுதமாக இருக்கக்கூடிய எங்கள் எழுச்சித் தமிழர் அருமைச் சகோதரர் அவர்களுடைய புகழைப் பாடக்கூடிய, அந்த மலரை பல்லக்கில் வைத்து அழைத்து வந்தார்கள்.

இதுவரை கம்பராமாயணத்தைத்தான் சுமந்திருக் கிறார்கள்; இப்பொழுதுதான், அதற்கு வம்ப இராமா யணமாக இருக்கக்கூடிய எங்களுடைய எழுச்சித் தமிழர் அவர்களுடைய குரலையே கூட, அவருடைய மலரையே கூட தூக்கிச் சுமப்பதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று சொல்வதற்கு ஓர் அடையாளம் அது.

அதைத்தான் இங்கே கொண்டு வந்தார்கள்.

அப்படிப்பட்ட இந்த அருமையான விழா நாய கருக்குப் பாராட்டுகள் என்பதற்காக.

விழா நாயகர் - என்றைக்கும் விழமாட்டார்; யாராலும் கீழே தள்ள முடியாது என்பதுதான் மிக முக்கியமானது.

ஸனாதனத்தை எரிக்கும் சமத்துவ நெருப்பு!

எனவே, நம்முடைய விழா நாயகர் - எங்களுடைய சகோதரர் விழா நாயகருக்கு, இந்த அற்புதமான, சிறப்பான - இன்னும் அவர் சற்று நேரத்திற்குப் பிறகுதான் பிறக்கப் போகிறார் என்றாலும், பிறப்பதற்கு முன் னாலும் கூட, மிக முக்கியமான அளவிற்கு நடத்தக்கூடிய ஒரு வாய்ப்பாக, விழாவாக இந்த விழாவில் கலந்து கொள் கின்ற ஸனாதனத்தை எரிக்கும் சமத்துவ நெருப்பே - இந்த நெருப்பு அணையக்கூடாது. தீ பரவட்டும்! இந்தியா முழுவதும் தீ பரவட்டும்! புதிய இந்தியா தோன் றட்டும் என்கிற மிகப்பெரிய ஒரு முயற்சியோடு, அதற்கு முன்னுரை போடக்கூடிய நிகழ்ச்சிதான் இந்த விழா!

எழுச்சி விழா - எழுச்சியை 

எப்பொழுதும் காக்கின்ற விழா!!

இந்த விழா வெறும் வெளிச்ச விழா அல்ல!

இந்த விழா வரலாற்றுச் சுவடுகளை மட்டும் நினைவூட்டுகின்ற விழா அல்ல!

இதுதான் எழுச்சி விழா - எழுச்சியை எப்பொழுதும் காக்கின்ற விழா!

அப்படிப்பட்ட அற்புதமான விழாவில், விழா நாயகரைப் பாராட்டுவதற்காக இங்கே சிறப்பாகக் குழுமியிருக்கின்ற, அவருக்காக எதையும் செய்யக்கூடிய அற்புதமான தோழர்களாக இருக்கக்கூடிய, உயிர்த் தியாகிகளாக இருக்கக்கூடிய, இந்த இளைஞர்களுக்குச் சமம் எந்த இளைஞர்களும் கிடையாது. எங்கே அனுப்பினாலும் சரி - சிறைச்சாலைக்கு அனுப்பினாலும் சரி - தூக்குமேடைக்கு அனுப்பினாலும் சரி - நாங்கள் தயார் என்று சொல்லக்கூடிய அளவிற்குப் பண்பட்ட கொள்கை வீரர்களாக இருக்கக்கூடிய அருமைத் தோழர்களே!

எளிமையின் சின்னமாக, என்றைக்கும் ஏழைத் தோழர்களின் தோழர் அய்யா நல்லகண்ணு

அதேபோல, இவ்விழாவிற்குத் தலைமையேற்று, சிறப்பாக இங்கே மலரை வெளியிட்ட நம்முடைய மூத்த தலைவர் - 98 வயது முடிந்து, 99 ஆம் வயதில் காலடி எடுத்து வைக்கப் போகின்ற அய்யா எளிமையின் சின்னமாக, என்றைக்கும் ஏழைத் தோழர்களின் தோழனாக இருக்கக்கூடிய அய்யா ஆர்.நல்லகண்ணு அவர்களே!

காலையில் நம்முடைய ஒப்பற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுடைய வாழ்த்தைப் பெற்றுத் தான் திருமா அவர்கள் இங்கே வந்திருக்கிறார்.

கலைத் துறையில் தனிப் பாதையை வகுத்துக்கொண்டுள்ள இனமுரசு சத்யராஜ்!

ஆகவே, இது எங்கள் குடும்பம்; திராவிடப் பேரியக் கக் குடும்பம். ஸனாதனத்தை வேரறுக்கக்கூடிய அறிவாயுதப் படைகள் கொண்ட ஒரு குடும்பம். இந்தக் குடும்பத்தில் உறுப்பினராக இருக்கக்கூடிய இனமுரசு - கலைத் துறையில் தனிப் பாதையை வகுத்துக்கொண்டு, இவருக்கு இணை எவருமில்லை என்று சொல்லக்கூடிய பெருமைக்கு உகந்த எங்கள் இனமுரசு சத்யராஜ் அவர்களே,

இன உணர்வை எப்பொழுதும் வற்றாது கொடுத்துக் கொண்டிருக்கக் கூடிய பகுத்தறிவுப் பாவலர் அறிவுமதி அவர்களே,

கவிஞர் பழனிபாரதி அவர்களே, பாடலாசிரியர் கபிலன் அவர்களே, கவிஞர் காசிமுத்து மாணிக்கம் அவர்களே, கவிஞர் தனிக்கொடி அவர்களே, இனியன் அவர்களே, தேன்மொழி தாஸ் உள்ளிட்ட கவிஞர் பெருமக்களே,

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் பொதுச்செயலா ளர்கள் அன்பிற்கும், பாராட்டுதலுக்கும் உரிய கொள்கைத் தங்கம் சிந்தனைச்செல்வன் அவர்களே, துரை. ரவிக்குமார் எம்.பி., அவர்களே,

துணைப் பொதுச்செயலாளர் கொள்கைத் தோழர் வன்னிஅரசு அவர்களே, சட்டப்பேரவை உறுப்பினர்கள் எஸ்.எஸ்.பாலாஜி அவர்களே, ஆளூர் ஷாநவாஸ் அவர்களே,

புதிய கலைப்புலி அல்ல; புதிய கலை சிறுத்தை

ஊடகப் பிரிவு செயலாளர் பனையூர் பாபு அவர்களே, மற்றும் நடன நிகழ்ச்சியை, நடனம் என்று சொன்னால், ஒரு குறிப்பிட்டவர்களால்தான் ஆட முடியும்; குறிப்பிட்ட இசைக்குத்தான் ஆட முடியும்; அது ஒரு மத வட்டத் திற்குள்தான் இருக்கவேண்டும்; இன்னுங்கேட்டால், ஒரு வட்டத்திற்குள் இன்னொரு வட்டம் ஜாதி வட்டத் திற்குள்தான் இருக்கவேண்டும் என்ற அந்த அச்சை முறித்து, இங்கே வரலாற்றை உருவாக்கி இருக்கக்கூடிய புதிய கலைப்புலி - புதிய கலை சிறுத்தை என்பதுதான் மிக முக்கியமானது. அப்படிப்பட்ட கலை சிறுத்தையாக இருக்கக்கூடிய அருமை நண்பர் கலைப்பண்பாட்டுத் துறை அறிவுரைஞர் ஜாகிர் உசேன் அவர்களே,

வெள்ளம்போல் திரண்டிருக்கக்கூடிய எனது அருமை உறவுகளே, கொள்கை உறவுகளே, புதிய வரவு களே, உங்கள் எல்லோரும் அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

படையெடுப்புகளிலேயே மிக ஆபத்தானது பண்பாட்டுப்படையெடுப்பு

சஷ்டியப்த பூர்த்தி என்பது என்ன?

குழந்தைகள் பெயரை தமிழில் மாற்றவேண்டும் என்றுகூட திருமா அவர்கள் ஓர் இயக்கத்தையே நடத்தினார்.

திராவிடத்தினுடைய அடிப்படை தத்துவம் அதுதான். படையெடுப்புகளிலேயே மிக ஆபத்தான படையெடுப்பு எதுவென்று சொன்னால், பண்பாட்டுப்படையெடுப்பு தான்.

தந்தை பெரியார் அவர்கள் மிக அழகாக, எவருக்கும் புரியும்படி சொன்னார்.

‘‘அரசியல் படையெடுப்பு என்பது காலில் போட்ட விலங்கு. தடுமாறும்போது எல்லோருக்கும் புரியும். ஆகவே, அதைச் சுட்டிக்காட்டுவது, அதைப் புரிந்துகொள்வது என்பது மிக எளிதானது.

பொருளாதாரப் படையெடுப்பு என்பது கைகளில் போட்ட விலங்கு; அதுவும் கண்ணுக்குத் தெரியும்.

ஆனால், இன்னொரு விலங்கு இருக்கிறதே, மிகவும் ஆபத்தமான விலங்கு அது. அது எங்கே பூட்டப்பட்டது என்றால் நண்பர்களே, மூளையில் போடப்பட்ட விலங்கு. அதுதான் பண்பாட்டுப் படையெடுப்பு'' என்றார் தந்தை பெரியார்.

பண்பாட்டுப் படையெடுப்புதான் 

மூளையில் போடப்பட்ட விலங்கு

அந்தப் பண்பாட்டுப் படையெடுப்புதான் மூளையில் போடப்பட்ட விலங்கு. அதை உடைப்பதற்கு இந்த நாட்டில், இதுபோன்ற இயக்கங்கள்தான், அதுவும் திருமா போன்ற தளபதிகள்தான், நம்பிக்கைகள்தான் தேவை யானவையாகும். ஸனாதனத்தின் மூலவேர், கிருமி அங்கேதான் இருக்கிறது; ஆகவே, அதை உடைப்ப தற்காகத்தான் அவர் நீண்ட நாள் வாழவேண்டும் என்று வாழ்த்துவதற்கு இந்த வாழ்த்தரங்கம்.

இது அவருக்காக அல்ல; நமக்காக, நாட்டிற்காக. 

தேர்தல் நேரத்திலேயே மாநாட்டினை திருச்சியில் போட்டார். ஸனாதனத்தை எதிர்த்து முதல் குரல் கொடுத் ததே விடுதலைச் சிறுத்தைகள்தான். அது தொடர்கிறது. நாளை அது வெற்றி பெறும்.

முனை மழுங்காத கருவிதான் திருமா என்ற மிகப்பெரிய ஒரு போர் வாள்!

இன்னும் ஆறே மாதங்களில் ஒன்றியத்தில் ஆட்சி மாறும். அதற்கு மிக முக்கியமான கருவிகள்தான் இங்கே அமர்ந்திருக்கின்றவர்கள். அந்த கருவிகளில் உச்சக் கட்டம் - முனை மழுங்காத கருவிதான் திருமா என்ற மிகப்பெரிய ஒரு போர் வாள் - ஒரு கருத்து - ஒரு கூர் ஆயுதம் - போராயுதம் என்பதை நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

‘‘சஷ்டியப்த பூர்த்தி'' என்பதைப்பற்றி இளைஞர்கள் தெரிந்துகொள்ளவேண்டிய செய்தி என்னவென்றால், 60-க்கு மேலே ஆண்டே கிடையாது. ஏனென்றால், அவர்கள் காலத்திலே அதற்குமேல் நம்பிக்கையும் கிடையாது; வாழ்ந்ததும் கிடையாது.

61 அய், 99 தலைதூக்கி கைகொடுத்து நிற்கிறது!

ஆனால், ஸனாதனம் தோற்று, அறிவியல் வெற்றி பெற்ற காரணத்தினால்தான் நண்பர்களே, இன்றைக்கு 61 வயதிற்குப் பிறந்த நாள் விழாவில், 61-அய் 99 பாராட்டியது; 90 தலைதூக்கி கைகொடுத்து நிற்கிறது.

சிலர் வெட்கமில்லாமல், பாரதீயம் பேசுகின்றவன் சொல்கிறான், தமிழ் வருடப் பிறப்பு என்று.

நான் அவர்களைப் பார்த்துக் கேட்கிறேன், இன்னும் என் மக்கள் என் மண் என்றெல்லாம் பேசுகிறார்களே, அவர்களைப் பார்த்துக் கேட்கிறோம் - உங்களுடைய தமிழ் வருடப் பிறப்பு என்று சொல்கிறீர்களே, அதில் ஒரே ஒரு வருடத்திற்காவது தமிழ்ப் பெயர் உண்டா? என்று சொல்லுங்கள்.

நாங்கள் பகுத்தறிவுவாதிகள் - இரண்டே சொற்கள் தான் எங்களுக்கு மிக முக்கியம். இங்கே இருக்கின்ற அத்துணை பேருக்கும் சேர்த்தே சொல்கிறேன் - இங்கே கட்சியில்லை - கொள்கை உண்டு.

‘‘திருந்து அல்லது திருத்து'' என்பதுதான் மிக முக்கியம்.

நாங்கள் தவறாகச் சொல்கிறோம் என்றால், எங் களைத் திருத்துங்கள், திருந்திக் கொள்கிறோம்.

ஆனால், நீங்கள் தவறாக நினைத்துக் கொண்டிருந் தால், திருந்தவேண்டும்; இல்லையென்றால், திருத்தப் படுவீர்கள்.

அப்படிப்பட்ட சூழ்நிலையில் நண்பர்களே, ‘‘பிரபவ, யுவ, சுக்கில'' என்றெல்லாம் சொல்லி, வாயில் நுழையாத பெயர்கள் அறுபதோடு முடிந்து போயிற்று.

ஸனாதனத்தை வீழ்த்திய அறிவியல்தான் 

61 ஆக மலர்ந்திருக்கிறது

60-க்குமேல் அவர்கள் போனதே கிடையாது. ஸனாதனத்தை வீழ்த்திய அறிவியல்தான் 61 ஆக மலர்ந்திருக்கிறது. அந்த 61 என்று சொல்வது, அவருடைய துடிப்பு, அவர் திரையில் மட்டுமல்ல - இங்கேயும் முறுக்குகின்ற மீசை - எங்களால்கூட அப்படி முறுக்க முடியாது - அவர்தான் மீசையை எப்பொழுதும் முறுக்கிக் கொண்டிருப்பார்; கொள்கையிலே முறுக்கு - அதுவும் தளர்ச்சியில்லா முறுக்கு - அப்படி முறுக்கிக் கொண்டிருக்கின்ற இந்தக் கொள்கையை - இந்த 61 -அய் வாழ்த்துகின்றபொழுது, 61-அய் திருப்பிப் போட்டுப் பாருங்கள்; அதுதான் என்றும் 16 என்பதுதான் மிக முக்கியமானது.

எதையும் முடிக்கக்கூடிய ஆற்றல் படைத்த ஒரு படையினுடைய மிக முக்கியமான ஒரு தலைவர்

என்றைக்கும் இளைஞர், இந்தப் போர்க் களத்தில் நிற்கக்கூடிய இளைஞர்; என்றைக்கும் நம்பிக்கை நட்சத்திரம்; எதையும் முடிக்கக்கூடிய ஆற்றல் படைத்த ஒரு படையினுடைய மிக முக்கியமான ஒரு தலைவர்.

அப்படிப்பட்ட ஓர் அற்புதமான சிந்தனையில்தான், இன்றைக்கு இவரிடத்தில் எங்களுக்கு நம்பிக்கை ஏற்பட்டது மட்டுமல்ல; நாட்டிற்கே நம்பிக்கை ஏற்பட்டு இருக்கிறது. அவருடைய இடம் என்பது உயரமான இடம்.

அந்த வகையில்தான் இன்றைக்கு எல்லா குழல்களும் ஒன்று சேர்கின்றன. ஒன்றாவது குழல், இரண்டாவது குழல், மூன்றாவது குழல் என்று தமிழ்நாட்டில் மட்டும்தான் திராவிடம் அதைக் நிகழ்த்திக் காட்டி இருக்கிறது.

இந்தியா என்பது புள்ளிப் புள்ளி போட்டு இந்தியா என்றாகியிருக்கிறது.

ஒன்று உண்மையான இந்தியா; 

இன்னொன்று போலியான இந்தியா!

இப்பொழுது இந்தியாக்காரர்களே, இந்தியாவைக் கண்டு அஞ்சுகிறார்கள். ஏனென்றால், ஒன்று உண்மையான இந்தியா; இன்னொன்று போலியான இந்தியா.

அப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில், அதிக நேரத்தை நான் எடுத்துக்கொள்ளமாட்டேன்; எப்படியும் நீங்கள் அவர் பிறக்கின்ற வரையில் விடமாட்டீர்கள் - 12 மணிவரையில். அவ்வளவு நேரம் எங்களால் அமர முடியாது என்பதால்தான், நான் அனுமதி கேட்டு, முன்பே உரையாற்றிவிட்டுச் செல்கிறேன் என்று சொன்னேன்.

இன்றைக்கு நம்மைப் பார்த்து என்ன சொல்கிறார்கள்? பிரிவினைவாதிகள் என்று சொல்கிறார்கள்.

ஜாதி ஒழிப்பிற்காகத் தங்களுக்குத் தாங்களே அர்ப்பணித்துக் கொள்ளக்கூடியவர்கள்

அவர்களைப் பார்த்து ஒன்றே ஒன்று கேட்கிறோம், இந்த மிக முக்கியமான மேடையில், இங்கே உள்ள அத்துணை இளைஞர்களும் ஜாதி ஒழிப்பிற்காகத் தங்களுக்குத் தாங்களே அர்ப்பணித்துக் கொள்ளக்கூடியவர்கள்.

காலங்காலமாக ஜாதி, தீண்டாமை என்ற பெயரால், எங்களை மனிதத்தன்மையற்றவர்களாக ஆக்கினீர்கள்.

உலகத்தில் உள்ள வேறு எந்த நாட்டிலும் இல்லாத வகையில், மனிதர்களாகக் கூடிய எங்களை மதிக்கவில்லை.

விலங்குகளைக் கூட நீ அணைத்துப் பிடிக்கிறாய்; முத்தம் கொடுக்கிறாய்; பெட் அனிமெல்ஸ் என்று விலங்குகளை அணைக்கிறாய்; ஆனால், எங்கள் சகோதரன் சேற்றிலே காலை வைக்கவில்லையானால், நீ சோற்றிலே கை வைக்க முடியாது என்று சொல்லக்கூடிய எங்கள் சகோதரனைப் பார்த்து, எட்டிப் போ! கிட்டே வராதே! தொடாதே! என்று சொல்லுவதற்கு ஒரு கூட்டம் இருக்கிறது என்றால், எவ்வளவு காலத்திற்கு அந்தக் கருத்து இருப்பது?

இதுதானய்யா பிரிவினை!

மண்ணுக்குப் பிரிவினை பேசாதே - மக்களிடம் இருக்கின்ற பிரிவினையைப்பற்றி பேசு!

பிரிவினையை ஒழிப்பது என்று சொன்னால், இதைத்தானே ஒழிக்கவேண்டும். மண்ணுக்குப் பிரிவினை பேசாதே - மக்களிடம் இருக்கின்ற பிரிவினையைப்பற்றி பேசு.

மக்களிடையே, இவர் உயர்ந்தவர் - அவர் தாழ்ந்தவர்; இவர் தொடக்கூடாதவர் - இவர் தொடக்கூடியவர்; இவர் படிக்கக் கூடாதவர் - இவர் படிக்கக்கூடியவர் என்று பிரித்து வைத்திருக்கிறாயே, அந்தப் பிரிவினை.

முகத்திலே பிறந்தான், தோளிலே பிறந்தான், தொடையிலே பிறந்தான், காலிலே பிறந்தான் என்று கற்பனைக்குக்கூட நினைத்தால் அசிங்கமாக ஆக்கி வைத்திருக்கிறீர்களே, 

கடவுளை நாங்கள் கொச்சைப்படுத்துகிறோம் என்று நீங்கள் சொல்கிறீர்களே,  இதைவிடவா பிறப்பு கடவுளை நீங்கள் கொச்சைப்படுத்த முடியும்?

இந்தந்த இடத்திலிருந்து பிறக்க முடியுமா? என்று புரட்சிக்கவிஞர் அவர்கள் கேட்டார்; டாக்டர் நாயர் அவர்கள் கேட்டார்.

பிஞ்சு உள்ளங்களில் அந்த நஞ்சைக் கொண்டு போய் பரப்புகின்றீர்கள்!

அப்படிப்பட்ட ஒரு கற்பனையை வைத்துக்கொண்டு, இன்னமும் அந்த ஜாதி, அதற்குப் பாதுகாப்பு, அதை விடாமல் சொல்லிக் கொண்டு, இன்னமும் பல இடங்களில் மாணவர்கள் உள்ளத்தில், பிஞ்சு உள்ளங்களில் அந்த நஞ்சைக் கொண்டு போய் பரப்புகின்றீர்கள் என்று சொன்னால்,  ஆயிரம் வீரமணிகளும், ஆயிரம் திருமாக்களும், ஆயிரம் சத்யராஜூகளும், இந்த அரங்கத்தில் உள்ள அத்துணை பேரும் தேவை.  திராவிட ஆட்சி தேவை!

எனவேதான், அவர்கள் வாழவேண்டும் என்று வாழ்த்துகின்ற பொழுது,  அது சாதாரண வாழ்த்து அல்ல. தேவையை ஒட்டியது.

போர்க் களத்தில் நின்று, போர் வீரன் வெற்றி பெறவேண்டும் என்று சொல்லுவதற்கு முன்னால், நீண்ட காலம் அந்தப் போர் வீரன், போராடுவதற்குத் தயாராக இருக்கவேண்டும் என்று சொல்லக்கூடிய அளவிற்கு இன்றைக்கு இருக்கின்ற நிலை.

எனவேதான், ஜாதி ஒழிந்த ஒரு சமுதாயம்

பேதமற்ற ஒரு சமுதாயம்

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்கக் கூடிய ஒரு சமுதாயம்

அந்த வாய்ப்பை உருவாக்குவதற்கு இவர்களைப் போன்றவர்கள் தேவை!

சமத்துவக் கொடியை தலைதாழாது பறப்பதற்காக - ஏற்றுவதற்காக!

எனவேதான், உங்கள் வாழ்வு உங்களுக்காக அல்ல; மக்களுக்காக - அடிமை விலங்கை உடைத்தெறிவதற்காக - சமத்துவக் கொடியை தலைதாழாது பறப்பதற்காக - ஏற்றுவதற்காக!

வாழ்க! வளர்க!

வாழ்க! வாழ்க!

வாழ்க வெல்க!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

No comments:

Post a Comment