ஒரு பெரியார் பெருந்தொண்டரை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல!
ஒரு சுயமரியாதை வீரரை நாம் இழப்பது என்று சொன்னால் - அது அவருடைய குருதிக் குடும்பத்திற்கு மட்டும் இழப்பல்ல - கொள்கைக் குடும்பத்திற்கு மட்டும் இழப்பல்ல - சமுதாயத்திற்குப் பெரிய இழப்பு!
தருமபுரி, செப்.29 ஒரு பெரியார் பெருந்தொண்டரை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல! ஒரு சுயமரியாதை வீரரை நாம் இழப்பது என்று சொன்னால், அது அவருடைய குருதிக் குடும்பத்திற்கு மட்டும் இழப்பல்ல - அந்தக் கொள்கைக் குடும்பத்திற்கு மட்டும் இழப்பல்ல - சமுதாயத்திற்குப் பெரிய இழப்பு என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
புலவர் வேட்ராயன் படத்திறப்பு - நினைவேந்தல்!
கடந்த 27.9.2023 அன்று காலை தருமபுரியில் நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில், மறைந்த பெரியார் பெருந்தொண்டர் புலவர் வேட்ராயன் அவர்களின் படத்தினைத் திறந்து வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.
அவரது நினைவேந்தல் உரை வருமாறு:
இந்த தருமபுரி மாவட்டத்திற்கு வரும்பொழுதெல்லாம் மிகுந்த உற்சாகத்தோடும், மகிழ்ச்சியோடும் நான் வருகை தருவதற்குக் காரணம், தொடக்கத்தில் தருமபுரி மாவட்டம் ஒரு பின்தங்கிய மாவட்டம் என்ற ஒரு கணக்கிலே இருந்தாலும், அதற்குப் பிறகு நம்முடைய திராவிடர் இயக்கத்தைப் பொறுத்தவரையில், நீதிக்கட்சி காலத்திலிருந்து நம்முடைய இயக்கமானது வளர்ந்த இயக்கமாகத்தான் இங்கே இருக்கிறது.
அதற்குப் பல தோழர்கள் பாதை அமைத்திருக் கிறார்கள்; அய்யா பென்னாகரம் நஞ்சய்யா காலத்திலிருந்து புலவர் வேட்ராயன் மாவட்டத் தலைவராக இருந்த காலம் வரையில், கொள்கை ரீதியாக இந்த இயக்கம் தருமபுரி மாவட்டத்தில் ஆழமாகப் பதிந்த தற்குக் காரணமாக இருந்தவர்கள் ஒவ்வொருவரையும் என் நினைவில் வைத்திருந்தாலும், நேரத்தின் நெருக்கடியால் சொல்லுவதற்கு வாய்ப்பில்லை.
ஒரு சிறு எள்மூக்கு முனையளவுகூட மாறாதவர் - தெளிவானவர்
புலவர் வேட்ராயன்
ஆக, அப்படிப்பட்ட ஓர் அற்புதமான தலைவர் - பெரியார் பெருந்தொண்டர் - இயக்கம் என்ன சொல்லுகிறதோ, அந்த இயக்கத்தினுடைய கட்டுப் பாட்டில், ஒரு சிறு எள்மூக்கு முனையளவுகூட மாறாதவர் - தெளிவானவர் நம்முடைய அய்யா வேட்ராயன் அவர்களாவார்கள்.
அவர்களுடைய மறைவு என்பது - தந்தை பெரியார் அவர்களுடைய 145 ஆம் ஆண்டு பிறந்த நாளினை நாங்கள் சென்னையில் நடத்திக் கொண்டிருக்கின்ற பொழுது, ஒரு பெரிய இடி விழுந்ததுபோல, ஓர் அதிர்ச்சியான செய்தி சொல்லப்பட்டது.
அந்தச் செய்தியை என்னிடம் சொல்லுவதற்குக்கூட தயங்கித் தயங்கித்தான் சொன்னார்கள். ஒரு பெரிய துயரமான செய்தி என்றெல்லாம் சொல்லிவிட்டுத்தான் அவருடைய மறைவு செய்தியை சொன்னார்கள்.
அதைக் கேட்பதற்கு எனக்கு சங்கடமாகத்தான் இருந்தது. இருந்தாலும், அன்றைக்கு நிகழ்ச்சிகள் தொடர்ச்சியாக இருந்த காரணத்தினால், அதனை நடத்திக் கொண்டிருந்தோம்.
ஆறுதல் தர வேண்டும் - ஆறுதல் பெறவேண்டும் என்பதற்காகவே வந்திருக்கிறேன்!
ஓர் ஒப்புவமையற்ற பெரியார் பெருந்தொண்டராக இறுதி மூச்சு அடங்குகிற வரையில் அந்தப் பணியைத் தொடர்ந்து செய்தார். மறைவதற்கு முன்னால்கூட, பெரியார் பிறந்த நாள் விழாவிற்குச் சென்றுவிட்டு வந்த திருவாளர் மானமிகு புலவர் அவர்களுடைய நினை வைப் போற்றி, அவருக்கு வீர வணக்கம் செலுத்தி, அவருடைய குடும்பத்திற்கு ஆறுதல் சொல்லவேண் டியது நம்முடைய கடமை என்று உணர்ந்த காரணத்தினால், எனக்குப் பல்வேறு நெருக்கடிகள் இருந்தாலும், அம்மா சகுந்தலா அம்மையாரையும், அவருடைய அன்புச் செல்வங்களையும், குடும்பத் தாரையும், குருதிக் குடும்பத்தாரையும், அவரை இழந்து வாடக்கூடிய கொள்கைக் குடும்பத்தாரையும் சந்தித்து ஆறுதல் தர வேண்டும் - ஆறுதல் பெறவேண்டும் என்பதற்காக இந்த நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்றேன்.
இந்நினைவேந்தல் நிகழ்ச்சிக்கு வந்திருக்கின்ற உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஒரு பெரியார் பெருந்தொண்டரை உருவாக்குவது என்பது
அவ்வளவு எளிதல்ல!
ஒரு பெரிய விபத்து என்று சொல்லுகிறபொழுது, அதற்கு நாம் சரியான விளக்கத்தைச் சொல்ல முடியாது. ஒரு பெரியார் பெருந்தொண்டரை உருவாக்குவது என்பது அவ்வளவு எளிதல்ல.
மற்ற இயக்கங்கள் அரசியல் இயக்கங்கள்; அவர்களை நாங்கள் குறைத்து மதிப்பிடவில்லை. அரசியல் இயக்கத்தில் இருப்பவர்கள், தங்களு டைய தனிப்பட்ட கொள்கைகளைப்பற்றி கவலைப் படாமல், தங்களுடைய அரசியல் ஈடுபாட்டிற்கு அவர்கள் பயன்படுகிறார்களா என்றுதான் அவர்கள் நினைப்பார்கள்.
சுயமரியாதை இயக்கத்தின் தனித்தன்மை!
ஆனால், சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம், தந்தை பெரியாருடைய இயக்கம் என்று சொன்னால், அதனுடைய தனித்தன்மை என்னவென்றால், இது ஒரு வாழ்க்கை முறையாக இருக்கும். அந்த வாழ்க்கை முறைக்கு அவர்கள் பக்குவப்படுத்தப்பட்ட பிறகுதான், அவர்கள் சுயமரியாதைக்காரர்களாக, இந்த இயக்கத் திலே தங்களை ஒப்படைத்துக் கொண்டவர்களாக, கருப்புச் சட்டை அணியக்கூடியவர்களாக, களத்திலே நின்று போராடக் கூடியவர்களாக அவர்கள் ஆகிறார்கள்.
விளக்கிச் சொல்லவேண்டும் என்றால், மற்றவர்கள் எப்படி இருந்தாலும், அதைப்பற்றி ஊர் மக்கள் எதுவும் சொல்லமாட்டார்கள்.
திராவிடர் கழகத்தைச் சேர்ந்த ஒருவர், திருவிழாவில் முன்னால் நின்றாலோ, அல்லது கோவிலுக்குச் சென் றாலோ அல்லது அவர் வீட்டுப் பிள்ளைகள் போனால் கூட, என்ன சொல்வார்கள், ‘‘என்னய்யா, அவர் திரா விடர் கழகத்தைச் சேர்ந்தவராயிற்றே; ஆச்சரியமாக இருக்கிறதே, அவரை கோவிலுக்குள் பார்த்தோமே?'' என்று.
ஆகவே, அவர்கள் தெளிவாக ஒன்றைப் புரிந்து கொண்டிருக்கிறார்கள்; திராவிடர் கழகத்துக்காரர்கள் என்றால், அவர்கள் கடவுள் மறுப்புக் கொள்கைக்காரர்கள் தான்; இந்தக் கொள்கையை அவர்கள் தாண்டமாட்டார் கள். ஆகவே, எப்படி அவர் கோவிலுக்குள் வந்திருக் கிறார்? என்று முத்திரை பதிப்பார்கள்.
இன்னும் நான் அடிக்கடி சொல்வது என்னவென்றால், தந்தை பெரியார் அவர்கள் உருவாக்கிய இந்த இயக் கத்திற்கு ஒரு தனி முத்திரை என்னவென்றால், மற்ற வர்கள் எல்லாம் அவரவர் சார்ந்துள்ள அரசியல் கட்சியை வைத்து, அவர்களை அறிமுகப்படுத்திக் கொள்வார்கள்.
சாமி இல்லை என்று சொல்லுகின்ற கட்சிக்காரர்கள்தான்; பெரியார் கட்சிக்காரர்கள்
ஆனால், இந்த இயக்கத்தவரைப்பற்றி அறிமுகப் படுத்தும்பொழுது, எப்படி அறிமுகப்படுத்துவார்கள் என்றால், ‘‘என்னங்க, அவரைத் தெரியாதா, உங்களுக்கு? ஊருக்குள் ஒருத்தர், இரண்டு பேர்தான் இருப்பார்களே, அவர்களை உங்களுக்குத் தெரியாதா? அதாங்க, சாமி இல்லை என்று சொல்லுகின்ற கட்சிக்காரர்கள்தான்; பெரியார் கட்சிக்காரர்கள்தான்'' என்று சொல்வார்கள்.
அப்பொழுது அதைக் கேட்கின்ற எங்களுக்குக் கோபமோ, வருத்தமோ வருவதில்லை. அதை கேட்கும் பொழுது பெருமையாகத்தான் இருக்கும்.
காரணம் என்னவென்றால், கொள்கையை முன்னால் சொல்லி, ஆளை பின்னால் சொல்லுகின்ற பெருமை இந்த இயக்கத்திற்குத்தான் உண்டு.
மிகவும் பக்குவப்படுத்தப்பட்ட தன்மையோடுதான், இந்தக் கொள்கையைப் பின்பற்றவேண்டும்!
சாமி இல்லை என்று சொல்வது எங்கள் கொள்கை. அந்தக் கொள்கையை மற்றவர் ஏற்கிறார்களா, இல்லையா? என்பது இரண்டாம் பட்சம். ஆனால், அறிமுகப்படுத்தும்பொழுது, இந்தக் கொள்கையை முன்னால் சொல்லித்தான், ஆளை பிறகு அறிமுகப்படுத்துகிறார்கள்.
பல்வேறு கஷ்ட நஷ்டங்கள், ஊராருடைய நிந்தனைகள் - ஒரு பணிக்குச் சென்றால், மேலதி காரிகளின் நெருக்கடிகள், நிர்ப்பந்தங்கள் இவற்றை யெல்லாம் தாண்டி, மிகவும் பக்குவப்படுத்தப்பட்ட தன்மையோடுதான், இந்தக் கொள்கையைப் பின்பற்றவேண்டும்.
அய்யா வேட்ராயன் அவர்கள், இந்த இயக்கத்திலே தன்னை ஒப்படைத்துக் கொண்டது மட்டுமல்ல, அவருடைய ஆசிரியர் பணியிலும் மிகச் சிறப்பாக கடமையாற்றியவர்.
அவருடைய வாழ்விணையர் சகுந்தலா அம்மையார் அவர்களும் ஆசிரியர். அவர்களுக்கு மூன்று பெண் பிள்ளைகள். அவர்கள் அனைவரையும் நன்றாகப் படிக்க வைத்துத் திருமணம் செய்து வைத்திருக்கிறார்கள். அவர்களுக்கு அமைந்த மருமகப் பிள்ளைகள் சிறப்பானவர்கள்.
கொள்கைக் குடும்பம், சிறப்பான குடும்பம் - எடுத்துக்காட்டான குடும்பம்!
இதையெல்லாம் பார்க்கும்பொழுது, பெரியார் கொள் கையை ஏற்றவர்கள், வாழ்க்கையில் வீழ்ந்திருக்கிறார் களா? நல்ல முறையில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறார்களா? என்பதற்கு இந்தக் குடும்பம் ஓர் எடுத்துக்காட்டு. ஒரு கொள்கைக் குடும்பம், சிறப்பான குடும்பமாகும்.
அந்தப் பெருமை முழுவதும் பெரியாருக்கு என்பதை விட, அதனை நடைமுறைப்படுத்திய புலவர் வேட்ராயன் போன்றவர்களுக்கும் உண்டு.
இந்தக் குடும்பத்தில் இன்றைக்கு இந்த நினைவேந்தல் நிகழ்ச்சி சடங்கு, சம்பிரதாயங்கள் இல்லாமல் நடை பெறுகின்றது.
கட்டுப்பாடு மிகுந்தவர் புலவர் வேட்ராயன். அவரை நான் ‘புலவர்' என்றுதான் அழைப்பேன். அவர் மாவட்டத் தலைவராக இருந்து, வெளிநாட்டிற்குப் போகும்பொழுதுகூட, என்னிடம் வந்து ‘‘அய்யா நான் வெளிநாட்டிற்குப் போய் பல மாதங்கள் தங்க வேண்டி இருக்கிறது; அதனால், இந்தப் பொறுப்புக்கு வே:று யாரையாவது நீங்கள் நியமியுங்கள். நான் வெளி நாட்டிற்குப் போவதற்கு உங்களுடைய அனுமதி வேண்டும்'' என்றார்.
‘‘என்ன புலவர், லீவு கேட்கிறீர்களா?’’
‘‘என்ன புலவர், லீவு கேட்கிறீர்களா?'' என்று நான் வேடிக்கையாக சொல்லிவிட்டு, ‘‘பரவாயில்லை, நான்கு மாதங்கள் அல்ல; ஓராண்டு வேண்டுமானாலும் லீவு கொடுக்கலாம். மறுபடியும் நீங்கள் இங்கே வந்து விடவேண்டும்'' என்றேன்.
‘‘இல்லை அய்யா, அங்கேயே நான் தங்கிவிட மாட்டேன்'' என்றார்.
கட்டுப்பாடு மிகுந்த ராணுவத் தளபதி போன்றவர் புலவர் வேட்ராயன்!
வெளிநாட்டிலிருந்து அவர் வந்தபொழுதுகூட, இரண்டாவதுமுறை மறுபடியும் நீங்கள் அந்தப் பொறுப்பை ஏற்கவேண்டும் என்று சொன்னேன். அப்படிப்பட்ட ஒரு கொள்கைத் தங்கம். கட்டுப்பாடு மிகுந்த ராணுவத் தளபதி போன்றவர் அவர்.
ஒரு மிக நெருக்கடியான காலகட்டம் இன்றைய காலகட்டம் என்று இங்கே இருக்கின்ற தலைவர்கள் சொன்னார்கள். இன்றைக்கு இருக்கின்ற மாதிரி ஒரு மோசமான, இரட்டை வேடம் போடக்கூடிய ஒன்றிய ஆட்சி போன்று வேறு ஆட்சி எதுவுமில்லை.
மகளிர் மசோதா 2032 ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வருமாம்!
‘‘‘நாரி சக்தி' என்று கடவுளுக்கு மேலே பெண்களை நாங்கள்தான் மதிக்கின்றோம்'' என்று ஒரு பக்கத்தில் சொல்லி, பெண்களுக்கு 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதாவை நிறைவேற்றிவிட்டோம் என்று சொன் னார்கள்.
சரி, அந்த மசோதாவை என்றைக்கு நடைமுறைப் படுத்தப் போகிறீர்கள் என்று கேட்டால், 2032 ஆம் ஆண்டுதான் நடைமுறைக்கு வருமாம்.
அப்படியென்றால், அது ஏமாற்று வேலைதான். காரணம் என்னவென்றால், அவர்களுக்குத் தெளிவாகத் தெரிந்துவிட்டது, தாங்கள் வெற்றி பெற முடியாது என்று. அதனால், அவர்கள் மகளிருக்கான 33 சதவிகித மசோதாவை நாங்கள்தான் நிறைவேற்றினோம் என்று தம்பட்டம் அடித்துக் கொள்வதற்காகத்தான் இதனைச் செய்திருக்கிறார்கள்.
மூன்று பெண் பிள்ளைகளையும்
டாக்டர்களாக்கி விட்டார்!
புலவர் வேட்ராயன் அவர்கள், இந்த இயக்கத்தில் சேர்ந்த காரணத்தினால், மூன்று பெண் குழந்தைகள் பிறந்திருக்கிறதே என்று அவர் வருத்தப்படவில்லை. மூன்று பெண் பிள்ளைகளையும் டாக்டர்களாக்கி விட்டார்.
பெரியார் என்ன செய்தார்?
திராவிடர் இயக்கம் என்ன செய்ததது?
என்ற கேள்விக்கெல்லாம் இந்தக் குடும்பமே, இந்த நிகழ்ச்சியின் அழைப்பிதழே போதுமானதாகும்.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள நஞ்சய்யா அவர்கள் குடும்பத்திலிருந்து, ராமமூர்த்தி அவர்கள் குடும்பத்தி லிருந்து பார்த்தீர்களேயானால், தாத்தா படித்திருக்க மாட்டார்; அப்பா ஏதோ கொஞ்சம் படித்திருப்பார்; ஆனால், பிள்ளைகள் பெரிய பெரிய படிப்பு படித் திருக்கிறார்கள்.
டாக்டர் செந்தில்
நம்முடைய டாக்டர் செந்தில் அவர்களுடைய படிப்புத் துறை இருக்கிறதே, மிகப்பெரிய படிப்புத் துறை. நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு அவர் பெருமைக்குரியவர்.
அவர் படித்து முடித்துவிட்டு இந்த ஊரில், இந்தப் பகுதியில் தன்னுடைய மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்று இங்கேயே இருக்கிறார்.
சென்னையிலோ அல்லது வெளிநாடுகளிலோ பணியாற்றக் கூடிய அளவிற்கு ஆற்றலும், திறமையும் உள்ளவர். தனித்த சிந்தனையாளர் -எழுத்தாளர் - கருத்தாளர் அவர்.
நமக்குத் தகுதி - திறமை இல்லை என்று சொன் னார்கள். படிப்பதற்கு இடம் கொடுத்து, கதவைத் திறந்து விட்டால்தானே, நம்முடைய ஆற்றல் வெளியில் வரும்.
இந்த இயக்கம் இல்லாவிட்டால்,
பெண்கள் படித்திருக்க முடியுமா?
பெண்களைப் படிக்கக் கூடாது என்று சொல் வதுதானே ஸநாதனம். இன்றைக்குப் புரியாமல் அதைப்பற்றி உளறிக் கொண்டிருக்கிறார்களே பலர், இந்த இயக்கம் இல்லாவிட்டால், பெண்கள் படித்திருக்க முடியுமா?
மஞ்சள் நீராட்டு நடத்தி, சடங்கு நிகழ்ச்சியை நடத்தி முடித்து, சாக்குத் துணியை கட்டித் தொங்கவிட்டால், அதற்குப் பிறகு அந்தப் பெண் வெளிச்சத்தைப் பார்க்க முடியுமா?
மாப்பிள்ளை கூட யார் என்று தெரியாத அளவிற்குத் தலையை ஆட்டிக் கொண்டே இருக்கவேண்டும். பிறகு அந்தப் பெண்ணுக்குக் கழுத்தில் கட்டு போடுவார்கள். இப்படி பெண்கள் வெளியில் வர முடியாத காலம் ஒன்று இருந்தது.
இந்தக் கிராமத்தில் இருக்கக்கூடிய நம்முடைய பிள்ளை, லண்டனில் மிகப்பெரிய அளவிற்கு மருத்து வராகப் பணியாற்றுகிறார் என்றால், ஒரு புலவர் அதனை செய்திருக்கிறார். இந்தக் கொள்கையைப் பின்பற்றியதி னால், அதில் உறுதியாகவும், தெளிவாகவும் இருந்த தினால்தான் அதனைச் செய்ய முடிந்தது.
கல்வி வள்ளல் காமராசருடைய ஆட்சி, திராவிட ஆட்சி - இதற்கெல்லாம் வழிவகுத்ததினால்தான், இன் றைக்கு இவ்வளவு பெரிய மாறுதல் வந்திருக்கிறது.
சின்னதோர் கடுகு உள்ளத்தோடு இல்லாமல்...
தன் குடும்பத்தினரிடையே மட்டும் இந்தக் கொள்கை பரவக்கூடாது - தன் பெண்டு, தன்பிள்ளை, தன் வீடு என்கிற சின்னதோர் கடுகு உள்ளத்தோடு இருக்கக்கூடாது என்பதினால், இந்தக் கொள்கையைப் பரப்புவதற்கு - ஓய்வு பெற்றவுடன் வீட்டில் ஓய்ந்துவிடவில்லை - இந்த இயக்கத்திற்கு வந்தார்.
இந்த இயக்கத்தில் நாங்கள் கொடுத்த பொறுப்பில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார்.
போராட்டக் களமா? கிளர்ச்சியா? முன் வந்து நின்றார் அவர். இதெல்லாம் யாருக்காக? தன்னுடைய குடும்பத்திற்காக அல்ல - இந்த சமுதாயத்திற்காக.
சமுதாயத்திற்குப் பெரிய இழப்பு!
எனவேதான், ஒரு சுயமரியாதை வீரரை நாம் இழப்பது என்று சொன்னால், அது அவருடைய குருதிக் குடும்பத்திற்கு மட்டும் இழப்பல்ல - அந்தக் கொள்கைக் குடும்பத்திற்கு மட்டும் இழப்பல்ல - சமுதாயத்திற்குப் பெரிய இழப்பு.
நீங்கள் எந்தக் கட்சியை சேர்ந்தவர்களாகக் கூட இருக்கலாம்; இன்னும் நம்மாளில் சிலர் காவி அணிந்து கொண்டிருக்கலாம்; பா.ஜ.க.விற்குப் போயிருக்கலாம்; அவர்கள்மீது நமக்கு வருத்தமில்லை; அவர்களைத் திருத்தவேண்டும் என்றுதான் நாங்கள் நினைப்போம். அவர்களுடைய வீட்டில் இருக்கின்ற பிள்ளைகளும் படிக்கவேண்டும் என்பதற்காகத்தானே, நீட் தேர்வை ஒழிக்கவேண்டும் என்று நாம் சொல்கிறோம். அவர் களுடைய பிள்ளைகளும் பயனடைவேண்டும் என்பதற் காகத்தானே - இன்றைக்கு ஒன்றிய பா.ஜ.க. மோடி அரசு, விஸ்வகர்மா யோஜனா திட்டத்தைக் கொண்டு வரு வதை எதிர்க்கிறோம்; படிப்பதைவிட்டுவிட்டு, அப்பன் தொழிலை செய் - உனக்கு நான் குறைந்த வட்டியில் கடன் தருகிறேன் என்று ஏமாற்றுகிறார்கள்.
ஆகவே, இந்தக் காலகட்டத்தில், மக்களுக்கு விழிப் புணர்வு ஊட்டவேண்டிய கட்டத்தில், நாம் புலவர் வேட்ராயன் என்ற அருமைக் கழகத் தளபதியை, கொள்கை வீரரை இழந்திருக்கின்றோம்.
அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து செய்யவேண்டும்!
அதற்கு ஆறுதல் பெறவேண்டும்; அவர் விட்டுச் சென்ற பணிகளைத் தொடர்ந்து செய்யவேண்டும். இந்தக் குடும்பத்தார், அவருக்குப் பிறகு, அவர் உயிரோடு இருக்கும்பொழுது அவர் எந்தக் கொள்கையைப் பின்பற்றினாரோ, அந்தக் கொள்கையைத்தான், அந்தக் கொள்கைப்படிதான் நாங்கள் நடப்போம்; அதிலிருந்து இம்மியளவுகூட நாங்கள் மாறவில்லை என்கிறார்கள்.
இயக்கத்தின் சார்பில் தலைவணங்கி
நன்றியைத் தெரிவிக்கிறோம்!
அவர்களுக்கு நாங்கள் இயக்கத்தின் சார்பாக, தலைவணங்கி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏனென்றால், பல நேரங்களில் ஒரு கொள்கைவாதி இறந்தவுடன், சடங்கு, சம்பிரதாயங்களை செய்யத் தொடங்குவார்கள். சம்பந்தமில்லாதவர்கள் எல்லாம் அங்கே வந்து, நெற்றியில் அது வை, இது வை என்று சொல்வார்கள்.
எலக்ஷன் நேரத்தில், தேர்தலில் நிற்பவரைப்பற்றி, யாரோ, சம்பந்தமில்லாமல் எதையாவது சொல்லிக் கொண்டிருப்பான்; அவனைக் கண்டிக்க முடியாது. ஏனென்றால், அவனைக் கண்டித்துவிட்டால், அவனு டைய வீட்டில் உள்ள அய்ந்து வாக்குகள் போய்விட்டால் என்ன ஆவது? என்று பயப்படுவார்கள்.
குறுகிய காலத்தில் இந்நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப் பட்டிருந்தாலும், எல்லோரும் இங்கே வந்திருக்கிறீர்கள்.
இந்தக் கொள்கையை ஏற்றுக்கொண்டதால், லாபமே தவிர, நட்டம் கிடையாது!
புலவர் வேட்ராயன் அவர்கள் இருந்த காலத் தில் இந்த இயக்கம் எப்படி உங்கள் குடும்பத்தோடு தொடர்பில் இருந்ததோ, அதேபோன்று என் றைக்கும் இருக்கும்; உங்கள் குடும்பமும் இயக்கத் தோடு ஒன்றியிருக்கவேண்டும். இந்தக் கொள் கையை ஏற்றுக்கொண்டதால், லாபமே தவிர, நட்டம் கிடையாது. ஆகவே, அதனை நீங்கள் தொடர்ந்து செய்யவேண்டும்.
இன்றைக்குத்தான் புலவர் வேட்ராயன் அவர் களுடைய இல்லத்திற்குச் சென்று பார்த்தேன். அதைப் பார்க்கும்பொழுது பெருமையாக இருக் கிறது. வீட்டின் முன் அறையை அலுவலக அறையாக வைத்திருக்கிறார். அந்த வீட்டின் முன் உள்ள கல்வெட்டில், அம்மையாரின் பெயர்தான் இருக்கிறது.
பெண்களைப் பெருமைப்படுத்துவது என்பதே இந்த இயக்கம் கற்றுக் கொடுத்ததுதான்!
ஒவ்வொருவரும் தன் வாழ்விணையரைப் பெரு மைப்படுத்த வேண்டும். பெண்களைப் பெருமைப்படுத் துவது என்பதே இந்த இயக்கம் கற்றுக் கொடுத்ததுதான்.
இதுவரை நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு, பெண்கள் நுழைய முடியாத இடத்திற்கெல்லாம் பெண் களை அழைத்துக் கொண்டு போகின்ற இயக்கமாக திராவிட இயக்கம் இருக்கிறது இன்றைக்கு அர்ச்சகர்கள் பெண்கள், ஓதுவார்கள் பெண்கள்.
கலைஞர் இருந்தபொழுது, பெரியார் அவர்கள் நெஞ்சில் தைத்த முள்ளை எப்படி எடுப்பது என்று கவலைப்பட்டார். இன்றைய முதலமைச்சர் பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்ததோடு, நேற்று அருமையானதொரு செய்தியை வெளியிட்டு இருக் கிறார். அது என்னவென்றால், பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளை எடுத்துவிட்டு, அந்த இடத்தில் நல்ல பூவை வைத்திருக்கிறோம். அதுதான் பூவையர்களை உள்ளே அனுப்பியது. அதன்படியே, ஓதுவார்களாக, அர்ச்சகர்களாக பெண்களை நியமித்திருக்கிறது ‘திராவிட மாடல்' ஆட்சி.
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டத்தை எதிர்த்து, மீண்டும் மீண்டும் உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வம்படி, வல்லடி வழக்குகளைத் தொடர்ந்து வருகிறார்கள்.
தமிழ்நாட்டில், தமிழன் வீட்டில் தமிழ்ப் பெயரைக் கண்டுபிடிக்கவே முடியவில்லை!
இன்றைக்குப் பெண்கள் நல்ல அளவிற்குப் படித் திருக்கிறார்கள். பெயர் வைத்திருப்பதும் தமிழில்.
அம்மையார் பெயரில் வீடு - அய்யா பெயரில்
‘‘ஈ.வெ.ரா.பெரியார் இல்லம்'' என்று இருக்கிறது.
பிள்ளைகளுடைய பெயர்கள் கனிமொழி, மலர்விழி, கவியரசி என்று. இன்றைக்குத் தமிழ்நாட்டில், தமிழன் வீட்டில் தமிழ்ப் பெயரைக் கண்டுபிடிக்கவே முடிய வில்லை.
நான் இந்தக் குடும்பத்திற்கு உரியவன், உறவுக்காரன், கொள்கை உறவுக்காரன், நெருக்கமான உறவுக்காரன் - அதனால்தான், இங்கே ஆறுதல் சொல்லவேண்டும் என்று ஓடோடி வந்திருக்கின்றேன். நாளைக்கும் இந்தக் குடும்பத்திற்கு ஒன்று என்றால், நாங்கள் ஓடோடி வரு வோம்.
உரிமை எடுத்துக்கொண்டு ஒன்று சொல்கிறேன் - அவருடைய பிள்ளைகளுக்குத் தமிழில் பெயர் வைத்தி ருக்கிறார். அவருடைய பேரப் பிள்ளைகளின் பெயரைப் பார்த்தேன்.
நித்திலன், சுருதி வர்சா, அஸ்வினி, ஆதவ் என்று இருக்கிறது. அவர்களும் நம்முடைய பேரப் பிள்ளை கள்தான், அதிலொன்றும் சந்தேகமேயில்லை.
உங்களுடைய பிள்ளைகளுக்குத்
தமிழ்ப் பெயரை வையுங்கள்!
ஆனால், அவர்களுக்குத் தமிழில் பெயர் வைப்ப தற்குப் பெயர் கிடைக்கவில்லையா? தயவு செய்து உங்களுடைய பிள்ளைகளுக்குத் தமிழ்ப் பெயரை வையுங்கள்.
எப்படி தமிழில் நிகழ்ச்சிகள் நடத்தவேண்டும் என்பது முக்கியமோ - நம்முடைய வீட்டுத் திருமணங்கள் நடக்கும்பொழுது - நம்முடைய தாயை வரக்கூடாது என்று சொன்னால், அதை நாம் ஏற்றுக்கொள்வோமா? அதுபோன்று, பண்பாட்டுப் படையெடுப்பால், தமிழ்ப் பெயர்களை அழித்து வருகிறார்கள்.
தமிழின உணர்வு என்பது ஒரு கட்சிக்குச் சொந்தமானதல்ல; ஒரு தலைவருக்குச் சொந்தமானதல்ல!
வாயில் நுழைய முடியாத பெயர்களை வைக் கிறார்கள். ஆகவேதான், இந்தக் குடும்பத்தாருக்கு மட்டுமல்ல என்னுடைய வேண்டுகோள் - இந்த நாட்டார்க்கும், சமுதாயத்தாயருக்கும் வேண்டுகோள் என்னவென்றால், தமிழின உணர்வு என்பது ஒரு கட்சிக்குச் சொந்தமானதல்ல; ஒரு தலைவருக்குச் சொந்தமானதல்ல. நம்முடைய மனிதத் தன்மையை சொல்வது.
‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு'' என்று சொன்னார் தந்தை பெரியார் அவர்கள்.
மனிதம் என்பதற்கு என்ன அடையாளம் என்றால், மானமும், அறிவும்தான்.
ஒரு சிறிய உதாரணம் சொல்கிறேன், மிக நெருங் கிப் பழகிய நண்பருக்குக்கூட, நம்முடைய வீட்டுத் திருமணத்திற்கான அழைப்பிதழைக் கொடுக்க மறந்துவிட்டோம் என்றால், அவர் அந்த மண விழாவிற்கு வரமாட்டார்.
‘‘ஏங்க, நீங்கள் உங்கள் நண்பர் வீட்டு மணவிழா விற்குச் செல்லவில்லையா?'' என்று கேட்டால்,
‘‘எனக்கு அழைப்பிதழ் வரவில்லை, அதனால் போகவில்லை'' என்பார்.
‘‘ஏங்க, நீங்கள் அவருக்கு எவ்வளவு நெருக்கமான நண்பர், நீங்களே போகவில்லையா?'' என்று கேட் டால்,
‘‘அழைப்பிதழ் இல்லாமல் உள்ளே போகவேண் டுமா?'' என்று சொல்வார்.
மறந்து போனதைக்கூட மன்னிக்கத் தெரியாமல், அங்கே நாம் சொல்கிறோம்.
ஆகவே, மனிதருக்கு அடையாளம், மானமும், அறிவும்தான். அந்த உணர்ச்சியை நாம் எப்பொழுது பெறுகிறோம் என்று சொன்னால், பெரியாருக்காக அல்ல - திராவிட இயக்கத்திற்காக அல்ல - மற்றவருக் காக அல்ல - நமக்காக - நம்மை உயர்த்திக் கொள்ள - நம்மை மனிதராக்கிக் கொள்ள இந்த இயக்கம் தேவை.
தொண்டறச் செம்மல்
நம்முடைய புலவர் வேட்ராயன்!
இந்த இயக்கத்தில் மிக அற்புதமாக பணி செய்தவர் தொண்டறச் செம்மல் நம்முடைய புலவர் வேட்ராயன் அவர்கள்.
இன்றைக்கு அவருடைய படத்தினை இங்கே திறந்திருக்கின்றோம். ஏன் அவருடைய படத்தினை திறந்திருக்கின்றோம்? அவர் இங்கே படமாக மட்டுமல்ல நண்பர்களே, அவர் நமக்குப் பாடமாகவும் திகழ்கிறார்.
வாழ்க்கையைத் திட்டமிட்டு வாழுங்கள் - இந்தக் குடும்பத்தினர் இரண்டு பேரும் ஆசிரியர். இந்தக் குடும்பத்தினர் திட்டமிட்டு, ‘‘நம்முடைய பிள்ளைகளை நன்றாகப் படிக்க வைக்கவேண்டும்; அப்படி படிக்க வைத்தால், அவர்களுடைய வாழ்க்கையை நல்ல அள விற்கு அமைத்துக் கொள்வார்கள்'' என்று திட்டமிட்டு வாழ்ந்திருக்கிறார்கள்.
‘‘நல்லதொரு குடும்பம் ஒரு பல்கலைக் கழகம்'' என்ற வாய்ப்பை உருவாக்கி, மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்கிறார்கள்.
‘‘சுயமரியாதை வாழ்வு - சுகவாழ்வு!’’
அதனால்தான், தந்தை பெரியாருடைய இயக்கத்தில் சேர்ந்தபொழுது, ஆரம்பத்தில், ‘‘சுயமரியாதை வாழ்வு - சுகவாழ்வு!'' என்று சொன்னார்கள்.
அந்த சுகவாழ்வுக்கு புலவர் வேட்ராயன் குடும்பத் தினர் ஓர் எடுத்துக்காட்டு.
அந்தக் குடும்பம் மிகப்பெரிய இழப்பிற்கு ஆளா னாலும், அந்த இழப்பிலிருந்து பகுத்தறிவாளர்களாகிய நாம் வெளியேற வரவேண்டும்.
ஏனென்றால், அய்யா அவர்கள் ‘‘இயற்கையின் கோணல் புத்தி'' என்று சொல்வார்.
கூடுமானவரையில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்வதைத் தவிருங்கள்!
அய்யா புலவர் வேட்ராயன் அவர்களுடைய படம் என்பது நமக்கு ஒரு பாடம் என்று சொன்னேன் அல்லவா - வயதானவர்கள், முதியவர்கள், ஓய்வு பெற்றவர்கள் எல்லாம் இங்கே இருக்கிறார்கள். உங்களுக்கெல்லாம் ஒரு வேண்டுகோள் என்னவென்றால், கூடுமானவரை யில் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்வதைத் தவிருங்கள்; இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய் யும்பொழுது தலைக்கவசம் அணியாமல் போகிறார்கள்.
தலைக்கவசம் அணிவதோ, சீட் பெல்ட் அணிவதோ காவல்துறையினரின் அபராதத்திலிருந்து தவிர்க்கவே என்று நாம் நினைக்கிறோம். அது நம்முடைய உயிர்ப் பாதுகாப்பிற்குத்தான் என்று நினைக்கவேண்டும்.
ஆகவே, எதிர்பாராத விபத்து ஏற்பட்டு, வேட்ராயன் மரணமடைந்தார் என்பதைக் கேட்டவுடன், எனக்கு மிகப்பெரிய அதிர்ச்சியாக இருந்தது.
கூடுமானவரையில், இரண்டு சக்கர வாகனத்தைத் தவிர்த்துவிட்டு, பேருந்திலோ, காரிலோ பயணம் செய் யுங்கள்.
வேட்ராயன் அவர்கள் தலைக்கவசம் அணிந்துதான் பயணம் செய்திருக்கிறார் என்று கேள்விப்பட்டேன். அதிலும்கூட அவர் ஒழுக்கத்தோடுதான் இருந்திருக் கிறார்.
வயதானவர்கள், நல்ல அளவிற்கு சுகாதாரத்திலும், பாதுகாப்போடும் வாழுங்கள்.
விபத்து என்பது எதிர்பாராமல்
நடப்பதுதான்!
எனவே, எல்லாவற்றையும் தாண்டி விபத்து நடக்கலாம்; விபத்து என்பது எதிர்பாராமல் நடப் பதுதான். அதனால்தான் ஆங்கிலத்தில் இன்சி டெண்ட் என்பது வேறு; ஆக்சிடெண்ட் என்பது வேறு என்று இருக்கிறது.
ஆகவே, எதிர்பாராமல் விபத்து நடந்தாலும், அதனை ஏற்றுக்கொள்ளவேண்டிய மனப்பக்குவம் வேண்டும்; அதோடு எல்லாம் முடிந்துபோய்விட்டது என்று நினைக்கக்கூடாது; அவருக்குப் பிறகு இந்தக் குடும்பம், இந்த இயக்கம், இந்தக் கொள்கையில் நின்று வெற்றி பெற்றிருக்கிறது என்று காட்டவேண்டிய கடமை, பொறுப்பு பிள்ளைகளுக்கும், மருமகப் பிள்ளைகளுக்கும், மற்றவர்களுக்கும் உண்டு.
உங்களுக்குப் பாதுகாப்பாக நாங்கள்
எப்பொழுதும் இருப்போம்
எல்லோருக்கும் பாதுகாப்பாக நாங்கள் எப்பொழுதும் இருப்போம். நீங்களும் இந்தக் கொள்கை வழியில் இருங்கள்.
வாய்ப்பளித்த உங்கள் அனைவருக்கும், ஆறுதல் சொல்வதற்காக வந்தோம் - ஆறுதல் பெறுவதற்காக வந்திருக்கின்றோம். அனைவருக்கும் என்னுடைய ஆறுதலை, தலைதாழ்ந்த வணக்கத்தினை, நன்றியைத் தெரிவித்து விடைபெறுகிறேன்.
வாழ்க பெரியார்!
வளர்க புலவர் வேட்ராயன் அவர்களுடைய புகழ்!
நன்றி, வணக்கம்!
இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலை வர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார்.
No comments:
Post a Comment