அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டியது நாடாளுமன்றத்தின் முக்கியமான கடமை: தொல். திருமாவளவன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 20, 2023

அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டியது நாடாளுமன்றத்தின் முக்கியமான கடமை: தொல். திருமாவளவன்

புதுடில்லி, செப். 20- நாடாளுமன்ற மக்களவையில் சுதந்திர இந்தியாவின் 75 ஆண்டுகால நிறைவை நினைவுகூரும் வகையில் விவாதம் நடைபெற்றது. 

இதில் விடுதலை சிறுத்தைகள் கட்சித்தலைவர் தொல். திருமாவளவன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

"புரட்சியாளர் அம்பேத்கர், ஜவகர்லால் நேரு, பேரறிஞர் அண்ணா போன்ற மாபெரும் தலைவர்கள் மாநிலங்களவையிலும், மக்களவையிலும் அமர்ந்து விவாதித்த இந்த கட்டடம் இன்றோடு கடைசி நாளாக இயங்குகிறது. புதிய இந்தியாவை கட்டமைக்க வேண்டும் என்ற உணர்வோடு புரட்சியாளர் அம்பேத்கர் தலைமையில் அரசமைப்புச் சட்டத்தை இயற்றினார்கள். ஜனநாயகத்தை பாதுகாப்பது என்பது அரசமைப்புச் சட்டத்தை பாதுகாப்பது ஆகும். அரசமைப்புச் சட்டம் மூலம்தான் இந்த அவை இயங்கிக் கொண்டு இருக்கிறது. இந்த அவை மூலம்தான் இந்த தேசம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அவையில் விளிம்பு நிலை மக்களின் தேவைகளுக்காக எத்தனையோ பல சட்டங்கள் இயற்றப்பட்டு இருக்கின்றன. இட ஒதுக்கீட்டுச் சட்டம், அதேபோல பஞ்சாயத்து ராஜ் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டங்கள் இப்படி எண்ணற்ற பல விளிம்பு நிலை மக்களை பாதுகாப்பதற்கான சட்டங்கள் இயற்றப்பட்ட நிலையில் பொடா, தடா போன்ற சட்டங்களும் இந்த அவையில் இயற்றப்பட்டு இருக்கின்றன.

விளிம்பு நிலை மக்களின் குரலை பிரதிபலிக்கக் கூடிய ஒரு அவை என்கிற முறையில்தான் நானும் இந்த அவையில் 2-ஆவது முறையாக உறுப்பினராக இடம்பெறும் வாய்ப்பை பெற்றிருக்கிறேன். இந்நிலையில் அரசமைப்புச் சட்டத்தை பாதுகாக்க வேண்டியது இந்த நாடாளுமன்றத்தின் முக்கியமான கடமையாக இருக்கிறது. எனவே அரசமைப்புச் சட்டத்தில் மதச்சார்பின்மை என்பது மிகவும் முக்கியமானது ஆகும்." இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment