தீட்சதர் கூட்டத்தின் பகற் கொள்ளையைத் தடுக்க சிதம்பரம் நோக்கி வாரீர்! வாரீர்!! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, September 4, 2023

தீட்சதர் கூட்டத்தின் பகற் கொள்ளையைத் தடுக்க சிதம்பரம் நோக்கி வாரீர்! வாரீர்!!

சிதம்பரம் நடராஜன் கோயில் இந்து அற நிலையத் துறை வசம் கொண்டு வரப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாளை (5.9.2023) சிதம்பரத்தில் திராவிடர் கழகத்தின் சார்பில் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கு ஏற்கும் மாபெரும் மாலை நேர மாநாடாக நடைபெற உள்ளது.

கோயிலை உருவாக்க ஒரு செங்கல்லைக்கூட எடுத்துக் கொடுக்காத தீட்சதப் பார்ப்பனர்கள் சிதம்பரம் கோயில் தன்பாட்டன் வீட்டுச் சொத்தாக - பரம்பரை சீதனமாகக் கருதி நிர்வாண ஆட்டம் போடுகிறார்கள்.

முதல் இந்திய நீதிபதியாக வந்த முத்துசாமி அய்யரே  சிதம்பரம் நடராஜன் கோயில் தீட்சதர்களுக்குச் சொந்தமானதல்ல என்று கறாராகத் தீர்ப்புக் கூறி விட்டார்.

இடையிலே எத்தனையோ தில்லுமுல்லு திருகு தாளங்களை செய்து தங்கள் வசம் கைப்பற்றிக் கொண்டனர்.

முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக வந்த நிலையில், நடராஜன் கோயிலை மீண்டும் இந்து அறநிலையத்துறைக்குக் கொண்டு வந்தார்.

தின்று கொழுத்து வலம் வந்த தீட்சதர் கூட்டம் வாளா இருக்குமா? நேராக உச்(சி)ச நீதிமன்றம் சென்றார்கள்.

அந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி பச்சையாகவே திறந்த நீதிமன்றத்தில் 'திருவாய்' மலர்ந்தார்.

'இரண்டு நாளில் ஓய்வு பெறப் போகிறேன் - அதற்குள் ஒரு "நல்ல காரியத்தை" செய்து விட்டுப் போகப் போகிறேன், என்று சொல்லவில்லையா? சொன்னபடியே தீட்சதர்வாள் சிண்டில் நடராஜன் கோயில் கொக்கியை மாட்டிச் சென்றதை மறக்கத்தான் முடியுமா?

ஒரு அதிகாரப் பூர்வமான தகவலை இங்கு சொல்ல வேண்டும்.

இதோ:

இந்து சமய அறநிலையத்துறை

அனுப்புநர்:

திருமதி சி. ஜோதி. பி.ஏ.பி.எல்

துணைஆணையர்/ஒருங்கிணைப்பாளர்,

விசாரணைக்குழு

இணை ஆணையர் அலுவலகம்.

கடலூர்

பெறுநர்:

செயலாளர்

பொது தீட்சிதர்கள் சபை.

அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில். 

சிதம்பரம் நகர் மற்றும் வட்டம், 

கடலூர் மாவட்டம்.


ந.க.எண்.12/2022/ நாள். 18.07.2022.

அய்யா.

பொருள்  : பணிப்பிரிவு திருக்கோயில் நிர்வாகம் பொதுமக்கள் மற்றும் திருக்கோயிலின் நலனில் அக்கறை உள்ள நபர்களிடமிருந்து வரப்பெற்ற மனுக்கள், கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் தகுந்த விளக்கம் அளிக்க கோருதல் - அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில் சிதம்பரம் நகர் மற்றும் வட்டம் - கடலூர் மாவட்டம் - தொடர்பாக.

பார்வை  : வரப்பெற்ற மனுக்கள்.

கடலூர் மாவட்டம், சிதம்பரம் நகர் மற்றும் வட்டம், அருள்மிகு சபாநாயகர் திருக்கோயில் குறித்து விசாரணை மேற்கொள்ள தமிழ்நாடு இந்து அறநிலைய அறக்கொடைகள் சட்டத்தின் சட்டப்பிரிவு 23 மற்றும் 33ன் படி ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணைக்குழுவிடம், திருக்கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள்  (Persons having Interest as per Section 6(15) தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை 20.06.2022 மற்றும் 21.06.2022 ஆகிய தேதிகளில் காலை 10.00 மணி முதல் மாலை 03.00 மணி வரை கடலூர் இணை ஆணையர் அலுவலகத்தில் நேரில் அளிக்கலாம் எனவும், அஞ்சல் மற்றும் மின்னஞ்சல் மூலமாகவும் அனுப்பலாம் எனவும் பொது அறிவிப்பு நாளிதழில் செய்யப்பட்டது.

20.06.2022 மற்றும் 21.06.2022 ஆகிய தேதிகளில், ஆணையரால் நியமனம் செய்யப்பட்ட விசாரணைக் குழுவிடம், பொதுமக்கள் மற்றும் திருக்கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்கள் நேரில் வந்து மனுக்கள் அளித்தனர். மின்னஞ்சல் மூலமாகவும். தபால் மூலமாகவும் மனுக்கள் வரப்பெற்றது. மொத்தம் 19405 மனுக்கள் வரப் பெற்றுள்ளது. வரப் பெற்ற மனுக்கள் குழு அமைத்து கூர்ந்தாய்வு செய்யப்பட்டது. கூர்ந்தாய்வு செய்யப்பட்டதில் அவற்றுள் 14098 மனுக்களில் திருக்கோயில் நிர்வாகத்தின் மீது குறைபாடுகள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மற்றும். திருக்கோயில் நலனில் அக்கறை உள்ள நபர்களால் தெரிவிக்கப்பட்டுள்ள குறைபாடுகளின் விபரம் பின்வருமாறு :

1. காணிக்கைக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. ரூ.1000/- கொடுத்தால் பிரசாதம் வீடு தேடிவரும் என வசூல் செய்கிறார்கள். ரசீது வழங்குவதில்லை.

 2. சிதம்பரம் நடராஜர் திருக்கோயிலில் நந்தனார் நுழைந்த தெற்கு வாயிலை அடைத்து தீட்சிதர்கள் எழுப்பிய தீண்டாமை சுவரை அகற்ற வேண்டும்.

3. தினமும் சிற்றம்பல மேடையில் ஒவ்வொரு கால பூஜையின்  போதும் தேவார திருமுறைகளை பாட  ஓதுவார்களை பணியமர்த்திட வேண்டும்.

4. தமிழகத்தின் பிறகோயில்களில் உள்ளது போன்று உண்டியல் நிறுவிட வேண்டும்.

5. பிற கோயில்களில் உள்ளதுபோல் அங்கீகரிக்கப்பட்ட தரமான பிரசாத கடைகள் அமைக்க வேண்டும்.

6. அனைத்துவிதமான பூஜை. அர்ச்சனைகளுக்கும் உரிய ரசீது தரப்பட வேண்டும்.

7. கோயிலுக்கு வரும் பக்தர்களை தரக்குறைவாக  பேசி  அவமதிப்பு செய்கிறார்கள். 

8. நாட்டியாஞ்சலி விழாவில் ரூ.20000/- முதல் கட்டணமாக கேட்பதனால் ஏழைக் குழந்தைகள் கலந்து முடியவில்லை.

 9. பூஜைகள் உரிய நேரத்தில் நடக்கவில்லை.

10. பெண்களை மரியாதைக் குறைவாக நடத்து கிறார்கள்.

11. ஆயிரங்கால் மண்டபத்தினை நட்சத்திர  விடுதி போல் பயன்படுத்துகிறார்கள்.

12. சுவாமி சிலைகளை கணக்கிட வேண்டும். அந்தகாலம் முதல் இந்த காலம் வரை சரியாக உள்ளதா என அரசு சோதனை செய்ய வேண்டும்

13. சிதம்பரம் கோயில் கல்வெட்டுகள் தொடர்பாக ஆராய்ச்சிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

14. சிற்றம்பல மேடை மீது மேலே ஏறும் கால அளவைக் குறைத்து விட்டனர்.

15. வருடம் முழுவதும் வீட்டு விலாசத்திற்கு பிரசாதம் அனுப்ப ரூ.2500/-  வசூல் செய்கிறார்கள். ஆனால் ரசீது வழங்குவதில்லை.

16. நடராஜர் சன்னதிக்கு அருகில் இருந்த நந்தனார் சிலையை தீட்சதர்கள் அப்புறப்படுத்திவிட்டார்கள்.

17. பொற்கூரையின் மீது ஏறி மலர் அலங்காரம் செய்யப்பட்டது.

18. ஆயிரங்கால் மண்டபத்தில் ஆடம்பர திருமணம் நடைபெற்றதில் தொழிலதிபர்கள் ஆயிரங்கால் மண்டபத்தில் காலணிகளுடன் சென்றார்கள்.

19. தில்லை கோவிந்தராஜ பெருமாள் கோயிலில் பிரம்மோற்சவம் மற்றும் எந்த விழாவும் நடத்தவிடாமல் தீட்சிதர்கள் தடை விதித்துள்ளனர்.

20. ஆண்டாள் சிலையை எடுத்துச் சென்று மறைத்து வைத்துள்ளனர். 

21. குழந்தை திருமணம் நடத்துவது.

22. கோயில் உள்ளேயுள்ள பைரவர் கோயில் அருகே சுரங்கத்திலிருந்து பல கோடி மதிப்பிலான ஆபரணங்கள் தீட்சதர்களால் எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.

23. திருக்கோயில் வளாகங்கள் தூய்மையின்றி இருக்கிறது. பக்தர்களுக்குக் குடிநீர் வசதி கழிப்பிட வசதி ஏதும் செய்யவில்லை.

24. பக்தர்களால் வழங்கப்படும் தங்கம், வெள்ளி மற்றும் பணத்திற்கு ரசீது தராமல் தீட்சதர்கள் எடுத்துக் கொள்கின்றனர்.

25. குறிப்பிட்ட நேரத்திற்கு தேரோட்டமோ, ஆருத்ரா தரிசனமோ நடத்தாமல், பல மணி நேரம் காக்க வைக்கின்றனர்.

26. திருக்கோயிலில் ஆங்காங்கே அறைகளை அடைத்து வைத்துள்ளனர்.

27. திருக்கோயில் புனரமைப்பு என்ற பெயரில் கல்வெட்டுகளை அழிக்கின்றனர்.

28. மாற்றுத் திறனாளிகளுக்கு எவ்வித வசதியும் செய்து தரப்படவில்லை.

மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ள - வரப் பெற்ற மனுக்கள் 4+1 தொகுதிகளாக இத்துடன் அனுப்பப்படுகிறது. மொத்தப் பக்கங்கள் 15478+1741 = 17219 வரப் பெற்ற மனுக்களில் சொல்லப்பட்டுள்ள குறைபாடுகள் குறித்து 15 தினங்களுக்குள் தகுந்த விளக்கம் அளிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.

துணை ஆணையர்/ஒருங்கிணைப்பாளர்,

விசாரணைக்குழு

இணைப்பு:

15478+1741 = 17219 பக்கங்கள் கொண்ட 4+1 தொகுதிகள்(Volume)

நகல் பணிந்தனுப்பப்படுகிறது.

1. ஆணையர், சென்னை - 34

2. இணை ஆணையர், கடலூர் 

நகல்:

3. உதவி ஆணையர், கடலூர்

4. ஆய்வாளர், சிதம்பரம்


இந்த யோக்கியதையில் தான் தீட்சதர்களின் கைகளில் சிதம்பரம் கோயில் கெஜ குட்டிக்கரணம் போட்டுக் கொண்டு இருக்கிறது. பக்தர்களே பதறிப் பதறி மனு கொடுத்துள்ளனர்.

தேவாரம் - திருவாசகம் பாடிய காரணத்துக்காக ஆறுமுகசாமி ஓதுவார் என்ற முதியவர் தீட்சதர்களால் தாக்கப்பட்டதும் உண்டு.

அவாளுக்குத் தமிழ் நீஷப் பாஷைதானே!

இந்தக் கொடுமைகளை இன்னும் எவ்வளவு காலத்திற்கு சகித்துக் கொண்டு இருப்பது.

தமிழ் - தமிழர் என்றால் அவர்களுக்கு வாந்தி வருகிறது.

இந்த நிலையில்தான் நாளை (5.9.2023) சிதம்பரத்தில் மாபெரும் அனைத்துக் கட்சித் தலைவர்களும் பங்கேற்கும் மக்கள் சமுத்திரம் பொங்கி எழ இருக்கிறது.

இதில் ஆன்மிகமா - நாத்திகமா என்பது பிரச்சினை அல்ல. நம் அரசர்கள் கட்டிய கோயிலில் பெருச்சாளிகள் கூடாரம் அடித்து முழு ஏப்பம் விட்டுக் கொண்டு இருக்கிறார்கள்.

பக்தர்களே, உங்களுக்கும் சேர்த்துதான் இந்த அழைப்பு! பகுத்தறிவாளர்களே பொது உரிமைக்காகத் தான் இந்த அழைப்பு!

வாரீர்! வாரீர்!!


ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு போதும்!

சிதம்பரம் நடராஜர் கோயில் தொடர்பான வழக்கில் நீதி மன்றத்தில் தீட்சதர்கள் சார்பில் கொடுத்த கணக்கு 

ஆண்டு வருமானம் ரூ.37,199

செலவு ரூ.37,000

மீதி ரூ.199

('பேட்டா' விலை போல இருக்கிறதா?)

அதே நேரத்தில் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியில் இக்கோயில் இந்து அற நிலையத்துறைக்கு வந்த நிலையில் 15 மாத கோயில் வருமானம் எவ்வளவுத் தெரியுமா? ரூ.25 லட்சத்து, பன்னிரெண்டாயிரத்து 485.

அப்படி என்றால் சிதம்பரம் கோயில் தீட்சதர்கள் அடிக்கும் கொள்ளை எவ்வளவு என்று புரிகிறதா? 

இதைத் தட்டிக் கேட்க வேண்டாமா? 

சிதம்பரத்தில் சந்திப்போம் - வாரீர்!


No comments:

Post a Comment