நரேந்திர தபோல்கரின் பகுத்தறிவு வாழ்க்கையைப் படிக்க வேண்டிய நேரம் இது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 2, 2023

நரேந்திர தபோல்கரின் பகுத்தறிவு வாழ்க்கையைப் படிக்க வேண்டிய நேரம் இது!


நரேந்திர தபோல்கர் மும்பை பத்திரிகையாளர் சந்திப்பில் ஒருமுறை பேசும் போது, ஊடகவியலாளர் களைப் பார்த்து - உங்களில் எத்தனை பேர் விநாயகர் சதுர்த்தி அன்று சிலையை நகரம் முழுவதும் வைத்து பிறகு தூக்கிக்கொண்டு கடலிலும் இதர நீர் நிலைகளிலும் கரைப்பதை ஆதரிக்கின்றீர்கள்? என்று கேட்டார். அனைவருமே ஆதரிப்போம் என்று கூறினர். அதனை அடுத்து அவர் சமூகத்தின் படித்தவர்கள், ஊடகவியலாளர்கள், செல்வாக்கு மிக்க நபர்கள்  மூடநம்பிக்கைகளைப் பரப்புவதில் மறைமுகமாகவோ நேரடியாகவோ உடந்தையாக  இருக்கிறீர்களே என்று கூறினார். 

இங்கே, அவர் முக்கியமான கேள்விகளை எழுப்புகிறார்,  இந்த நாடு ஆட்டிப்படைக்கும் பகுத்தறிவற்ற  அரசியல் லாபம் பார்க்கும் பெரும்பான்மை கூட்டத்தாரால் அபகரிக்கப்பட்டுள்ளது. 

இவர்களிடையே மக்களிடம் பகுத்தறிவைப் புகுத்த மிகவும் பொறுமையான ஆசிரியரைப் போல் இருக்கவேண்டும். முழுமையாக மூடநம்பிக்கையில் முழுகி தெளிவற்ற பார்வை உள்ளவர்களுக்கு இயற்கைக்கு அப்பாற்பட்ட நிகழ்வுககள் அனைத்தும் மாயத் தோற்றமாக இருக்கும்.  தற்போது அறிவியல் கல்வி அனைவருக்கும்  அடிப்படையாகும்.

ஜோதிடம், வாஸ்து சாஸ்திரம், சூனியம், சாமியார்கள் போன்றவைகளின் குட்டை உடைக்க பகுத்தறிவைப் பயன்படுத்தி உறுதியான அறிவியல் தரவுகளை  முன்வைக்க வேண்டும்.  

விநாயகர் சதுர்த்தி அன்று பெருங்கூட்டமாகச் செல்லும் மனிதர்களிடம் பகுத்தறிவைப் புகுத்துவது சவாலான செயல். அதை தபோல்கர் சோர்வின்றி செய்துவந்தார்.  அவருடைய புலமையின் ஆழமும், உறுதித்தன்மையும் குறிப்பிடத்தக்கவை. பெண்கள் "ஏன் சாமியார்களின் மோசடிகளுக்கு இரையாகிறார்கள்?" என்பது தபோல்கரின் மனதில் எப்போதுமே எழுந்துகொண்டு இருக்கும் கேள்வி ஆகும். பெண்களுக்கு பகுத்தறிவைப் போதிப்பதன் முழுப் பொறுப்பையும் பெண்களைக் கொண்ட குழுவிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களுக்கு உள்ள உறுதியைச் சொல்லித்தர வேண்டும். எப்படிப்பட்ட தாக்குதல்கள் நிகழ்ந்தாலும் அஞ்சாமல் எதிர் நிற்க வேண்டும். சாமியர்கள் என்பவர்கள் உண்மையிலேயே ஒழுக்கமற்ற கயவர்கள், சோம்பேறிகள், காமுகர்கள். தங்களின் குற்றங்களுக்கு சாமியார் வேடத்தை ஒரு பாதுகாப்புக் கவசமாக பயன்படுத்துகின்றனர்.

அவரைப் பொறுத்தவரை, மதரீதியான சிந்திக்க இயலாத நம்பிக்கையில் மூழ்கிவிட்ட பெண்களை சாமியர்கள் தங்களின் தந்திரங்களால் இழுப்பது எளிதில் சாத்தியமாகிறது. 

தபோல்கரிடம் விநாயகர் சிலைகள் பால் குடிக்கும் நிகழ்வு நடப்பதாக தகவல் தரப்பட்டது. அப்போது அவர், "யானையின் தும்பிக்கை மூக்கு ஆகும். யானை தண்ணீரை உறிஞ்சி அதை வாயில் கொண்டு சென்று குடிக்கிறது. இந்த விநாயகர் தும்பிக்கையால் பாலை உறிஞ்சுகிறார் என்றால், தும்பிக்கையின் மூலம் பால் குடித்து, அது நுரையீரலுக்குள் நுழைந்து உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தாதா?" என்று கேட்டார். அடுத்து மும்பை பாந்திராவில் உள்ள மாதா சிலையில் ரத்தம் வடிகிறது என்று பெரும் புரளி கிளம்ப, கூட்டம் கூட்டமாக மக்கள் சென்றனர். தபோல்கர் சிகப்பு நிற நீர்மம் சிலையில் ஆங்காங்கே வழிவது குறித்து அறிவியல் பூர்வமாக எடுத்துரைத்தார். சிலை செய்யும் போது முதலில் இரும்புச்சட்டங்கள் பின்னி அதன் மீது சிமெண்ட் பூசி சிலை அமைப்பார்கள். அந்த இரும்புச் சட்டங்களின் மேல் துருப் பிடிக்காமல் இருப்பதற்காக பூசப்பட்ட வேதிப்பொருள் நீண்ட நாட்களுக்குப் பிறகு மெல்ல மெல்ல தனது பலத்தை இழக்கத் துவங்கும். அப்போது மழை மற்றும் இதர காரணங்களில் ஈரப்பதக் காற்று சிலையினுள் ஊடுருவி உள்ளே உள்ள இரும்பின் மீது பட்டு நாளடைவில் அந்த நீர் கசியும் போது இரும்புத்துருவோடு சேர்த்து சிவப்பு நிறத்தில் நீர் வெளியே வருகிறது" என்று சான்றுகளோடு கூறினார். 

வியப்பான செயல் என்னவென்றால் பிள்ளையார் பால் குடிப்பது, மாதா சிலையில் ரத்தம் வழிவது ஆகிய இரண்டு கட்டுக்கதைகளும் நரேந்திர தபோல்கரின் தெளிவான விளக்கத்திற்குப் பிறகு நடக்கவே இல்லை. அவர் ஒரு மாற்றத்தை உருவாக்கி விட்டார். "பயம்தான் மூடநம்பிக்கையின் முக்கிய ஆதாரம்... பயத்தை வெல்வதே ஞானத்தின் ஆரம்பம்” என்றார் பெர்ட்ராண்ட் ரஸ்ஸல். இந்த வார்த்தைகளில் நரேந்திர தபோல்கர்  உறுதியாய் இருந்தார். முக்கியமாக பகுத்தறிவு பரப்புரையை சான்றுகளோடு மக்களிடையே கொண்டு செல்லவேண்டும். உண்மையைப் பேசுவதில் தயக்கம் கூடாது. காரணம் இந்தியா போன்ற மூடநம்பிக்கையில் உழலும் மக்கள் அதிகம் வாழும் நாடுகளில் பகுத்தறிவு பேசும் போது உண்மையை உறுதிபடப் பேசவேண்டும். அதற்கான பலனும் உடனடியாக கிடைக்கும்.   ஆனால் மக்களின் மூடநம்பிக்கையில் லாபம் பார்க்கும் கூட்டம் இதற்கு எதிராக நிற்கும். அப்படி ஒரு கூட்டம் தான் நரேந்திர தபோல்கர், கோவிந்த பன்சாரே, கல்புர்கி மற்றும் கவுரி லங்கேஷ் போன்ற பகுத்தறிவாளர்களின் உயிர்களைக் குடித்துவிட்டது. 

 அவர்கள் ஒரு தபோல்கர் ஒரு கவுரிலங்கேஷை அமைதிப்படுத்தி விடலாம். தபோல்கரின் மகன் புனேவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது கூறியதை இங்கே நினைவுபடுத்தலாம். "துப்பாக்கிக் குண்டுகள் ஒரு தபோல்கர், ஒரு கவுரிலங்கேஷ், ஒரு கல்புர்கி, ஒரு கோவிந்த பன்சாரேவின் உயிரைப் பறிக்கலாம். ஆனால் அவர்கள் இந்தக் கொலைகளின் மூலம் நூற்றுக்கணக்கான பகுத்தறிவாளர்களை விழிப்படைய வைத்துவிட்டனர்" என்பதே அது!

No comments:

Post a Comment