தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். இரவி ஏதோ ஒரு திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என்பதை, ஆளுநரின் ஒவ்வொரு பேச்சும் நடவடிக்கையும் வெளிப் படுத்துகிறது.
ஸநாதனம் என்ற சர்ச்சையைத் தொடங்கி வைத்தவரே சாட்சாத் இந்த ஆளுநர் ரவிதான்.
தந்தை பெரியார் பிறந்த தமிழ்நாட்டில் - சுயமரியாதை இயக்கம், திராவிடர் இயக்கம் பிறப்பெடுத்த தமிழ் மண்ணில் அதற்கு எதிர்வினை ஆற்றல் என்பது இயல்பானதே!
இதனை வைத்துக் கொண்டு, 'அய்யகோ ஸநாதனத்தை எதிர்ப்பதா? ஹிந்து மதத்தை இழிவுபடுத்துவதா?' என்பது சங்கிகளும், பார்ப்பனீய ஆதிபத்திய கூட்டமும், ஆர்.எஸ்.எசும், அது போட்ட குட்டிகளும் அதன் அரசியல் வடிவமான பிஜேபியும் - கிடைத்து விட்டது ஒரு சரியான தெப்பம், அதைக் கொண்டு கரை சேரலாம் - என்று கொக்கரிக்க ஆரம்பித்து விட்டனர். மண் குதிரையை நம்பி ஆற்றில் இறங்கிய கதைதான்.
பிரதமரே - ஒன்றிய அமைச்சர்களைப் பார்த்து "இந்தப் பிரச்சினையைக் கையில் எடுத்துக் கொள்ளுங்கள்" என்று கூறும் அளவுக்கு ஒன்றிய பி.ஜே.பி. அரசு பலகீனப்பட்டுப் போய் விட்டது.
ஒரு நீதிபதி சொல்லுகிறார். ஸநாதனம் என்பது முற்றிலும் தவறு கிடையாது. அதில் உள்ள தீமைகளை நீக்கிவிடலாம்" என்று 'திருவாய்' மலர்ந்துள்ளார்.குறிப்பாக ஹிந்து மதத்தில் உள்ள தீண்டாமையை நீக்கி விடலாம் என்கிறார்.
ஹிந்து மதத்தில் - அதன் சுருதிகளில், ஸ்மிருதிகளில் கூறப்பட்டது எல்லாம் ஏற்றுக் கொள்ளத்தக்கதுதானா?
பெண்களைப்பற்றிய அவற்றின் பார்வை என்ன?
"மாதர்கள் பெரும்பாலும் விபச்சார தோஷமுள்ளவர்கள்" (மனுதர்மம் அத்தியாயம் - 9, சுலோகம் 19).
"பெண்களும், வைஸ்யர்களும், சூத்திரர்களும் பாவயோனி யிலிருந்து பிறந்தவர்கள்" என்கிறதே கீதை (அத்தியாயம் - 9, சுலோகம் - 32)
இவற்றை எல்லாம் கனம் நீதிபதி ஏற்றுக் கொள்கிறாரா? இவற்றை எல்லாம் மாற்றியமைக்கும் அதிகாரம் யாரிடம் உள்ளது என்பதையும் நீதிபதி சொல்லியிருக்கலாமே!
"தீண்டாமை க்ஷேமகரமானது" என்று மறைந்த காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி (ஜெகத் குருவின் உபதேசங்கள் பாகம் 2) சொல்லியிருக்கிறாரே - அதைப்பற்றி நீதிபதியின் கருத்தென்ன?
இப்பொழுது ஆளுநர் ஆர்.என். இரவி பேசிய பேச்சு ஏடு களில் வெளிவந்துள்ளது. ('தினத்தந்தி' பக்கம் 11 நாள் 18.9.2023)
"இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் தீண்டாமை அதிகம் உள்ளது" என்று பேசி இருக்கிறார். இப்படிச் சொல்லுவதற்கு ஆளுநரிடம் தரவுகள் உண்டா? புள்ளி விவரங்கள் உண்டா?
போகிற போக்கில் பொத்தாம் பொதுவில் பேசுவது ஆளுநர் பதவிக்குத் தகுதியானதுதானா?
அனைத்து ஜாதியினருக்கும் அர்ச்சகர் உரிமை என்பதற் காகக் குரல் கொடுத்தவர் யார்? தந்தை பெரியார் தானே! அதற்குச் சட்ட வடிவம் கொடுத்தது தி.மு.க. ஆட்சியில் முத்தமிழ் அறிஞர் மானமிகு கலைஞர்தானே! அதனைச் செயல்படுத்தி இருப்பது - திராவிட மாடல் ஆட்சி நடத்தும் - சமூகநீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு முதல மைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள்தானே.
பெரியார் நினைவு சமத்துவபுரம் என்ற சிந்தனை - இந்தியாவிலேயே யாருக்கு உதித்தது? தந்தை பெரியாரின் மாணவர் மானமிகு கலைஞருக்குத் தானே!
தமிழ்நாட்டில் அங்கொன்றும், இங்கொன்றுமாக நடக்கும் விரும்பத்தகாத நிகழ்ச்சிகளைப் பூதாகரப் படுத்துவது ஓர் ஆளுநருக்கு அழகா?
நியமன அதிகாரியான ஆளுநர், மக்களால் தேர்ந் தெடுக்கப்பட்ட ஆட்சிக்கு எதிராக செயல்படுவதைத் தனது தொழிலாகக் கருதலாமா? நடப்பது ஆளுநர் ஆட்சியா - மக்கள் ஆட்சியா?
குடியரசுத் தலைவராக இருந்த ராம்நாத் கோவிந்த் தமது குடும்பத்தாருடன் பூரி ஜெகந்நாத் கோயிலுக்கும் ராஜஸ்தான் ஜோத்பூர் பிர்மா கோயிலுக்கும் சென்ற போது தடுக்கப்பட்டதன் மேல் ஒன்றிய பிஜேபி அரசு எடுத்த நடவடிக்கை என்ன?
இப்பொழுது மட்டும் என்ன? டில்லி ஜெகந்நாதர் கோயிலுக்குக் குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அவர்கள் சாமி தரிசனம் செய்யச் சென்றபோது - இடையில் மரக்கட்டை போட்டுத் தடுக்கவில்லையா? அதே நேரத்தில் அதே கோயிலில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனும் சென்றபோது - கர்ப்பக்கிரகத் துக்குள் அழைத்து பட்டாடை அணிவிக்கப்பட்டதே! இதற்கெல்லாம் ஆளுநர் இரவியிடமிருந்தும் ஆன்மீக ஸநாதனிகளிடமிருந்தும் பதில் உண்டா! குடியரசுத் தலை வரையே தீண்டாமைப் பாம்பு கொத்துகிறதே!
ஆளுநர்மீது வழக்குத் தொடுக்க முடியாது - மசோதாக்களை எவ்வளவு காலம் வேண்டுமானாலும் நிலுவையில் வைக்கலாம் என்ற ஜனநாயக விரோதமான சட்டங்கள் இருக்கின்றன - என்ற பாதுகாப்பு வளையத்துக்குள் நின்று கொண்டு, வாய்ப் புளித்ததோ, மாங்காய்ப் புளித்ததோ என்று பேசலாம் என்றால் - அதற்கும் ஓர் எல்லை உண்டு! இந்த அளவோடு இப்போதைக்கு நிறுத்திக் கொள்கிறோம். அவ்வளவுதான்.
No comments:
Post a Comment