தோல்வியை ஏற்கக் கற்றுக் கொடுங்கள் (2) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 27, 2023

தோல்வியை ஏற்கக் கற்றுக் கொடுங்கள் (2)

 தோல்வியை ஏற்கக் கற்றுக் கொடுங்கள் (2)

நாட்டில் இளம் வயது மாணவர்கள், வீட்டில் செல்லப் பிள்ளைகள், அதிகக் கடனில் மூழ்கி, அதை அடைத்து மீண்டும் எழ முடியும் என்ற நம்பிக்கை இல்லாத மனிதர்கள் - இவர்களில் பெரும்பாலோர் தற்கொலைதான் இதற்கு ஒரே தீர்வு என்ற அவசரப்பட்ட முடிவிற்கு வந்து விடுவது மிகவும் வேதனை தரும் செய்தியாகும்.

"வீட்டில் தனக்கு 'செல்போன்' வாங்கித் தரவில்லை என்பதற்காக மனமுடைந்து தற்கொலை"

"செல்போனை சதா பயன்படுத்திக் கொண்டே இருந்து, பாடம் படிக்காமல் இருக்கலாமா? என்று தாய் - தந்தையார் கண்டித்ததினால் தற்கொலை"

"நீட் தேர்வில் - 'நான் இவ்வளவு படித்தி ருந்தும் எங்கே தோல்வி அடைந்து விடுவேனோ' என்ற அச்சம் காரணமாக தூக்கு மாட்டிக் கொண்டு தற்கொலை."

இப்படி நாளும் தொலைக்காட்சிகளிலும், ஏடுகளிலும் வெளிவரும் சோகச் செய்திகளை பார்ப்பதோடு, படிப்பதோடு நிறுத்திக் கொள்ளலாமா?

அதன் மூலக் காரணத்தை ஆராய்ந்து அரசும், சமூக ஆர்வலர்களும் அவற்றைத் தாண்டி பெற்றோர்களும், ஆசிரியர்களும், மாணவர்களை, இளைஞர்களைப் பக்குவப்படுத் திட அறிவுறுத்தல் அவசியமல்லவா?  "தோல்வி ஏற்பட்டால் என்ன குடி மூழ்கிப் போய் விடும் கவலைப்படாதீர்கள்; அடுத்தத் தேர்வில் உங்கள் உழைப்பின் மூலம் அதனைச் சரி செய்துகொள்ள முடியும்; வாழ்ந்து சாதித்து, சரித்திரம் படைக்க வேண்டிய இளைஞர்கள்  இளவயதிலேயே சாவு என்ற சூழலைத் தேடிப் பிடித்து சிக்கி உங்கள் வாழ்வை முடித்துக் கொள்வது ஏற்கத் தக்கதா?

அதுவும் அற்ப காரணங்களுக்காக உயிரைக் கொடுப்பதா?" என்று 'சிந்தனை வயப்படுத்தல்' தற்கொலை எண்ணத்தைத் தவிர்க்குமல்லவா!

ஒரு நிகழ்ச்சி, துன்பமும், துயரமும் நம்மைத் துரத்தித் துரத்தி வேதனை அடைய வைக்கும் ஒரு செய்தி!

புதுக்கோட்டையில் மருத்துவக் கல்லூரி மாணவர் ஒருவர் முடிவெட்டிக் கொள்ளாமல் வந்ததைக் கண்டித்து 'முடி திருத்தம் செய்து வா' வகுப்பிற்கு  என்று சொன்னார் என்பதற்காக  - படிக்கும் ஒரு மாணவர் - அதுவும் மருத்துவக் கல்வி பயிலும் மாணவர் தற்கொலை என்ற செய்தி நம் நெஞ்சைப் பிழியச் செய்கிறதே!

அவரது பெற்றோர் எவ்வளவு கஷ்டப்பட்டு இந்தப் பிள்ளையை வளர்த்து அவருக்குரிய இடம் பெறுவதற்கு இரவுப் பகலாய் அரும்பாடு பட்டிருப்பார்கள்?

அவர்கள் நிலையில் இருந்து அத்துயரத்தை, சொல்லொணா சோகத்தை கொஞ்சம் எண்ணிப் பாருங்கள்.

வருத்தப்பட்டால், கண்ணீர் விட்டால் மட்டும் போதுமா? அக்கண்ணீர் வராமல் நிரந்தரமாகத் தடுக்க மனிதர்களாகிய நமது பகுத்தறிவு பயன் பட வேண்டாமா?

அதன் நோய் நாடி நோய் முதல் நாடும் அறிவியல், உளவியல் அணுகுமுறையோடு, ஒவ்வொரு பள்ளி, கல்லூரி, நிறுவனங்களிலும் உளவியல் ரீதியாக "வெற்றியை நோக்கியது நமது இலக்கு என்றாலும், இடையில் எதிர்பாரா மலோ, எதிர்பார்த்தோ தோல்வி நம்மைத் தொடருகிறது என்றால் நாம் அதனை ஏற்று   அது ஒரு சிறு இடைவெளி - தற்காலிக நிழல் இருட்டு, அதனைத் தாண்டி விரைவில் வெளிச்சம் நிச்சயம் வருவது உறுதி!" என்ற தன்னம்பிக்கையை நாளும் வகுப்பறைகளில் வாழ்வின் அனைத்து சந்தர்ப்பங்களிலும் இளை யர்களுக்கு எடுத்துக் கூறி அவர்களது மனதில் ஆழமாகப் பதிய வைத்தால் நிச்சயம் 'தற்கொலை' என்ற எண்ணமே தோன்றாது!

குற்றவாளிகள்கூட மனம் மாறி, சீர்திருத்திய நல்வாழ்வுக்கு, ஒழுக்கமான வாழ்க்கை முறைக் குத் திரும்ப வேண்டும் என்பது இன்றைய தண்டனைகளின் அடிநாதமாக அமையும் போது, இப்படி "உப்புச்சப்பில்லாத" காரணங் களுக்குக்கூட உடனே தற்கொலைதான் தங்களது ஒரே விடை அல்லது விடிவு என்று தவறாக எண்ணாமல் இருக்க, தோல்வி அடை தலும் எல்லோருக்கும் எப்போதும் மிகவும் நல்லதே என்ற மனப்பான்மையை விதைக்க வேண்டும்; அது முளைக்க வேண்டும்.

'தோல்வி ஒரு நல்லாசிரியர்' என்பதைத் தோல்வியால் துவண்டு, துடித்து, முடங்கிக் கிடக்கும் முன்யோசனையற்ற இளையர்களே, வாலிபர்களே நன்கு ஆழமாகச் சிந்தித்து கற்றுக் கொள்ளுங்கள்; அவர்களுக்குக் கற்றுக் கொடுங்கள்.

எனது பல்கலைக் கழக மாணவப் பருவத்தில் ஆண்டுதோறும், வகுப்புதோறும் வெற்றி, பரிசுகள் பெறும் வெற்றி, 'முதல் தகுதி' (First Rank)  என்ற தகுதிகளைப்  பெற்று கொண்டே வந்தேன்.

ஆரம்பப் பள்ளி முதல் பல்கலைக் கழக எம்.ஏ., (B.A. Honours - M.A.) பெறும் வரையில் எல்லாம் இத்தகைய வெற்றிகளைப் பெற்றுக் கொண்டே வந்தேன்.

சட்டக் கல்லூரியில் முதல் ஆண்டில் நடந்த தேர்வில் ((F.L. என்று கூறுவார்கள்) வெகுக் குறைந்த மதிப்பெண்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்த நிலையில், என்னால் எளிதில் அந்தத் தோல்வியை ஏற்க முடியாமல் கண்ணீர் விட்டு அழுது நொந்த நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

பிறகு நல்ல பெரியவர்கள் - பெரியவர் ஆனைமலை ஏ.என். நரசிம்மன் அவர்கள் எனக்கு மிகப் பெரிய ஆறுதல் கடிதம் எழுதி ஆற்றுப்படுத்தித் தேற்றினர்.

நான் அத்தேர்வில்  வெற்றி பெறுவதற்கு எந்த நியாயமும் இல்லை என்ற காரணகாரிய அறிவியல் அலசல் ஆய்வு மனப்பான்மைக்கு - அறிவுக்கு இடமின்றி வெறும் உணர்ச்சி மட்டும் தன் முகத்தை  என் முன் நீட்டியதே!

நான் அய்யாவுடன் வழக்கு மன்றம், விசாரணை  பிறகு  அய்யா பெரியார் பணித்தபடி  பயணம் மேற்கொண்டதால் (அன்னை மணியம் மையாருடன் சட்ட நகல் எரித்தத் தோழர்களுடன் சந்திப்பு, கூட்டங்கள் என்று சுழன்று சுழன்று சட்டக் கல்லூரிக்கே போகாமல் முதல் ஆண்டில்) கடைசி 15 நாள்களில் - அதுவும் பெரிய பெரிய மூல புத்தகங்களையே படித்து, செரிமானம் செய்து, விடை எழுதிய முறையைப் பின்பற்றிய தால் 5 மதிப்பெண்கள் வித்தியாசத்தில் ஏற்பட்டதே அத்தோல்வி!

'அலகாபாத் சிரீஸ்' என்று நோட்ஸ் புத்தகங் களைக்கூட வாங்கிப் படிக்க மற்றவர்களைப் போல் என் மனம் இடந்தராது தேர்வு எழுதினேன். 

தோல்விதானே அதற்கு உரியது. அந்த பொது நிலை, சிந்தனை ஏனோ எனக்கு வரவில்லை.

எனது "தன்முனைப்பு"க்கு அத்தோல்வி சரியான அடி கொடுத்து, நல்ல பாடத்தைக் கற்பித்ததை உணர்ந்தேன் - மீண்டும் படித்தேன் - அடுத்த ஙி.லி., தேர்வில் 'தகுதி'யுடன் வெற்றி!

தோல்வியின் அனுபவமே வெற்றியின் பெருமை  - கசப்பு நமக்கு உணர்த்தி இருந்தால் தானே -   இனிப்பின் பெருமை எவருக்கும் விளங்கும். - இல்லையா? என்று கற்றுக் கொடுக்க முன் வருவீர்!

No comments:

Post a Comment