"மோடியின் விஸ்வகர்மா யோஜனா, புதிய குலக்கல்வித் திட்டமே" என்று 06.09.2023 அன்று வள்ளுவர் கோட்டத்தில் திராவிடர் கழகம் நடத்திய கண்டன ஆர்ப்பாட்டத்தில் உரையாற்றும்போது, ம.தி.மு.க. கொள்கை விளக்க அணிச் செயலாளர் ஆ.வந்தியத்தேவன் குறிப்பிட்டார். அவருடைய உரை வருமாறு:
தொழில் தொடங்க கடன் உதவி என்ற பெயரால், ஜாதி அமைப்புக்கு புத்துயிர் கொடுக்க நச்சு உருண்டையில் தேன் தடவி கொடுக்கும் மோடி அரசின் நயவஞ்சகத் திட்டத்தை முதன் முதலாக அடையாளம் கண்டு, அதனை ஒழித்துக்கட்ட நம்மை யெல்லாம் அணிதிரட்டி, இந்த கண்டன ஆர்ப் பாட்டத்திற்கு நாள் குறித்து, தலைமையேற்று நடத்திக் கொண்டு இருக்கிற திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் ஆசிரியர் அய்யா கி.வீரமணி அவர்களுக்கும், கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு எழுச்சி முழக்கமிட்டுள்ள தோழமைக் கட்சிகளின் தலைவர்களுக்கும், உற்சாகப் பெருக்கோடு இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று போர்க் குரல் எழுப்பியுள்ள அனைத்துக் கட்சி களின் செயல்வீரர்களுக்கும், மறுமலர்ச்சி தி.மு.கழகத்தின் சார்பிலும், இலட்சியத் தலைவர் திராவிட இயக்கப் போர்வாள் தலைவர் வைகோ அவர்களின் சார்பிலும் அன்பான வாழ்த்துகளை முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.
நாம் எழுப்பிய ஒலி முழக்கங்கள், நாம் உயர்த்திப் பிடித்திருக்கிற பதாகைகள் நம்முடைய தலைவர்கள் நிகழ்த்திய விளக்க உரைகள், நாம் எதற்காக இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்திக் கொண்டு இருக்கிறோம் என்பதை தெளிவாக விளக்கிக் கொண்டு இருக்கின்றன.
அன்பின் இனிய தோழர்களே, ஆகஸ்ட் 15 அன்று டில்லியில் நடைபெற்ற சுதந்திர நாள் விழாவில்தான் இந்த விஸ்வகர்மா திட்டம் குறித்து பிரதமர் மோடி அறிவித்தார். விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் அறிவித்த இந்த திட்டத்தின் சூட்சமத்தை தெளிவாக தெரிந்து கொண்ட ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்த திட்டம் ராஜாஜி அறிவித்த குலக்கல்வித் திட்டத்தின் புதிய அவதாரம் என்று எடுத்த எடுப்பிலேயே நமக்கு அடையாளம் காட்டினார்.
அன்புத் தோழர்களே, இராஜாஜி அவர்கள் குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்த போது கூட, Modified Scheme of Elementary Education என்ற, முக மூடியைப் போட்டு புதிய கல்வித் திட்டம் என்ற பெயரில்தான் அறிமுகப்படுத்தினார். அதே போலத்தான் பிரதமர் மோடியும், தொழில் தொடங்க கடன் தருகிறோம் என்ற முக மூடியைப் போட்டுக் கொண்டு, ஜாதி அமைப்பை பட்டுப்போகாமல் தடுத்து நிறுத் திட, "பிரதம மந்திரி விஸ்வர்கர்மா யோஜனா" என்ற சூழ்ச்சித் திட்டத்தை அறிவித்து இருக்கிறார்.
ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்த போது சட்டமன்றத்தில் இதுகுறித்து விவாதிக்கவில்லை. எதிர்க்கட்சிகளை அழைத்து கருத்து கேட்கவில்லை. இதுதான் ஜனநாயக நெறிமுறையா? ஏன் இப்படி சர்வாதிகாரியாக நடந்து கொள்கிறீர்கள்? என்று எதிர்கட்சிகள் கேட்டபோது, "புத்தர் நம்மையெல்லாம் கேட்டுக் கொண்டுதான் துறவறம் போனாரா? சங்கரரும், ராமா னுஜரும் எல்லோரிடமும் கேட்டுக் கொண்டு தான் தங்கள் கருத்துகளை சொன்னார் களா? இவர்களையெல்லாம் கேட்டுக் கொண்டுதான் செயல்பட வேண்டும் என்றால் அதற்குள் நான்கு யுகங்கள் ஓடிவிடும்" என்று ஆணவத்தின் உச்சியில் நின்று அன்றைக்கு முதலமைச்சர் ராஜாஜி பேசினார். அதே போலத்தான் இன்றைக்கும் நாடாளுமன்றத் தில் இது குறித்து விவாதிக்காமல், எதிர்க் கட்சித் தலைவர்களிடம் கலந்து பேசாமல், பிரதமர் மோடி அவர்கள் இந்த அறிவிப்பை திடீரென்று அறிவித்துள்ளார்.
ராஜாஜி குலக்கல்வித் திட்டத்தை கொண்டு வந்தபோது 7 வயது முதல் 11 வயது வரை உள்ள மாணவர்களுக்கான திட்டம் இது என்று அறிவித்தார். 7 வயது முதல் 11 வயது வரை உள்ள மாணவர்கள் உயர்நிலைப்பள்ளிக்கு செல்வதை தடுத்து நிறுத்தி, அப்பன் தொழிலை மகன் செய்ய வேண்டும் என்று பாதி நாளை இதற்காக ஒதுக்கி, அவர்களை மடைமாற்றி வீட்டுக்கு அனுப்பிய திட்டம்தான் குலக்கல்வித் திட்டம்! ராஜாஜி உயர்நிலைப்பள்ளி மாணவர்களை 'குறி' வைத்தார் என்றால், பிரதமர் மோடி, மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் மீது குறி வைத்து விஸ்வர்கமா திட்டத்தை கொண்டு வந்துள்ளார்.
18 வயது நிரம்பியவர்களுக்கு, அவர்களின் பரம்பரைத் தொழிலை செய்வதற்கு பயிற்சிக் காலத்தில் நாள்தோறும் 500 ரூபாய் ஊக்கத் தொகை கொடுக்கப்படும். பயிற்சி முடிந்த பின் 5% வட்டியில் ஒரு லட்ச ரூபாய் கடன் தொகை அளிக்கப்படும். அதனை 18 மாதங் களில் திருப்பிச் செலுத்தினால் கூடுதலாக 2 லட்ச ரூபாய் கடன் தரப்படும். அதனை 30 மாதங்களில் திரும்பச் செலுத்த வேண்டும் என்று இந்த திட்டம் அறிவுறுத்துகிறது.
அன்புத் தோழர்களே, 18 வயதில், +2 வகுப்பில் தேர்ச்சி பெற்றவர்கள் கல்லூரி சென்று உயர்கல்வி கற்று, மருத்துவர்களாக, பொறியாளர்களாக, அறிவியல் அறிஞர் களாக உயர்ந்த நிலையை அடைய வேண்டிய மாணவர்களை பரம்பரைத் தொழிலில் தள்ளுவதற்கான வஞ்சகத் திட்டம் இது! அந்தத் தொழிலையும் கூட தங்கள் விருப்பத்திற்கான தொழிலை அவர்கள் தேர்வு செய்ய முடியாது! முடி திருத்துவது, துணி துவைப்பது, தச்சு வேலை செய்வது என 18 தொழில்களை குறிப்பிட்டு, பாரம்பரியமாக அந்த குடும்பம் செய்கிற தொழிலைத்தான் செய்ய வேண்டும் என்ற நிபந்தனை அறிவிக்கப்பட்டுள்ளது. குடும்பம் செய்கிற தொழிலை தவிர்த்துவிட்டு, வேறு தொழிலை செய்ய அனுமதி மறுக்கப்பட்டு பாரம்பரிய தொழில்தானா என்று மூன்று கட்டமாக அரசு இதனை ஆய்வு செய்துதான் கடன் வழங்குமாம்!
Traditional Guru Skills, Shisya Parambara என்றெல்லாம் இந்த திட்டத் தில் குறிப்பிட்டுள்ள வாசகங்களை நாம் கவனித்துப் பார்த்தால்தான், புதிய மொந்தை யில் பழைய கள் என்று சொல்வார்களே, அதனைப்போல ஆச்சாரியாரின் குலக்கல்வித் திட்டத்தின் புதிய அவதாரம் இது என்பது நமக்கு தெரியும். மோடி அரசு இன்றைக்கு 18 பரம்பரை தொழிலை பட்டிய லிட்டு உள்ளதைப்போல, அன்றைக்கு ராஜாஜி அரசும், களை எடுப்பது, நாற்று நடுவது, ஏர் உழுவுவது, ஆடு மாடு மேய்ப்பது, முடி திருத்தம் செய்வது, சலவைத் தொழிலில் ஈடுபடுவது போன்ற தொழில்களையும் பட்டியலிட்டுக் காட்டி, அந்த வேலையை ஆசிரியரிடம் இல்லாமல், குடும்பத்தினரிடம் மூன்று மணி நேரம் கற்றுக் கொள்வது, மீதி மூன்று மணி நேரம் பள்ளியில் ஆசிரியரிடம் பாடம் கற்றுக் கொள்வது என்று குலக்கல்வித் திட்டம் வரையறை செய்தது!
இதே திட்டத்தினைதான், வடிவத்தை மாற்றி, வேறு சில திருத்தங்களை செய்து, இவர் களுக்கு கல்வியைக் கொடுக்கக் கூடாது என்ற அடிப்படையை மாற்றாமல் விஸ்வகர்மா திட்டம் என்ற பெயரில் தந்திரமாக மோடி அரசு அறிவித்துள்ளது.
''பள்ளிக் கல்வியை ஒழித்துக்கட்ட
தேசியக் கல்விக் கொள்கையாம்!
மருத்துவக் கல்வியில் நுழைவதை தடுக்க
நீட் நுழைவுத் தேர்வாம்!
பல்கலைக் கழக படிப்பை மறுக்க
'கியூட்' நுழைவுத் தேர்வாம்!
மீறி யாரும் படிக்க வந்தால்
ஆசை காட்டி தூண்டில் போடும்
குலக்கல்வி திட்டமான
'விஸ்வகர்மா யோஜனா'
ஆபத்து! ஆபத்து!'
என்று இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் நாம் எழுப்பிய முழக்கத்தை, அன்புத் தோழர் களே, நாடெங்கும் நாம் எழுப்பினால்தான் நமது மக்களுக்கு தெளிவு ஏற்படும். இந்த புரிதலை நமது மக்களிடம் ஏற்படுத்தி, அவர் களை அணிதிரட்டி போராடுவதன் மூலம் தான், மோடியின் சூழ்ச்சித் திட்டத்தை நம்மால் முறியடிக்க முடியும் என்பதை நாம் உணர்ந்திட வேண்டும்!
அந்தப் போராட்டத்தின் தொடக்கப் புள்ளி யாகத் திகழும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டிருக்கிற நம் தோழர்களிடம் குலக்கல்வித் திட்டத்தினை முடிவுக்குக் கொண்டுவர நாம் எந்த அளவுக்கு முனைப் புடன் போராடினோம் என்பதைச் சுருக்கமாகத் தெரிவிக்க விரும்புகிறேன்.
குலக்கல்வித் திட்டத்தை ஆதரித்து 29.06.1952 அன்று திருவான்மியூரில் நடை பெற்ற சலவைத் தொழிலாளர் மாநாட்டில் முதலமைச்சர் இராஜாஜி பேசினார். கல்வி அமைச்சர் டாக்டர் எம்.வி.கிருஷ்ணாராவ் 20.03.1953 சட்டசபையிலேயே அன்று குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டுவரப் போவதாகப் பேசினார். அதற்கு அடுத்த நாளே விடுதலை ஏடு "சிறுவர் கல்வியைப் பாழாக்கும் புதிய திட்டம் உஷார்!" என்று தலையங்கம் தீட்டியது. எச்சரித்தது!
"இனிமேல் கிராமாந்திரப் பிள்ளைகள் மூன்று மணி நேரம் பள்ளியில் படித்துவிட்டு மீதி மூன்று மணி நேரம் பள்ளிக்கு வெளியே அவரவர் பெற்றோரின் தொழிலைப் பயில வேண்டும் என்பது ஏழை திராவிடப் பிள்ளை கள் படித்து முன்னேறாதபடி செய்கின்ற சூழ்ச்சியே தவிர வேறென்ன?" என்ற விடு தலையின் வினாவைப் பற்றிக் கவலைப் படாமல், இராஜாஜியின் அரசு, 1953-1954ஆம் கல்வி ஆண்டிலிருந்தே புதிய கல்வித் திட்டம் நடை முறைக்கு வரும் என அறிவித்தது.
13.06.1953 அன்று திருச்சியில் தி.க. நிர்வாகக் குழுவைக் கூட்டி, சட்டப் பேரவைக் கூட்டம் நடைபெற உள்ள சூலை 14-ஆம் நாள் தொடங்கி சட்டமன்றம் முன்பாக தொடர் மறியல் போராட்டம் நடைபெறும் என தந்தை பெரியார் அறிவித்தார். நாடாளுமன்ற உறுப்பினர் வீராசாமி தலைமையில் மறியல் போராட்டம் தொடங்கி, சட்டமன்றம் நடைபெற்ற அனைத்து நாள்களிலிலும் தொடர்ந்தது. தோழர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்கள்.
சட்டமன்றத்தில் ஒத்திவைப்புத் தீர்மானம் கொண்டு வந்ததை பேரவைத் தலைவர் அனுமதிக்காததால் எதிர்க் கட்சியினர் வெளிநடப்பு செய்தார்கள். பின்னர் எதிர்க் கட்சியினர் நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள். ஆதரவாகவும் எதிர்ப்பாகவும் சமமாக 138 வாக்குகள் பதிவான நிலையில், பேரவைத் தலைவரின் ஆதரவு வாக்கால் இராஜாஜியின் அமைச்சரவை தப்பிப் பிழைத்தது.
1953, சூலை 11, 12 ஆகிய நாள்களில் மன்னார்குடியில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டிலும் குலக்கல்வித் திட்டத்திற்கு எதிரான போராட்டத்தினைத் தீவிரப் படுத்த முடிவெடுக்கப்பட்டது. தி.மு. கழகம் 14.07.1953 அன்று மும்முனைப் போராட்டத்தை நாடு தழுவிய அளவில் நடத்தி, அண்ணா, கலைஞர், நாவலர் நெடுஞ்செழியன், கே.ஏ.மதியழகன், ஈ.வெ.கி. சம்பத், என்.வி.நடராசன், சத்தியவாணி முத்து உள்ளிட்ட முன்னணித் தலைவர்கள் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
15.07.1953 அன்று தூத்துக்குடியில் நடைபெற்ற இரயில் மறியல் போராட்டத்தில், காவல்துறை அடக்கு முறையை ஏவி விட்டது. போராட்டக்காரர்களைக் கலைந்து செல்ல, 17 இரவுண்டு துப்பாக்கிச் சூடு நடத்தியதில், சம்பவ இடத்திலேயே இரண்டு தோழர்கள் கொல்லப் பட்டார்கள். மேலும் 8 பேர் தாக்குதலுக்குப் பலியானார்கள். 50 தொழிலாளர்கள் பலத்த காயங்களுடன் மருத்துவ மனைகளில் அனுமதிக்கப்பட்டனர். 1,700 தோழர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு போடப்பட்டது.
இப்படிப்பட்ட சூழலிலும் 5 நாள்களில் குலக்கல்வித் திட்டம் அறிவிக்கப்பட்டிருந்த பள்ளிகள் முன்பு மறியல் போராட்டம் நடத்தப்பட்டது. அங்கே போராடியவர் களையும் காவல்துறை தாக்குதல் தொடுத்து அவர்களின் மண்டைகளைப் பிளந்தது. தொடர்ந்து 24.07.1953 அன்று நாடு தழுவிய அளவில் கடை அடைப்பு, பொது வேலை நிறுத்தம் நடத்தப்பட்டு தமிழ்நாட்டின் ஒட்டுமொத்த எதிர்ப்பும் பதிவு செய்யப்பட்டது.
எதிர்ப்புகளைக் கண்டு மிரண்ட ஆச்சாரியாரின் அரசு அவர்கள் மீது வன்முறையை ஏவி தாக்கியது. கூலிப் படையை ஏவி விட்டு, திருச்சி பெரியார் மாளிகையைத் தீயிட்டுக் கொளுத்த முயன்றது. இதனை எதிர்கொள்ள 1953 நவம்பர்த் திங்கள் ஆத்தூரில் நடைபெற்ற திராவிடர் கழக மாநாட்டில் தற்காப்புக்காக, சட்டத்திற்கு உட்பட்டு கத்தியை வைத்துக் கொள்ளுமாறு தோழர்களுக்கு பெரியார் அறிவித்தார். "இதுவரை சட்டத்திற்கு உட்பட்டு போராட்டம் நடத்தி வந்த நான், சட்டத்தை மீறியாவது குலக்கல்வித் திட்டத்தை ஒழிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்," என்று பெரியார் பேசினார். அரசுக்கு அவர் தந்த எச்சரிக்கைதானே இது என்பதைத் தவிர, எந்த நிலையிலும் பெரியார் வன்முறையைக் கையில் எடுக்கவில்லை.
1954 சனவரி 23, 24 ஆகிய நாள்களில் குலக் கல்வி எதிர்ப்பு மாநாட்டினை ஈரோட்டில் கூட்டி, அண்ணாமலைப் பல்கலைக் கழகத் துணைவேந்தராய் இருந்த எஸ்.ஜி. மணவாள் ராமானுஜம் அவர்களைத் தலைமை ஏற்கச் செய்தார். மூன்று மாதத்திற்குள் குலக்கல்வித் திட்டத்தைத் திரும்பப் பெறாவிட்டால், தீவிரமான நேரடிக் கிளர்ச்சியில் ஈடுபடுவோம் என்றும் மாநாட்டில் பிரகடனம் செய்தார் பெரியார்!
07.03.1954 அன்று திருச்சியில் மீண்டும் மாநாடு நடத்தி, குலக்கல்வி எதிர்ப்புப் படை நாகையிலிருந்து புறப்பட்டு பரப்புரை செய்து கொண்டு சென்னை சென்றடையும் என பெரியார் அறிவித்தார். இருபது நாள் இடைவெளியில் மீண்டும் நாகையில் விவசாயிகளின் மாநாட்டைக் கூட்டி, குலக்கல்வி எதிர்ப்புப் படை தொடங்குகிறது என்று பெரியார் அறிவித்தார். நீடாமங்கலம் அ.ஆறுமுகம் தலைமையில், பட்டுக்கோட்டை டேவிஸ் அவர்களை தளபதியாகக் கொண்ட 29 பேர் கொண்ட குலக்கல்வி எதிர்ப்புப் படை 29.03.1954 அன்று மாநாட்டுத் திடலில் இருந்து சென்னை நோக்கிப் புறப்பட்டது.
அந்தப் படை சென்னை சென்று சேர்வதற்கு முன்பாகவே இராஜாஜி முதலமைச்சர் பதவியில் இருந்து விலகும்படி எதிர்ப்பு வலுத்தது. காமராசரும், வரத ராசுலு நாயுடுவும், ஓ.பி.ராமசாமி ரெட்டியாரும், செங்கல்வராயனும் மற்ற காங்கிரஸ் தலைவர்களும் இராஜாஜியின் குலக்கல்வித் திட்டத்தினால் தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சீர்கேடுகளை காங்கிரஸ் கட்சியின் டில்லி தலைமையிடம் விளக்கி புகார் தெரிவித்தார்கள். குலக்கல்வித் திட்டத்தினை அகற்றுவதற்கு இராஜாஜியை முதலமைச்சர் பதவியிலிருந்து இறக்கி வீட்டுக்கு அனுப்புவதுதான் ஒரே தீர்வு என்று விடுதலை ஏடு தலையங்கம் தீட்டி எடுத்துரைத்தது. இறுதியில் அதுதான் நடந்தது! காங்கிரஸ் கட்சியின் தலைமை, கழுத்தைப் பிடித்து வெளியேற்றுவதற்கு முன்பாக உடல்நிலை சரியில்லை என்று சமாளித்துக் கொண்டு 08.04.1954 பகல் 12 மணிக்கு முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார் இராஜாஜி!
முதலமைச்சர் பதவியில் காமராசரை அமர்த்திட காய் நகர்த் தினார் பெரியார். அதன்படியே நடந்தது. அதற்காக குடியாத்தம் தொகுதி இடைத்தேர்தலில் காமராசர் போட்டியிட்டார். "குணாளா,குலக்கொழுந்தே வருக!" என்று அறிஞர் அண்ணா வரவேற்றார். தி.க., தி.மு.க., ஆகிய இரு கட்சிகளுமே ஆதரவளித்து காமராசரை வெற்றிபெறச் செய்தன. அதன்படி முதலமைச்சர் காமராசரின் அரசு, 18.05.1954 அன்று சட்டமன்றத்தில், புதிய கல்வித் திட்டம் என்ற குலக்கல்வித் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்தது. ஓராண்டுக்கும் மேலாக பெரியாரும், அண்ணாவும், காமராசரும், தமிழ்நாட்டு மக்களும் நடத்திய தொடர் போராட்டங்களின் விளைவாக குலக் கல்வித் திட்டத்திற்கு முடிவுரை எழுதப்பட்டது.
அருமைத் தோழர்களே! இந்தப் போராட்ட வரலாற்றை மனதில் பதிய வைத்துக்கொண்டு, இன்றைக்கு மோடி அரசு கொண்டு வந்துள்ள புதிய குலக்கல்வித் திட்டத் திற்கும் முடிவுரை தீட்டுவதற்கு நாம் ஒருங்கிணைந்து போராட வேண்டும். அதற்கான தொடக்க நிகழ்ச்சிதான் இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம்!
நல்வாய்ப்பாக நாடாளுமன்றத்திற்கான தேர்தல் விரைவில் வர உள்ளது. இப்போது தொடங்கி நாடாளு மன்றத் தேர்தல் பிரச்சார காலம் வரை மோடியின் இந்த நயவஞ்சகமான திட்டத்தின் சீர்கேடுகளை மக்களிடம் நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். வாக்காளர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி, மோடி அரசை அகற்றும் பணியில் நாம் முனைப்புடன் முழு வீச்சில் தொய்வின்றி ஈடுபட வேண்டும். இதுதான் இந்தப் பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வு என்பதை எடுத்துச் சொல்லி, அந்தப் பணியில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து உற்சாகத் துடன் ஈடுபடுவோம்; மதவாத சக்திகளின் வஞ்சகச் செயலை வேரறுத்து, திராவிடம் வென்றது என்ற புதிய வரலாறு படைப்போம் என சூளுரைத்து அனைவருக்கும் நன்றி கூறி என் உரையை நிறைவு செய்கிறேன். வணக்கம்.
No comments:
Post a Comment