சிங்கப்பூர், செப். 2- சிங்கப்பூரின் அதிபராக கடந்த 6 ஆண்டுகளாக ஹலிமா யாகூப் திகழ்ந்து வருகிறார். இந்த சூழலில் அவரின் பதவிக்காலம் இந்த மாதம் 13-ஆம் தேதி யுடன் முடிவுக்கு வரும் நிலையில் அடுத்த அதிபர் யார் என்ற கேள்வி எழுந்தது. தற்போதைய அதிபர் ஹலிமா யாகூப் அடுத்த அதிபர் தேர்தலில் அவர் போட்டியிட மாட்டேன் என அறிவித்த நிலையில், அடுத்த அதிபர் யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது .
அதனைத் தொடர்ந்து அதிபர் தேர்தல் அறிவிக்கப் பட்ட நிலையில், அதற்காக வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 22ஆம் தேதி நடைபெற்றது. இதில் தர்மன் சண்முகரத்னம் (66), இங் கொக் சொங் (76) டான் கின் லியான் (75) ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர். இதன் காரணமாக அதிபர் தேர்தலில் மும்முனை போட்டி நடை பெற்றது.
இந்த தேர்தலுக்காக பிரச்சாரம் விறுவிறுப்பாக நடைபெற்ற நிலையில், நேற்று (1.9.2023) அதிபர் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 27 லட்சம் மக்கள் வரை வாக்களித்த நிலையில், வாக்குகள் உடனடியாக எண்ணப்பட்ட தேர்வு முடிவுகள் அறிவிக்கப்பட்டன.
இதில், 70.4 சதவீத வாக்குகளைப் பெற்று தன்னுடன் போட்டியிட்ட இரண்டு வேட்பாளர்களையும் வீழ்த்தி தர்மன் சண்முகரத்னம் சிங்கப்பூரின் 9ஆவது அதிபராக தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளார். இலங்கை வம்சாவளியை சேர்ந்த தர்மன் சண்முகரத்னம் 2001-ஆம் ஆண்டு சிங்கப்பூரின் ஜூரோங் தொகுதியில் இருந்து முதல் முறையாக எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து அரசியலில் தொடர்ந்து ஏறுமுகத்தில் இருந்த அவர், சிங்கப்பூரின் நாணய வாரியத்தின் தலைவர், பிரதமரின் ஆலோசகர், நிதிய மைச்சர், கல்வி அமைச்சர், துணை பிரதமர் என பல்வேறு பதவிகளை வகித்து, தற்போது நாட்டின் உயரிய பதவி யான அதிபர் பதவிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
No comments:
Post a Comment