திருப்பத்தூர் மாவட்டம் ஆலங்காயம் அடுத்த தீர்த்தமலையில் விநாயகர், முருகன், சிவன் உள்ளிட்ட கோவில்கள் உள்ளன. ஒரு வெள்ளிக்கிழமை அன்று அதிகாலையில் கார் ஒன்று விநாயகர் கோவிலுக்கு வந்தது. அதில் இருந்து 4 பேர் கொண்ட கும்பல் இறங்கினர். அப்போது கோவில் பூசாரி உள்ளே சன்னதியில் பூஜைக்கான தயாரிப்புகளைச் செய்துகொண்டு இருந்தார். சாமி கும்பிடுவதுபோல் வந்த அந்த நபர்கள், திடீரென பெரிய விநாயகர் சிலையை திருடிக் கொண்டு காரில் தப்பி ஓடினர். இதைக் கண்டு திடுக்கிட்ட பூசாரி கூச்சலிட்டு ஊரைக் கூட்டியுள்ளார். ஊர் மக்கள் அங்கு வந்து பார்த்தபோது, கோவிலில் விநாயகர் சிலை திருடப்பட்டது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
இதனை அடுத்து, கார் சென்ற பாதையில் மோட்டார் சைக்கிளில் சிலர் வேகமாக காரை பின்தொடர்ந்தனர். அதற்குள் எதிர்ப்புறம் இருந்த நபர்களும் சாலையில் தடுப்பை ஏற்படுத்தியதால் காரை மேலும் ஓட்ட முடியாமல் நிறுத்தியுள்ளனர். இதனை அடுத்து காரில் இருந்த 4 பேரையும் மடக்கிப் பிடித்து அடித்து ஆலங்காயம் காவல் நிலையத்தில் மக்கள் ஒப்படைத்தனர். காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை செய்ததில், அணைக்கட்டு அடுத்த மருதவல்லிப் பாளையம் கத்தாரை கொல்லையை சேர்ந்த ஏழுமலை (வயது30), ஒடுகத்தூர் அடுத்த வண்ணான்தாங்கலை சேர்ந்த பிரகாசம் (50), அணைக்கட்டு அடுத்து, பாளையத்தை சேர்ந்த செல்வம் (32), புத்தூரை சேர்ந்த சுரேஷ் (32) என்பது தெரிய வந்தது. அவர்கள் அனைவரும் பல்வேறு வேலைகள் பார்ப்பதாகவும், சிலை திருடும் நபர்கள் இல்லை என்றும், ஊரிலிருந்த ஜோதிடர் ஒருவர் குறிப்பிட்ட கோவில் பிள்ளையார் சிலையைத் திருடி வந்து உங்கள் ஊரில் வைத்தால் நல்லது நடக்கும் என்று கூறியதை அடுத்து, நாங்கள் சிலையைத் திருடத் திட்டமிட்டோம். நள்ளிரவில் சிலை திருட இருந்தோம்; ஆனால் எல்லோரும் தாமதமாகவே எழுந்து திருட வந்தனர். இதனால் காலை பூசாரி கோவிலுக்குள் வந்து விட்டார். இருப்பினும் பூசாரியின் கவனத்தைத் திசை திருப்பி சிலையைத் திருடினோம். ஆனாலும் அவர் எச்சரிக்கையடைந்து எங்களை காட்டிக் கொடுத்து விட்டார். ஊர் நன்மைக்காகத்தான் சிலையைத் திருடினோம் வேண்டுமென்றால் நாங்கள் வேறு ஒரு சிலையை அந்த ஊருக்குக் கொடுக்கிறோம் என்று கூறினார்கள். ஆனால் அந்த ஊர் மக்கள் ஏற்கவில்லை. இதனால் சிலை திருட்டு வழக்கை அந்த நால்வர் மீதும் பதிவு செய்து சிறையில் அடைத்தனர். சிலை திருட்டிற்கு பயன்படுத்தப்பட்ட காரையும் பறிமுதல் செய்தனர்.
பிள்ளையார் சிலையைத் திருடிக் கொண்டு வைப்பதுதான் அய்திகம் - வாதாபி கணபதி உட்பட என்பது தெரியுமா?
உத்தரப்பிரதேசம் கொசம்பி மாவட்டத்தில் உள்ள சிவன் கோவிலில் பழைமை வாய்ந்த சிவலிங்கம் திருடுபோனது. இது தொடர்பாக அங்கு மதக்கலவரம் உருவாகும் சூழல் ஏற்பட்டது, கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் கண்காணிப்புக் காமிராக்கள் எதுவும் இல்லாத காரணத்தால் குற்றவாளிகளைப் பிடிப்பதில் பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
இந்த நிலையில், கோவிலில் நடத்திய விசாரணையில், ஒரு நபர் 2 ஆண்டுகளாகத் தொடர்ந்து கோவிலுக்கு வந்து காலையிலிருந்து இரவு வரை தியானம் செய்துவிட்டு செல்வார். அவர் சில நாள்களாக வரவில்லை என்று கூறினார்கள். மேலும், அந்த நபர் அருகில் உள்ள ஊரைச்சேர்ந்த நபர் என்று தெரியவந்தது.
இதனை அடுத்து, அவரைப் பிடித்து விசாரணை செய்த போது, அவர் சிவலிங்கத்தை திருடியதை ஒப்புக் கொண்டார். மேலும் திருடிய சிவலிங்கத்தை கோவிலுக்கு அருகில் உள்ள சாக்கடையில் வீசியதாகவும், அதன் மீது குப்பைகளைப் போட்டு மூடிவிட்டதாகவும் கூறினார்.
பின்னர் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை செய்த போது, தனக்குத் திருமணம் நடக்க வேண்டுமானால் 2 ஆண்டுகள் தொடர்ந்து சிவன் கோவிலில் தவம் செய்தால் திருமணம் நடக்கும் என்று, 2 ஆண்டுகளுக்கும் மேல் தவம் செய்தும் அவருக்குத் திருமணம் ஆகவில்லை. ஆகவே நிகழ்வன்று கோவிலில் அனைவரும் சென்ற பிறகு, இரண்டு ஆண்டுகளாக கடுமையாக தவம் இருந்தும் தனக்கு எதுவுமே செய்யாத சிவலிங்கம் இனி இங்கு இருந்து பயனில்லை என்று நான் அதை எடுத்து அருகில் உள்ள சாக்கடையில் வீசிவிட்டேன், எனக்குத் திருடவேண்டும் என்ற எண்ணம் இல்லை, என் மீது தவறு இல்லை என்று கூறினார். இதனை அடுத்து, குட்டு என்ற பெயர் கொண்ட அந்த நபரை காவல்துறையில் சிலை திருட்டு மற்றும் சமூகங்களுக்கு இடையே கலவரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்பட்டது தொடர்பான பிரிவில் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இந்த இரு நிகழ்ச்சிகளும் எதைக் காட்டுகின்றன? ஒன்று ஜோதிடன் கூற்றும், அதனை நம்பிய திருட்டு செயல்பாடும்.
இரண்டாவது முட்டாள்தனமான கடவுள் நம்பிக்கை.
இவற்றைக் கையும் களவுமாகப் பிடித்து எடுத்துக் காட்டினால், அய்யகோ, மதத் துவேஷம் என்று கூப்பாடு போடுபவர்கள் அதுபற்றி பகுத்தறிவோடு சிந்திப்பார்களாக!
No comments:
Post a Comment