ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 16, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1: பா.ஜ.க.விற்கு ஒரு ஆர்.எஸ்.எஸ். போன்று தி.மு.க.விற்கு ஒரு தி.க. என்ற ஒப்பீடு சரியானதா?

- மா.வெற்றிவேலன், மதுரை

பதில் 1: சரியான ஒப்பீடு அல்ல; ஆர்.எஸ்.எஸ். அமைப்பு பா.ஜ.க.வுக்கு உத்தரவு போடும் அமைப்பு. பா.ஜ.க.வைப் போல - ஆர்.எஸ்.எஸ். ஆட்களால்தான் பா.ஜ.க. என்ற நிலை தி.மு.க.வுக்கு இல்லை.

திராவிடர் கழகம் தி.மு.க.வுக்கு தாய்க்கழகம். பிறந்த வீடு அது என்றாலும், புகுந்த வீடு அரசியல். ஆனால், ஆர்.எஸ்.எஸ்.இல் எல்லாம் ஒரே வீடு. ஆர்.எஸ்.எஸ்.தான் உரிமையாளர். வீட்டில் உள்ள 36 அறைகளில் அரசியல் அமைப்பும் உண்டு. 

ஆர்.எஸ்.எஸ். பல வேடம் போடும். ரகசியமாகச் செயல்படும்.

திராவிடர் கழகம் வெளிப்படையாக எதையும் அறிவித்து செயல்படும் அமைப்பு.

ஆர்.எஸ்.எஸ். தலைமை உயர்ஜாதி - பார்ப்பனருக்கு மட்டும்.

திராவிடர் கழகம் அப்படி அல்ல. அனைவருக்கும் அனைத்தும்.

தி.மு.க.வின் புகுந்த வீடு அரசியல் என்றாலும், அது சுதந்திரமாக செயல்பட்டு தாய் அமைப்பின் கொள்கை - லட்சியங்களை, ஆட்சியில் அமர்ந்து அறவழியில் செய்யும்.

அரசியல் காரணமாக - கூட்டணி உள்பட சிற்சில நேரங்களில் சமரசங்கள் தி.மு.க.வுக்கு தேவைப்படுவது உண்டு. தாய்க்கழகமாம் திராவிடர் கழகத்திற்கு அத்தகைய நிலை இல்லை.

தி.க. ஒரு சாப்பர்ஸ் அன்ட் மைனர்ஸ் படை (‘‘Sappers and Miners''); 'தூசிப் படை'.

இரண்டும் சுதந்திர அமைப்புகள். தனித்தே இயங்கும். 1973 டிசம்பர் 24ஆம் தேதி அய்யாவின் உடல் அருகில் சொன்னோம். அன்றைய முதலமைச்சர் - தி.மு.க. தலைவரும் அதை வரவேற்றுப் பாராட்டினார்.

---

கேள்வி 2:  'பாரதம்' என்பது கற்பனை - 'இந்தியா' என்பது வரலாறு என்றும், இரண்டுக்கும் இடையே உள்ள வேறுபாட்டை எதிர்க்கட்சிகள் மக்களிடையே விளக்கிக் கூறுவதை விடுத்து எப்படியும் கூறலாம் என்று அமைதியாகிவிடுகிறார்களே?

- அ.கிருஷ்ணமூர்த்தி, மதுராந்தகம்

பதில் 2: உண்மைக்கு ஒரே முகம்தான்; புனைவுக்கு பல முகங்கள் உண்டே!

----

கேள்வி 3:  ஹிந்தி ஊடகங்களில் இருந்து விலகி இருப்போம் என்ற 'இந்தியா' (INDIA) கூட்டணி முடிவு சரியானதா?

- வே.நரசிம்ம பல்லவன், திருத்தணி

பதில் 3: அலட்சியப்படுத்தி - கொண்ட இலக்கிலேயே எப்போதும் குறியாய் இருப்பது நல்லது!

----

கேள்வி 4:  ராகுல் காந்தி மற்றும் இந்தியா கூட்டணி குறித்து மோசமாக சித்தரிக்க நெருக்கடி கொடுப்பதாக கூறி 'இந்தியா டுடே' மற்றும் 'என்.டி.டி.வி.' ஆகிய இரண்டு பெரிய ஊடக நிறுவனங்களில் இருந்து சிலர் வெளியேறி உள்ளனரே?

- கா.ஆறுமுகம், கிருஷ்ணகிரி

பதில் 4: "பூனைக்குட்டி வெளியே வந்துவிட்டது!" நாட்டில் உள்ள ஏடுகள், பிரபல தொலைக்காட்சிகள் கார்ப்பரேட் முதலாளிகள், எப்படி மோடி, பா.ஜ.க. ஆட்சியின் கைப்பாவைகளாக இயங்கி பொய் வியாபாரத்தில் ஈடுபடுபவை என்பதற்கான ஆதாரங்களே இவை - புரிகிறதா?

----

கேள்வி 5: எச்.ராஜா தொடர்ந்து முதலமைச்சர் உள்ளிட்டவர்களை அவன் - இவன் என்று  ஏக வசனத்தில் கூறிக்கொண்டே இருக்கிறாரே? சங்கரன் என்று காஞ்சி மடாதிபதியை நாம் அழைத்தால் சும்மா இருப்பார்களா?

- தீ.காளியப்பன், திண்டிவனம்

பதில் 5: 'குரைக்கும் குக்கல்'களை ஏன் பொருட்படுத்துகிறீர்கள்? தயங்காது உங்கள் கவனம் மாந்தர்கள் பக்கம் இருக்கட்டும்.

----

கேள்வி 6: "ஸநாதன பாதுகாப்பு விழிப்புணர்வு யாத்திரை" மேற்கொள்ளப் போவதாக பா.ஜ.க. திட்டமிட்டுள்ளது. மத உணர்வுகளுக்காக வாக்களிப்பார்களா? 10 ஆண்டு பட்ட இன்னல்களை மறந்து போவார்களா?

- வா.ஞானசீலன், தஞ்சாவூர்

பதில் 6: சாதனைகளைச் சொல்லி ஒட்டுக் கேட்க கையில் சரக்கு இல்லை பா.ஜ.க.வுக்கு.

மிஞ்சியது 10 ஆண்டு வேதனை, வீழ்ச்சி - வாக்குத் தவறியமை - இவைகள் என்பதால் வேறு "மூலதனம்" கிடைக்கவில்லை காவிகளுக்கு! பரிதாபம்! பரிதாபம்!!

----

கேள்வி 7: அமெரிக்க அதிபர் வியட்நாம் சென்று இறங்கிய உடன் முதல் வேலையாக இந்தியாவில் ஊடகச் சுதந்திரம் குறித்து தனது கவலையை தெரிவித்துள்ளாரே, அமெரிக்க அதிபருக்கே மோடி என்றால் அச்சமா?

- கே.ராமலிங்கம், நாமக்கல்

பதில் 7: ஜி20க்குப் பின் முதல் அறுவடை மோடி அரசுக்கு இதுதானா? உண்மை ஒருநாள் வெளியாகித்தானே ஆகவேண்டும்?

----

கேள்வி 8: "ஒரே - ஒரே - ஒரே" என்று முழங்குகிறார்கள். இந்த 'ஒரே' என்ற மடமைத்தனமான செயலால்தான் பாகிஸ்தான் இரண்டானது என்பது குறித்து சிந்திக்கவில்லையே - ஏன்?

- பா.சண்முகநாதன், திண்டுக்கல்

பதில் 8: அதை உருவாக்கியது ஹிந்துமகா சபை - உயர்ஜாதியினர். "Two Nations Theory" வெளியேறச் சொன்னவர்கள் இவர்களே - பிரிவினைவாதி!

----

கேள்வி 9: இந்தியா கூட்டணி குறித்து இலங்கை அதிபருக்கு என்ன அக்கறை?

- த.பன்னீர்செல்வம், உத்திரமேரூர்

பதில் 9: உள்நாட்டு பிரச்சினையில் ஏனோ இப்படி மூக்குடைபட வேண்டும்? அவர் மேலும் கடன் வாங்கி ஆட்சி நடத்தவா?

----

கேள்வி 10: ஆளுநர் மாணவர்கள் மத்தியில் ஸநாதனம் குறித்து தொடர்ந்து பேசுகிறார். ஆனால், மாணவர்களிடையே கல்லூரி நிர்வாகம் ஸநாதனம் குறித்து கருத்து கேட்டதற்கு தமிழ்நாடு பா.ஜ.க. எதிர்ப்புத் தெரிவித்துள்ளதே?

- சே.கன்னியப்பன், சிவகங்கை

பதில் 10: பேசு நா இரண்டு; மாணவர் உரிமையை எவரும் பறிக்க முடியாது; கூடாது!


No comments:

Post a Comment