இது ஒரு தொடக்கம்தான் - சிதம்பரம் கோவிலை அரசு கைபற்றும்வரை நம் போராட்டம் ஓயாது! - சிதம்பரத்தில் தமிழர் தலைவர் முழக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, September 6, 2023

இது ஒரு தொடக்கம்தான் - சிதம்பரம் கோவிலை அரசு கைபற்றும்வரை நம் போராட்டம் ஓயாது! - சிதம்பரத்தில் தமிழர் தலைவர் முழக்கம்!

👉 சிதம்பரம் கோவில் தீட்சதர்களுக்குச் சொந்தம் என்பதற்கு ஏதாவது ஆதாரம் உண்டா?

👉 கடவுள் கொடுத்தார் என்பது ஏற்கத்தக்கதா? 

👉 தீட்சதர்கள் அடிக்கும் கொள்ளை - இதோ ஆதாரம்!



சென்னை, செப்.6 சிதம்பரம் கோவில் தீட்சதர்களுக்குச் சொந்தம் என்பதற்கு ஆதாரம் உண்டா? கொள்ளை அடிக்கின்றனர் என்பதற்கு ஆதாரம் உண்டு. கடவுள் கொடுத்தார் என்பது ஏற்கத்தக்கதா?  இக்கோவிலை அரசு கைப்பற்றும்வரை நம் போராட்டம் ஓயாது - இது தொடக்கம்தான் என்றார்  திராவிடர் கழகத் தலை வர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

மக்கள் திரள் பொதுக்கூட்டம்

நேற்று (5.9.2023) மாலை சிதம்பரம் போல் நாராயணன் தெருவில் சிதம்பரம் நடராசன் கோவிலை இந்து அறநிலையத் துறையின்கீழ் கொண்டு வரக் கோரி நடைபெற்ற மக்கள் திரள் பொதுக்கூட்டத்தில்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்  சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

சிதம்பரம் நடராசர் கோவிலை இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை கட்டுப்பாட்டின்கீழ் கொண்டு வந்தால், அனைத்து மக்களுக்கும், வழிபடக்கூடிய வர்களுக்கும், பக்தர்களுக்கும், பொது ஒழுக்கத்திற்கும், பாதுகாப்புக்கும் பயன்படும் என்ற அந்தத் தத்துவத்தை முன்னிறுத்தி, ஒரு நீண்ட போராட்டம் - அதனைத் தொடர்ந்து சலிப்பில்லாமல் நடத்திக் கொண்டிருக்கக் கூடிய சிதம்பரம் மக்கள் நலக் குழுவின் தலைவரும், மேனாள் நகர் மன்றத் தலைவரும், எந்நாளும் சுயமரியாதை வீரர் என்ற பெருமைக்குரிய அருமை வி.எம்.எஸ்.சந்திரபாண்டியன் அவர்களே,

இந்நிகழ்வில் வரவேற்புரையாற்றிய மார்க்சிய பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் அன்பிற்குரிய தோழர் மோகன் அவர்களே,

பல்வேறு கட்சியினர் - அமைப்பினர் பங்கேற்பு

மக்கள் அதிகாரம் அமைப்பின் பொதுச்செயலாளர் அருமைத் தோழர் வழக்குரைஞர் ராஜூ அவர்கள், மிக அழகாக பல்வேறு செய்திகளை விளக்கி, நான் சொல்லவேண்டிய  பல கருத்துகளை அவரே சொல்லி, விளக்கியும் இருக்கிறார். ஆகவே, நான் அடுத்த செய்திக்குப் போகலாம் என்ற வகையில், மிகச் சிறப்பான வகையில் உரையாற்றிய ராஜூ அவர்களே,

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பாக உரையாற் றிய சி.பி.அய். மாநிலக் குழு பொறுப்பாளர் அருமைத் தோழர் மணிவாசகம் அவர்களே,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாவட்டச் செயலாளர் தோழர் குணசேகரன் அவர்களே,

கழக செயலவைத் தலைவர் மானமிகு சு.அறிவுக்கரசு அவர்களே,

வடலூரில் ஓர் அற்புதமான சாதனையைச் செய்தார்; அதற்கடுத்து இங்கே இருக்கக்கூடிய வி.எம்.எஸ்., மோகன் போன்றவர்களை மற்ற அனைத்துக் கட்சிப் பொறுப்பாளர்களை ஒருங்கிணைத்து 10 நாள்களுக்குள் இந்தக் கூட்டத்தை, தேவையான நேரத்தில்,  ஒரு தொடர் நிகழ்ச்சிக்கு இது ஒரு முன்னோட்டம் என்று சொல்லக்கூடிய வகையில், சிறப்பாக இந்தக் கூட்டத் திற்கு ஏற்பாடு செய்த  நம்முடைய கழகப் பொதுச்செய லாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் அவர்களே,

மாவட்ட துணைத் தலைவர் கோவி.பெரியார்தாசன் அவர்களே, மாவட்ட துணை செயலாளர் தோழர் கண்ணன் அவர்களே,

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தோழர் அய்யா மு.ச. அவர்களே,

மற்றும் மாவட்ட அமைப்பாளர் தென்னன் அவர்களே, மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் நெடுமாறன் அவர்களே, மாவட்டப் பகுத்தறிவாளர் கழக செயலாளர் செங்குட்டுவன் அவர்களே,

புதுவை மாநில திராவிடர் கழகத் தலைவர் சிவ.வீரமணி அவர்களே, மாநில இளைஞரணி செயலாளர் தோழர் இளந்திரையன் அவர்களே, மக்கள் பாடகர் எழுச்சிமிகுந்த கோவன் குழுவினர் - கலை நிகழ்ச்சி நடத்திய தோழர்களே,

நன்றியுரை கூறவிருக்கக்கூடிய செயல்வீரர் நம்முடைய பாராட்டுதலுக்குரிய யாழ்திலீபன் அவர்கள் கடுமையாக உழைத்திருக்கிறார்; அவருடைய உழைப்பு சிறந்த வெற்றியைத் தந்திருக்கிறது. அப்படிப்பட்ட அருமைத் தோழர் யாழ்திலீபன் அவர்களே,

மற்றும் கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், புதுச்சேரி போன்ற பல பகுதிகளிலிருந்து வந்திருக்கக் கூடிய இயக்கத் தோழர்களே,



97 வயது காணும் வி.வி.எஸ். அவர்களின் முயற்சி!

போராளிகளாக இருக்கக்கூடிய மக்களே, சிதம்பரம் மக்கள் நலக் குழுவைச் சார்ந்த உறுப்பினர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

முதலில், இரண்டு செய்திகளுக்கு விளக்கம் சொல்லி விட்டு, பிறகு நான் அடுத்தடுத்த செய்திகளுக்கு செல்லவிருக்கின்றேன்.

முதலாவதாக, இந்த நிகழ்ச்சிக்கென மிகப்பெரிய அளவிற்கு அய்யா வி.எம்.எஸ். அவர்களும், மோகன் போன்றவர்களும், இங்கே இருக்கக்கூடிய அத்துணைக் கூட்டணிக் கட்சி நண்பர்களும், திராவிட முன்னேற்றக் கழக சகோதரர்களும் எப்படி ஒத்துழைக்கிறார்களோ, அதேபோல, இங்கே நண்பர் ராஜூ அவர்கள் சொன்ன தைப்போல, இந்தப் போராட்டம் பல ஆண்டுகளுக்கு முன் தொடங்குவதற்கு அடித்தளமாக இருந்து, பாராட்டுதலுக்குரியவர் என்று சொன்னால், இங்கே நேரிடையாக வராவிட்டாலும்கூட, 97 வயது நிறைந்த அய்யா வி.வி.எஸ். அவர்கள், நம்முடைய நிரந்தரப் பாராட்டுதலுக்குரியவர்கள். காரணம், 97 வயதிலும் அவர் ஒரு போராளியாக இன்றைக்கும் மனதளவிலே இருக்கிறார். உடல் அளவில் அவர்களால் ஓடி ஆட முடியாவிட்டாலும், மனதளவில் அவர்கள் எப்பொழுது அந்தப் பிரச்சினையை எடுத்தார்களோ, அந்தப் பிரச்சினை குறித்து அடிக்கடி எனக்குக் கடிதம் எழுதிக் கொண்டே இருப்பார்.

விடாமல் பேசிக்கொண்டே இருப்பார் அந்தப் பிரச்சினைப்பற்றி. அவரை எப்படியாவது இங்கே அழைத்து வந்து, அவரைப் பெருமைப்படுத்தி - அவரு டைய நூற்றாண்டு வயதுவரை வாழவேண்டும்; அதைத் தாண்டியும் அவர் வாழவேண்டும்; மக்கள் மத்தியில் இருக்கக்கூடிய உற்சாகத்தை அவர் பார்க்கவேண்டும் என்று நினைத்து, நானே அவருடைய இல்லத்திற்குச் சென்று நேரில் சந்தித்து அழைத்தேன். அவரும் ஒப்புக்கொண்டார்.

அவருடைய அன்பு மகன் மேனாள் பல்கலைக் கழக துணைவேந்தர் ராஜராஜன் அவர்களும், அப்பாவை நான் எப்படியும் அழைத்து வந்துவிடுகிறேன் என்று சொன்னார்.

ஏனென்றால், வி.வி.எஸ். அவர்கள் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் படிக்கும் காலந்தொட்டே திராவிட இயக்கத்தோடு தொடர்பு கொண்டவர். இந்தத் தகவல் பல பேருக்குத் தெரியாது.

பள்ளி மாணவராக இருந்தபோதே திராவிட இயக்கத் தொடர்பு!

நான் பள்ளி மாணவனாக இருந்தபொழுது வி.வி.எஸ். அவர்களோடு தொடர்பில் இருந்தேன். மறைந்த நம்மு டைய அய்யா தலைவர் கிருஷ்ணசாமி  அவர்களுக்கு அவர் உறவுக்காரர் - வெறும் ரத்த உறவுக்காரர் அல்ல; கொள்கை உறவுக்காரராகத் திகழ்ந்தவர்.

அப்படிப்பட்ட அவர் நீண்ட நாள் நல்ல உடல்நலத்துடன் இருக்கவேண்டும்; முதுமைக் காலத்தில் சில நேரங்களில் இதுபோன்ற சறுக்கல்கள் ஏற்படுவது இயல்பு. என்றாலும், அவர் அதனைத் தாங்கிக்கொண்டு, நல்ல உடல்நலம் பெற்று, அடுத்தபடியாக இங்கே நடை பெறும் வெற்றி விழாவிற்கு அவரை அழைக்கக்கூடிய சூழ்நிலை உருவாகும்; உருவாகவேண்டும்; உருவாக வைப்போம் என்பதை மகிழ்ச்சியோடு இந்த நேரத்தில் உறுதியோடு உங்களுக்குச் சொல்லிக்கொண்டு, அனைவர் சார்பாகவும், சிதம்பரம் மக்கள் நலக் குழு மட்டுமல்ல; தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய சிந்தனை யாளர்கள், பகுத்தறிவாளர்கள், கருத்தாளர்கள் அனை வரின் சார்பிலும் வி.வி.எஸ். அவர்கள் நீண்ட நல வாழ்வைப் பெறவேண்டும் என்று அனைவரின் சார்பாகவும் அவர்களை வாழ்த்துகிறோம்.

அடுத்து நண்பர்களே, இங்கே புத்தகங்கள் கொண்டுவரப்பட்டு உள்ளன. அந்தப் புத்தகங்களை நீங்கள் வாங்கிப் பார்க்கவேண்டும்.

இது ஒரு தொடக்கம்தான்!

சிதம்பரம் கோவிலை இந்து அறநிலையப் பாதுகாப் புத் துறை எடுக்கவேண்டும் என்று ஏன் இந்தக் குழு போராடுகிறது?

மக்கள் நலக் குழுவை அமைத்து, பாடுபடுகின்ற வி.எம்.எஸ். போன்றவர்கள் கடுமையான முறையில் விளக்கங்களைச் சொன்னார்கள்; யாருக்கும் தெரியாத விளக்கங்களையெல்லாம் அவர் சொன்னார். அவரு டைய நினைவுக்குதிர்களிலிருந்து பல தகவல்கள் கொட்டிக்கொண்டே இருந்தன. அவ்வளவு செய்தி களைச் சொன்னார்.

இன்றைக்குத் தொடங்கி இருப்பது, ஒரு சாதாரணத் தொடக்கம்தான். இது ஒரு நீண்ட போராட்டமாக, வெற்றி பெறுகின்ற வரையில் தொடரும். இந்தக் கோவிலில், கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட் டத்தில், ஒரு நிர்வாக அதிகாரியை நியமித்து, அவர் நடத்திக் காட்டினாரோ, அதேபோன்ற நிலை வரும்.

ஒரு காலத்தில் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர்கள் ஆகமுடியாது என்று குறுக்கே நந்திகள் நடந்தார்கள்.

இது நந்தன் காலமல்ல, நண்பர்களே! இது திராவிடக் காலம் என்பதுதான் மிகவும் முக்கியம். 

இது சந்திரபாண்டியன் காலம்.

எனவே, நந்தர்கள் இனிமேல் வரவேண்டியதில்லை; உச்சநீதிமன்றத் தீர்ப்புவரை வந்தாயிற்று. இடைவிடாத போராட்டம் - ‘அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகரும்' - உடனே அடிக்கச் சொல்லிவிட்டார் என்று நாளைக்குத் தலைக்கு விலைவைக்கப் போகி றார்கள். நான் சொன்னது உதாரணம்தான்.

ஆனால், அவர்கள் திரிபுவாதத்திலே வாழக்கூடிய வர்கள். நம்முடைய அமைச்சர் உதயநிதி அவர்கள் உரையாற்றும்பொழுது என்ன சொன்னார், பிறவி பேதம் நீங்கவேண்டும் என்று சொன்னார். எங்கள் பெண்களை எப்படி வைத்திருந்தீர்கள்? கிட்டே வராதே, தொடாதே, படிக்காதே என்று சொன்னீர்களே? சுயமரியாதை இயக்கம் திராவிட இயக்கத்தினுடைய அடித்தளம் என்ன? பிறவி பேதம் ஒழிப்புதானே!

தந்தை பெரியார் சொன்னார், என்னுடைய முதல் தளம் மனிதநேயம் என்று.

உலகத்தில் வேறு எந்த நாட்டிலாவது பிறக்கும்போதே மனிதனை பேதப்படுத்துகின்ற நிலை உண்டா?

அறிவு அடிப்படையில், கல்வி அடிப்படையில், பண அடிப்படையில் பேதங்கள் இருக்கும். ஆனால், இங்கே பிறவி பேதம்.

மதம் மாறலாம் - ஜாதி மாற முடியுமா?

ஒருமுறை அந்த ஜாதியில் நீ பிறந்துவிட்டால், மதம் மாறலாம், கட்சி மாறலாம்; எது வேண்டுமானாலும் மாறலாம்; ஆனால், ஜாதி மாற முடியாது என்று ஆணி அடித்து வைத்திருக்கிறானே,  இந்த சனாதனத்திற்கு சாவு மணி அடிப்பதற்குத்தான் நண்பர்களே திராவிட இயக்கம்.

இதில் என்ன தவறு இருக்கிறது என்பதை தயவு செய்து நினைத்துப் பார்க்கவேண்டாமா?

பிறவி பேதம் - அந்தப் பிறவி பேதம் என்று சொல்லும் பொழுது அறிவாசான் தந்தை பெரியார் சொன்னார், 

தொடக்கூடாதவன் - தொடக்கூடியவன்

பார்க்கக் கூடாதவன் - பார்க்கக் கூடியவன்

நெருங்கக் கூடாதவன் - நெருங்கக் கூடியவன்

படிக்கக் கூடாதவன் - படிக்கக் கூடியவன்

என்ற ஆண் ஜாதி - அந்த ஜாதி பேதம் ஒரு பகுதி.

அதைவிட இன்னொன்று என்ன முக்கியம் என்றால், ஆண் உயர்ந்தவர் - பெண் தாழ்ந்தவர் என்று சொல் கிறார்களே, ஆணாகப் பிறந்தால், அவன் மிகவும் உயர்ந்தவன். பெண்ணாகப் பிறந்தால், தாழ்ந்தவர். இதுவும் பிறவி பேதம் என்பதில் சேரும் என்று விளக்கம் சொன்ன தலைவர், வேறு எந்தத் தலைவரும் கிடையாது, தந்தை பெரியார்தான். அதுதான் திராவிடத்தினுடைய தத்துவம். அந்தத் திராவிட தத்துவத்தினுடைய அடிப் படையிலேதான் அமைச்சர் உதயநிதி சொன்னார். இதில் என்ன தவறு இருக்க முடியும்?

உடனே வடநாட்டு சாமியார் ஒருவர், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலையை வாங்குவேன் என்று சொல்கிறார்.

ஆனால், அவர் பேசாத ஒன்றை எடுத்து, பி.ஜே.பி. யினுடைய தகவல் தொழில்நுட்பப் பிரிவில் இருக்கக் கூடிய மாளவியா என்கிற ஒரு நபர், அந்தப் பேச்சைத் திருத்தி, ‘‘இனப்படுகொலை செய்யச் சொன்னார்; எனவே, அவரை கைது செய்யவேண்டும்'' என்று ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண் டிருக்கிறீர்களே, இதில் என்ன யோக்கியதை இருக்கிறது?

கொலை செய்யச் சொன்னார் என்பதற்காக, அவரை கைது செய்யவேண்டும் என்று சொன்னால், அவரைக் கொலை செய்து, அவருடைய தலையை வெட்டிக் கொண்டு வந்தால், ரூ.10 கோடி தருகிறேன் என்று ஓர் அற்பப் பயல் காவி ஒருவன் சொல்லுகிறான் என்று சொன்னால், அவன்மீது பாயவேண்டிய சட்டம் ஏன் மவுனமாக இருக்கிறது?

இது என்ன நியாயம்?

அமைச்சர் உதயநிதி பேசாததை, பேசியதாகக் கற்பனை செய்து, அதிலிருந்து வாக்கு வங்கியைப் பெறலாம் என்று நினைக்கிறார்கள். அவர்களுடைய கனவு ஒருக்காலமும் பலிக்காது.

‘‘சிண்டு முடிந்திடுவோய் போற்றி!'' - அண்ணா

இன்று நாட்டிலுள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்று சேரமாட்டார்கள் என்று நினைத்தார்கள். ஆனால்,  ‘இந்தியா' கூட்டணியில் இணையும் கட்சிகளின் எண் ணிக்கை நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது. அதேநேரத்தில், மோடி ஆட்சி, ஆர்.எஸ்.எஸ். ஆட்சி யினுடைய ஆயுள் குறுகிக்கொண்டே வருகிறது. விடை பெற்றுச் செல்லவேண்டிய அளவிற்கு வந்துவிட்டார்கள் அவர்கள்.

ஆகவே, அவர்களுக்குள் தெளிவில்லை; அதனால், எதையாவது சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள்.

அண்ணா சொன்னாரே ஆரிய மாயையில், ‘‘சிண்டு முடிந்திடுவாய், போற்றி! போற்றி!!'' என்பதுபோல, ‘‘காங் கிரஸ்காரர்களே, தி.மு.க.வோடு கூட்டணி வைத்திருக் கிறீர்களே, இப்பொழுது நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?'' என்று கேட்கிறார்கள்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சொன்ன கருத்தைப் பற்றி இவரிடம்தானே கேட்கவேண்டும். அதைவிட்டு விட்டு, காங்கிரஸ்காரர்களிடம் கேட்டால், என்ன அர்த்தம்? இதுதானே சிண்டுமுடித்தனம்.

அவரவருடைய கருத்து, அவரவர்களுக்கு.

ஒரு கூட்டணியில் உள்ள கட்சி ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு கொள்கை இருக்கிறது.

பாருங்கள், தமிழ்நாட்டில் ஹிந்தியை எதிர்க்கிறார்கள்; வட மாநிலங்களில் உள்ளவர்கள் ஹிந்தியை ஆதரிக் கிறீர்கள். ஆகவே, நீங்கள் இரண்டு பேரும் ஒன்றாக அமரலாமா? என்று சிண்டு முடிகிறார்கள்.

அதற்குத்தான் பதில் சொன்னார் எங்களுடைய சந்திரசேகர் - நாங்கள் எல்லாம் தீயை அணைப்பதற்கு - மதவெறித் தீ, ஜாதி வெறித் தீ, தீட்சதர்கள் உள்ளே புகுந்து கொண்டு ஆதிக்க வெறி செலுத்துகிறார்களே, அந்த ஆதிக்க வெறித் தீயையெல்லாம் அணைக்கின்ற பணிக்காகப் புறப்பட்டு இருக்கின்ற நேரத்தில், தீயை அணைக்கும்பொழுது கவனிக்கவேண்டிய விஷயம் ஒன்றே ஒன்றுதான், அது என்னவென்றால், எல்லோரு டைய கைகளிலும் தண்ணீர் இருக்கிறதா? மணல் இருக்கிறதா? அல்லது நமக்குத் தெரியாமல் யாராவது பெட்ரோலைக் கொண்டு வந்திருக்கிறார்களா? என்பதை யும் பார்க்கவேண்டியதுதான் மிக முக்கியம். இந்தப் பணியில் மட்டும் கவனமாக இருந்தால் போதும்.

இந்தியா! ஆனால், இந்தியா என்ற பெயரைக் கேட்டாலே அவர்களுக்குப் பயமாக இருக்கிறது. இந்தியா கூட்டணி வளர்ந்துகொண்டே போகிறது. ஆனால், வளர்வோம், வளர்வோம் என்று சொன்ன அவர்களுக்கு, இப்பொழுது வளருவதற்கு அவர்கள் தயாராக இல்லை.

அதனால்தான், இந்தியா என்ற பெயரை மாற்றுவோம் என்று சொல்கிறார்கள்.

நமது முதலமைச்சர் நன்றாகவே சொல்லியுள்ளார்!

நம்முடைய முதலமைச்சர் அவர்கள் மிக அற்புத மாகச் சொன்னார், ‘‘பதவிக்கு வரும்பொழுது மோடி சொன்னார், இந்தியாவை மாற்றுவோம் என்று சொன்னார். அவர் எப்படி மாற்றினார் என்றால், ‘பாரத்' என்று மாற்றுகிறார்'' என்றார்.

அவருக்கு மாற்ற என்ன உரிமை இருக்கிறது என்று கேட்டால், அரசமைப்புச் சட்டத்தில் முதல் வரியில் இருக்கிறதே - India that is Bharat shall be a Union of State என்று கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி இருக்கிறது. 

குடியரசுத் தலைவருடைய அழைப்பில் ‘பாரத்' என்று அச்சிடப்பட்டு இருக்கிறது என்று இன்றைக்குத் தொலைக்காட்சி செய்தியில் வந்திருக்கிறது.

நாடாளுமன்றத்தில் இந்தியா என்ற பெயரை அதிகாரப்பூர்வமாக மாற்றிவிட்டு அல்லவா, பாரத் என்று பெயர் போடவேண்டும்.

அரசமைப்புச் சட்டத்தில் என்ன இருக்கிறது?

The Constitution of India

It is not Constitution of Bharat

உள்ளே ஒரு வார்த்தை இருக்கலாம் பாரத் என்று. ஆனால், முதல் இடத்தில் இந்தியா என்பதை நினைத்துப் பார்க்கவேண்டும்.

அரசமைப்புச் சட்ட முகவுரை என்ன கூறுகிறது?

அரசமைப்புச் சட்டத்தின் முகப்பில், 

WE, THE PEOPLE OF INDIA having solemnly resolved to constitute India into a SOVEREIGN SOCIALIST SECULAR DEMOCRATIC REPUBLIC and to secure to all its citizens:

இதுதானே மிக முக்கியம்.

அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையில், அடிக்கட்டு மானம். இதை மாற்ற முடியுமா? செய்தியாளர்கள் எல்லாம் நன்றாகப் புரிந்துகொள்ளவேண்டும்.

உச்சநீதிமன்றத்தினுடைய உத்தரவையும் அவர்கள் தூக்கிப் போட்டுவிட்டார்கள்; இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்ததையும் மதிக்க வில்லை; மற்றவர்களைப் பார்த்து நீங்கள் குற்றம் சாட்டுவதற்கு முன், எத்தனை விரல்கள் உங்கள் பக்கம் என்று புரிந்துகொள்ளவேண்டாமா?

தமிழ்நாட்டில் ஒரு பழமொழி உண்டு - ‘‘ஆத்திரக் காரனுக்குப் புத்தி மட்டு'' என்று.

நீங்கள் ஆத்திரப்படுகிறீர்கள்; ஏனென்றால், உங்களி டம் சரக்கு இல்லை; உங்களிடம் நிதானம் இல்லை.

எங்கள் முதலமைச்சர் போன்றவர்கள், ஏன் எங்கள் உதயநிதி ஸ்டாலின் அவர்கள்கூட அவர் அடுத்த தலைமுறை என்றாலும், பக்குவத்தோடு சொல்கிறார்.

உங்களுடைய மிரட்டலுக்கு அவர் பயந்துவிட்டாரா? 

அய்யோ, தெரியாமல் சொல்லிவிட்டேன் என்று சொன்னாரா? என்றால், இல்லையே!

உதயநிதி ஸ்டாலினின் உறுதி பாராட்டத்தக்கது!

‘‘நான் சொன்னது சொன்னதுதான். நான் ஒன்றும் தவறாக சொல்லவில்லை; ஆதாரத்துடன்தான் சொன் னேன். எத்தனை வழக்குகளை என்மீது போட்டாலும் அதை சந்திப்பதற்குத் தயாராக இருக்கிறேன். மீண்டும் எத்தனை முறை வேண்டுமானாலும் சனாதனக் கோட் பாடை ஒழிப்பேன் என்பதில் உறுதியாக இருக்கிறேன்'' என்று அவர் சொன்னதில்  என்ன தவறு?

ஆகா, மதத்தைப் புண்படுத்திவிட்டார் என்று சொல் கிறார்கள்.

மருத்துவமனைக்குச் சென்றால், நோயை குணப் படுத்தவேண்டும் என்றால், அறுவைச் சிகிச்சை செய்தால்தான் நோய் குணமாகும் என்கிறபொழுது, அறுவை சிகிச்சை செய்கிறார்கள்; அப்பொழுது உள்ளே இருக்கின்ற சீழ் எல்லாம் வெளியே வரும்; ரத்தம் கொஞ்சம் வரும். அப்படி புண்படுத்துவதற்கு எதற்காக? உங்களைப் பண்படுத்தி, நீண்ட நாள்கள் நீங்கள் நல்ல வாழ்க்கை வாழவேண்டும் என்பதற்காகத்தான்.

புண்படுத்துகிறார்கள், புண்படுத்துகிறார்கள் என்று சொல்கிறீர்களே, உனக்கு மட்டும்தான் புண்படுமா?

மனுதர்மத்தில் என்ன எழுதி வைத்திருக்கிறீர்கள்?

சூத்திரன், பஞ்சமன் என்று. சூத்திரன் என்றால், ‘பாரத ரத்னா' பட்டமா அது?

நாங்கள் அதைச் சுட்டிக்காட்டியவுடன் ஆத்திரப் படுகிறீர்களே - இதோ இந்த புத்தகம் யார் எழுதியது? 

‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் எழுதியது.

அவர் என்ன திராவிடர் கழகத்து உறுப்பினரா?

அல்லது தி.மு.க.வில் உறுப்பினரா?

இல்லை!

அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் கூறியுள்ளது என்ன?
நூறு வயதிற்கும்மேல் வாழ்ந்தவர் அக்னிஹோத்திரம் இராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள், நக்கீரன் பத்திரிகையில் தொடர்ந்து எழுதி, அது புத்தகமாக வெளியிடப்பட்டு இருக்கிறது.
அதில் நிறைய செய்திகள் இருக்கின்றன; மிக முக்கியமாகக் கவனிக்கவேண்டிய செய்தி.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் என்ன பேசினார், ‘‘சனாதனம் என்று சொல்லும்பொழுது, எங்கள் பெண் களை வாழ வைக்க முடியாமல், மனிதநேயத்திற்கு விரோதமாக இருந்தது. அது எந்தக் கோட்பாடாக இருந்தாலும், அந்தக் கோட்பாட்டை நாங்கள் எதிர்ப்போம்'' என்றுதானே சொன்னார்.
‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்கிற புத்தகத்தில் சனாதனத்தை விளக்கிச் சொல்லுகிறார்,
‘‘அஷ்ட வருஷா பலே கன்யா’’
எட்டு வயதிற்குள் பெண்ணுக்குக் கல்யாணம் நடத்த வேண்டும் என்ற இந்த ஸ்மிருதி விதி.
இந்த நூற்றாண்டின் நடுப்பகுதி வரை நம் தேசத்தில் ரொம்ப சிரத்தையான நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
இன்றைக்கு சிதம்பரம் கோவிலுக்குள் தீட்சதர்கள் என்ன செய்கிறார்கள்? குழந்தைத் திருமணம்தானே!
அதற்காக வழக்குகள் போட்டு, வழக்குகள் நிலுவை யில் இருக்கிறதா? இல்லையா?
இன்னுங்கேட்டால், குழந்தைகள் திருமணத்தில் அவர்களுக்காக வாதாட வந்திருக்கின்ற தமிழ்நாடு ஆளுநர் - ஆர்.எஸ்.எஸினுடைய பிரதிநிதி - மக்கள் வரிப் பணத்தை சம்பளமாக வாங்கிக் கொண்டிருக்கக் கூடிய அரசு ஊழியர். அவர் சொல்கிறார், சட்டத்தை தாம் மீறியதை மிகப் பெருமையாகச் சொல்கிறார்.
இந்தக் காலத்தில்,
‘‘அஷ்ட வருஷா பலே கன்யா''
எட்டு வயதிற்குள் பெண்ணுக்குக் கல்யாணம் நடத்தவேண்டும் என்ற இந்த ஸ்மிருதி விதி. இந்த நூற்றாண்டின் நடுப்பகுதிவரை நம் தேசத்தில் ரொம்ப சிரத்தையாக நடைமுறைப்படுத்தப்பட்டு வந்தது.
இன்றைக்கு சட்டப்படி அது தவறு இல்லையா?
சனாதனத்தைக் காப்பாற்றுங்கள் என்று சொல்லி, அங்கே கூப்பாடு போட முடியுமா?
இன்றைக்கு நம்முடைய பிரதமர் உலகம் முழுவதும் சுற்றி வருகிறாரே - இப்பொழுதுகூட ஜி-20 மாநாடு டில்லியில் நடைபெறவிருக்கிறதே! 
அவருக்கு இவ்வளவு பெருமை வந்திருக்கிறது; நாட்டிற்கு அந்தப் பெருமை வந்திருக்கிறது என்று சொல்கிறீர்களே, பெருமையா? சிறுமையா? என்ற விவாதத்திற்குப் போகவேண்டாம்; பெருமை வந்தது என்றே வாதத்திற்கு வைத்துக்கொள்வோம்; ஆனால், அந்தப் பெருமை எப்படி வந்தது?
எல்லா நாட்டிற்கும் பிரதமர் மோடி விமானத்தில் பயணம் செய்தார் அல்லவா! சனாதன தத்துவப்படி ஒரு ஹிந்து கடலைத் தாண்டி போகலாமா? தயவு செய்து சொல்லுங்கள்.
மாளவியா, காங்கிரஸ் தலைவர், அவர்தான்  காசியில் பல்கலைக் கழகத்தை நிறுவியவர்களில் ஒருவர்.
அவரை, வட்டமேஜை மாநாட்டிற்காக பிரிட்டன் செல்லவேண்டும் என்று சொல்லும்பொழுது, அவர் சனாதனத்தை நம்பக்கூடியவர். அவர், ‘‘வேண்டாம்; நான் கடல் தாண்டக் கூடாது'' என்றார்.
அவர் நிறுவிய பல்கலைக் கழகத்தில் சனாதனம் குறித்துத்தான் பாடத் திட்டமாக வைத்திருந்தார்கள்.

கூழுக்கும் ஆசை - மீசைக்கும் ஆசை!
நம்மூரில் ஒரு பழமொழி சொல்வார்கள்; ‘‘கூழுக்கும் ஆசை; மீசைக்கும் ஆசை'' என்று. அதுபோன்று, அவருக்கு அந்த வட்டமேசை மாநாட்டில் பங்கேற்க வேண்டும் என்றும் ஆசை.
பார்ப்பனர்களைப் பொறுத்தவரையில் தந்திர சாலிகள்; 
‘‘பேச நா இரண்டுடையாய் போற்றி!
தந்திர மூர்த்தி போற்றி!
தாசர் தம் தலைவா போற்றி!''
ஆரிய மாயையில் அண்ணா சொன்னார்.
அதுபோல, ஒவ்வொன்றுக்கும் பரிகாரம் உண்டு என்பார்கள். கடல் தாண்டிப் போகலாம், அப்படிப் போவதற்குப் பரிகாரம் செய்தால் போதும் என்றனர்.
‘‘என்ன பரிகாரம்?'' என்று கேட்டார் மாளவியா.
‘‘காசியில் உள்ள மண்ணை ஒரு பிடி எடுத்து, கூடவே எடுத்துக்கொண்டு, கடல்தாண்டி போய், நீங்கள் எந்த அறையில் தங்குகிறீர்களோ, அந்த அறையில் அந்த மண்ணுருண்டையை வைத்தால், நீங்கள் இந்த பூமியிலேயே இருப்பதாக கொள்ளப்படும்'' என்றனர்.
பல பேருக்குத் தெரியாத செய்தியை சொல்கிறேன், மாளவியாவிற்கு அந்தக் காலத்தில், ‘‘மண்ணுருண்டை மாளவியா'' என்று பெயர்.
நான் சொன்ன செய்தி உண்மையிலேயே நடந்தது நண்பர்களே! இதை யாராவது மறுத்துச் சொல்லட்டும் பார்ப்போம்.
எதற்காக?
பார்ப்பனர்கள் கடல் தாண்டக் கூடாது - இது ஆரிய தர்மம் - சனாதன தர்மம்.
‘‘திரைகடல் ஓடியும் திரவியம் தேடு'' - இது திராவிடத் தத்துவம்.

அனைத்து ஜாதி பெண்களும் ‘நமோ' சூத்திரர்கள்தானே!
அனைத்து ஜாதிப் பெண்களும் அது அக்கிரகாரப் பெண்மணிகளாக இருந்தாலும், அவர்களும் நமோ சூத்திரர்கள்தான். 
எல்லா ஜாதிப் பெண்களையும் மதிக்கவேண்டும்; அவர்கள் எந்த ஜாதிப் பெண்கள் என்கிற பேதமல்லாமல் நமக்குக் கிடையாது.
உதாரணத்திற்குச் சொல்கிறேன், சனாதனத்தைப்பற்றி பேசுகிறீர்களோ, சனாதன தர்மப்படி தாலி கட்டிக் கொண்டிருக்கலாமா? கணவன் இறந்த பிறகு. உன் சனாதனப்படி.
சுயமரியாதைக் கொள்கைப்படி இருக்கவேண்டும்; சமதர்மப்படி இருக்கவேண்டும்; மனிதநேயப்படி இருக்கவேண்டும். நீ மனிதனாக இருக்கவேண்டும்.
அக்கிரகாரப் பார்ப்பனப் பெண்களின் கணவன் இறந்துவிட்டால், மொட்டையடித்துக் கொள்ளவேண்டும்; வெள்ளை சேலை கட்டிக்கொள்ளவேண்டும்; முக்காடு போட்டுக் கொள்ளவேண்டும். அவர்களை மொட்டைப் பாப்பாத்தி என்று அழைப்பார்கள்.
வடநாட்டில் கணவன் இறந்துவிட்டால், கணவனின் உடல் எரியூட்டும்பொழுதே, அந்தப் பெண் உடன்கட்டை ஏறவேண்டும். 
ஆனால், நல்ல வாய்ப்பாக தமிழ்நாட்டில் பெரியார் பிறந்ததினால், சதி என்றால் என்னவென்று தெரியாது. சதி மாதா கோவில்கள் கிடையாது.
ஆனால், இராஜஸ்தான் போன்ற வட மாநிலங்களில் இன்னமும் சதி மாதாக்கள் இருக்கிறார்கள்; கணவன் மறைந்தால், அந்தப் பெண்ணை தூக்கி நெருப்பில் போடுகிறார்கள். இதற்கு என்ன பெயர்? சனாதனம் அல்லவா!

வெள்ளை சேலை கட்டும் பார்ப்பனப் பெண்ணைப் பார்த்தது உண்டா?
1800 ஆம் ஆண்டில் வெள்ளைக்காரர்கள் வந்த பிறகு, நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் பல. 
இன்றைக்குத் தமிழ்நாட்டில் அக்கிரகாரத்தில் வெள்ளை சேலை கட்டிய மொட்டைப் பாப்பாத்தி யாரையாவது ஒருவரை காட்டினால், ஒரு லட்சம் ரூபாய் கொடுக்கிறோம்.
அப்படி காட்ட முடியாது; அதற்காக நாம் மகிழ்ச்சியடைவேண்டும். இது பாராட்டப்படவேண்டிய விஷயமல்லவா!
ஒரே ஒரு மொட்டைப் பாப்பாத்தியைப் பார்க்க வேண்டும் என்றால், கமலகாசன் நடித்த ‘தசாவதாரம்' படத்தில்தான் பார்க்க முடியும்.
உன் சனாதனம் விடைபெற்றது - சமதர்மம் வெற்றி பெற்றது! அதனுடைய விளைவாகத்தான் இந்த மாறுதல்கள் ஏற்பட்டன.
எனவே, அந்தக் கோட்பாட்டை மீண்டும் கொண்டு வருவதற்காக ஒரு ஆட்சி- ஹிந்துராஷ்டிரம் என்கிற பெயராலே நீங்கள் கொண்டு வந்திருக்கிறீர்கள்.
அதனால்தான் அக்னிஹோத்திரம் இராமானுஜ தத்தாச்சாரியார் கேட்கிறார், ‘‘இந்து மதம் எங்கே போகிறது?'' என்று. 
எனக்குப் பதில் சொல்லாதே தோழா! உனக்கு அதிகாரம் இருக்கிறது; ஆட்சி இருக்கிறது; சட்டம் பாயலாம். சட்டத்தில் சொல்லாத ஒன்றை நிறை வேற்றலாம்.
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்மீது நடவடிக்கைக் கோரி, 200 பிரபலங்களும், ஓய்வுபெற்ற நீதிபதிகளும் சேர்ந்து, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதிக்குக் கடிதம் எழுதியிருக்கிறார்களாம்.
200 பேரல்ல; 2000 பேர் வேண்டுமானாலும் சேர்ந்து கடிதம் எழுதுங்கள்; 2 லட்சம் பேர் வேண்டுமானாலும் சேர்ந்து கடிதம் எழுதுங்கள். உண்மை எப்பொழுதும் உண்மையாக இருக்கும். ஆதாரத்தோடு நிரூபிக்க முடியுமா?

சாத்திரம் ஒரு சதி என்று சொன்னவர் பாரதியில்லையா?
பார்ப்பானுக்கு ஒரு நீதி; சூத்திரனுக்கு ஒரு நீதியா? என்று நாங்கள் கேட்கவில்லை; பார்ப்பன பாரதியே கேட்டானே!
‘‘சூத்திரனுக்கொரு நீதி தண்டச்
சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி,
சாத்திரம் சொல்லிடு மாயின்
அது சாத்திரம் அன்று சதியென்று கண்டோம்''
என்று பாரதி பாடினானே! பாரதியிடம் நிறைய பாடல்கள் இருக்கும்; அதில் எங்களுக்கு என்ன தேவையோ, அதை எடுத்துச் சொல்கிறோம்.
பாரதிதாசன் என்றால், அவர்களுக்குப் பிடிக்காது -
ஜாதி இருக்கின்றதென்பானும் இருக்கின்றானே
என்றார்.
முகத்தில் பிறப்பாரோ, அட முண்டமே என்றார் பாரதிதாசன். அதைச் சொன்னால், அவர்களுக்குக் கஷ்டமாக இருக்கும்.
அதனால்தான், பாரதி பாடிய பாட்டை எடுத்துச் சொல்கிறோம்.
ஆகவே, அப்படிப்பட்ட ஒரு நிலையை எடுத்துக் கொண்டு, இன்றைக்குத் தேவையில்லாமல், வளர்ச்சி அடைகிறபொழுது, தேர்தலில் வெற்றி பெறுவதற்கு வேறு வழியில்லை என்றவுடன், இதைக் கையிலெடுக் கிறார்கள்.
அவர்களுக்குக் கோபம் என்னவென்றால், நாட்டி லுள்ள எதிர்க்கட்சிகள் எல்லாம் ஒன்றிணைந்து முதல் கூட்டத்தில் 16  கட்சிகள்; அடுத்தக் கூட்டம் நடைபெற்ற பெங்களூருவில் அதைவிட அதிக எண்ணிக்கை. மூன்றாவதாக மும்பையில் நடைபெற்ற இந்தியா கூட்டணிக் கூட்டத்தில் 26 கட்சிகள் பங்கேற்றன.
அடுத்ததாக, பா.ஜ.க.வை தவிர, அனைத்துக் கட்சிகளும் இந்தியா கூட்டணிக்கு வந்துவிடுவார்கள் போலிருக்கிறது; அந்த அளவிற்கு வாய்ப்புகளும் இருக் கின்றன. வடபுலத்திலும் மக்கள்  புரிந்து கொண்டார்கள்.
ஆகவே, எதையாவது சொல்லி, பொய் சொல்லி கலகமூட்டுவதுதான் அவர்களுடைய வாழ்க்கை முறையாக இருக்கிறது.


பொய்யை - புனைசுருட்டை புகலுவதுதானே புராணங்கள்!
உதாரணமாக பாரதக் கதையில், சூரியன் மறைந்தான் என்று சொல்லி, பிறகு போரை நிறுத்தவேண்டும்; சூரியனை மறைக்க வைப்பார்; பிறகு சூரியன் மீண்டும் வரும்; அதற்குள் போர் நின்று போய்விட்டது என்று சொன்னால், இது தந்திரம்தானே!
பார்ப்பான் ஒருவன், கர்ணனிடம் இருந்த குண்ட லத்தையெல்லாம் வாங்கிக் கொண்டான் என்று கதை எழுதி வைத்திருக்கிறார்களே, அது சூழ்ச்சிதானே, தந்திரம்தானே!
சமஸ்கிருதத்தில் பெரிய வியாக்கியானம் சொல்கிறார் கள், இவர் இறந்தவுடன், பீஷ்மர் நிலைகுலைந்து போகவேண்டுமாம்! ‘‘அஸ்வத்தாமா, அஸ்வத்தாமா, அதா குஞ்சரா'' என்று சொல்கிறார்.
அஸ்வத்தாமா என்பவன் பீஷ்மருடைய பிள்ளை. அவன் இறந்து போனான் என்றவுடன், அப்படியே நிலைகுலைந்து போவாராம் பீஷ்மர்.
அஸ்வத்தாமா என்கிற யானை இறந்து போனதைச் சொல்லி, பீஷ்மரை ஏமாற்றுகிறார்களாம். நாங்கள் சொல்லவில்லை; கதையில் அவர்கள் எழுதி வைத்திருக் கிறார்கள்.
‘‘அஸ்வத்தாமா அதா, குஞ்சரா'' என்று சொன்னவுடன், முதல் வார்த்தையைக் கேட்டவுடன், பீஷ்மர் ஆயுதங் களைப்போட்டு விட்டானாம்.
இப்படி பொய்யை, புரட்டை, புனை சுருட்டை சொல்வதுதான் உன்னுடைய புராணம்; உன்னுடைய வாழ்க்கை முறை என்று இருக்கின்ற காரணத்தினால்தான், சம்பந்தமே இல்லாமல் தில்லை கோவிலை எடுத்துக் கொண்டு நாங்கள் போராட்டம் நடத்துகின்றோம் என்று நீங்கள் சொல்கிறீர்கள்.
நேற்றுகூட ‘விடுதலை'யில் எழுதியிருக்கிறார்கள். ‘‘தீட்சதக் கூட்டத்தின் பகற்கொள்ளையைத் தடுக்க - சிதம்பரம் நோக்கி வாரீர்!'' என்று.
திராவிடர் கழகத்துக்கு என்ன அக்கறை?
பக்தர்களே, நீங்கள் பக்தர்களாக இருங்கள் என்று தான் சொல்கிறோம்.
எங்களைப் பார்த்து ஒரு கேள்வி கேட்பார்கள், ‘‘நீங்கள்தான் கடவுள்  இல்லை என்று சொல்பவர் களாயிற்றே, சிதம்பரம் கோவில் எப்படி இருந்தால், திராவிடர் கழகத்துக்காரர்களுக்கு என்ன அக்கறை?'' என்று.
நான் கோவிலுக்குப் போகாதவன்தான்; நீ பல கோடி ரூபாய் கொட்டிக் கொடுத்தாலும், அங்கே போகவேண்டிய அவசியம் எனக்குக் கிடையாது. ஆனால், அதேநேரத்தில், என்னுடைய அண்ணன் அங்கே போகிறாரே, என்னுடைய தம்பி போகிறானே, என்னுடைய சொந்தக்காரன் போகிறானே, அவர்களுக்கு உரிமை இருக்கவேண்டாமா? அதுமட்டுமல்ல, நியாயம் நிலைக்கவேண்டாமா? மனித உரிமைகள் இருக்கவேண் டாமா? அதுபற்றி சிந்திக்கவேண்டாமா?
திராவிடர் கழகத்திற்கோ, கம்யூனிஸ்ட் கட்சி களுக்கோ கடவுள்கள்மீது நம்பிக்கை இல்லாவிட்டாலும், மனித உரிமைகளில் எங்களுக்கு நம்பிக்கை உண்டு. மனித உரிமைப் போராளிகளாக இருப்பதற்கு எங்களுக்கு நியாயம் உண்டு. அந்த அடிப்படையில்தான் நாங்கள் கேட்கிறோம்.
இங்கே ராஜூ உரையாற்றும்பொழுது சொன்னாரே, நடராஜர் கோவில் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் தீட்சதர்கள் சார்பில் கொடுக்கப்பட்ட கணக்குப்பற்றி குறிப்பிட்டாரே!
இதில் என்ன தவறு இருக்கிறது?
சனாதனப்படி பாஸ்போர்ட் வாங்கலாமா?
நன்றாக நீங்கள் நினைத்துப் பாருங்கள், சனாதனம் என்று சொல்வது ஒரு பக்கத்தில் இருந்தாலும்.
அடுத்தபடியாக இன்னொன்றை சொல்கிறேன் - சட்டப்படி அந்த வழக்கை கடைசிவரை சரியாக நடத்த வில்லை.
காரணம், ஜெயலலிதா அம்மையாரின் தலைமையில் அமைந்த அ.தி.மு.க. அரசு,  வேண்டுமென்றே சிதம்பரம் கோவிலை தீட்சதர்களிடம் திரும்பக் கொடுப்போம் என்று சொன்னார்கள்.
அங்கே நடந்தது என்ன? இந்தப் புத்தகத்தில் சொல்லி யிருக்கின்றோம்.
தீர்ப்புகளைப்பற்றி சொல்கிறார்களே, அந்தத் தீர்ப்பைப்பற்றி தனியே வேண்டுமானாலும் நான் சொல்கிறேன்.

சமயத்தின் பெயரால் சட்டம் - ஒழுங்கு பிரச்சினையை உருவாக்கலாமா?
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆவதற்கு முன், அதைத்தான் அவர்கள் பயன்படுத்திப் பார்த்தார்கள்.
அரசமைப்புச் சட்டப்படி சொல்கிறோம், 
Subject to public order, morality and health and to the other provisions of this Part, all persons are equally entitled to freedom of conscience and the right freely to profess, practise and propagate religion.

இந்திய நாட்டில் வாழும் அனைவருக்கும் எந்த சமயத்தையும் தழுவும், தழுவியபடி வாழும், பரப்பவும் உரிமை உண்டு. ஆனால், பொது ஒழுங்கு, ஒழுக்க நெறி, நல வாழ்வு, ஆகியவற்றிற்கு பங்கம் வராதபடி பார்த்துக்கொள்ள வேண்டும்.
அதன்படி பார்த்தால், உங்களுக்கு என்ன தனி உரிமை?
சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை ஏற்படுகிறது என்று சொல்லி, அந்த ஒன்றுக்கே ஒரு துணிவுள்ள அரசாங்கம், இந்தக் கோவிலை எடுக்கலாம்.
இதுகாறும் சட்டம் - ஒழுங்குப் பிரச்சினை நடந்து கொண்டிருக்கின்றது.
அதேபோன்று இந்திய அரசமைப்புச் சட்டப் பிரிவு 26.
Freedom to manage religious affairs Subject to public order, morality and health, every religious denomination or any section thereof shall have the right.

தீட்சதர்களிடம் கடவுள் கோவிலைக் கொடுத்தாராம்?
இரண்டு வார்த்தையை வைத்துக்கொண்டு, நாங்கள் எல்லாம் தனி தத்துவம் வாய்ந்தவர்கள் என்றால், அந்த denomination temple என்பதற்கு என்னென்ன தத்துவங்களோ, சட்டப்படி இல்லை என்பதுதான் இங்கே பரப்பப்பட்ட புத்தகமான ஓய்வு பெற்ற நீதிபதி ஏ.கே.இராஜன் அவர்கள் எழுதியிருக்கின்ற ஓர் ஆராய்ச்சி பூர்வமான, சட்டப்பூர்வமான மறுப்பு அதில் தெளிவாக இருக்கிறது.
அந்தப் புத்தகத்தை வாங்கிப் படித்தாலே, உங்களுக்கு எல்லாம் தெளிவாக விளங்கும்.
‘‘கடவுள் எங்களிடம் கோவிலைக் கொடுத்தார் என்று சொல்கிறார்கள். தீட்சதர்களாக இருக்கின்ற நாங்கள் டிரஸ்டியாக இருக்கின்றோம்'' என்று சொல்கிறார்கள்.
சரி, அவர்களைப் பார்த்து ஒரே ஒரு கேள்வி கேட்கி றோம் - சட்டம் தெரிந்தவர்கள் இங்கே இருக்கிறார்கள்; வழக்குரைஞர்களும் இங்கே இருக்கிறார்கள்; நாங்களும் சட்டம் படித்தவர்கள்தான்.
எந்த கோவில் டிரஸ்டியாவது, டிரஸ்ட் சொத்தை சாப்பிடலாமா? அது நியாயமா?
டிரஸ்டி என்ற வார்த்தையே, நம்பிக்கையோடு பாதுகாக்கவேண்டும் என்பதுதான். டிரஸ்ட் சொத்து களைப் பாதுகாக்கவேண்டும்; கணக்குக் கொடுக்க வேண்டும், ஒவ்வொரு ஆண்டும். அதை நன்றாகக் கண்காணிக்கவேண்டும்.
எல்லா அமைப்புகளும் அப்படித்தானே நடக் கின்றன.  அதற்குத்தானே அறநிலையப் பாதுகாப்புத் துறை இருக்கிறது; அதில் தவறினால், உடனே நீதிமன்றத் திற்குச் செல்கிறார்களே - உயர்நீதிமன்றம் கேள்வி கேட்கிறதே!
தீட்சதர்கள் மட்டும் சட்டத்திற்கு உட்பட்டவர்கள் கிடையாதா?
அதுமட்டுமல்ல நண்பர்களே, இன்னொரு கேள்வி, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும். இது தந்தை பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்தது முன்பு.
ஆனால், எங்கள் ஒப்பற்ற முதலமைச்சர், சமூகநீதிக் கான சரித்திர நாயகர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், ஆகம பயிற்சிப் பெற்ற 205 பேரில், படிப்படியாக அறங்காவலர்கள் மூலமாக நியமனம் செய்ய உத்தரவு போட்டார்.
உடனே அதை எதிர்த்து வழக்குப் போட்டார்கள். உச்ச, உயர்நீதிமன்றத்தில் என்ன தீர்ப்பு வந்தது?

இளையபெருமாள் கமிட்டி சொன்னது என்ன?
அர்ச்சகராக நியமனம் செய்யப்படுபவர்கள் ஆகமம் படித்திருக்கவேண்டும். பரம்பரையாக அர்ச்சகர் - அப்பா - மகன் என்கிற பரம்பரை இனி கிடையாது; ஒழிக்கப்பட்டுவிட்டது - கலைஞர் காலத்தில்.
அதை செய்துவிட்டு, அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும். இன்னுங்கேட்டால், நம்மு டைய பெருமைக்குரிய இளையபெருமாள் அவர்களுக்கு நூற்றாண்டு விழா கொண்டாடினோம்.
இளையபெருமாள் கமிட்டி என்று இந்திரா காந்தி காலத்திற்குப் பிறகு வந்த அரசு காலத்தில் போடப்பட்டது. அந்தக் கமிட்டியின் பரிந்துரை என்னவென்றால், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும்; ஆதிதிராவிட சமுதாயத்தினர் உள்பட என்பதுதான். அதுவரை யாரும் செய்யவில்லை; திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி வந்துதான், இளையபெருமாள் கமிட்டியின் பரிந்துரையை நடைமுறைப்படுத்தினார்கள்.
அனைத்து ஜாதியினருக்கும் ஆப்ஜெக்ஷன் ரீட்டனன்ஸ் போடும்பொழுது இதைத்தான் காரணமாகக் காட்டி, இளையபெருமாள் அறிக்கையை நாங்கள் அமல்படுத்துகிறோம் என்று ஆரம்பித்திருக்கிறார்கள்.
அப்படி ஆரம்பித்த பிறகு, இரண்டு, மூன்று முறை உச்சநீதிமன்றத்திற்குச் சென்று வழக்குப் போட்டார்கள். 1972 ஆம் ஆண்டு தொடங்கியது. பிறகு, 2014 ஆம் ஆண்டு வந்து, மறுபடியும் தி.மு.க. ஆட்சிக்குவந்து நடைமுறைக்குக் கொண்டு வந்தபொழுது, வழக்குத் தொடுத்தனர்; சில வாரங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் அதில் தீர்ப்பளித்தது.
‘‘அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்; ஜாதி அடிப்படையில் இனிமேல் இடம் கிடையாது அர்ச்சகர் நியமனத்திற்கு. ஆகமம் படித்திருந்தால் போதும்'' என்று தீர்ப்பளித்தது.
அதன்படி இந்தத் தகுதி சிதம்பரம் கோவில் அர்ச்சகர்களுக்கு உண்டா? அவர்கள் நீடிக்கலாமா?
உனக்கொரு சட்டம் என்று ஏதாவது சட்டத்தில் விதி இருக்கிறதா?
அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் சட்டம் என்றால், யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் கிடையாதே!
சிதம்பரம் கோவிலுக்கு என்ன விதிவிலக்குக் கொடுக்கப்பட்டு இருக்கிறதா?

உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகுதான்...
எனவே, இதற்குமுன் பல காரணங்களினால் சிதம் பரம் நடராஜன் கோவிலை, இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறையின்கீழ் கொண்டுவரவேண்டும் என்று சொன்னதைவிட, இந்த சட்டங்கள் வந்த பிறகு, இந்த சட்டங்களைப்பற்றி விவாதங்கள் நடந்து, உச்சநீதிமன்றம் தீர்ப்பு கொடுக்கப்பட்ட பிறகு, நிலைமைகள் மாறியிருக்கின்றன.
எனவே, இந்த ஒரே ஒரு காரணத்திற்காக - வேறு எந்தக் காரணத்திற்காக இல்லை என்றாலும், அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகவேண்டும் என்ற சட்டம் செயல்படவேண்டும் என்று வந்தால், அனைத்து ஜாதியினரும் எங்கே? அறநிலையப் பாதுகாப்புத் துறையின்கீழ் இந்தக் கோவில் வந்தால், தானாக வந்துவிடும். அப்படி வரக்கூடாது என்பதற்காகத்தானே, அறநிலையப் பாதுகாப்புத் துறை இந்தக் கோவிலை எடுக்கக் கூடாது என்று சொல்கிறார்கள்.
எனவே நண்பர்களே! பக்தர்களே நீங்கள் புரிந்து கொள்ளுங்கள்!
சட்டம், சமூகம், ஒழுங்கு, நீதி, நேர்மை இப்படி எந்த அடிப்படையில் பார்த்தாலும், மிக முக்கியமான சுட்டிக்காட்டப்படவேண்டிய செய்தி இது.
ஆகவே, நன்றாக நீங்கள் புரிந்துகொள்ளவேண்டும். இது ஒரு தொடக்கம்தான்.

உள்ளூர் மக்கள் போராடினால், அதற்கு நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம்
நம்முடைய அய்யா சந்திரபாண்டியன் சொன்னார், நாங்கள் அடுத்து இருக்கிறோமோ, இல்லையோ, தொடங்கிவிட்டோம் - பெரியார்தான் சொன்னார், அதன்படி, நாங்கள் கோவிலுக்குள் சென்று மணியடிக்க வேண்டும் என்பதற்காகக் கேட்கவில்லையே, நாங்கள் கோவிலுக்குள் போகவேண்டும் என்று கேட்க வில்லையே, ஒரு மனிதனுக்கு இருக்கின்ற உரிமை, இன்னொரு மனிதனுக்கு மறுக்கப்பட்டால் - எல்லா மனிதர்களும் சமம், எல்லோருக்கும் சம வாய்ப்புக் கொடுக்கவேண்டும் என்பதற்காகத்தான் நாங்கள் போராடுகிறோம். அதற்காக உள்ளூர் மக்கள் போராடி னால், அதற்கு நாங்கள் ஆதரவு கொடுக்கிறோம்.
உதாரணமாக, சமஸ்கிருதத்தில் மந்திரம் சொன்னால், கடவுளுக்குப் புரியும் என்கிறான். தமிழில் சொன்னால், கடவுளுக்குப் புரியாது என்றார்கள்.
பெரியார்தான் கேட்டார், ‘‘ஏண்டா, தமிழ் தெரியாத கடவுளுக்குத் தமிழ்நாட்டில் என்னடா வேலை?'' என்று கேட்டார்.
சிதம்பரம் சிற்றம்பலம் என்று சொன்னால், அது தமிழா? இல்லையா?
ஏன் அதற்குள் தமிழ் போகவில்லை!
ஏன் ஆறுமுகசாமிகளை அடித்து விரட்டுகிறார்கள்?
அதில் உள்ள சூழ்ச்சியை நாம் புரிந்துகொள்ள வேண்டாமா?
எனவேதான் நண்பர்களே, நாம் உரிமைகளைக் கேட்கிறோம் - மனித உரிமைகளைக் கேட்கிறோம்.
மனித சமுதாயத்திற்குச் சமத்துவத்தைச் சொல்லிக் கொடுக்கின்றோம்.
எனவேதான், இந்தப் போராட்ட உணர்ச்சி என்பது நியாயத்தின் அடிப்படையில், சட்டத்தின் அடிப்படை யில், சமூக மாற்றம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில், தெளிவாக வந்திருக்கிறது.
இல்லை, இல்லை, நாங்கள் சனாதனப்படி அப்படியே இருப்போம்; நாங்கள் குழந்தைத் திருமணங்களைச் செய்வோம்; அதை அரசிடமிருந்து மறைத்துக் கொண்டிருப்போம் என்று சொன்னால், அதற்கு என்ன அர்த்தம்?
இதுவரையில் இந்த ஊழல்கள் எப்படி நடை பெறுகின்றன என்பது குறித்து, மூன்று முறை இங்கே வந்து பேசி தெளிவாக சொன்னோம்.
நாங்கள் மட்டும் சொல்லவில்லை; அய்யா வி.வி.சாமி நாதன் அவர்கள், சிதம்பரம் நடராஜன் கோவிலுக்குள் நடைபெறும் ஊழல்களைப்பற்றி  சுட்டிக்காட்டி யிருக்கிறார்கள்.

1982 இல் இதே சிதம்பரத்தில்தான் நடராஜன் கோவில்பற்றி பேசினேன்!
சிதம்பரம் ரகசியம் என்பது இருக்கிறதே, இதை நான் 1982 ஆம் ஆண்டில், கீழவீதியில் அந்தக் கூட்டம் நடைபெற்றது; மனு கொடுத்துவிட்டு, உரையாற்றினேன்.
அப்போது அய்யா கிருஷ்ணசாமி அவர்களும், நாங்களும் ஊர்வலமாக வந்து, ஆர்.டி.ஓ.மச்சேந்திர நாதனிடம் மனு கொடுத்தோம். கீழ வீதியில் ‘‘சிதம்பர ரகசியம்‘’பற்றி கூட்டம் நடைபெற்றது. 
இன்னொரு செய்தியை உங்களுக்குச் சொல்வதில் தவறில்லை. எவ்வளவு காலத்திற்கு அதை ரகசியமாக வைக்கவேண்டுமோ அவ்வளவு காலம் வைத்தாயிற்று. அதை வெளியில் சொல்கிறோம்.
அந்தக் காலகட்டத்தில், அய்யா வி.வி.எஸ். அவர்கள் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சராக இருக்கிறார். தீட்சதர்கள் அவரை மதிக்கவில்லை; அப்பொழுது முதலமைச்சராக இருந்த எம்.ஜி.ஆரிடம் போய் சொல்கிறார்; சிதம்பரம் நடராஜன் கோவிலில் இப்படி நடக்கிறது என்று. 
பொள்ளாச்சி மகாலிங்கம் வழக்குத் தொடுத்தார்; அவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. அதற்கு முன்பும் வெவ்வேறு ஆட்கள் வழக்குத் தொடுத்தார்கள். எதுவும் செய்ய முடியவில்லையே! அவ்வளவு பெரிய சக்தியா அந்தக் கோவிலில் உள்ளவர்களுக்கு? என்று முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கேட்டார்.
இவரும், ஆமாங்க அய்யா என்றார்.
‘‘அப்படியா! சரி, வீரமணியிடம் சொல்லுங்கள். அவர்தான் இதற்கு சரியானவர். அவர் அதைக் கண்டித்து ஊர்வலமும், பொதுக்கூட்டமும் நடத்தி மனு கொடுக்கட்டும்'' என்றாராம்.
ஆக, எங்களைக் கூட்டம் நடத்தச் சொன்னவரே, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள்தான். 
அதற்குமுன் நாங்கள் கூட்டம் நடத்தக் கூடாது என்பதல்ல; முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்கள், எங்களைக் கூட்டம் நடத்தச் சொல்லி, மனு கொடுக்கச் சொல்லுங்கள் என்றார்.
அவரால் செய்ய முடிந்தது அவ்வளவுதான்; அதற்கு மேலே அவரை வசியப்படுத்தினார்கள் மற்ற நேரங்களில்.
ஆனால், கலைஞர் ஒரு காரியம் செய்தார் என்றால், மிகத் தெளிவாக இருப்பார். அங்கே இருந்து உத்தரவு 5 மணிக்கு வந்தால், உடனே அதற்குத் தடை வாங்கலாம் என்று நினைத்தார்கள்.
அதற்கு முன்பாகவே ஆளை இங்கே தயாராக வைத்திருந்தார்கள். 5 மணிக்குத் தீர்ப்பு வந்தவுடன், 5.05 மணிக்கு பொறுப்பேற்றுக்கொண்டார் அந்த அதிகாரி.
அதைவிட வேகமாக செய்யக்கூடிய முதலமைச்சர் இப்பொழுது இருக்கிறார்.
ஆகவேதான், நீங்கள் கவனத்தைத் திசை திருப்பவேண்டாம்; வேறு வகையில் இருந்தாலும், ஆட்சிகள் மாறும்; காட்சிகள் மாறும்; உரிமைகள் மாறும். 

தீட்சதர்களே வந்து ஒப்படைக்கக் கூடிய காலம் வரும். அந்தக் காலம் வன்முறையில் அல்ல; நன் முறையில்.
ஆகவேதான், இந்தக் கூட்டம் ஒரு முதல் முழக்கம்.
எனவே, இது மீண்டும் புதுப்பிக்கப்படுகிறது.
தொடரும்! தொடரும்!! தொடரும்!!!
வாழ்க பெரியார்!
வெல்க திராவிடம்!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை யாற்றினார்.

கலைஞர் அவர்கள் சொன்னது என்ன?
ஒருமுறை கலைஞர் அவர்கள் அழகாகச் சொன்னார் - எவ்வளவு சாமர்த்தியமாக புராணம் எழுதியிருக்கிறான் பாருங்கள் - திராவிட இயக்கம் அதை எப்படி சொல்லிற்று என்பதற்கு அடை யாளம் - கலைஞர் நூற்றாண்டைக் கொண்டாடிக் கொண்டிருக்கின்றோம்.
இந்த நேரத்தில், நாம் கலைஞரைப் பாராட்ட வேண்டும்; புராணக் கதையான நந்தனார் கதை யில், தில்லைக்குப் போகமாட்டேனா? சிதம்பர் நடராசரை தரிசிக்க மாட்டேனா? என்று. நந்தனார் தில்லைக்கு வந்துவிட்டார் புராணப்படி, கடைசியில் ஆண்டவன் என்ன சொன்னார் என்றால், ‘‘நந்தியே சற்று விலகி இரு!'' என்று.
இதை சொல்லிவிட்டு கலைஞர் சொன்னார், ‘‘தந்தை பெரியாரும், அவர் வழிவந்த அண்ணாவும், அவர்களுடைய கருத்தை செயல்படுத்துகின்ற என்னைப் போன்றவர்களின் தலைமையில் நடைபெறக்கூடிய ஆட்சியும் இப்பொழுது என்ன சொல்லியிருக்கிறது என்றால், கடவுளே கூட அந்தக் காலத்தில் நேரிடையாக நந்தனை உள்ளே வரச் சொல்லவில்லை; நந்தியை விலகச் சொன் னாரே தவிர, நந்தனை உள்ளே வரச் சொல்ல வில்லை. நாங்கள்தான் நந்தன்களையெல்லாம் உள்ளே அனுப்பியிருக்கிறோம்.
எனவே, நந்திகள் விலகாவிட்டாலும், நந்தன் கள் உள்ளே வந்துவிட்டார்கள்; இன்னமும் நந்தி கள் விலகாமல் இருக்கின்றன. அந்த நந்தி களை விலக வைப்பதுதான் இந்தப் போராட்டத்தினுடைய மிக முக்கியமான நோக்கம்.

உதயநிதி ஸ்டாலின் என்ன பேசினார்?
சனாதன ஒழிப்பு மாநாட்டினை நான்தான் தொடங்கி வைத்தேன். என் அருகில்தான் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் தோழர்கள் கோவன் போன்றவர்களும் அங்கே இருந்தார்கள். 
அப்படிப்பட்ட சூழலில், அவர் என்ன பேசினார் என்பதற்குப் பதிவு இருக்கிறது. ஆடியோ - வீடியோ பதிவு இருக்கிறது. பத்திரிகைகளிலும் அவருடைய உரை வெளிவந்திருக்கிறது.

‘இந்தியா' என்ற பெயரைக் கேட்டால் அலறுவது ஏன்?
நாமம் போட்டவர் தீயை அணைக்க ஒரு குடம் தண்ணீர் எடுத்துக்கொண்டு வந்தால், நாங்கள் வேண்டாம் என்போமா? அல்லது விபூதி பூசியிருப்பவர், தண்ணீர் கொண்டு வந்தால் வேண்டாம் என்போமா? இன்னொருவர் சிலுவை அணிந்திருப்பவரோ, குல்லா போட்டிருப்பவரோ தண்ணீர் கொண்டு வந்தால், வேண்டாம் என்போமா?
தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டவருக்கு என்ன வேலை? அது எப்படி ஒரு பொது வேலையோ, அதுபோல, மதவெறி, இனவெறி மூண்டு இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். ஆட்சியை, ஓட ஓட விரட்டவேண்டும். அதனுடைய ஆயுள் முடியப் போகிறது என்பதற்கு அடையாளமாகத் தான் 26 கட்சிகள் ‘இந்தியா' கூட்டணியில் இருக்கின்றன.
ஆகவேதான், இப்பொழுது பா.ஜ.க. ஆர்.எஸ்.எஸ்.காரர்களுக்கு இந்தியாவே பிடிக்க வில்லை. அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிராமணம் எடுத்ததை மீறி ஒன்றிய அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. குடியரசுத் தலைவராக இருந்தாலும், பிரதமராக இருந்தாலும், முதலமைச்சராக இருந்தாலும், ஊராட்சி மன்றத் தலைவராக இருந்தாலும், நகர மன்றத் தலைவராக இருந்தாலும், இந்திய அரசமைப்புச் சட்டத்தின்மீது பிரமாணம் எடுத்துத்தானே பதவியேற்கவேண்டும். அப்படி பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண் டிருக்கின்ற இந்த நாட்டினுடைய பெயர் என்ன?

உலகில் எந்த நாட்டிலாவது ‘சூத்திரன்' உண்டா?
சூத்திரன் என்றால் என்ன அர்த்தம்? எங்களு டைய தாய்மார்களை கேவலப்படுத்தி எழுதி வைத்திருக்கிறீர்களே! அதற்கு என்ன அர்த்தம்? அதை நாங்கள் சகித்துக் கொண்டிருக்க வேண் டுமா?
உலகத்தில் உள்ள வேறு எந்த நாட்டிலாவது சூத்திரன் வாழுகிறானா?
சுதந்திர நாட்டில் ஒருவன் சூத்திரனாகவும், ஒருவன் பிராமணனாகவும், ஒருவன் பார்ப்பன ராகவும், இன்னொருவன் பறையனாகவும், பள்ள னாகவும், சக்கிலியனாகவும் இருக்கவேண்டும் என்று எங்களுடைய தோழர்களை, உழைக்கின்ற தோழர்களை சொல்வதா? இதைக் கேட்டவுடன் எங்கள் ரத்தம் கொதிக்காதா?
பெரியார் பிறந்திருக்காவிட்டால், அந்த ரத்தம் சூடேறி இருக்காது. சுயமரியாதைச் சூடு போட்டார் தந்தை பெரியார். இங்கே கோவன் அவர்கள் சொன்னதைப்போல, பெரியார் பிறந்ததினால், இன்றைக்கு எங்கள் பிள்ளைகள் தயாராக இருக்கிறார்கள்.

‘சனாதனம்' என்ன சொல்லுகிறது?
சனாதனத்தினுடைய கூற்று என்னவென்று நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டும், ஏன் சனா தனத்தை ஒழிக்கவேண்டும் என்று சொல்கிறோம்?  உதயநிதி ஸ்டாலினாக இருந்தாலும், வீரமணியாக இருந்தாலும், திராவிட இயக்கத்தவராக இருந் தாலும், கம்யூனிஸ்டுகளாக இருந்தாலும், மக்கள் அதிகார அமைப்பைச் சேர்ந்தவர்களாக இருந் தாலும் மனிதநேயத்தோடு, மனித உரிமையோடு நினைப்பவர்கள் என்ன சொல்கிறார்கள் என்றால், சனாதனத்தை குழிதோண்டிப் புதைக்க வேண்டு மென்கிறார்கள். பெண்களுக்கு விடுதலை வேண்டாமா?

தீட்சதர்கள் அடித்த கொள்ளை!
கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த பொழுது பதிவு செய்யப்பட்ட தகவல் இது.
‘‘ஆண்டு வருமானம் ரூ.37,199
செலவு ரூ.37,000
எவ்வளவு மீதம் தெரியுமா? ரூ.199.
அதேநேரத்தில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் ஆட்சியில், சிதம்பரம் நடராசர் கோவில் இந்து அறநிலையப் பாதுகாப்புத் துறைக்கு வந்த நிலையில், 15 மாத கோவில் வருமானம் எவ்வளவு தெரியுமா?
ரூ.25 லட்சத்து 12 ஆயிரத்து 485.
கொள்ளையடித்தவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்ளவேண்டாமா?
அப்படியென்றால், சிதம்பரம் தீட்சதர்கள் அடித்த கொள்ளை எவ்வளவு என்று புரிகிறதா?'' என்று ‘விடுதலை'யில் செய்தி வெளியிட்டு இருக்கிறார்கள்.


சிதம்பரம் கோவில் தீட்சதர்களுக்குத்தான் சொந்தம் என்பதற்கு ஆதாரம் உண்டா?
எந்தத் தீர்ப்பிலாவது, இந்தக் கோவில் தனி யாருக்குத்தான் சொந்தம் என்று சொல்லக்கூடிய ஆவணங்கள், ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருக்கின்றனவா?
இல்லையே!
சிற்றம்பலம் மேடைக்காக ஏற்பட்ட பிரச்சினை யில், காவல்துறையினர் சென்று விசாரிக்கும் பொழுது, அவர்களையே அடிக்க வருகிறார்கள் என்றால், இது சட்டம் ஒழுங்குப் பிரச்சினையல்லவா!
மத உரிமை, மத உரிமை என்று சொல்கிறீர்களே, மத உரிமை என்றால், என்ன அர்த்தம்?
இதோ என்னுடைய கைகளில் இருப்பது இந்திய அரசமைப்புச் சட்டப் புத்தகம். இதில், மத உரிமை என்று சொல்லும்பொழுது, தெளிவாக சிந்திக்கவேண்டிய செய்தி என்னவென்றால், மத உரிமை என்ன லகான் இல்லாத குதிரையா?


கடவுளுக்கு சமஸ்கிருதம்தான் தெரியுமா?
கடவுளுக்குத்தான் எல்லா மொழியும் தெரி யுமே, அவர்தான் எல்லாவற்றிலும் வல்லவரா யிற்றே, அவருக்குத் தெரியாத மொழியா? அப்படி யானால், தமிழில் மந்திரம் சொல்லவேண் டியதுதானே என்று கேட்டார்.
காரணம் என்னவென்றால், தமிழில் மந்திரம் சொன்னால், மந்திரத்தினுடைய சக்தி போய் விடுமாம்; தீட்டாயிடுமாம்.
ஏன் தீட்டாயிடும்? 
தமிழ் மொழி நீஷ பாஷையாம்!
தமிழ்நாட்டில், தமிழன் கட்டிய கோவிலில், தமி ழர்களிடமிருந்தே காணிக்கை வாங்கிக்கொண்டு, அவர்களையே உள்ளே விடமாட்டேன் என்கிறார்கள்; தமிழில் மந்திரம் சொல்லமாட்டேன் என்றால், இதைவிட மானக்கேடு வேறு உண்டா? இதைவிட மோசடி வேறு ஏதாவது உண்டா?


இறுதியானது மக்கள் சக்திதான்!
மக்கள் சக்திக்கு முன்னால், எல்லா சக்திகளும் தலைவணங்கியாக வேண்டும். இறுதியானது மக்கள் சக்திதான். மக்கள் அதிகாரம்தான் சரியா னது; மக்கள் ஆட்சிதான் எப்பொழுதும் நிலைக்கும்.


No comments:

Post a Comment