‘‘ஊசிமிளகாய்'' தி.மு.க.வின் ‘‘அனுகூல சத்ரு'' அண்ணாமலை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 30, 2023

‘‘ஊசிமிளகாய்'' தி.மு.க.வின் ‘‘அனுகூல சத்ரு'' அண்ணாமலை!

தந்தை பெரியார், அவரது தொண்டர்கள், தோழர்கள், இயக்க வரவுகள், உறவுகளுக்கு எல்லாம் ஓர் அருமையான அறிவுரை கூறுவார்:

‘‘நம் மாநாடுகள், இயக்கத்திற்கு விளம்பரத்திற்கென்று ஒரு காசும் செலவு செய்யாதீர்கள்; நம்ம (இன) எதிரியே நம்மை அதிகமாக விளம்பரப்படுத்துவான்; அதனால் விளம்பரம் செய்யவில்லையே என்று விசனப்படாதீர்கள், சற்றுப் பொறுமையாக இருங்கள்'' என்பார்.

இன்றுவரை அது எவ்வளவு உண்மை என்பதை நாள்தோறும் பார்த்து வருகிறோம் பல நிகழ்வுகள் வாயிலாக!

பா.ஜ.க.வின் தமிழ்நாட்டு தலைவர்களாக பலர் வந்தும் சொந்தமாகக் காலூன்ற முடியாத அக்கட்சிக்குக் ‘கால்' தேடுவதும், ‘‘மக்கள் எங்கே, மண் எங்கே'' என்று தேடி ஓடுவதும் வாடிக்கையாகவும், வேடிக்கையாகவும் உள்ளது!

உண்மையைத் தவிர உறுதியாக மற்றதை - தினசரி ஒரு புளுகு மூட்டையை அவிழ்த்துவிடுவதே ‘‘புண்-நாக்கு'' அய்.ஏ.எஸ். ஓய்வாளர் அண்ணாமலையின் அன்றாட அனாவசியப் பணி தப்பு, தப்பு, ‘‘அவசியமான'' பணி!

அவரது தவணை முறை நடைபயணத்தில் தமிழ்நாட்டில் தி.மு.க.வுக்கு எதிராகப் பிரச்சாரம் செய்வதாக எண்ணி, நாளும் அதற்கு நல்ல உரம் போடும் பணியை அதன் ‘அனுகூலச் சத்ரு' அண்ணாமலை தவறாது செய்து வருகிறார்!

தி.மு.க. தொண்டர்களையும், கூட்டணிக் கட்சியினரையும் சோர்வின்றிப் பயணிக்கும் சுறுசுறுப்புத் தேனீக்களாக்கிக் கொண்டே இருக்க இவரது பண்பற்ற சவ(ட)£ல்கள் சங்கு ஊதி வருகின்றன! சங்கநாத சங்கு அல்ல; வேறு வகையில் ஊதப்படும் சங்கு!

தொடக்கூடாத இடத்தில் எல்லாம் தொட்டு, ‘மின்சார அதிர்ச்சியால்' அவ்வப்போது தடங்கலுக்கு வருந்தாமல், வாய் வீச்சு வக்கணைகள்மூலம் தன் சொந்தக் கட்சிக்காரர்களின் மதிப்பைக்கூட நாளும் இழந்துவரும் பரிதாபத்திற்குரியவராக இருக்கிறார். அதன் அந்தித்தலைவர் அண்ணாமலை!

அ.தி.மு.க.வோடு கூட்டணி இனி ஒருபோதும் இல்லை என்று ‘‘சத்தியம்'' செய்ய வைக்கும் அளவுக்கு அதனைச் சீண்டி, தி.மு.க. கூட்டணி வயலுக்கு உரம்போட உதவுகிறார்!

முன்பு பற்றிய கரங்களும், சுற்றிய கட்சிகளும் தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயகக் கூட்டணியிலிருந்து வெளியேறி, அதன் தோல்விக்கு அச்சாரம் வாங்கியதுபோல கலகலத்துள்ளன.

வடக்கே உள்ள பா.ஜ.க.வினர் திடீரென்று திகைத்து, ‘இப்படியா!' என்று வெலவெலத்துப் போய் உள்ளனர்!

கட்சி நடத்துவது வேறு; காவல்துறை பணி போன்றது அல்ல; அங்கே உத்தரவு போட்டே பழக்கம் - சுடுவதற்குக்கூட! ஆனால், நீதி விசாரணை முடிந்து வேலையிழந்து சிறையில் (வாச்சாத்தி தீர்ப்புபோல் ஒரு கண்ணாடி) தனிமையில் சுயபரிசோதனை செய்யும்போதுதான் செய்த தவறு சற்று புரியக்கூடும்!

அரசியல் கட்சி தலைமை, அதிகாரம் எல்லாம் பொதுவாழ்வில் வானவில் தோன்றி மறைவதுபோல - வண்ணங்கள் தெரியும், சில மணித் துளிகளுக்குப் பிறகு, தேடினாலும் தெரியாது!

அண்ணாமலைக்கு சில அக்கிரகார ஏடுகளின் ‘சடகோபம்' இருப்பதாலேயே, ‘‘மண்ணும் - விண்ணும் தன்னிடம் என்ற மயக்கம்'' ஏற்படலாம்.

ஆனால், அவை ‘பொய்யாய், கனவாய், பழங்கதையாய்ப் போய்விடும்' என்பது அனுபவம் வரலாற்றில் விட்டுச் சென்றுள்ள பாடம்!

‘பல் சான்றோரே, பல் சான்றோரே', பரிதாபத்திற்குரிய அண்ணாமலைக்குப் பதில் அளித்து உங்கள் பொன்னான நேரத்தை பாழடிக்காதீர்கள்! அவருக்கு வாய்ப்பூட்டு காவிகளாலேயே தயாரிக்கப்பட்டிருக்கிறது; திண்டுக்கல் பூட்டைவிட உறுதிமிக்கது அந்த டில்லிப் பூட்டு, புரிந்துகொள்வீர்!

No comments:

Post a Comment