சென்னை, செப்.22 கடந்த 11.9.2023 அன்று மாலை 6 மணி அளவில் பெரியார் திடலில் மணியம்மையார் அரங்கில்" குடியேற்றம் ந.தேன்மொழி எழுதிய "உயிர்வலி " என்னும் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கழக துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நூலினை வெளி யிட்டு சிறப்புரை ஆற்றினார்.
வரவேற்புரை
இந்த நிகழ்ச்சிக்கு புதுமை இலக்கியத் தென்றலின் தலைவர் செல்வ மீனாட்சி சுந்தரம் வரவேற்புரை ஆற்றினார். அவர் உயிர்வலி என்னும் இந்நூல் முழுக்க முழுக்கப் பெண் களைப் பற்றி பேசுகிறது. பெண்கள் வாழ்க்கையில் பட்ட துயரங்கள் அதை எத்தனை வலிமையோடு பெண்ணினம் கடந்தது, சாதித்து காட்டியது என்பதையெல்லாம் எடுத்துச் சொல்லும் நூலாக உயிர்வலி இருக்கிறது. காமத்தில் தனக்கு என்ன வேண்டும் என்பதை பெண் பேச முடியாத சூழ்நிலை இன்றும் உள்ளது என்று நூலாசிரியர் வேதனையோடு குறிப்பிட்டதை எடுத்துக்காட்டி உரையாற்றி எல்லோரையும் வரவேற்று பேசினார்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர் ச.இன்பக்கனி
ஆண்களைப் போன்று பெண்களும் தங்கள் உரிமைகளை மட்டும் இல்லை. உணர்வுகளை வெளிப்படுத்தும் உரிமை வேண்டும் என்று குறிப்பிட்டுள்ள நூலாசிரியர் அவர்களை நான் வாழ்த்தி பாராட்டுகிறேன். பெண்கள் உணர்வு சார்ந்து மேலும் எழுத வேண்டும் என்று வாழ்த்தி உரையாற்றினார்.
மகளிர் பாசறை மாநில செயலாளர்
பா.மணியம்மை
உயிர்வலி என்ற நூலில் இருக்கக்கூடிய கருத்துகள் ஸநா தன சிந்தனைகளுக்கு அடிக்கக்கூடிய சம்மட்டி அடியாக இருக்கிறது. தொடர்ந்து எழுத வேண்டும் என்று வாழ்த்தி உரையாற்றினார்.
கழகத் துணைப் பொதுச் செயலாளர்
பிரின்சு என்னாரெசு பெரியார்
தமிழ்நாடு முழுவதும் உள்ள கழகத் தோழர்களோடு நட்புறவு கொண்டவர். மேலும் சமூக ஊடகம் இணைந்த நட்புறவு கொண்டவர் இந்த நூலின் ஆசிரியர். இந்த நூல் முழுவதும் பெண்ணுரிமை சார்ந்த செய்திகள் மட்டுமல்லாது சமூகம் சார்ந்த பல கட்டுரைகள் இடம்பெற்றுள்ளது. ஸநாதனம் சார்ந்து பிரச்சனை எழுந்துள்ள இந்த சூழ்நிலையில் இந்த நூலில் இடம் பெற்றுள்ள சபரிமலைக்கு செல்வது குறித்த கட்டுரை முக்கியமானது. ஒரு தந்தை எப்படி இருக்க வேண்டும் என்று சொல்லக்கூடிய அம்மையப்பன் குறித்த கட்டுரை மாறிவரும் தந்தையரை பற்றி பேசுகிறது. இதை யெல்லாம் எழுத வேண்டும் என்ற அவர்கள் முயற்சியை பாராட்டுகிறேன். மேலும் அன்புமிகு எதிர்நீச்சல் காரர் என்ற அருமையான கட்டுரை நம்முடைய தோழர்களை ஆவணப் படுத்தும் கட்டுரை இதுபோன்று இன்னும் பலரை ஆவணப் படுத்த வேண்டும் என்று குறிப்பிட்டார்.
பகுத்தறிவாளர் கழக மாநிலத் தலைவர்
இரா.தமிழ்ச்செல்வன்
அந்த நூலில் தலைப்புகளே பல செய்திகளை சொல்கிறது. பெண்கள் படும் பாட்டை, பெண்களின் தேவையை, பெண் களின் இக்கால நிலைமையை, பெண்கள் எப்படி இருக்க வேண்டும் என்பதை பெண்கள் எப்படி எல்லாம் இருக் கின்றார்கள் என்பதையும் இந்த நூலில் ஆசிரியர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
பெண்களின் மீதான நூலாசிரியரின் சமுதாய கண் ணோட்டம் பற்றி குறிப்பிட்டு மலரினும் மெல்லிய கட்டுரை பற்றியும் குறிப்பிட்டார். இந்த நூலை அனைவரும் படிக்க வேண்டும் என்ற குறிப்பிட்டு சனாதனத்தை ஒழிப்பது பற்றிய இந்த நூல் பெரிதும் பேசுகிறது என்று தன் உரையில் குறிப்பிட்டார்.
கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி
கட்டுரைகளாக எழுதி அதை நூலாக வெளியிட்டு இருக்கிறார் நூலாசிரியர் தேன்மொழி. அதை நாம் பாராட்ட வேண்டும். ஊக்கப்படுத்த வேண்டும். ஆண் பேசுவதை ஒரு பெண் பேச முடியுமா என்ற குரல் தமிழ்நாட்டிலும் ஒலித்துக் கொண்டுதான் இருக்கிறது .பேச முடியாது என்றல்ல பேசிய பிறகு ஏற்படும் விளைவுகள் அந்த பெண்ணை பின் தொடரும் விமர்சனம் அடுத்த பெண்ணை பேசவிடாமல் செய்கிறது. இந்த விமர்சனங்களின் நோக்கமே அதுதான். ஏற்றத்தாழ்வான சமூக அமைப்பு தன்னோடு வாழ்கிற சரிபாதி மானுடப் பகுதி பார்த்து இப்படி நடந்து கொள்ள முடியும் என்றால் எங்கேயோ நம் சிந்தனையில் கோளாறு இருக் கின்றது. அதைத் தேடிப் பிடித்து அதற்கு மருத்துவம் பார்க் காமல் வரக்கூடிய விளைச்சல்கள் ஆயிரம் ஆயிரம் மலர்ந்து நின்றாலும் எல்லா பூவிலும் நோய் கிருமிகளை இருக்கும் .எனவே வேருக்கு மருந்திட தந்தை பெரியாரின் அணுகு முறையோடு நூல் ஆசிரியர் பல்வேறு செய்திகளை உயர்வலி நூலிலும் குறிப்பிட்டுள்ளார் வேருக்கு மருந்து அடிக்கக்கூடிய வேலையை செய்த நூலாசிரியருக்கு பாராட்டுகள் என்று தன் தலைமை உரையில் குறிப்பிட்டு உரையாற்றினார்.
நூல் திறனாய்வு: கழகத் துணைப்
பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி
பெண்களின் உணர்வுகளை பற்றிய நூல் உயிர்வலி. காதல் மேல் காதல் என்ற கட்டுரை பற்றி விவரித்து தன்னைத்தானே காதலிப்பவன் உயிர்க் கொல்லி நோயான தாழ்வு மனப் பான்மையை அடியோடு விரட்டி அடிப்பான். இது அறிவியல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் முக்கிய செய்தி.
‘‘மனுவா- மானுடமா'' என்ற கட்டுரையில் ஒவ்வொரு சுலோகமும் பெண்களை எப்படி கொச்சைப்படுத்துகிறது என்று எழுதி இருக்கிறார். உயிர் பறை கட்டுரையில் கவுசல்யா அவர்களுக்கு தீர்ப்பு வந்த நாளில் மக்கள் மனநிலை குறித்து எழுதியுள்ளார். அன்னை மணியம்மையார் அன்னை நாகம்மையார் பற்றியும் இந்த நூலின் ஆசிரியர் கட்டுரை எழுதியுள்ளதை குறிப்பிட்டு பேசி அன்புமிகு எதிர்நீச்சல் காரர் கலைமணி பழனியப்பன் பெரியாரிய சிந்தனையில் கொள்கை வழியில் வாழ்க்கையில் உயர்ந்ததை இந்த கட்டுரையில் பதிவு செய்துள்ளார். நூலாசிரியர் என்றும் பெண் என்பவள் பொம்மை அல்ல. உயிர் வலியை தாங்கிய ஒரு பெண்.பெண் பெரியாரைப் படித்தால் மிகப்பெரிய வலிமை பெற்ற உயிராக மாற முடியும் என்ற பொருளில் தான் இந்த நூலை பார்ப்பதாக தன்னுடைய திறனாய்வு உரையில் குறிப்பிட்டார்
இளங்கோவன் கீதா
பெரியாரைத் தாண்டி பெண் சமூகம் பற்றி சிந்தித்தவர்கள் யாரும் இல்லை. பெரியார் சொன்ன திருமணம் என்பது கிரிமினல் குற்றமாக வேண்டும் என்பதை நம்மில் எத்தனை பேர் வாழ்க்கையில் செயல் படுத்தி இருக்கிறோம். பெரியார் சொன்ன சமுதாய சமையல் கூடத்தை ஏற்படுத்தும் அமைப்பினை எத்தனை பேர் செயல்படுத்தி இருக்கிறோம். பாலின சமத்துவம் ஏற்படுத்த வேண்டும் . பெண் தனது சிந்தனையை எந்த தயக்கமும் இல்லாமல் வெளிப்படையாக பேச நேர்ந்தால்தான் பாலின சமத்துவம் ஏற்படும் அப்படி ஒரு தொடக்கம் நேர்வதற்கு நமக்குள் தோழர்கள் வேலை செய்து கொண்டு இருக்கின்றார்கள். அந்த வகையில் மகிழ்ச்சி .பெண் உணர்வை பெண் சிந்தனையை நூல் ஆசிரியர் அவருடைய பார்வையில் குறிப்பிட்டுள்ளார். இந்த படைப்பு மிகச் சிறந்த தொடக்கமாகவும் படைப்பாகவும் அமையும் என்று தன்னுரையில் குறிப்பிட்டார்.
நூலினை வெளியீட்டு கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் சிறப்புரை
நூல் வெளியீட்டு சிறப்புரை ஆற்றிய கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலிபூங்குன்றன் அவர்கள் நூலினை பற்றியும், நூலாசிரியர் தேன்மொழியையும் பாராட்டி உரையாற்றினார். அவர் தன் உரையில் தந்தை பெரியார் அவர்கள் பேச்சில் மட்டுமல்ல, வாழ்ந்தும் காட்டியவர். அவர் வீட்டுப் பெண்கள்தான் முதலில் பொது வாழ்க்கைக்கு வந்த வர்கள். பெரியாருக்குப் ‘‘பெரியார்'' என்ற பட்டம் கொடுத்த வர்கள் பெண்கள். அவர் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் கலந்து கொள்ள பெண்களைத் தூண்டி விட்டார் என்பதற்காக கைது செய்யப்பட்டு சிறை சென்றவர்.
சபரிமலைக்குப் பெண்கள் செல்வது குறித்தும், பெண்கள் தாலி அணிவது குறித்தும் ‘உயிர்வலி' நூலில் எழுதி இருப் பதை சுட்டிக்காட்டி உரையாற்றினார். பெரியார் திடலில் நடைபெற்ற தாலி அகற்றும் போராட்டம் சந்தித்த வழக்கு குறித்தும் விரிவாக உரையாற்றினார். தந்தை பெரியார் நடத்திய முதல் சுயமரியாதைத் திருமணம் பற்றியும் எடுத் துரைத்தார்.
பெண்கள் நூல்
எழுதி வெளியிடுவது சாதாரண விசயம் இல்லை. அந்த வகையில் ‘உயிர்வலி' என்ற தலைப்பில் தேன்மொழி எழுதிய நூல் எதிர்பார்த்ததை விட தரமானதாக இருக்கிறது என்று தன் உரையில் தெரிவித்தார்.
கருப்புச் சட்டைக்காரர்களுக்கு கொள்கைக்காரர்களுக்கு வாழ்க்கை வெற்றியாக இருப்பதற்கும் கம்பீரமாய் வாழ் வதற்கும் தந்தை பெரியாரும் பெரியாரிய கொள்கை என்பது வாழ்க்கை. அதை ஏற்றுக் கொள்வதால் பின்பற்றுவதால் நமக்கு லாபமே. தந்தை பெரியாரை பின்பற்றுவோம் மற்றவரும் பின்பற்றச் செய்வோம் என்று தன் உரையில் குறிப்பிட்டார்.
தமிழர் தலைவருக்கு நன்றி தெரிவித்த நூலாசிரியர் ந.தேன்மொழி
நிகழ்ச்சியின் ஏற்புரையாற்றிய வேலூர் மாவட்ட மகளிரணி தலைவர் நூலாசிரியர் தேன்மொழி, ஆண் - பெண் இருவருக்கும் உரிமைகள் எப்படி பொதுவானதோ அப்படி உணர்வுகளும் பொதுவானதே.
பெண்கள் எந்த விசயமும் எந்த உணர்வையும் வெளிப் படுத்த உரிமை உள்ளவர்கள் என்றும் வெளிப்படுத்தினால் அவர்கள் உயிர்வலி மறையும் என்று கூறி இந்த நூல் உருவாக காரணமாக இருந்த அனைவருக்கும் நன்றி கூறினார்.
அணிந்துரை வழங்கிய ஆசிரியர் கி.வீரமணி அவர் களுக்கும் மாநிலத் தலைவர் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் வா.நேருவுக்கும், புகழ்ச்செல்வி இதழின் ஆசிரியர் கயல்விழி பரணிப்பாவலனுக்கும் தன் நன்றியை தெரிவித்தார்
வேலூர் மாவட்ட கழகத் தலைவர் இர.அன்பரசன் வந்தி ருந்து நிகழ்ச்சியை சிறப்பு செய்தவர்களுக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கும் நன்றி கூறினார்.
No comments:
Post a Comment