கேள்வி 1: "நிலவில் சிவசக்தி இடத்தை தலைநகரமாகக் கொண்டு ஹிந்து தேசமாக அறிவிக்கவேண்டும்" என்று ஹிந்து மகாசபா தீர்மானம் நிறைவேற்றி மோடிக்கு அனுப்புவோம் என்கிறதே?
- வே.ஆறுமுகம், வேளச்சேரி
பதில் 1: 'மதச்சார்பற்ற அரசு' என்று இந்திய அரசமைப்புச் சட்டத்தின் முகப்புரையே இந்த அரசு பற்றி கூறியுள்ள நிலையில், இவர்களது அதிகார எல்லைக்குள்ளே இல்லாத நிலவை இப்படி ஹிந்துத்துவா வெறியுடன் ஆக்கிரமிக்கப் பேராசை கொள்வதின்படி இவர்கள் எப்படிப்பட்ட வடிகட்டிய மதவெறியர்கள் என்பதை அறிந்துகொள்ள முடியும். இதற்கு நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் (அது வருகின்ற டிசம்பரில் நடந்தாலும் சரி, வேறு எந்த மாதத்தில் 2024இல் நடந்தாலும் சரி) ஜனநாயக முறையில் அனைத்து வாக்காளர்களாலும் தக்க பதிலடி கொடுக்கப்பட வேண்டும்!
உலகம் இவர்களைப் பற்றி சரியாகப் புரிந்துகொள்ள இந்த வெறிப் பேச்சே போதுமானது!
---
கேள்வி 2: "ஹிந்து மதம் என்பது பார்ப்பனர் மதம், பார்ப்பனர் அல்லாத மக்களை சிக்கவைக்கும் பொறிதான் ஹிந்துமதம்" என்று உத்தரப் பிரதேச சமாஜ்வாடி கட்சித் தலைவர் கேசவ் பிரசாத் மவுரியா கூறியுள்ளாரே?
- மு.சீதாபதி, திருத்தணி
பதில் 2: பெரியார் அங்கும் இப்போது பயணிக்கிறார் என்று பொருள்!
---
கேள்வி 3: "சீனக் கப்பலுக்கு எங்கள் பகுதியில் இடமில்லை" என்று டில்லி வந்த போது கூறிய இலங்கை பிரதமர், தற்போது தங்களின் துறைமுகத்தில் சீன உளவுக் கப்பலை நங்கூரமிட அனுமதித்துள்ளாரே?
- க.கோவிந்தராஜன், மதுரை
பதில் 3: முரண்பாடுகளின் மொத்த உருவமே இது!
---
கேள்வி 4: "அ.தி.மு.க. எடப்பாடி எதிரணிகள் அனைத்தும் தாமரைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும்" என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறியுள்ளாரே?
- வ.வேணுகோபால், திண்டிவனம்
பதில் 4: அடமான தி.மு.க.வாகிவிட்ட அ.தி.மு.க.வினர் பதில் என்ன? தொடர்ந்து அடகுக்கடையில் சரணம்தானா? கூட்டணியிலிருந்து வெளியேறுவோம் என்று சுயமரியாதையுடன் கூற வேண்டாமா? அது அண்ணா தி.மு.க.வாக இதற்குப் பிறகும் அந்தப் பெயரோடு இருப்பது சரியா - தொண்டர்கள் தோழர்கள் சிந்திக்க வேண்டாமா?
---
கேள்வி 5: ராஜஸ்தானில் 'நீட்' காரணமாக ஒரே ஆண்டில் 23 மாணவர்கள் தன்னுயிர் மாய்த்தும் அங்கே நீட்டிற்கு எதிராக எந்த ஓர் எதிர்ப்பும் கிளம்பவில்லையே?
- ம.முருகன், புதுக்கோட்டை
பதில் 5: எல்லாம் நீறுபூத்த நெருப்பாக உள்ளது! பொறுத்திருந்துப் பாருங்கள்!
---
கேள்வி 6: "ஜாதிப் பாகுபாடு தடைச்சட்டம் கொண்டு வந்தது ஹிந்துக்களின் நம்பிக்கைக்கு எதிரான நடவடிக்கை" என்று கலிபோர்னியா மாகாண அரசுக்கு, அமெரிக்க ஹிந்து கூட்டணி (Coalition of Hindus of North America) கண்டனம் தெரிவித்துள்ளதே?
- சே.விவேகா, வந்தவாசி
பதில் 6: ஜாதிதான் நமது இலாபந்தரும் ஏற்றுமதிப் பொருள்போலும் - இது மகா மகா வெட்கம்!
---
கேள்வி 7: இஸ்லாமிய மாணவரை பிற மாணவர்களை வைத்து அடிக்கச் சொல்வதும், நீங்கள் எல்லாம் ஏன் பாகிஸ்தானுக்குச் செல்லவில்லை என்றும் மாணவர்களைப் பண்படுத்த வேண்டிய ஆசிரியர்களே பகைமை பாராட்டத் துவங்கிவிட்டார்களே?
- கா.மருதமுத்து, வேலூர்
பதில் 7: அத்தகைய பெண் ஆசிரியரை தண்டனையிலிருந்து காப்பாற்ற உ.பி. அரசு முயலுவதாக வரும் செய்திகள் மகா மகா அவமானமாகும்! எங்கே போய் முட்டிக் கொள்வது?---
கேள்வி 8: கோவிலுக்குள் செல்போன் (நவீன கருவிகள்) கொண்டு செல்வதைத் தடுக்காத அறநிலையத் துறை அதிகாரிகள் மீது கடுமையான கண்டனம் தெரிவித்துள்ள நீதிபதிகள், கோவில் கர்ப்பக் கிரகத்திற்குள் மின்சார விளக்கு போன்றவை இருப்பது குறித்து மவுனம் சாதிப்பது ஏன்?
- பா.சக்திவேல், திருச்சி
பதில் 8: ஆகமம் மின்சார விளக்குகள் பொருத்திட அனுமதித்துள்ளதா? ஆகமத்திற்கு வக்காலத்து வாங்கும் சனாதன நீதிபதிகள் பதில் கூறட்டும்!
---
கேள்வி 9: டில்லியில் குரங்குகளை விரட்ட 4 கோடி ரூபாயை ஒன்றிய அரசு ஒதுக்கியுள்ளது. குரங்குகளை விரட்டுவது அனுமாருக்கு செய்யும் துரோகமாக ஹிந்துக்கள் பார்க்கமாட்டார்களா? ஹிந்து அமைப்புகள் போராட்டத்தில் இறங்காதது ஏன்?
- க.சந்திரசேகர், வியாசர்பாடி
பதில் 9: ஒருபுறம் "அனுமன் சாலிசா" - கவி பாடுதல், அனுமன் பிறந்த நாள் கொண்டாட்டம் - தேர்தலில் ஜெயிக்க. இன்னொரு பக்கம் குரங்கை விரட்ட ரூ.4 கோடி, என்னே நகைமுரண்! 'பஜ்ரங்' என்ற சொல்லே குரங்கு - வானரம் என்பதுதான்... அதையும் விரட்டி ஜனநாயகத்தைக் காப்பாற்றுங்கள் என்று மக்கள் கூறுவார்களே!
No comments:
Post a Comment