தந்தை பெரியார் கடைசியாக பேசிய கூட்டத்தில் ‘‘உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகிறேனே'' என்று கவலைப்பட்டார்!
இன்றைக்கு ‘‘சூத்திரப்பட்டம்'' கருவறையிலிருந்து விரட்டப்பட்டது; ‘‘ஸநாதனத்தை'' விரட்டியதால்தான் நாம் மனிதனானோம்!
சென்னை, செப்.21 சென்னை தியாகராயர் நகரில் கடைசி கூட்டத்தில் தந்தை பெரியார் அவர்கள் உணர்ந்து பேசினாரே, வலியோடு பேசினாரே, ‘‘உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகி றேனே, அதுதான் என்னுடைய கவலை’’ என்று சொன் னார். அந்த சூத்திரப்பட்டம் இன்றைக்குக் கருவறை யிலிருந்து விரட்டப்பட்டது. நாம் மனிதனாக இருக்கி றோம் இன்றைக்கு, இந்த இயக்கத்தினால். ஸநாதனத்தை விரட்டியதால்தான் நாம் மனிதனானோம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
‘‘ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப் பிடிக்கும் ரகசியம் என்ன?'' சிறப்புக் கூட்டம்!
கடந்த 12.9.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் ‘‘ஸநாதனத்தை பி.ஜே.பி. தூக்கிப் பிடிக்கும் ரகசியம் என்ன?’’ என்ற தலைப்பில் நடைபெற்ற சிறப்புக் கூட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவரது சிறப்புரையின் நேற்றையத் தொடர்ச்சி வருமாறு:
சவார்க்கார் சொல்லுகிறார்:
‘‘Therefore the Vaidik or the Sanatan Dharma itself is merely a sect of Hinduism or Hindu Dharma, however overwhelming be the majority that contributes to its tenets.”- It was definition of this Sanatan Dharma which the late Lokmanya Tilak framed the famous verse.
இதை யார் உண்டாக்கியது என்று இதுவரையில் அவர்களுக்குத் தெரிந்திருக்காது. அவர்களுக்கு நாம் பாடம் எடுத்திருக்கின்றோம்.
மனுதர்மம், கீதை, கீதையின் ரகசியம் இவற்றை யெல்லாம் விளக்கிச் சொல்லியிருக்கின்றோம்.
அதன்படி பார்த்தால், வருணாசிரம தர்மம் - வருணசிரம தர்மப்படி பார்த்தால், அதைத் தெளிவாக எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள்.
ஸநாதனத்திற்கு எது எது அஸ்திவாரம்? என்பதை அந்த நூலின் ஆறாவது பக்கத்தில் அவர்கள் சொல்லியிருக்கிறார்கள்.
‘‘ஸ்மிருதி அல்லது தர்மசாஸ்திரமென்பது, சுருதிக்கடுத்த கீழ்படியிலுள்ள பிரமாணமாகும். இது மகாரிஷிகளால் எழுதப்பட்ட நான்கு பெருங் கிரந்தங்களடங்கியது. இக்கிரந்தங்கள் ஒரு மனிதன், ஒரு குடும்பம், ஜாதி முதலிய கோஷ்டிகள், தேசம் அல்லது வர்க்கம் (RACE) இவைகள் ஒன்றிற் கொன்று நடந்துகொள்ளவேண்டிய ஒழுங்குகள் அல்லது முறைகளை விதிக்கின்றன. இவ்விதிகளின் மேற்றான் ஹிந்து கோஷ்டியானது பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கின்றது; இவ்வொழுங்கு களாற்றான் நிலை பெற்று ரக்ஷிக்கப்படுகின்றது.
அக்கிரந்தங்களாவன.
1. மனுஸ்மிருதி அல்லது மானவதர்ம சாஸ்திரம். (மனுவால் இயற்றப்பட்ட சட்ட நிர்மாணங்கள்).
2. யக்ஞிய வல்க்கிய ஸ்மிருதி
3. சங்கலிகி தஸ்மிருதி, சங்கர்- லிகிதர் இவர் களின் ஸ்மிருதி.
4. பராசர ஸ்மிருதி.
இதில் முதலாவது புஸ்தகமானது ஆரிய மகா வர்க்கத்தாரின் சகல ஆசாரங்களுக்கம் முக்கிய மான ஒரு சுருக்கமாம். இதையியற்றிய மனு வென்பர் இவ்வாரிய வர்க்கத்திற்கு ஆதி சட்ட நிர்மாணகர்த்தர். ஹிந்து சாஸ்திரங்களில் ஜகத்ஸ்தி தியின் காலம் 7 பெரும் விபாகங்களாக வகுக்கப் பட்டிருக்கிறது. இவ்வொவ்வொரு விபாகத்திற்கு ஆதியிலும், அந்தத்திலும் ஒவ்வொரு மனு யேற் படுவர். ஆகையால், இவ்விபாகங்களுக்கு ‘இரண்டு மனுக்களுக்கு இடையிலுள்ள காலம்' எனப் பொருள் தரும் ‘மன்வந்திரங்கள்' என்ற நாமதேயமிடப்பட்டிருக்கின்றது. ‘‘ஸ்வயம்புவாகிய பிர்மமாவின் சந்ததியான இம்மஹாமனுவின் வம்சத்தில், இதுவரை மகானுபாவர்களும், மகா கீர்த்திமான்களுமான 6 மனுக்கள் தோன்றிப் பிரஜா சிருஷ்டிகளைச் செய்திருக்கிறார்கள் என்று கூறப்பட்டிருக்கிறது.''
மனுஸ்மிருதியை
நீங்கள் ஏற்கிறீர்களா? இல்லையா?
ஸநாதனத்தை ஒழிக்கப் போகிறீர்களா? அப்படிக் கூறும் அவருடைய தலையை வாங்கவேண்டும் என்று பேசுகின்ற வீராதி வீரர்கள், காவிகள், அவர்களின் கூலிகள், காலிகள் எல்லோரையும் சேர்த்து ஒரு கேள்வி கேட்கிறேன் - பதில் சொல்லட்டும் பார்ப்போம்!
மனுஸ்மிருதியை நீங்கள் ஏற்கிறீர்களா? இல்லையா?
மனுஸ்மிருதியில் உங்களுக்கு உடன்பாடா? இல் லையா?
ஏற்கிறோம் அல்லது இல்லை என்று சொல்லுங்கள்.
இதோ என்னுடைய கைகளில் இந்திய அரசமைப்புச் சட்டப் புத்தகம் இருக்கிறது. அதன்மீதுதானே எல்லோரும் பதவிப் பிரமாணம் எடுக்கிறீர்கள்.
இந்த அரசமைப்புச் சட்டம் - அதனுடைய சமத்துவம், அதனுடைய சுதந்திரம், அதனுடைய சகோதரத்துவம் இவற்றிற்கும், மனுநீதிக்கும் ஒத்துப் போகுமா?
நீங்கள் அரசியலில் வெற்றி பெற்றபொழுது பதவிப் பிரமாணம் எதன்மீது எடுக்கிறீர்கள்?
ஸநாதனத்தை ஒழித்துத்தான் பதவிப் பிரமாணம் எடுத்து வந்திருக்கிறார்கள்.
தந்தை பெரியார் கேட்ட கேள்வி!
பெரியார்தான் கேட்டார் ‘‘கூட்டத்தில், கட வுளை நம்புகிறவர்கள் ஒரு ஆள்கூட உண்டா? கிடையாது'' என்றார்.
அதைக் கேட்டதும், எல்லோரும் அதிர்ச்சி யடைந்து விட்டனர்.
நிறைய பேர் கோவிலுக்குப் போகிறார்களே, என்றனர்.
உண்மையா நம்புகிறவர்களைக் கேட்கிறேன் என்றார் பெரியார்.
‘‘நான் உண்மையாகவே நம்புகிறேன்'' என்றார் ஒருவர் எழுந்து.
அடுத்த கேள்வியாக பெரியார் அவர்கள், ‘‘வீட்டைப் பூட்டிவிட்டு வந்தாயா? வீட்டிலுள்ள பெட்டியை பூட்டிவிட்டு வந்தாயா? இல்லையா? ஏன் பூட்டினாய்? கடவுள்தான் அங்கிங்கெனாதபடி எங்கும் இருக்கிறாரே? தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான். அப்படியென்றால், பெட்டியில் இருக்கமாட்டானா?''
ரங்கசாமி பணத்தை, ராமசாமி வந்து எடுத்தால், ‘‘டேய் ராமசாமி, நான் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன், நீ ரங்கசாமி பணத்தை எடுத்துக் கொண்டு போகலாமா?'' என்று கேட்கவேண்டுமா? இல்லையா?
ஸநாதனத்தில் எவ்வளவு கொடுமைகள் இருக்கின்றன!
அதே அடிப்படையில், ஸநாதனத்தில் எவ்வளவு கொடுமைகள் இருக்கின்றன, அவற்றை ஏற்றுக்கொள் கிறீர்களா?
இரண்டு உதாரணத்தை உங்களுக்குச் சொல்கிறேன்.
தோழர்கள் இங்கே சொன்னார்கள், விஸ்வகர்மா யோஜனா ஒன்றிய அரசின் திட்டத்தைப்பற்றி சொன் னார்கள். குலத்தொழிலை மீண்டும் கொண்டுவரத் துடிக்கிறார்கள் என்று.
மனுஸ்மிருதியில், 10 ஆவது அத்தியாயம், 73 ஆவது சுலோகத்தில்,
‘‘பிராமணன் தொழிலைச் செய்தாலும், சூத் திரன் பிராமண ஜாதியாகமாட்டான்; ஏனென்றால், அவன் பிராமண ஜாதித் தொழிலில் அதிகார மில்லையல்லவா! சூத்திரன் தொழிலை, பிராமணன் செய்தாலும், சூத்திர ஜாதியாகமாட்டான்; ஏனென் றால், அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும், அவன் உயர்ந்த ஜாதியல்லவா!''
என்னய்யா அர்த்தம்? இதுதான் உன் ஸநாதனம் என்றால், அதை நீ தூக்கிப் பிடிக்கிறாயா? இதுதானே ஸநாதனத்திற்கு டெக்ஸ் புக்.
அரசமைப்புச் சட்டத்தின்மீது பதவிப் பிரமாணத்தின் போது எடுக்கப்படும் உறுதிமொழிக்கு நேர் விரோத மானதல்லவா! எவ்வளவு கொடுமை என்பதை நன்றாக நீங்கள் நினைத்துப் பார்க்கவேண்டும்!
‘‘அவன் ஈனத் தொழிலைச் செய்தாலும், அவன் உயர்ந்த ஜாதியல்லவா! இப்படியே இந்த விஷ யங்களை பிரம்மாவும் நிச்சயஞ் செய்திருக்கிறார்!''
இன்னமும் உங்களுக்குத் தெளிவாகச் சொல்ல வேண்டுமானால், சூத்திரனுக்கு என்ன பொருள் என் பதையும் மனுதர்ம சாஸ்திரத்தில் சொல்லப்பட்டு இருக்கிறது.
அதைக் கேட்டதும் எங்கள் ரத்தம் கொதிக்கிறதே! வாக்கு வேண்டும் என்பதற்காக எல்லாவற்றையும் மறந்துவிட வேண்டுமா?
‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு'' என்று தந்தை பெரியார் சொல்லியிருக்கிறார் அல்லவா!
கோடானுகோடி மக்கள் எல்லோரையும் சேர்த்து வைத்திருக்கிறான். சூத்திர ராஜாவாக இருக்கின்ற தர்மத்தை, அது சேற்றில் மாட்டிக்கொண்ட வண்டியாக இருக்கும் என்று சொல்லியிருக்கிறான்.
மனுதர்மம் 8 ஆவது அத்தியாயம், சுலோகம் 415
‘‘யுத்தத்தில் ஜெயித்துக் கொண்டு வரப்பட் டவன்;
பக்தியினால் வேலை செய்கிறவன்;
தன்னுடைய தேவடியாள் மகன்;
விலைக்கு வாங்கப்பட்டவன்;
ஒருவனால் கொடுக்கப்பட்டவன்;
குலவழியாக தொன்று தொட்டு வேலை செய் கிறவன்;
குற்றத்திற்காக வேலை செய்கிறவன்''
என தொழிலாளிகள் ஏழு வகைப்படுவர்.
இதைத்தானே பெரியார் அவர்கள் சொன்னார்; தியாகராயர் நகரில் கடைசி கூட்டத்தில் உணர்ந்து பேசினாரே, வலியோடு பேசினாரே, ‘‘உங்களையெல்லாம் சூத்திரனாக விட்டுவிட்டுச் சாகிறேனே, அதுதான் என்னுடைய கவலை'' என்று சொன்னார்.
ஸநாதனத்தை விரட்டியதால்தான் நாம் மனிதனானோம்
அந்த சூத்திரப்பட்டம் இன்றைக்குக் கருவறை யிலிருந்து விரட்டப்பட்டது. நாம் மனிதனாக இருக்கிறோம் இன்றைக்கு, இந்த இயக்கத்தினால். ஸநாதனத்தை விரட்டியதால்தான் நாம் மனிதனா னோம்.
ஆதாரத்தோடு நான் சொல்கிறேன் - ஸநாதனத்திற்கு ஆதாரம் என்று மனுதர்மத்தைத்தானே எடுத்துக் காட்டுகிறார்கள்.
மனுதர்மம் 8 ஆவது அத்தியாயம், 416 ஆவது அத்தியாயம்
‘‘மனையாள், பிள்ளை, வேலைக்காரன் (சூத்திரன்) இவர்களுக்குப் பொருளில் சுவாதீனம் இல்லை; அவர்கள் எப்பொருளை சம்பாதித்தாலும், அவைகள், அவர்களின் எஜமானரையே (பிரா மணனையே) சாரும்.''
இதுதான் ஸநாதனம் - இதை ஏற்றுக்கொள்கிறீர்களா? இதுகுறித்து தெருத் தெருவாக விளக்கிச் சொல்லுங்கள். ஸநாதன கோட்பாட்டை அமைச்சர் உதயநிதி கண்டித்தார் என்றால், அதுதானே மனிதத்தன்மை!
‘‘ஸநாதனத்தில் ஒரு பிரிவு அது; காசியில் சேர்ந்து; அதை நாங்கள்தான் உருவாக்கியிருக்கிறோம், எங் களுக்கு வழிகாட்டி யார் என்று சொன்னால், பாலகங்காதர திலகர். அவர்தான் உண்டாக்கினார்'' என்று சுலோகத்தில் எடுத்து, அதை சொன்னவர் ஹிந்துத்துவாவில் இருக்கக் கூடிய வி.டி.சவார்க்கார்.
இவ்வளவு ஆதாரங்களை வரிசையாக சொல்லு கிறோமே! இவ்வளவையும் உங்களுக்குச் சொல்கிறேன். தத்துவ ரீதியாக இது பதிலாக இருக்கவேண்டும் என்று சொல்கிறேன்.
‘‘மனையாள் பிள்ளை, வேலைக்காரன் (சூத்திரன்) இவர்களுக்குப் பொருளில் சுவாதீனம் இல்லை; அவர்கள் எப்பொருளை சம்பாதித்தாலும், அவைகள், அவர்களின் எஜமானரையே (பிராமணனையே) சாரும். அதாவது எஜமானரின் உத்தரவின்றி, தர்ம விஷயத்திற்கும் தங்கள் பொருளை செலவழிக்கக்கூடாது.''
தர்மமாக இன்னொருவனுக்குக் கொடுக்கலாம் என்றாலும்கூட, இவனுக்கு அந்த உரிமை கிடையாது.
நாளைக்கு ஸநாதனம்
மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால்....
சூத்திர முதலாளிகள் நன்றாக கவனிக்கவேண்டும்; நாளைக்கு ஸநாதனம் மீண்டும் ஆட்சியில் அமர்ந்தால், பச்சையாக வருணாசிரம தர்மம் நடக்கும்.
அதற்கடுத்ததாக, மனுதர்மம் 8 ஆவது சுலோகம், 417 ஆவது அத்தியாயம்
‘‘பிராமணன் சந்தேகமின்றி, மேற்சொன்ன ஏழு விதத் தொழிலாளியான சூத்திரர்களிடத்திலிருந்து பொருளை (சொத்தை) வலிமையாலும் எடுத்துக் கொள்ளலாம். எஜமானன் எடுத்துக்கொள்ளத்தக்க பொருளை உடைய அந்த சூத்திரன் தன் பொரு ளுக்குக் கொஞ்சமும் சொந்தக்காரர் அல்ல.’’
இப்படி அவர்கள் சொன்னது மட்டுமல்ல, இன்னும் அறிவுப்பூர்வமாக என்ன சொல்கிறார்கள்? ‘‘ஏண்டா நாங்கள் கும்பிடக் கூடாது கடவுளை'' என்று நம்மாள் கேட்டான் என்றால், அதற்கு அவன் சொல்கிறான்,
மனுதர்மம் 9 ஆவது சுலோகம், 317 ஆவது அத்தியாயம்
‘‘வைதீகமாக இருந்தாலும், லௌகீகமாக இருந்தாலும் அக்னியானது எப்படி மேலான தெய்வமாக இருக்கிறதோ, அப்படியே பிராமணன் ஞானியாக இருந்தாலும், மூடனாக இருந்தாலும் அவனே மேலான தெய்வம்.’’
அதுமட்டுமல்ல,
மனுதர்மம் 9 ஆவது சுலோகம், 319 ஆவது அத்தியாயம்
‘‘அப்படியே பிராமணர்கள் கெட்ட காரியங் களில் பிரவேசித்திருந்தாலும், சகலமான சுபாச சுபங்களில் பூஜிக்கத்தக்கவர்களே; ஏனெனில், அவர்கள் மேலான தெய்வமல்லவா! (இதில் பிராமணனின் பெருமையைச் சொன்னதாகையால், முற்சொன்னதற்கு விரோதமில்லை).
சமூக மேம்பாட்டுக்கு உகந்தது!
ஆகவேதான், ஸநாதனத்தை வேரறுக்கவேண்டும்; ஒழிக்கவேண்டும் என்று தி.மு.க.வோ, தி.க.வோ அல்லது பகுத்தறிவு உள்ளவர்களோ, மனித சமத்துவத்திற்குப் பாடுபடுகிறவர்களோ, பெரியாரோ, அம்பேத்கரோ சொன்னார்கள் என்று சொன்னால், அதுதானே சமூக மேம்பாட்டுக்கு உகந்தது.
அதுதானே வருங்கால சமத்துவ சமுதாயத்திற்குத் தேவை. அதைத்தானே புத்தர் சொன்னார். அதற்காகத் தானே அவரை வெளியில் விரட்டினார்கள்.
அன்றைக்குப் புத்தரை வெளியில் விரட்டியது போன்று இன்றைக்கு அதுபோன்று விரட்ட முடியவில்லை. இன்றைக்கு ஆட்சிக்கு எதிராக அதைப் பயன்படுத்தவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
ஆகவேதான், வேறு எதைச் சொல்லியும், இந்த ஆட்சியை - எதிர்க்கட்சிகள் விமர்சிக்க முடியாது.
‘Cylinders to the poor, airports to a friend’: Parakala Prabhakar
காரணம் என்னவென்றால், ஒன்றிய அரசில் மிகத் தெளிவாகத் தெரிந்த ஊழல். பரகலா பிரபாகர் என்பவர் அளித்த பேட்டியில், எப்படியெல்லாம் ஒன்றிய ஆட்சி நடந்திருக்கிறது என்று சொல்லும்பொழுது, பல செய்தி களை சொல்லியிருக்கிறார். இந்த ஆட்சி ஒழியவேண் டியதன் அவசியம் என்ன என்பதற்கான தலைப்பே மிக அற்புதமாக இருக்கிறது.
‘Cylinders to the poor, airports to a friend’: Parakala Prabhakar
ஏழை மக்களுக்கு சிலிண்டர் கொடுக்கிறார்; தன் நண்பரான அதானிக்கு ஏர்போர்ட்டை கொடுக்கிறார்.
ஒன்றிய ஆட்சியில் வித்தைகள் நிறைய நிரம்பிய ஆட்சி இந்த மோடி ஆட்சி! அது என்ன வித்தைகள் என்று சொன்னால்,
August 15, 2014 in is maidain Independence day address Prime Minister Modi said, ‘‘I have come here not as pradhan mantri, but a pradhan sevak.''
‘‘நான் இங்கே வந்து கொடியேற்ற வந்திருப்பது பிரதமராக வரவில்லை; சேவை செய்பவனாகத்தான் வந்திருக்கிறேன் என்றார்.
முதலில் ஹிந்து மதம் என்று பெயர் வைத்தார்கள்; பிறகு ஹிந்து மஹாசபா என்று சொன்னார்கள். ஹிந்து மஹாசபா என்றால், அது மதத்தினுடைய அமைப்பு என்பதை எல்லோரும் புரிந்துகொள்ள ஆரம்பித்தவுடன், 1925 ஆம் ஆண்டு அவர்கள் தொடங்கியது ஆர்.எஸ்.எஸ். (ராஷ்டிரிய சுய சேவக்சங்) இயக்கம்.
பிறகு ஹிந்து என்ற வார்த்தையை சொல்லவேண்டாம்; அது அந்நிய வார்த்தை!
முதலில் ஹிந்து - ஹிந்துத்துவா என்றனர். பிறகு ஹிந்து என்ற வார்த்தையை சொல்லவேண்டாம்; அது அந்நிய வார்த்தை. அதற்குப் பதிலாக என்ன சொல்லலாம் என்றால், ஸநாதனம் - வைதீகம் என்பதுதான்.
எனவே, வரிசையாக இவர்கள் வித்தைக் காட்டுகிறார்கள்.
மேலும் பரகாலா பிரபாகர் பேட்டியில் தொடருகிறார்,
Talking of the new BJP, you mention how the phrase “pradhan sevak” has been replaced by “vishwa guru” in nine years. What does this signify?
கேள்வி: பிரதான் சேவக் மாறி போய், உலகத்திற்கே நான்தான் ‘விஸ்வகுரு' என்று வந்திருக்கிறதே?
If you go back to 2014, the main plank of the BJP was vikas [development], anti-corruption, creating jobs, bringing black money back. During the campaign, the then prime ministerial candidate said in many campaign speeches that the fight was not between Hindus and Muslims, the fight was between Hindus and Muslims on the one hand and corruption and unemployment on the other. That was the pitch.
பரகாலா பிரபாகர் பதில்: 2014 இல் பா.ஜ.க.வினுடைய முக்கிய திட்டம் வளர்ச்சி; ஊழலுக்கு எதிரானது; வேலை வாய்ப்புகளை உருவாக்குவது; வெளிநாட்டில் இருக்கும் கருப்புப் பணத்தை மீட்டெடுப்பது என்று நாடாளுமன்றத் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களில், பிரதமர் வேட்பாளரான மோடி கூறினார். ஹிந்துக்களுக்கும் - முஸ்லீம்களுக்கும் சண்டை இல்லை என்றார்.
ஊழலும், வேலைவாய்ப்பின்மையும்
தலைவிரித்தாடுகின்றன!
ஆனால், இன்றைக்கு ஹிந்துக்களுக்கும் - முஸ்லீம்களுக்கும் சண்டை; மறுபுறம் ஊழலும், வேலைவாய்ப்பின்மையும் தலைவிரித்தாடுகின்றன.
இந்த ஒன்றிய ஆட்சிக்கு ஒரு வித்தியாசம் உண்டு. அது என்னவென்றால், சாதாரண ஒரு விஷயத்தை மிகச் சிறப்பான சாதனையான விஷயமாகக் காட்டுவார்கள்; எது சிறப்பான விஷயமோ, அதை மிகச் சாதாரண விஷயமாகக் காட்டுவார்கள் என்பதுதான் அவர்களுடைய வேலை என்பதை எடுத்துச் சொல்லி, அதற்கு ஒரு உதாரணம் சொல்கிறார்.
The G20 leadership annually passes from one country to another. This government wants us to believe that the international community has conferred this honour on the mother of democracy. It has not. In spite of you being the mother of democracy, it [G20 presidency] will go away next year. So, a normal thing is made to look abnormal. Riots are normalised, lynching is normalised. Price rise, unemployment, rural distress, huge public debt - all these are normalised.
இதன் தமிழாக்கம் வருமாறு:
வளர்ச்சி அடைந்த நாடுகளில் கூட்டமைப்பான ஜி-20 நாடுகளின் மாநாடு ஆண்டுக்கு ஒருமுறை தானாகவே ஒவ்வொரு ஆண்டும் மற்றொரு நாடு தலைமை வகிக்கும். இது வரிசையாக வரும் ஒன்றாகும். ஆனால், இந்த அரசு இதுதான் மிகபெரிய வெற்றி, ஜனநாயகத்தின் தாயாக விளங்கும் இந்தியாவிற்கு பெருமை தேடித்தந்தது என்று தனக்குத்தானே புகழ்ந்துகொள்கிறது. இது பொதுவான ஒன்றுமட்டுமே,
ஆனால், இங்கு கொடுரமானவைபொதுவாகபெருமையான ஒன்றாக மாறுகிறது. கலவரங்கள் பொதுவான ஒன்றாகிறது, கூட்டுப் படுகொலை பொதுவான ஒன்றாகிவிடுகின்றது. விலைவாசி, வேலையின்மை, கூட்டாட்சி முறை சீர்குலைவு, பொது அமைதியின்மை உள்ளிட்ட வெகுஜன மக்களின் வாழ்க்கையைப் பாதிக்கும் அனைத்தும் இங்கு பொதுவாகி விடுகிறது.
இவற்றையெல்லாம் எடுத்துச் சொல்லவேண்டும் மக்களிடையே! இவற்றையெல்லாம் தேர்தல் பிரச்சாரத்தில் சொல்லக்கூடாது என்பதற்காகத்தான் நண்பர்களே, இப்பொழுது ஸநாதனத்தைப்பற்றி அவர்கள் பேசினால், அதற்கு நாம் பதில் சொல்லிக் கொண்டிருப்போம் என்று நினைக்கிறார்கள்.
அவர்களுடைய திரிபுவாதத்தில்
யாருமே கலக்கக்கூடாது!
ஆகவே, இனிமேல் நாங்கள் இந்தப் பிரச்சாரத்தை செய்யமாட்டோம்; முழுக்க முழுக்க எதை அவர்கள் மறைக்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்? எதைத் தவிர்க்கவேண்டும் என்று நினைக்கிறார்கள்? ‘இந்தியா' கூட்டணி வெற்றி பெறவேண்டிய அவசியம் என்ன? ‘இந்தியா' கூட்டணியினுடைய நோக்கம் என்ன? என்பதில்தான் கவனமாக இருக்கவேண்டுமே தவிர, அவர்களுடைய திரிபுவாதத்தில் யாருமே கலக்கக்கூடாது.
மக்கள் தயாராகிவிட்டார்கள்; தலைவர்கள் தயாராகிவிட்டார்கள்; நாடு தயாராகிவிட்டது!
அவர்கள் என்னதான் கத்திக்கொண்டு போனாலும், அதைக் கண்டு ஏமாறமாட்டார்கள். மக்கள் தயாராகிவிட்டார்கள்; தலைவர்கள் தயாராகிவிட்டார்கள்; நாடு தயாராகிவிட்டது.
வெற்றி நமதே!
ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன
நிச்சயமாக ஒன்றிய பா.ஜ.க. ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன. அவர்கள் எப்பொழுது தேர்தல் வைத்தாலும், அடுத்த மாதமே தேர்தல் வைத்தாலும் சரி, அல்லது ஆறு மாதங்கள் கழித்து வைத்தாலும் சரி - வெற்றி என்பது மிக நிச்சயம்.
மக்கள் முடிவு செய்துவிட்டார்கள் -
யார் வரவேண்டும் என்பது பிறகு -
யார் வரக்கூடாது என்பதற்கு முன்னுரிமை.
எனவேதான், இனியும் ஸநாதனத்தைக் காட்டி திசை திருப்ப முயலாதீர்கள். ஸநாதனத்தைக் காட்டியோ, மற்றவற்றை காட்டியோ திரிபுவாதத்தைச் சொல்லி அச்சுறுத்தாதீர்கள்.
கூட்டணிக் கட்சித் தோழர்களுக்கு
ஒரு வேண்டுகோள்!
அதில் நம்முடைய கவனமோ, பிரச்சாரமோ தேவையில்லை. கூட்டணிக் கட்சித் தோழர்களுக்கு ஒரு வேண்டுகோளாக வைக்கிறேன்.
இனிமேல் ஸநாதனத்திற்குப் பதில் சொல்லவேண்டாம்; அவர்கள் ஒரே பக்கத்தில் நின்று எதை வேண்டுமானாலும் சொல்லிக் கொண்டு போகட்டும்; என்ன நடவடிக்கை வேண்டுமானாலும் எடுக்கட்டும்.
ஒன்றிய ஆட்சி ஊழல் ஆட்சி -
ஒன்றிய ஆட்சி முழுக்க முழுக்க மதவெறி ஆட்சி -
ஒன்றிய ஆட்சி எதேச்சதிகார ஆட்சி-
திண்ணைப் பிரச்சாரம் முதல், தெருமுனைப் பிரச்சாரம், பொதுக்கூட்டப் பிரச்சாரம் வரை!
அந்த ஆட்சி ஒழிக்கப்படவேண்டும், விரட்டப்படவேண்டும் என்பதற்காக மக்கள் மத்தியிலே திண்ணைப் பிரச்சாரம் முதல், தெருமுனைப் பிரச்சாரம், பொதுக்கூட்டப் பிரச்சாரம் வரை வாய்ப்புக் கிடைக்கும்பொழுதெல்லாம் அனைத்துப் பிரச்சாரங்களையும் செய்வோம்.
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
நன்றி, வணக்கம்!
- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
No comments:
Post a Comment