கண்ணாடிக்கு உள்ள ஒரே குறை - அது எளிதில் விரிசல் கண்டுவிடுவது தான். இதை தடுக்க பலவித வேதிப் பொருட்களைக் கலந்து உறுதியான கண்ணாடிகள் வந்தபடியே உள்ளன.
அண்மையில் கனடாவின் மெக்ஜில் பல்கலைக் கழக விஞ்ஞானிகள், கடல் சங்குகளை முன் உதாரணமாக வைத்து புதிய வகை கண்ணாடியை உருவாக்கியுள்ளனர்.
கடல் சிப்பிகள், சங்குகள் மிகவும் உறுதியானவை, எளிதில் விரிசலோ, உடைசலோ காணாதவை. எனவே, அவற்றை கனடாவின் விஞ்ஞானிகள் ஆராய்ந்தனர்.
அப்போது, சிப்பிகள், சங்குகளின் உட்பகுதியில் பளபளப்பாக, வெண்மையாக இருக்கும் பகுதிதான், அவற்றின் உறுதிக்குக் காரணம் என்பதை அறிந்தனர். சிப்பியின் உட்பகுதியின் கண்ணுக்குத் தெரியாத நுண் அடுக்குகளை ஆராய்ந்து, அதேபோல கண்ணாடியிலும் உருவாக்க முயன்றனர்.
ஆரம்ப தோல்விகளுக்குப் பிறகு, கண்ணாடிப் பொடி மற்றும் அக்ரிலிக் ஆகியவற்றின் கலவையைக் கொண்டு, சிப்பியின் உள் பரப்பைப் போலவே கட்டமைப்பை உருவாக்கினர்.
இதில் கிடைத்த கண்ணாடி, தெளிவாகப் பார்க்கும் வகையிலும், மிகவும் உறுதியாகவும் இருந்தது. வழக்கமான கண்ணாடியைவிட, மூன்று மடங்கு உறுதியாகவும், அய்ந்து மடங்கு விரிசலைத் தாங்கும் தன்மையும் கொண்டிருந்தது.
இவ்வகை புதிய கண்ணாடிகள் எல்.இ.டி., தொலைக்காட்சி திரை, அலைபேசி திரைகளுக்கு ஏற்றதாக இருக்கும் என மெக்ஜில் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும், மின் கடத்தும்தன்மை, வண்ணம் மாறும் தன்மை ஆகியவற்றை இதே கண்ணாடிக்கு கொண்டு வருவதற்கான ஆய்வு தற்போது நடக்கிறது.
No comments:
Post a Comment