ஸனாதனம் என்ற பேச்சை எடுத்தவுடன் பார்ப்பன ஏடுகள் வரிந்து கட்டிக் கொண்டு எழுத ஆரம்பித்து விட்டன.
முன்பு மனுதர்மம் பற்றி விடுதலைச் சிறுத்தைகளின் தலைவர் எழுச்சித் தமிழர் மானமிகு தொல் திருமாவளவன் உண்மையை எடுத்துச் சொன்னபோது, இதே பார்ப்பன ஏடுகள் பட்டாசு போல வெடித்துக் கிளம்பவில்லையா?
அந்த வரிசையில் 'தினமணி'யும் விதி விலக்கல்ல. நேற்றைய 'தினமணி' நாளேட்டின் நடுப்பக்கச் சிறப்புக் கட்டுரை விவேகானந்தரை இழுத்துக் குளிர் காய்ந்திருக்கிறது.
"ஸனாதன தர்மத்தை உலகிற்கு உரைத்த தினம்" என்பது கட்டுரையின் தலைப்பு.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் நடைபெற்ற மாநாட்டில் ஸனாதன தர்மத்தைப் பிளந்து கட்டினாராம் விவேகானந்தர்.
"சகோதர சகோதரிகளே!" என்று விளித்து அனைவரையும் ஆச்சரியக் குறியில் நிறுத்தினாராம்.
உண்மை என்ன தெரியுமா? சிகாகோவில் விவேகானந்தர் பேசிய மாநாடு ஒன்றும் ஸனாதன மாநாடோ, ஹிந்து மத மாநாடோ அல்ல. 'ஆன்பிராமணிசம்' என்ற பச்சையான பார்ப் பனீயத்தை பறைசாற்றிய மாநாடுதான் - இதிலேயே தெரிந்து விடவில்லையா விவேகானந்தரின் அமெரிக்க விஜயம்.
இதே விவேகானந்தர்தான் மனோன்மணியம் சுந்தரனாரின் விருந்தினராகத் தங்கி இருந்தபோது - 'உங்களின் கோத்திரம் என்ன?' என்று கேட்டு மூக்கு உடைபட்டவர்.
'திராவிடம்' என்று சொல்லி விவேகானந்தரின் முகத்தை வெளிற வைத்து விட்டாரே!
அது ஒருபுறம் இருக்கட்டும்; விவேகானந்தருக்கென்று மறுபக்கம் உண்டே, அது தெரியுமா 'தினமணி'க்கு?
"விவேகானந்தர் இங்கிலாந்தில் நமது சுவாமிகள் (விவே கானந்தர்) மாக்ஸ் முல்லருடன் தர்க்கம் செய்கையில் முல்லர் கூறினார்" இந்துக்கள் மதத்தை ஆராய்ச்சி செய்யுமிடத்து சுவாசமிடும் நுரையீரலும் எரிந்து விடும்" என்றாரே! (கைவல்ய சாமியார் எழுதிய "பிராமணரைக் குற்றம் சொல்வதேன்?" பக்கம் 21)
இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறது 'தினமணி' வகையறாக்கள்?
விவேகானந்தரை சாட்சிக்கு அழைக்கும் தினமணிக்கு, விவேகானந்தரை விட்டே பதில் சொல்ல முடியும்.
"புத்தருடைய துறவுக் கொள்கையை ஹிந்து மதம் கவர்ந்து கொண்டது. புத்தரைப் போன்ற துறவு வாழ்க்கை உடைய வேறு ஒரு மனிதன் இவ்வுலகத்தில் பிறக்கவில்லை"
"புராணங்களில் பலவும், மனுதர்மம் போன்றனவும், மகாபாரதத்தில் பெரும் பகுதியில் பிற்காலத்தில் எழுந்தன. பகவான் புத்தர் அவற்றுக்கு முற்பட்டவர்" என்கிறாரே விவேகானந்தர் (நூல்: சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்")
இதே கருத்தைத்தான் "என்சைக்ளோ பீடியா பிரிட்டானிக்கா தொகுதி - 4 கூறுகிறது.
"புத்தர்பிரான் அறமொழிகளில் (பஞ்சசீலம்) முக்கியமானது பிறர் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ணன் அவதாரக் கதை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக் கட்டிப் பரப்பப்பட்டது. காம விளையாட்டுகளை அதிகரிக்கச் செய்வதே "கிருஷ்ண லீலா" கதையின் நோக்கம். புத்தர் கொள்கைகளின் செல்வாக்கை ஒழிக்கவே கிருஷ்ணாவதாரக் கதை இட்டுக் கட்டப்பட்டது" என்கிறதே என்சைக்ளோ பீடியா பிரிட்டானிக்கா.
தினமணி தூக்கிப் பிடிக்கும் விவேகானந்தர் புத்தரைப் பற்றியும் சங்கராச்சாரிகள் பற்றியும் என்ன கூறுகிறார்? இதோ:
ஆதி சங்கரப் பார்ப்பனர் பற்றி விவேகானந்தர்!
ஆணவக்காரர், இதயமில்லாதவர், கொலைகாரர்
சுவா: சங்கரருடைய புத்தி நாவிதன் கத்தியைப் போல மிகவும் கூர்மையாய் இருந்தது; அவர் வாதம் புரிவதில் வல்லவர்; மஹா பண்டிதர்; அதில் அய்யமில்லை. என்றாலும், அவரிடத்தில் அகன்ற நோக்கமில்லை; அவருடைய இதயமும் அத்தகையதாகவே காணப்பட்டது. மேலும், அவர் தமது பிராம்மணத்துவத்தில் பெருமை பாராட்டுபவர். இக் காலத்துத் தென்னிந்திய பிராம்மணப் புரோகித வகுப்பார்போல, அவர் இயற்றிய வேதாந்த சூத்திர வியாக்கியானத்தில் பிராம்மணர் அல்லாத வகுப்பார் மேலாகிய பிரம்மஞானத்தை அடைய மாட்டார் என்று எவ்வளவு வாதாடுகிறார்! அவர் காட்டும் நியாயங்களோ எவ்வளவு நகைப்புக்கு இடமாகின்றன. விதுரன் பிரம்மஞானத்தை அடைந்தான்; அது முற்பிற வியிலே அவன் பிராம்மணத் திருமேனியோடு பிறந்த காரணத்தினால், என்கின்றார். நல்லது;
இந்நாளில் சூத்திரன் ஒருவன் பிரம்ம ஞானத்தையடைந் தால், உங்கள் சங்கரர் சொல்லுவது போலவே, அவன் முற் பிறப்பிலே பிராம்மணனாயிருந்த காரணத்தினால் அத்தகைய ஞானத்தை அடைந்தானென்று சொல்ல வேண்டுமா? அய்யோ பாவம்! பிராம்மணத்துவத்தை இவ்வளவு தூரம் இழுத்து வாதாடுவதில் என்ன பயன்? உயர்ந்த மூன்று வருணத்தாரும் வேதங்களை ஓதுவதற்கும் பிரம்மத்தை அடைவதற்கும் உரியவரென்று வேதம் கூறவில்லையா? வேதப் பிராம்மணத்திற்கு எதிராகச் சங்கரர், இந்த விஷயத்தில் தமது புத்திசாலித்தனத்தைக் காட்டுவது வேண்டப்படாத தொன்று. வாதத்திலே தோல்வியடைந்த எத்தனையோ புத்த சந்நியாசிகளை நெருப்புக்கு இரையாக்கின, அவருடைய இதயத்தை என்னவென்று சொல்வது! ``வாதத்திலே தோல்வியுற்றோம்! என்று நெருப்பிற் புகச் சித்தமாயிருந்த பவுத்தரும் மூடர். சங்கரர் இந்தச் செய்கையைச் செய்தது மூடப் பிடிவாதமன்றி வேறு என்ன? புத்த(ர்) தேவருடைய இதயத்தை இதனோடு ஒப்பு வைத்து நோக்குவாயாக, சிறு ஆட்டுக் குட்டியினுடைய உயிரைக் காப்பாற்றத் தமது உயிரைக் கொடுக்கச் சித்தமாயிருந்தார் புத்தர்; `பஹுஜன ஹிதாய பஹுஜன ஸுகாய- பலருடைய இதத்திற்காகவும் பலருடைய நலத்திற்காகவும் வாழ்ந்தார். எவ்வளவு அகன்ற சிந்தை! எவ்வளவு இரக்கம்!
(நூல்: சுவாமி விவேகானந்தர் சம்பாஷணைகள்
பக்கம் 11-12)
போதுமா தினமணியாரே உங்கள் ஸனாதனத்தின் சங்கதி சிரிப்பாய் சிரிக்கிறதே -
எந்த விவேகானந்தரைத் தூக்கிப் பிடிக்கிறீர்களே அவரே உங்கள் சனாதனத்தைக் கிழித்து எறிந்து விட்டாரே - என்ன பதில்?
No comments:
Post a Comment