பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்றத்தில் 543 இல் 179 தொகுதிகளும் - சட்டமன்றங்களில் 4,126 இல் 1,362 தொகுதிகளும் பெண்களுக்குக் கிடைக்கும்!தமிழ்நாட்டில் 77 சட்டமன்ற தொகுதிகள் கிடைக்கும்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, September 19, 2023

பெண்களுக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா நிறைவேற்றப்பட்டால் நாடாளுமன்றத்தில் 543 இல் 179 தொகுதிகளும் - சட்டமன்றங்களில் 4,126 இல் 1,362 தொகுதிகளும் பெண்களுக்குக் கிடைக்கும்!தமிழ்நாட்டில் 77 சட்டமன்ற தொகுதிகள் கிடைக்கும்!

புதுடில்லி, செப்.19 நாடாளுமன்றத்தில் மொத்தம் 543 உறுப்பினர்கள் உள்ளனர். 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா பெண்களுக்காக கொண்டு வரப்பட்டால் 179 தொகுதிகள் பெண்களுக்கு கிடைக்கும். அதுபோல நாடு முழுவதும் 4,126 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 33 சதவீத இட ஒதுக்கீட்டால் 1,362 தொகுதிகள் பெண்களுக்கு கிடைக்கும். தமிழ்நாட்டில் பெண்களுக்கு 13 நாடாளுமன்றத் தொகுதி களும், 77 சட்டமன்ற தொகுதிகளும் கிடைக்கும்.

நாடாளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 சதவீத இடங்களை ஒதுக்கீடு செய்யும் மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்த மசோதாவை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றி சட்டமாக்க முடியாத நிலை கடந்த பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. 

கடந்த 2010 ஆம் ஆண்டு மாநிலங்களவையில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட்டது. பொதுத் தேர்தல்களில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்ற அடிப்படையில் அந்த மசோதா கொண்டு வரப்பட்டு இருந்தது. 

2010 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 9 ஆம் தேதி அந்த இட ஒதுக்கீடு மசோதா நாடாளுமன்ற மாநிலங்களவையில் நிறை வேற்றப்பட்டது. ஆனால், மக்களவையில் அதை நிறைவேற்ற முடியவில்லை. இதனால் அது சட்டமாக முடியாமல் போனது. அதன் பிறகும் பல தடவை மக்களவையில் அந்த மசோதாவை நிறைவேற்ற முயற்சிகள் நடந்தன. ஆனால், சில கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்ததால் அதை நிறைவேற்ற இயல வில்லை. 

இந்நிலையில் பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கும் மசோதாவை தற்போது நிறைவேற்ற வேண்டும் என்று பிரதமர் மோடி தலைமையிலான ஒன்றிய அரசு முடிவெடுத்து, நேற்று (18.9.2023) இது தொடர்பாக ஒன்றிய அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது. அந்தக் கூட்டத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதாவுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. நாடாளுமன்றத்தில் இன்று (19.9.2023) இந்த மசோதாவை தாக்கல் செய்ய அமைச்சரவை கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டதாக கூறப்பட்டது. 

பழைய நாடாளுமன்றக் கட்டடத்துக்கு இன்று (19.9.2023) காலை அதிகாரப்பூர்வமாக பிரியாவிடை அளிக்கப்பட்டது. பழைய நாடாளுமன்றம் முன்பு அமர்ந்து உறுப்பினர்கள் குழு ஒளிப்படம் எடுத்துக் கொண்டனர். அதன் பிறகு மய்ய மண்டபத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூடினார்கள். அங்கிருந்து பிரதமர் மோடி தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் புதிய நாடாளுமன்றத்துக்கு அணிவகுத்துச் சென்றனர். அமைச்சர்கள் புடைசூழ பிரதமர் மோடி முதலில் சென்றார். அவர்கள் புதிய நாடாளுமன்றத்தில் தங்களது இருக்கையில் அமர்ந்தனர். 

இன்று (19.9.203) பிற்பகல் புதிய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தில் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்பட உள்ளன. முதலில் பெண்களுக்கான 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா தாக்கல் செய்யப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வரவேற்பு

பெண்களுக்கு 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா இந்த கூட்டத் தொடரிலேயே நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காங்கிரஸ், தி.மு.க. உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் வரவேற்பு தெரிவித்துள்ளன. 

நாடாளுமன்றத்தில் மொத்தம் 543 உறுப்பினர்கள் உள்ளனர். 33 சதவீத இட ஒதுக்கீடு மசோதா பெண்களுக்காக கொண்டு வரப்பட்டால் 179 தொகுதிகள் பெண்களுக்கு கிடைக்கும். அதுபோல நாடு முழுவதும் 4,126 சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. 33 சதவீத இட ஒதுக்கீட்டால் 1,362 தொகுதிகள் பெண்களுக்கு கிடைக்கும். 

தமிழ்நாட்டில் பெண் களுக்கு 13 நாடாளுமன்றத் தொகுதிகளும், 77 சட்டமன்ற தொகுதிகளும் கிடைக்கும். இதன் மூலம் நாடாளுமன்றத்திலும், சட்டமன்றங்களிலும் பெண்கள் அதிகளவு நுழைய வாய்ப்பு ஏற்படும். இதற் கிடையே அமைச்சரவைக் கூட்டத்தில், இந்த மசோதா நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான 'அக்னி பரீட்சை' என பிரதமர் மோடி தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இது எங்களுடையது: சோனியா காந்தி

இன்று (19.9.2023) நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் பழைய கட்டடத்தில் இருந்து புதிய கட்டடத்திற்கு மாற இருக்கின்றன. இதுதொடர்பான நிகழ்ச்சிகள் அங்குதான் நடைபெற இருக்கின்றன. இதில் கலந்து கொள்வதற்காக காங்கிரஸ் கட்சிக்கான நாடாளுமன்றத் தலைவர் சோனியா காந்தி வந்தார்.  அப்போது, அவரிடம் மகளிர் 33 சதவீதத இடஒதுக்கீடு மசோதா குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு சோனியா காந்தி ''மகளிர் இடஒதுக்கீடு மசோதா எங்களுடையது'' என்றார். 

ஜெய்ராம் ரமேஷ்

ஏற்கெனவே, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜெய்ராம் ரமேஷ், "ஒன்றிய அமைச்சரவையில் ஒப்புதல் அளித்ததாக வந்துள்ள செய்தியை வரவேற்கிறேன். மசோதாவின் விவரங் களுக்காக காத்திருப்போம்" எனத் தெரிவித்திருந்தார். 

ப.சிதம்பரம்

மேனாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், "மகளிர் இடஒதுக்கீடு மசோதா இன்று தாக்கல் செய்யப்பட்டால், அது காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் தலைமையிலான யுபிஏ கூட்டணியின் வெற்றியாகும்" எனத் தெரிவித்துள்ளார்.


No comments:

Post a Comment