ஜெய்ப்பூர்,செப்.29- ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில், நீட் தேர்வுக்கு பயிற்சி பெற்று வந்த உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த மேலும் ஒரு மாணவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் கோட்டாவில் மட்டும் ‘நீட்' தேர்வால்ஒரே ஆண்டில் 26 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப் புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் ஏராளமானோர் தற் கொலை செய்துகொண்டுள்ளனர்.
நீட் தேர்வுக்கு எதிராகத் தமிழ்நாடே கொந்தளித்தபோதும், கண்டுகொள்ளாமல் தொடர்ந்து தேர்வை நடத்தி வருகிறது ஒன்றிய அரசு. தமிழ்நாட்டில் தொடங்கிய இந்த நீட் எதிர்ப்பு போராட்டம் தற்போது பல்வேறு இடங்களில் எதிரொலித்து வருகிறது. பல்வேறு தரப்பில் இருந்தும் நீட் தேர்வுக்கு எதிரான மனநிலை தற்போது அதிகரித்து வருகிறது.
தமிழ்நாட்டில் நீட் தேர்வுக்கு எதிராக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் ஒன்றிய அரசின் அலட்சியத்தால் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்கின்றனர். நீட் தேர்வு அமலுக்கு வந்ததில் இருந்து, தனியார் பயிற்சி மய்யங்களில் படித்தால் மட்டுமே நீட் தேர்வில் வெற்றிபெற முடியும் என நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பயன்படுத்தி தனியார் பயிற்சி மய்யங்கள் லட்சக்கணக்கில் கட்டணத்தை உயர்த்தி வருகின்றன.
மேலும், அங்கு பயிலும் மாணவர்கள் அதிகப்படியான வேலைப்பளுவால் மனஉளைச்சலுக்கு ஆளாகி வருகின் றனர். இதனால் மாணவர்கள் தங்கள் உயிரை மாய்த்துக் கொள்ளும் விபரீத முடிவை எடுத்து வருகின்றனர். அண்மையில் சென்னை குரோம்பேட்டையில் நீட் தேர்வால் மாணவர் ஒருவர் தற்கொலை செய்ததை தொடர்ந்து, அவரது தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் மாநிலம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த சூழலில் தற்போது ராஜஸ்தானில் இந்த ஆண்டு மட்டுமே 26 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ராஜஸ்தான் மாநிலம், கோட்டா நகரில் நூற்றுக்கணக்கான தனியார் நீட் தேர்வு பயிற்சி மய்யங்கள் இயங்கி வருகின்றன. இதனால் இது தனியார் தேர்வு பயிற்சி மய்யங்களின் தலைநகர் என்றே அழைக்கப்படுகிறது.
ஆனால் இங்கு கடந்த சில ஆண்டுகளாக நீட் போன்ற தேர்வுகளுக்காக இந்தத் தனியார் பயிற்சி மய்யங்களில் படித்துவரும் மாணவர்கள் தொடர்ந்து தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வருகிறது.அந்த வகையில் தற்போதும் மாணவர் ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் மஹாராஜகஞ் பகுதியைச் சேர்ந்தவர் முகமது தன்வீர் (20).
இவரது தந்தை கோட்டாவில் நீட் தேர்வு பயிற்சி மய்யத்தில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார். எனவே, அவரது மகனான தன்வீரும் அதே சென்டரில் படித்து வந்துள்ளார். விடுதியில் தங்கியிருந்து படித்து வந்த இவர், கடந்த சில நாள்களாக மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த சூழலில் விடுதியில் உள்ள தனது அறை யில் மாணவர் தன்வீர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் குறித்து காவல்துறையினருக்குத் தகவல் அளிக்கப்பட்டதன் பேரில் விரைந்து வந்த அவர்கள், உடலை மீட்டு உடற்கூராய்வுக்கு அனுப்பி விசாரணை மேற் கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த ஆண்டு கோட்டா நகரில் மட்டும் 26 மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment