தந்தை பெரியாரின் 145 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் விழாப் பேருரை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, September 23, 2023

தந்தை பெரியாரின் 145 ஆம் ஆண்டு விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியரின் விழாப் பேருரை!

 உண்மையான சமத்துவம் எதுவென்றால், 

சம தளம், சம பலம் உள்ளவர்கள் போட்டியிடுவதுதான்!

சென்னை, செப்.23   சம வாய்ப்பு என்பது வேறு; சமத்துவம் என்பது வேறு. சம வாய்ப்பு என்கிற பெய ராலே, சமத்துவம் கொடுக்கிறோம் என்று சொல்கிறார்கள். உண்மையான சமத்துவம் எதுவென்றால், சம தளம், சம பலம் உள்ளவர்கள் போட்டியிட்டால்தான், அது சமதளம், சம வாய்ப்பாக இருக்க முடியும் என்றார்  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

தந்தை பெரியார் பிறந்த நாள் விழா

கடந்த 17.9.2023 அன்று மாலை சென்னை பெரியார் திடலில்  உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் தந்தை பெரியார் அவர்களின் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாப் பேருரையாற்றினார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

அவரது விழாப் பேருரை வருமாறு

இந்நிகழ்ச்சி மிகச் சிறப்பான வகையில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற நிலையில், தந்தை பெரியாரின் 145 ஆம் ஆண்டு பிறந்த நாள் விழாவின் நிறைவு நிகழ்ச்சி இது.

காலை 9 மணியிலிருந்து இரவு 8.30 மணிவரை என்று அழைப்பிதழில் போட்டிருந்தார்கள். அந்த வகையில், ஒவ்வொரு நிகழ்ச்சியும் மிகச் சிறப்பான வகையில் அமைந்திருந்தது.

‘‘செல்லம் கலாலயம் வழங்கும் சமன்’’

சற்று நேரத்திற்கு முன் அருமையான நாடகம் - ‘‘செல்லம் கலாலயம் வழங்கும் சமன்'' என்ற ஆழமான, கருத்து நிறைந்த, கருத்தியலையொட்டிய நாடகம். செல்லா செல்லம் அவர்கள், இயக்குநர் சந்தோஷ் செல்வம் ஆகியோர் சிறப்பாக நடத்தினார்கள்.

அதுபோன்றே வழக்கம்போல மிகச் சுவையான ஒரு பட்டிமன்றம் நடைபெற்றது. நம்முடைய கவிஞர் நந்தலாலா அவர்கள் எவ்வளவு நேரம் பேசினாலும், எல்லோரும் கேட்டு மகிழ்ச்சியடைவார்கள். ஆய்வோடு அவர் பல கருத்துகளைச் சொல்வார். அப்படிப்பட்ட அருமையான பட்டிமன்றம்.

‘‘சமூகத்தில் சிக்கல் அதிகம் இருப்பது - பண்பாட்டு வெளியில் - அரசியல் உலகில்'' என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில் அவர் தீர்ப்புக் கூறியதும், உண்மை யாகவே எதார்த்தமான சூழ்நிலை, இன்றைய சமூகத்தில் எப்படி இருக்கிறது என்பதையும் எச்சரித்து சொல்லக் கூடிய அளவிலே மிக நல்ல கருத்து விருந்தாக அமைந் தது.

அப்பட்டிமன்றத்தில் கலந்துகொண்ட புதுகை பூபாளம் பிரகதீசுவரன், பேராசிரியர் சுந்தரவல்லி, வழக் குரைஞர் பா.மணியம்மை, ‘யூ டூ புரூட்டஸ்' மைனர் வீரமணி, எழுத்தாளர் தீபலட்சுமி, பேராசிரியர் தா.மீ.ம.தீபக் ஆகியோர் சிறப்பாக வாதங்களை எடுத்து வைத்தனர்.

இந்நிகழ்ச்சிகளுக்கெல்லாம் பொறுப்பேற்றுக் கொண் டிருக்கின்ற, தலைமையேற்று இருக்கக்கூடிய தமிழ்ச் செல்வன் அவர்கள், அதுபோலவே, இளைஞரணித் தோழர்கள், இயக்கத் தோழர்கள் சண்முகப்பிரியன், தங்கமணி, பார்த்திபன், வழக்குரைஞர் துரைஅருண், சிவசாமி, சோபன்பாபு, சக்கரவர்த்தி, சதீஷ்குமார் ஆகிய அருமைத் தோழர்களே!

பட்டிமன்றத்தைப்பற்றி சொல்லவேண்டியதில்லை. அதுபற்றி உங்கள் எல்லோருக்கும் தெரியும்.

நாடகக் குழுவினர் நடத்திய நாடகம் - இது ஒரு புதிய முயற்சி. பொதுவாக, நம்முடைய பல்கலைக் கழக அள வில்தான் இதுபோன்ற கருத்துகள் - இன்னுங்கேட்டால், இங்கே நடைபெற்ற நாடகத்திலாவது சில வசனங்கள்  இருந்தன. சில நேரங்களில் வசனமே இல்லாமல் நாடகம் நடைபெறும். புரட்சிக்கவிஞர் அவர்கள் ‘‘அமைதி'' என்ற தலைப்பில் ஒரு நாடகம் எழுதியிருப்பார்.

அதுபோல, இருக்கின்ற செய்திகளையே உருவகப் படுத்தி காட்டக்கூடிய அளவில் இருக்கும்போது ‘‘சமன்'' என்ற தலைப்பு மிகவும் பாராட்டவேண்டிய தலைப் பாகும்.

எத்தனைக் கோணங்களில், இந்த நாடகம் எப்படி இருக்கிறது என்பதற்கு அடையாளம் - இந்த நாடகத்தைப் பார்த்துக் கொண்டிருக்கும்பொழுது, என்னுடைய சிந்தனையெல்லாம் அங்கேதான் ஓடிற்று.

ஒரு நூற்றாண்டிற்கு முன் வெளிவந்த 

புதினம் ‘‘Animal Farm’’   

ஆங்கிலத்தில் ஒரு புத்தகம் உண்டு - சமத் துவத்தைப்பற்றி பேசுகின்ற நேரத்தில், இலக்கியத்தில், ஒரு நூற்றாண்டிற்கு முன் ஆங்கில இலக்கியத்தில் கலக்கிக் கொண்டிருந்த அந்தப் புதினத்திற்குப் பெயர்‘‘Animal Farm’’  என்பதாகும்.

காட்டில் மிருகங்கள் எல்லாம் சேர்ந்து ராஜ்ஜியத்தை நடத்துகின்றன. George Orwell  என்பவர் எழுதியிருப்பார்.

அதில், அந்த ராஜ்ஜியத்திற்குத் தலைமை தாங்குபவர் வருவார். இன்றைக்கு மிகப் பொருத்தமான சூழ்நிலை அது.

காட்டில் தலைமை வகிக்கும் அந்த விலங்கு, ‘‘நாம் எல்லோரும் சமமானவர்கள்தான். ஆனால், அதில் கொஞ்சம் நான் மேலானவன்'' என்று கூறுகின்றது.

பிரதமர் மோடி விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை டில்லியில் தொடங்கி வைத்திருக்கிறார்

அதுதான் இப்பொழுது நாட்டில் நடந்துகொண் டிருக்கிறது. ‘விஸ்வகர்மா யோஜனா' திட்டம் என்று சொல்லி, இன்றைக்கு மீண்டும் நம்மை கீழே கொண்டு போய் தள்ளுவதற்காக, இதே நாளில் டில்லியில் பிரதமர் மோடி அந்தத் திட்டத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார்.

முத்தையா முதலியார் கொண்டு வந்த 

வகுப்புவாரி உரிமை

நமக்குக் காலங்காலமாக மறுக்கப்பட்ட கல்வி, உத்தியோகம், சமூகநீதிக்கு - திராவிடர் இயக்கம் - பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று அன்றைக்கு அழைக்கப்பட்ட திராவிடர் ஆட்சி வந்து - ஆதரவு கொடுத்து, டாக்டர் சுப்பராயன் அவர்கள் சுயேச்சையாக வெற்றி பெற்றிருந்தாலும், நீதிக்கட்சியின் வற்புறுத்தல், தந்தை பெரியார் அவர்களுடைய இடையறாத வற் புறுத்தல் எல்லாம் சேர்ந்து - முத்தையா முதலியார் அவர்களால் 1928 ஆம் ஆண்டு காலகட்டத்தில், மூன்றாவது கட்டம் தாண்டி, வற்புறுத்தி, வற்புறுத்தி அது வளர்ந்து, வகுப்புவாரி உரிமை வந்தது என்ற வரலாறு இந்த அரங்கத்தில் இருக்கின்ற அனைவருக்கும் தெரியும்.

அதை எப்பொழுது ஒழிக்கிறார்கள்?

அரசமைப்புச் சட்டம் வந்தவுடன், அந்த சட்டத்தை உருவாக்குவதற்கு யார் காரணமாக இருந்தாரோ, அதே அல்லாடி கிருஷ்ணசாமி அய்யர், நீதிமன்றத்திற்கு வந்து வாதாடினார்; உயர்நீதிமன்றத்திலும் வாதாடினார்; உச்சநீதிமன்றத்திலும் வாதாடினார்.

பொய்யான அபிடவிட் கொடுத்து ஒரு பெண் உள்ளே போகிறார்; அதற்கு, இந்த யோக்கியர், மகாமகா சட்ட நிபுணர் வந்து வாதாடினார்.

உண்மைக்கும் - நேர்மைக்கும் -  சமத்துவத்திற்கும் சம்பந்தமில்லை

அவர்கள் நினைத்தால், என்னவேண்டுமானாலும் செய்வார்கள் - உண்மைக்கும் - அவர்களுக்கும், நேர் மைக்கும் -அவர்களுக்கும், சமத்துவத்திற்கும் - அவர்களுக்கும் சம்பந்தமில்லை.

ஜாதியினாலோ, மற்றவற்றினாலோ எந்தவிதமான வேற்றுமையும்படுத்தக் கூடாது. சமத்துவம்  - சமன் - சமத்துவம் இருக்கவேண்டும்.

வகுப்புவாரி உரிமை செல்லாது என்று சொன்னார்கள்

இதைப் படித்தவுடன், ஆகா, கரெக்டா இருக்கிறதே, மிக அழகாக இருக்கிறதே; ஜாதியினாலோ, மற்றவற்றி னாலோ வேறுபாடு காட்டக்கூடாது என்று சொல்லிவிட்டு, இந்த வாக்கியத்தைக் காட்டி, இதை வைத்துதான் சமூகநீதியைப் பாதுகாத்து நமக்கு வழங்கப்பட்ட வகுப்புவாரி உரிமை செல்லாது என்று சொன்னார்கள்.

இந்தத் தந்திரம், சூழ்ச்சியைப் புரிந்துகொள்வதற்கே பெரிய அறிவு வேண்டும்.

எல்லோருக்கும் சம வாய்ப்புக் கொடுக்கவேண்டும். ஆனால், இவர்களுக்கெல்லாம் தனி சலுகை கொடுத் திருக்கிறார்கள். ஜாதி வேறுபாடு கூடாது என்பதற்கு முரணானது அது என்று சூழ்ச்சியாகச் சொன்னார்கள்.

ஆகவேதான், சமத்துவத்திற்கு முரணாக இருப்பது வகுப்புவாரி உரிமை என்றார்கள்.

சமத்துவத்திற்கு முரணாக இருக்கிறதே, ஆகவே செல்லாது என்று தீர்ப்பினையும் பெற்றனர். சமத்துவம், சமத்துவம் என்று சொல்லக்கூடியதை வைத்தே நம்மைப் பின்னுக்குத் தள்ளினர். சமன், சமன் என்றால், எது சமன்?

All are equal; but I am morethan equal

நாம் எல்லோரும் சமம்; ஆனால், நான் கொஞ்சம் மேலாவன் என்று சொன்னால் எப்படியோ, அந்தக் கருத்தை உள்ளடக்கினார்கள்.

பீச்சங்கைதான் மிகவும் முக்கியமானது

அவர் சொன்ன கருத்துகளில் மிக எளிமையாக அழகாக சொன்னதில், ‘‘சோத்துக் கை, பீச்சங்கை'' என்று. இன்றைக்கு எல்லா கையைவிட, பீச்சங்கைதான் மிகவும் முக்கியமானது. இராஜமன்னார் அவர்களுடைய மைத்துனராக இருந்த ஜஸ்டிஸ் சுப்பாராவ் அவர்கள் ஒரு தீர்ப்பு எழுதும்பொழுது, ‘‘சமத்துவத்திற்கு விரோதமாக இருக் கிறது வகுப்புவாரி உரிமை என்று சொல்வது தவறு; அதை திசை திருப்பிவிட்டார்கள், சமத்துவம் என்பதற்குத் தெளிவான விளக்கம் வேண்டும்.  சம வாய்ப்பு என்பதற்குத் தெளிவான விளக்கம்வேண்டும்'' என்று குறிப்பிட்டார்.

ஜஸ்டிஸ் சுப்பாராவ் எழுதிய தீர்ப்பு

சமூகநீதியில் உண்மையில் நம்பிக்கை இருந்ததால், அவருக்கு இந்தப் பின்னணி இருந்ததால், தமிழ்நாட்டில், மெட்ராஸ் ஹைகோர்ட்டில் இருந்ததினால், ஆந்திர மாநிலம் பிரியாதபொழுது இருந்ததினால், ஜஸ்டிஸ் சுப்பாராவ் எழுதிய தீர்ப்பில் ஒரு உதாரணம் சொன்னார்.

‘‘குதிரைப் பந்தயத்தில்,  இரண்டு குதிரைகளுக்கும் சம வாய்ப்பு, சமத்துவம் கொடுத்திருக்கின்றோம். இரண்டு குதிரைகளும் ஓடுகின்றன. ஆனால், ஒரு குதிரை ரேஸ் குதிரை; இன்னொரு குதிரை ஜட்கா வண்டி குதிரை.

இரண்டுக்கும் சம வாய்ப்புக் கொடுத்திருக்கிறோம் என்று சொன்னால், இது உண்மையான சமமா? அல்லது போலி சமத்துவமா?

ஆகவேதான், இந்தப் போலி சமத்துவத்திற்கு இடங் கொடுக்கக்கூடாது; அது செல்லாது'' என்று தெளிவாகச் சொன்னார்.

உண்மையான சமத்துவம் எது?

அதையேதான், வி.பி.சிங் அவர்கள், பிரதமராக இருந்தபொழுது சொன்னபொழுது, ஈக்குவாலிட்டி என்று சொல்வதினுடைய தத்துவத்தையே அவர்கள் தலைகீழாக ஆக்கினார்கள். உண்மையான சமத்துவம் எதுவென்றால், சம தளம், சம பலம் உள்ளவர்கள் போட்டியிட்டால்தான், அது சமதளம், சம வாய்ப்பாக இருக்க முடியும்.

கிங்காங்கை ஒரு பக்கத்திலும், என்னை இன்னொரு பக்கத்திலும் வைத்து, உங்களுக்கு சம வாய்ப்புக் கொடுத்திருக்கின்றோம், நீங்கள் கோதாவில் இறங்குங்கள் என்று சொன்னால் என்னாகும்?

கிங்காங் மூச்சு விட்டாலே, நான் கீழே விழுந்து விடுவேனே - இது எப்படி சமத்துவம் ஆகும்?

சம வாய்ப்பு என்பது வேறு; சமத்துவம் என்பது வேறு.

சம வாய்ப்பு என்கிற பெயராலே, சமத்துவம் கொடுக் கிறோம் என்று சொல்கிறார்கள். இப்பொழுது போராட் டமே அதற்காகத்தான்.

அவர்கள் ஏதோ ஜாதியை ஒழிக்கின்றவர்கள் போல வும், நாம் ஜாதியைக் காப்பாற்றுபவர்கள் போலவும் தலைகீழாக மாற்றிவிட்டார்கள்.

இப்படி நிறைய செய்திகளை விளக்கிக்கொண்டே போகலாம். கடைசியாக ஒன்று -

இன்றைக்குத் தந்தை பெரியார் அவர்களுடைய பிறந்த நாள் விழாவில், நாம் எல்லோரும் மகிழ்ச்சியடைக் கூடிய வாய்ப்பு இருந்தாலும், மிகப்பெரிய அளவிற்குத் தந்தை பெரியார் அவர்கள் நமக்கெல்லாம் பெற்றுத் தந்த ஒன்று, இன்றைக்குப் பறிக்கப்படக்கூடிய மிகப்பெரிய ஆபத்தான நாள் - இந்த நாளாக இருக்கிறது - அரசியல் வரலாற்றில்.

என்ன அது?

‘விஸ்வகர்மா யோஜனா' திட்டம் என்ற ஒரு திட் டத்தை இன்றைக்குப் பிரதமர் மோடி அவர்கள் டில்லி யில் தொடங்கி வைத்ததை நான் தொலைக்காட்சியில் பார்த்தேன்.

அவர்கள் ரகசியமாக செய்யவில்லை; வெளிப்படையாகவே செய்கிறார்கள்!

அந்தந்த ஜாதித் தொழிலை செய்பவர்களுக்குப் பயிற்சி செய்வதைக் காட்டினார்கள். அப்படி அவர்கள் முதலில் காட்டியது என்னவென்றால், செருப்பு தைப்பவரைத்தான்.

அவர்கள் ஒன்றும் இதை ரகசியமாக செய்யவில்லை; வெளிப்படையாகவே செய்கிறார்கள்.

இராஜகோபாலாச்சாரியார்கூட குலக்கல்வித் திட்டத்தைக் கொண்டு வந்தபொழுது, அதற்கு வேறு வியாக்கியானம் சொன்னார்.

ஆனால், அந்தக் குலக்கல்வித் திட்டத்தை தந்தை பெரியார் அவர்களும், கல்வி வள்ளல் காமராசர் அவர் களும் அதை விரட்டியடித்தனர்.

ஆனால், இன்றைக்கு அதையே மீண்டும் கொண்டு வருகிறார்கள். 

‘நீட்' தேர்வா, நீங்கள் படிக்காமல் தடுக்கவேண்டும். ஏகலைவன் போன்று நேரிடையாகக் கட்டை விரலை வெட்டவேண்டாம்; நாங்கள் வேறு வழியில் அதைச் செய்வோம் என்பதற்கு அடையாளமாகத்தான் இப் பொழுது இந்தத் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்.

பழைய குலத்தொழில் திட்டத்தை 

மீண்டும் கொண்டு வருகிறார்கள்

உங்களுக்கு 500 ரூபாய் கொடுப்போம்; அதிலிருந்து வட்டி வரும்; எலியைப் பிடிப்பதற்காக கருவாட்டை எலிப் பொறியில் வைப்பதுபோல, அல்லது தூண்டிலில் நாக்குப்பூச்சி வைத்து மீனைப் பிடிப்பதுபோல, கடன் கொடுக்கிறோம் என்று சொல்லி, பழைய குலத்தொழில் திட்டத்தைக் கொண்டு வருகிறார்கள்.

இதை முதலில் புரிந்துகொள்கின்ற அறிவே, தமிழ் மண்ணுக்குத்தான் கிடைத்தது; பெரியார் மண்ணிற்குத் தான் கிடைத்தது. இன்னும் பல பேருக்கு இதுகுறித்து விளங்கவேயில்லை. இங்கே இருக்கின்ற அதிகாரிகள், மற்றவர்களுக்கும் கொஞ்சம் குழப்பம் இருக்கின்ற கார ணத்தினால்தான், ஒரு கமிட்டியையே அமைத்திருக் கிறார்கள்.

தி.மு.க.வில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத் தில், தெளிவான முடிவெடுத்து, மீண்டும் குலத்தொழில் திட்டத்தைக் கொண்டுவர வேண்டும் என்று முயற்சி செய்கிறார்கள் என்று தீர்மானம் போட்டார்கள்.

ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தினை பிரதமர் தொடங்கி வைத்திருக்கிறார்!

மீண்டும் குலத் தொழிலைக் கொண்டுவரவேண்டும் என்பதற்கான முயற்சிதான் ஒன்றிய அரசின் விஸ்வகர்மா யோஜனா திட்டம்.

இதனைக் கண்டித்து கடந்த 12 ஆம் தேதி சென்னை வள்ளுவர்கோட்டம் அருகே அனைத்துக் கட்சி யினரையும் ஒருங்கிணைத்து மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம்.

இன்று (17.9.2023) அந்தத் திட்டத்தினை பிரதமர் மோடி அவர்கள் தொடங்கி வைத்திருக்கிறார்.

மீண்டும் குலத்தொழில் - விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரால், ஜாதித் தொழிலை, குலத்தொழிலை கொண்டுவருகிறார்கள். ‘‘18 வயதிற்குப் பிறகு இளை ஞர்களே கல்லூரிக்குப் போகாதீர்கள், பல்கலைக் கழகத் திற்குப் போகாதீர்கள் - முழுக்க முழுக்க நீங்கள் உங்களு டைய ஜாதித் தொழிலையே செய்யுங்கள்'' என்கிறார்கள்!

தொழில் வளர்ச்சிக்காக இந்தத் திட்டத்தினை ஒன்றிய அரசு பா.ஜ.க. அரசு கொண்டுவரவில்லை. பாரம் பரியமிக்க, அவரவர் பெற்றோர் செய்யும் தொழிலை, 18 வயதானவுடன் யார் செய்கிறார்களோ, அவர்களுக்குக் கடன் உதவி தருகிறோம் என்று சொல்கிறார்கள்.

இராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த 

குலக் கல்வித் திட்டத்தைவிட, மோசமான திட்டம்தான் விஸ்வ கர்மா யோஜனா திட்டம்.

‘திராவிட மாடல்' ஆட்சியில் கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய்!

தமிழ்நாட்டைப் பொருத்தவரையில் ‘திராவிட மாடல்' ஆட்சியில், கல்லூரிக்குச் செல்லும் பெண்களுக்கு மாதம் ஆயிரம் ரூபாய் கிடைக்கிறது.

ஆனால், ஒன்றிய அரசு என்ன சொல்லுகிறது? ‘‘18 வயதானவுடன் நீ கல்லூரிக்குப் போகவேண்டாம்; உன்னுடைய குலத்தொழிலை செய்; அதற்காக உனக்குக் கடன் வழங்குகிறோம்'' என்று சொல்கிறார்கள்.

முதல்கட்டப் போராட்டம்!

இதனைக் கண்டித்துத்தான் தமிழ்நாட்டில் அத் துணைக் கட்சித் தலைவர்களையும் ஒன்று சேர்த் தோம்; முற்போக்குச் சிந்தனையுள்ள அனைவரும் வந்து முதல்கட்டமாக நடைபெற்ற போராட்டத்தில் கலந்து கொண்டு எச்சரிக்கை விடுத்தோம் ஒன்றிய அரசுக்கு.

அடுத்தகட்டம், மிகப்பெரிய அளவில் ஒரு பெரிய தொடர் போராட்டத்தைத் திராவிடர் கழகம் அறிவிக்கும். ஒத்தக் கருத்துள்ளவர்களோடு கலந்து பேசி அறி விப்போம்.

பெரியாருடைய பிறந்த நாளான இன்று 

மீண்டும் நாம் உறுதியெடுப்போம்!

ஆகவேதான், பெரியாருடைய பிறந்த நாளான இன்று மீண்டும் நாம் உறுதியெடுத்துக் கொள்வது - மீண்டும் குலக்கல்வித் திட்டம் - மீண்டும் ஜாதித் தொழில் செய்யவேண்டும் என்று இருப்பதை - கடைசிவரையில் வேரறுத்து விரட்டியடித்து அனுப்புவதற்கு உறுதி யேற்போம்!

இராஜகோபாலாச்சாரியாரைவிட, புத்திசாலியல்ல மோடி.

இராஜகோபாலாச்சாரியாரின் குலக்கல்வித் திட் டத்தை எதிர்த்து தந்தை பெரியார் அவர்கள் 1953 ஆம் ஆண்டு ஈரோட்டில் ஒரு மாநாட்டினையே நடத்தினார்.

குலக்கல்வித் திட்டம்தான் மோடி அரசையும் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப் போகிறது!

குலக்கல்வித் திட்டம்தான் ஆச்சாரியாரை ஆட்சியி லிருந்து விரட்டியது. அதேபோல, இந்த விஸ்வகர்மா யோஜனா என்கிற குலக்கல்வித் திட்டம்தான் மோடி அரசையும் ஆட்சியிலிருந்து விரட்டியடிக்கப் போகிறது. அதற்குப் பல காரணங்கள் உண்டு.

எனவேதான், கொள்ளிக்கட்டையை நீங்கள் கையில் எடுத்திருக்கிறீர்கள்; அந்தக் கொள்ளிக் கட்டையை எடுத்து மக்களே உங்கள் தலையை சொறிந்து கொள் ளாதீர்கள். அந்த ஆபத்தைத் தடுப்பதற்காக உதவக் கூடிய கைகள்தான் கருப்புச் சட்டைக்காரர்களின் கைகள்.

அதற்கான ஆக்கத்தை உருவாக்குவதுதான் அனைத்து முற்போக்குவாதிகளின் கடமை. அதற்காகத் தான் இங்கே நடைபெற்ற பட்டிமன்றம்; அதற்குத்தான் பெரியார் பிறந்த நாள் விழா - இது ஏதோ வெளிச்சத் திற்காக அல்ல; மகிழ்ச்சிக்காக அல்ல!

வருங்கால சமுதாயத்தை காப்பாற்றுவதற்காக - வருங்காலச சந்ததியை வாழ வைப்பதற்காக பெரியார் வாழ்க!

பெரியார் தத்துவம் வருக!

பெரியார் என்ற ஆயுதம் என்பது அது முனை மழுங்காத ஆயுதம்!

ஒத்த கருத்துள்ளவர்களோடு கலந்தாலோசித்து தீவிரமான போராட்டத்தை அறிவிப்போம்!

அந்த ஆயுதத்தை எடுத்து, நவீன குலத்தொழில் திட்டத்தை ஓட ஓட விரட்டுவோம். மீண்டும் குலத்தொழிலுக்கு இடமில்லை என்பதற்கு, விரைவில் ஒத்த கருத்துள்ளவர்களோடு கலந்தாலோசித்து தீவிரமான போராட்டத்தை அறிவிப்போம்!

பெரியார் பிறந்த நாள் விழா செய்தி!

குலக்கல்வித் திட்டத்தை எதிர்த்து, ஒன்றிய அரசினை எதிர்த்து மிகப்பெரிய அளவிற்குப் போராட்டம் நடை பெறும் என்பதுதான் பெரியார் பிறந்த நாள் விழா செய்தி!

நன்றி, வணக்கம்!

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விழாப் பேருரையாற்றினார்.

No comments:

Post a Comment