செப்டம்பர் 17 - திராவிட இனத்தின் - தமிழ்நாட்டின் மறக்கப் படவே முடியாத விடிவெள்ளி தோன்றிய நாள் - ஆம் அன்றுதான் தந்தை பெரியார் பிறந்த நாள் (1879).
சிறு வயது முதற் கொண்டே தனித் தன்மையான சிந்தனை! திண்ணைப் பள்ளிக் கூடத்திலேயே கேள்விக் கணைகளை ஏவும் துடிப்பு!
படிப்புக்கு முழுக்கு - ஆனால் பொதுப் பணியில் சிறகெடுத்துப் பறக்கும் ஆர்வம்.
ஈரோட்டில் 'பிளேக்' என்னும் நோய் - மக்கள் செத்துக் கொண்டே இருந்தனர். செத்தவர்களை அடக்கம் செய்யக்கூட முன் வருவதில்லை; தன் வாலிபப் பட்டாளத்துடன் தோளில் சுமந்து சென்று அடக்கம் செய்த அரிய பொதுத் தொண்டு!
வீட்டுக்கு வரும் கதாகாலட்சேபப் பேர் வழிகளிடம் 'இடக்கு முடக்கான' கேள்விகள்.
இவ்வளவுக்கும் குடும்பமோ ஆச்சாரமானது; வீட்டுக்குள்ளேயே கலகத்தை நடத்திய புரட்சி - வாழ்விணையரை மூடப் பக்தியிலிருந்து பகுத்தறிவுப் பாதைக்குக் கொண்டு வந்த பாங்கு!
அப்பப்பா! இந்த வயதிலேயே இவ்வளவு துடுக்குத்தனமும், எதையும் எதற்கு, ஏன், எப்படி என்று கேட்கும் துணிவு!
சொந்த வீட்டிலேயே கணவனை இழந்த தன் தங்கை மகளுக்கு மறுமணம். இவர் இலேசுபட்ட ஆள் அல்ல என்று ஈரோடே பேசும் நிலை.
தந்தையின் மஞ்சள் மண்டிக் கடையில் வியாபாரம்! ஊரில் நடக்கும் தகராறுகள், குடும்பப் பிரச்சினைகளையெல்லாம் தீர்த்து வைக்கும் பஞ்சாயத்து...
தந்தையிடம் கோபித்துக் கொண்டு வட நாட்டுப் பயணம்; பக்தியின் பேரால் காசி நகரில் நடக்கும் சாமியார்களின் அட்டகாசங்களை, லீலைகளை நேரில் பார்த்த அனுபவம்!
தமிழன் கட்டி வைத்த சத்திரத்தில்கூட பார்ப்பனர்களுக்கு மட்டுமே விருந்து! என்னடா அக்கிரமம் இது! பசிப் பிணியைப் போக்குவதில்கூட ஜாதியா? என்ற எண்ணம்! இந்தச் சமூக அநீதியை ஒழித்துக் கட்டியே தீர வேண்டும் என்ற தீர்க்கமான ஞானம்!
காசியிலிருந்து ஈரோடு திரும்பிய நிலையில் புதிய புதிய திருப்பங்கள்! ஈரோடு நகர மன்ற தலைவர் - மக்களுக்குப் பாதுகாக்கப்பட்ட குடிநீர் - முதன் முதலாக செய்து காட்டிய சாதனை.
எல்லாப் பொதுப் பணிகளிலும் இவருக்கென்று நாற்காலிகள் தேடி ஓடி வரும்.
ஒரு கால கட்டத்தில் 29 பதவிகளையும் ஒரு துண்டுக் காகிதத்தில் எழுதி ராஜினாமா செய்துவிட்டு, காங்கிரசில் சேர்ந்த நிலை; காங்கிரசில் சேர்ந்த குறுகிய காலத்திலேயே மாநில காங்கிரஸ் செயலாளர் - தலைவர்.
காந்தியார் வந்தால் ஈரோட்டில் தந்தை பெரியார் மாளிகையில் வந்து தங்கும் அளவுக்குப் பிரமுகர்.
காந்தியாரின் நிர்மாணத் திட்டத்தின்மீதான ஈர்ப்பு! மதுவிலக்கு திட்டத்தை காந்தியார் அறிவித்தபோது, தனக்குச் சொந்தமான 500 தென்னை மரங்களை வெட்டித் தள்ளிய செயல்பாடு.
கோர்ட் பகிஷ்காரம் என்ற நிலையைக் காந்தியார் எடுத்தபோது நீதிமன்றம் மூலம் தமக்கு வர வேண்டிய 50 ஆயிரம் ரூபாயை இழத்தார் பெரியார். அந்தக் கால கட்டத்தில் ரூ.50 ஆயிரம் என்றால் சாதாரணமான தொகையா?
மதுவிலக்குப் போராட்டத்தைக் கைவிடுவதா என்ற பிரச்சினை - பம்பாய் காங்கிரஸ் மாநாட்டில் கேள்வி எழுந்தபோது, அது என் கையில் இல்லை; ஈரோட்டில் உள்ள இரண்டு பெண்மணிகள் கைகளில்தான் இருக்கிறது என்று காந்தியார் சொன்ன பதில்! அந்த இரு பெண்களும் வேறு யாருமல்ல, தந்தை பெரியாரின் மனைவி நாகம்மையாரும், தங்கை கண்ணம்மாளும்தான்.
இப்படிப் பொது வாழ்க்கையில் பெண்களைக் களத்தில் இறக்கிய தலைவர்கள் யார் என்று விரல் விட்டுச் சொல்லுங்கள் பார்க்கலாம்.
காங்கிரசிலிருந்தே சமூகநீதிக்கான குரல் - ஒவ்வொரு மாநாட்டிலும் அதற்கான தீர்மானம் - பார்ப்பன ஆதிக்கத்தின் கரங்களில் சிக்குண்டுக் கிடந்த காங்கிரஸ் மூலம் வகுப்புவாரி உரிமையை ஈடேற்ற முடியாது என்று நிலைக் கண்ணாடி முன் நின்றது போல் தெரிந்த நிலையில் காங்கிரசுக்கு முழுக்குப் போட்டு, சுயமரியாதை இயக்கத்தை நிறுவி - பழைமை ஸனாதனத்துக்குச் சமாதி கட்டி, புத்துலக சுயமரியாதை - பகுத்தறிவு சமத்துவ சமுதயத்தை உருவாக்கும் பணியில் உறுதியான பயணம்.
நீதிக்கட்சியைத் தட்டிக் கொடுத்து, முதல் வகுப்புரிமை ஆணையை நிறைவேற்றி முதல் கட்டமாக முதற் படிக்கட்டில் நிறை ஆளுமை.
சுயமரியாதை மாநாடுகளை நடத்தி, (1928) சமூகப் புரட்சிக்கான திட்டங்களைத் தீர்மானங்களாக நிறைவேற்றச் செய்த முன்னேர்!
சுயமரியாதைத் திருமணத்தை அறிமுகப்படுத்தி புரோகிதக் கொள்ளையின் வேரை வீழ்த்திய விவேகம்.
40 ஆண்டுகளுக்குப் பின், அறிஞர் அண்ணா முதல் அமைச்சரான நிலையில் அதற்குச் சட்ட வடிவம் - அய்யாவுக்கு அண்ணாவின் நன்றிக் காணிக்கை.
அய்ரோப்பிய நாடுகளில் சுற்றுப் பயணம் - ரஷ்யா, ஜெர்மனி நாடுகளில் நேரில் கண்டவைகளை நெறிப்படுத்தும் ஆர்வம்.
சுயமரியாதை - சமதர்மத் திட்டங்களை வகுத்து - இந்தியத் துணைக் கண்டத்தையே திரும்பிப் பார்க்கச் செய்த பேராண்மை.
ஹிந்தி, சமஸ்கிருதத் திணிப்பு எதிர்ப்பு - தமிழில் மறுமலர்ச்சி; தமிழன் வீட்டு நிகழ்ச்சிகள் தமிழில் நடக்க வேண்டாமா? தமிழன் வீட்டுப் பிள்ளைகளுக்குத் தமிழன் பெயர் சூட்ட வேண்டாமா என்ற நெற்றியடிக் கேள்விகள்.
சுதந்திர இந்தியா என்ற பெயரில் உருவாக்கப்பட்ட இந்திய அரசமைப்புச் சட்டத்தில், தமிழ்நாட்டில் நடை முறையில் இருந்த இடஒதுக்கீடு செல்லாது என்று உயர்நீதி மன்றமும், உச்சநீதிமன்றமும் தீர்ப்பு அளித்த நிலையில் மக்கள் போராட்டத்திற்குத் தலைமை தாங்கி, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் முதல் திருத்தம் கொண்டு வரக் காரணமாக இருந்த ஒப்பற்ற சமூகநீதியாளர்.
இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்திலேயே 69 விழுக்காடு இடஒதுக்கீடு தமிழ்நாட்டில் சட்ட ரீதியாக நிலைத்து நிற்கிறது என்றால் அதன் மூலவேர் தந்தை பெரியாரே!
ஜாதி ஒழிப்பு, பெண்ணடிமை ஒழிப்பு என்ற இரண்டும் அவர்தம் கண்ணிகர் கொள்கைகள். அதற்காக வேத, இதிகாச புராண எதிர்ப்பு -எரிப்பு.
ஏன் ஜாதியைப் பாதுகாக்கும் அரசமைப்புச் சட்டத்தையே எரித்து, உலக வரலாற்றில் முன் மாதிரியே இல்லாத எழுச்சிப் போராட்டம்.
காங்கிரசில் இருந்தபோதே தீண்டாமை - ஜாதி பாகுபாடுகளை எதிர்த்து வைக்கம் போராட்டம் - சேரன்மாதேவி குரு குலப் போராட்டங்களை நடத்திய புரட்சியாளர்.
அவர் மறைந்து 49 ஆண்டுகள் ஓடிய பிறகும், அவரின் சிலைகளைக் கண்டே ஆரியப் பார்ப் பனர்கள் சில்லிட்டுப் போகின்றனர்.
எதிர்ப்புகளை எல்லாம் உரமாக்கி உலகத் தலைவராகத் தந்தை பெரியார் பரிணமிக்கிறார். அவர் பிறந்த நாளை "சமூக நீதி நாளாக" அறிவித்து, உறுதிமொழி எடுக்கச் செய்துள்ளார். சமூகநீதிக்கான சரித்திர நாயகரான நமது முதல் அமைச்சர் மானமிகு மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள்.
ஆம் புரட்சிக் கவிஞர் தொலைநோக்கோடு பாடினாரே 65 ஆண்டுகளுக்கு முன்பு - "மண்டைச் சுரப்பை உலகு தொழும்!" என்று - அதுதான் இப்பொழுது நம் கண் முன்னே நடக்கிறது.
அவர் மறைவிற்குப் பிறகு இயக்கம் அன்னை மணியம்மையார் தலைமையிலும், அதன்பின் "தகைசால் தமிழர்" ஆசிரியர் தலைவர் மானமிகு கி.வீரமணி அவர்கள் தலைமையிலும் வீறு நடைபோடுகிறது.
இளைஞர்களின் பாசறையாக வீறு கொண்டு எழுந்து வேக நடைப் போடுகிறது. பயிற்சிப் பட்டறைகளில் இளைஞர்கள், மாணவர்கள் சமூகப் போராளிகள் என்னும் ஆயுதங்களாக வடித்தெடுக்கப்பட்டு வருகின்றனர். மகளிர் மத்தியில் பேரெழுச்சி!
தந்தை பெரியாரின் - 145ஆம் ஆண்டு பிறந்த நாளில் மேலும் செழுமையாக்கி தந்தை பெரியார் கனவுகளை நனவாக்கும்!
தந்தை பெரியார் பணி செய்து கிடப்பதே நம் பணி!
வாழ்க பெரியார்!
வளர்க பகுத்தறிவு!
No comments:
Post a Comment