மூளைக்குப் பூட்டப்படும் விலங்குகள்! (2)
"மூளைக்குப் பூட்டப்படும் விலங்குகள் பல உள்ளன.
அதில் ஒன்று போதிய அளவுக்கு மூளைக்கு சில மணி நேர ஓய்வு இடைவெளியை போதிய தூக்கத்தின் மூலம் தருவது - அதன் விலங்குகளை அப்புறப்படுத்தி சுதந்திரமாக அது இளைப்பாறிக் கொள்ள நமக்குப் பெரிதும் உதவிடக் கூடும்" என்கிறார் - இந்த மூளை பற்றிய ஆய்வுப் புத்தக எழுத்தாளர் மருத்துவ மற்றும் ஆளுமை வல்லுநர் தியோ அவர்கள்!
"தொடர் பணிகளுக்கிடையே ஓர் இடைவெளி (Break) என்பது மிகவும் முக்கியம்" என்றும் - "தூக்கத்தின் தேவை, மூளைக்கு மீண்டும் புத்தாக்கத்தை ஏற்படுத்தத் தேவை" எனவும் கூறுகிறார் அந்தப் பிரபல நிபுணர்.
இது I.T. போன்ற தகவல் தொழில் நுட்ப அல்லது கம்பெனிகளில் பணிபுரிவோர், தொழி லதிபர்கள், ஆளுமையாளர்கள் என்பவர்களுக் குத்தான் - நமக்கல்ல என்று மற்றவர்கள் நினைக்க வேண்டியதில்லை?
எவ்வகைப் பணி செல்வோராயினும் இத் தகைய இடைவெளி - Break ஆக்கந்தரும் அரிய டானிக் என்பதை நாம் ஏன் மறக்க வேண்டும்?
மூளை மற்றும் உடலைப் காப்பாற்றுவதற்கு போதிய அளவு தூக்கம் என்பதை அழகாகக் குறிப்பிடுகிறார். எட்டு மணி நேர தூக்கம் 75 சதவிகிதம் நாளில் உங்களுக்குக் கிட்டினால், உங்களின் மூளையின் முழுச் சிறப்பின் பயன் உங்களுக்குக் கிட்டக்கூடும் (If you want to get he best out of your brain). வழக்கமாக தூங்கப் போகும் நேரத்தில் உறங்கிடும் பழக்கத்தைக் கைவிட வேண்டும்.
பிறவிப் பாரம்பரியத்தையொட்டி 7 மணி நேரத் தூக்கமேகூட அதே பலனை சிலருக்குத் தரக் கூடும். அது ஒரு வாய்ப்புதான்!
உங்களுக்குத் 'தூக்கக்கடன்' (Sleep Debt) இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். இரவெல்லாம் தேவையின்றிக் கண் விழித்து அந்தக் கடனைப் பகலில் அடைக்க அல்லது மற்ற நேரங்களில் தூங்கி அடைத்து விடலாம் என்றெல்லாம் எண்ணுவது அவ்வளவு விரும்பத்தக்கதோ, ஏற்கத்தக்கதோ இல்லை! உங்களுடைய தூக்க நேரத்தை மீண்டும் கடிகார முள் சரியாக ஓடாமலிருந்தால் எப்படி அதைத் திருத்தி சரியாக ஓடிடச் செய்கிறோமோ, அதுபோல தூக்க நேரம், அளவீடு - இவைகளைச் சரி செய்து கொள்வது மிகவும் தேவையானதாகும்.
உங்களுடைய தூக்க பழக்க வழக்கம் என்பதே கூட ஒரு ஒழுங்குபடுத்தப்பட்ட வரையறையாக அமைதல் என்பது வாழ்வின் - வளர்ச்சியின் மிக இன்றியமையாதது ஆகும்! உங்களுக்கு இதுபற்றி பிரச்சினைகள் இருந்தாலோ, ஏற்பட்டாலோ அதைத் தள்ளிப் போடாமல் உடனடியாக இதற்குரிய சிறப்பான அனுபவ அறிவும், ஆழ்ந்த மருத்துவ நிபுணத்துவமும் உள்ள தனித்துறை யாளர்களிடம் உங்கள் பிரச்சினைகளைக்கூறி, அதற்குரிய தக்க பரிகாரத்தைப் பெற முயற்சி செய்யுங்கள்! தூங்கும்போது ஒரு வகையான தூக்க நோய் ஒன்று உண்டு. அதற்கு மருத்துவ ரீதியாக Sleep Apnea என்று பெயர்.
இரவில் நீங்கள் படுத்துறங்கும்போது உங்கள் குறட்டையின் (ஓசை) சப்தம் பற்றி உங்கள் துணைவியாரோ அல்லது அருகில் படுத்துறங்கும் மகளோ என்ன கூறுகிறார்கள் என்பதை, கூச்சமின்றி அவர்களிடம் கேட்டுத் தெரிந்து கொள்க!
சிலருக்குப் பெரும் சப்தத்துடன் கூடிய தூக்கத்தில் சில வினாடிகள் மூச்சு விடுதல் நிற்கும் நிலையும் ஏற்படும். வழமையாக - பல முறை; அடிக்கடி இரவில் தொடர் தூக்கமின்றி எழு கிறீர்களா? தூக்கமின்மையால் அவதிப்படு கிறீர்களா? இவைபற்றி அலட்சியமாக இருக்காமல் நல்ல மருத்துவ ஆலோசனை பெறுவதுதன் மூலமே அதற்குரிய விடிவு ஏற்படும். எனவே கவலைப்பட வேண்டாம்.
எப்போதும் பிரச்சினைகளை ஒப்புக் கொண்டு - எதிர் கொண்டு தீர்வுக்கு முனைய வேண்டுவது அறிவுடைமை! பிரச்சினையை அலட்சியப் படுத்துவதோ, மூடி மறைப்பதோ ஒரு போதும் அதற்குத் தீர்வாகாது.
(மேலும் தொடரும்)
No comments:
Post a Comment