நாடாளுமன்றத்தில் இயற்றிய சட்டத்தை எதிர்த்து மிசோரம் சட்டமன்றம் தீர்மானம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, August 27, 2023

நாடாளுமன்றத்தில் இயற்றிய சட்டத்தை எதிர்த்து மிசோரம் சட்டமன்றம் தீர்மானம்!

அய்ஸ்வால், ஆக. 27- ஒன்றிய பாஜக அரசால், அண்மையில் கொண்டுவரப் பட்ட வனப் (பாதுகாப்பு) திருத்தச் சட்டம் 2023-க்கு எதிர்ப்பு தெரிவித்து, மிசோரம் சட்ட மன்றம் அதிரடியாக தீர்மானம் நிறைவேற்றியுள்ளது. 

பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர் பி.டி. சக்மாவைத் தவிர, மிசோ தேசிய  முன்னணி, ஜோரம் மக்கள் இயக்கம், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மிசோரம் சட்டமன்றத்தின் அனைத்து உறுப்பினர்களின் ஆதர வோடு இந்த தீர்மானம் நிறைவேற்றப் பட்டுள்ளது. 

முன்னதாக, மிசோரமின் சுற்றுச் சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற  அமைச்சருமான டி.ஜே. லால்னுண்ட் லுங்கா, வன (பாதுகாப்பு) திருத்த மசோதாவுக்கு எதிரான தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார்.

“துவக்கத்திலிருந்தே, இந்த வன  (பாதுகாப்பு) திருத்த மசோதாவுக்கு, மிசோரம் அரசு தனது எதிர்ப்பை தெரிவித்து வந்தது. ஒன்றிய அரசுக்கும் நாடாளுமன்ற கூட்டுக் குழுவுக்கும் (JPC) பலமுறை கடிதங்கள் மூலம்  தனது கவலைகளைத் தெரிவித்தது. 

திருத்தச் சட்டத்தின் பிரிவு 2, துணைப் பிரிவு (i)  இன் கீழ் மாநிலத்திற்கு பெரும் பாதிப்பு ஏற்படும். மிசோரம் மாநிலத்தின் வனப்பரப்புக்கு அச்சுறுத் தல் ஏற்படும் என்று தெரிவிக்கப்பட்டது. 

இருப்பினும், 1,309 எதிர்ப்புக் கடிதங் கள் மற்றும் தகவல்தொடர்புகளைப் பெற்ற போதிலும், நாடாளு மன்றக் கூட்டுக்குழு (JPC) மசோதாவிற்கு ஒப்புதல் அளித்தது.

அதைத் தொடர்ந்து, வன (பாதுகாப்பு) திருத்த மசோதா, ஜூலை 26 அன்று மக்களவை யிலும், ஆகஸ்ட் 2 அன்று மாநிலங்களவையிலும் நிறை வேற்றப்பட்டுள்ளது. மிசோரம் மாநி லத்தின் காடுகளை அழிவிலிருந்து பாதுகாக்கவும், மிசோரம் மாநில மக்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும் நாங்கள் முழு  முயற்சி எடுத்தோம். 

அண்மையில் முன்மொழியப்பட்ட வன (பாதுகாப்பு) திருத்தச் சட்டம் குறித்த எங்கள் கவலையை ஒன்றிய அரசுக்கு பல கடிதங்கள் மூலம் தெரிவித்தோம். ஆயினும் அது பலனளிக்க வில்லை. இந்தச் சூழலிலேயே  மிசோரம் மக்களின் உரிமைகள் மற்றும் நலன் களைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை உணர்த்தும் கடைசி முயற்சி யாக சட்டமன்றத்தில் இந்த தீர்மா னத்தை இன்று முன்வைக்கிறோம்” என்று அமைச்சர் லால்னுண்ட்லுங்கா சட்டமன்றத்தில் தெரிவித்தார்.

இந்த தீர்மானம், ஆளும் மிசோ  தேசிய முன்னணி (MNF) மற்றும் காங்கிரஸ், ஜோரம் மக்கள் இயக்கம் உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர் களின் விரிவான விவாதங்களுக்குப் பிறகு, பெரும்பான்மையான ஆதர வுடன் நிறைவேற்றப்பட்டது. 

மொத்த முள்ள 40 உறுப்பினர்களில், பாஜகவின் ஒரே ஒரு சட்டமன்ற உறுப் பினரான பி.டி. சக்மாவைத் தவிர, அனைத்து உறுப்பினர்களும் தீர்மானத் திற்கு ஆதரவாக வாக்களித்தனர். இதனால், மிசோரம் சட்டமன்றத்தின் தீர்மானம் பெரும்பான்மை ஆதரவுடன் நிறைவேறியது.

எங்கள் அனைத்து உறுப்பினர்களும் தீர்மானத்தை ஆதரித்து வாக்களித் திருப்பது, ஒன்றிய அரசின் வன பாதுகாப்பு திருத்தச் சட்டத்திற்கு எதிரான எங்கள் சட்டமன்றத்தின் ஒருங்கிணைந்த நிலைப்பாட்டை காட் டுகிறது என்று மிசோரம் சுற்றுச்சூழல், வனம்  மற்றும் காலநிலை மாற்ற அமைச்சருமான டி.ஜே. லால்னுண்ட் லுங்கா தெரிவித்தார்.

வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மிசோரம் மாநிலத்தில், மிசோ  தேசிய முன்னணி  (Mizo National Front - MNF) என்ற மாநிலக்கட்சி ஆட்சியில் உள்ளது. ஜோரம் தங்கா முதலமைச்சராக இருக்கிறார். 40 இடங்கள் கொண்ட மிசோரம் சட்டப்பேரவையில் ஆளும் மிசோ தேசிய முன்னணிக்கு 27 உறுப்பினர்கள் உள்ளனர்.  சோரம் மக்கள் இயக்கம் 6 உறுப்பினர் களையும், காங்கிரஸ் 5 உறுப்பினர் களையும் கொண்டிருக்கின்றன. பா.ஜ.க., சுயேட்சை தலா 1 உறுப்பினர்களை பெற்றுள்ளனர்.

முதல் குரல் மிசோரத்தில் எழக் காரணம்

இந்த எதிர்ப்பு முதன்முதலாக மிசோரத்தில் எழுவதற்கும் ஒரு காரணம் உள்ளது. தற்போதைய சட் டத்தைக் கொண்டு வருவதற்கு முன்பே, மிசோரத்தை பாலைவனமாக்கும் திட்டம், “புதிய நிலப் பயன்பாட்டுக் கொள்கை (New Land Use Policy - NLUP)”  என்ற பெயரில் மிசோரத்தில் கொண்டுவரப்பட்டது. கொள்ளை லாபம் என்ற  ஆசை காட்டப்பட்டு, பாமாயில் விவசாயம் ஊக்குவிக்கப் பட்டது. 

ஆனால், நிலத்தடி நீர்வளத்தையும், மண்ணின் வளத்தையும் இழந்து விவசாயிகள் தற்கொலை முடிவுக்குச் சென்றதுதான் மிச்சம். தற்போது தவறிலிருந்து பாடம் கற்று பாரம்பரிய, இயற்கை சார்ந்த  ஜூம் (jhum) சுழற்சி விவசாய முறையே சிறந்தது என்ற நிலைக்குத் திரும்பியிருக்கின்றனர். ஆனால், இப்போது வன பாதுகாப்பு திருத்தச் சட்டம் என்ற பெயரில் புதிய ஆபத்து சூழ்ந்துள்ளது.

காடுகள் பறிபோகப் போகிறது. அதுமட்டுமல்ல, முந்தைய 1980-ஆம் ஆண்டுச் சட்டமானது, நாகாலாந்து, மிசோரம் சட்டமன்றங்களுக்கு நிலம், இயற்கை வளம், அரசியல் - கலாச்சார உரிமைகள் மீதான தமது சொந்த சட்டங்களை இயற்றிக் கொள்ள அனுமதி அளித்து இருந்தது.

2023 திருத்தமோ, அரசமைப்புச் சட்டப் பிரிவு 371-அய்யும் நீர்த்துப் போக செய்யும் அல்லது முற்றாகவே துடைத்தெறியும் என்ற ஆபத்தை கொண்டுள்ளதால், மிசோரம் தனது எதிர்ப்பை முதல் முதலாக பதிவு செய்துள்ளது.

No comments:

Post a Comment