மறுமதிப்பீடும் - வாழ்க்கையின் வளர்ச்சியும்!
வாழக்கையில் பலவற்றிற்கு காலத்திற்கும், அறிவுக்கும் ஏற்ப, பழைய மதிப்பீடுகளை, மறு சிந்தனைகளுக்கும் மறு மதிப்பீட்டிற்கும் உட்படுத்தினால் தான் சமூகம் வளர்ச்சியடைய முடியும்.
ஆதி கால மனிதனின் பழைமையை, நமது வரலாறுக்கான ஆவணச் சான்றுப் பெருமை என்ற அளவிலேயே நிறுத்தினால்தான், தடைபடாத முன்னேற்றம் மனித குலத்திற்கு ஏற்பட வாய்ப்பு உண்டு.
எடுத்துக்காட்டாக கட்டை வண்டி, ஓலைச் சுவடி - எழுத்தணி இவைகள்தான் நமது துவக்கம். மனிதன் எழுதிப் பழகிட சீனா போன்ற நாடுகள் எழுத்தறிவு தர, எழுத்துகளை களிமண்ணால் சுட்டுப் பிறகு அதையே பெரும் அரசர்களின் ஏக போகத்திற்கு ஆளாக்கிய பிறகு, மெல்ல அது வளர்ந்து நமது நாட்டில் பதப்படுத்தப்பட்ட பனை ஓலையில் எழுத்தாணி கொண்டு எழுதி, பக்குவப் படுத்தி, பாதுகாத்து வைத்துத்தான் நமக்கே பல பழம் பெரும் இலக்கியங்கள் இன்று நமக்கு பாரம்பரிய செல்வமாகத் தெரிகின்றன.
அதை அக்காலத்தில் 'கண்டுபிடித்து' பயன் படுத்தியவர்கள் அக்கால "தாமஸ் ஆல்வா எடிசன்களான", விஞ்ஞானிகள்தான்; ஆனால் அதற்காக எப்போதும் அதுவே தொடர வேண்டும் என்றால் அது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை போடும் தடைகள்தானே!
அறிவியல் வளர்ச்சி, ஒன்றிலிருந்து மறுமதிப்பீடு செய்து அதனைச் செய்தே வளர்ச்சியைப் பெருக்கி வருகிறது பகுத்தறிவுள்ள மனித சமூகம்!
அறிவியலின் தனிச் சிறப்பே எதையும் முடிந்த இறுதி முடிவாக, நினைப்பதில்லை. முற்றுப் புள்ளியே கிடையாது; அரைப் புள்ளிதான்.
அறிவியலின் வாயிற் கதவுகள் எப்போதும் திறந்தே வைக்கப்பட்ட பகுத்தறிவு மாளிகையின் புதுமையை வரவேற்க காத்திருக்கும் வாயிற் கதவுகள்!
பலரும் பழைமைப் பசியில் சிக்கிச் சீரழிகிறார்கள். அன்றாட வாழ்க்கையில் புதியனவற்றைப் பெற்று பயன் அனுபவிப்பவர்களில் பலரும் சில மதிப்பீடுகள் மாறும்போது அதை அறியக்கூட இல்லாது, பழையவற்றை நம்பி - தேக்க சமுதாயத்தின் தேய்ந்திடும் நபர்களாக நம்மை அறியாமலேயே நம்மை ஆக்கிக் கொள்கிறோம்!
இரண்டு அனுபவம் வாய்ந்த மருத்துவப் பெரு மக்களிடம் உரையாடியபோது அரிய செய்தி நமக்கு புதியதாய் இருந்தது மட்டுமல்ல; வயதானவர்களுக்கு புது நம்பிக்கையையும் ஏற்படுத்தும் தெம்பூட்டும் பாடமாகவும் உள்ளது!
சர்க்கரை நோயின் 'உலகத் தலை நகரமாக' நமது நாடு மாறிக் கொண்டுள்ள நிலையில், ஒவ்வொரு மூன்று மாதங்களிலும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் அது எப்படி கட்டுப்பாட்டில் உள்ளதா அல்லது அது லகான் இல்லாத குதிரையாக இருக்கிறதா என்று பார்க்க பரிசோதனை HbA1c செய்ய டாக்டர்கள் வற்புறுத்துவர்.
ரத்தப் பரிசோதனையில் அதன் அளவு (மூன்று மாதங்களில்) 6.5 நல்ல கட்டுப்பாடு - அதற்கு அடுத்த சுமாரான கட்டுப்பாடு என்று கூறி, அதற்குரிய கூடுதல் மாத்திரை அல்லது இன்சுலின் ஊசியைப் போட்டுக் கொள்ள அறிவுறுத்திடுவது பல ஆண்டுகள் பழக்கமாக உலகெங்கும் இருந்தது!
ஆனால் அண்மைக்காலத்தில், அந்த மதிப்பீடு மாறியுள்ளது - அதனை சர்க்கரை நோய் சிகிச்சை அளிக்கும் அனுபவம் நிறைந்த, டாக்டர் விளக்கினார்!
இந்த மதிப்பீடு எப்படி 24 வயதிலும், 74 வயதிலும் உள்ள இரு நோயாளிகளுக்கு ஒரே அளவீடாக இருக்க முடியும்? காரணம் வயது ஏற ஏற மனிதர்களின் உடலுறுப்புகள் முதுமைக்கு ஆளாகிடும் நிலையில் அதற்குரிய வகையில் (Due allowance) மருந்துகள் மாற்றிக் கொடுக்க வேண்டுமே!
பல வெளிநாடுகளில் மருந்து கம்பெனி லாபி (Lobby) தங்களது மருந்து விற்பனையை குறியாக வைத்து இத்தகைய முக்கிய தகவல்களைக் கூட, மக்களுக்கு எடுத்து விளக்குவதில்லை.
வகுப்பெடுப்பதுபோல பல ஆண்டுகாலம் அனுபவம் வாய்ந்த Endocrinologist மருத்துவர் ஒருவர் கூறும்போது "உடலுறுப்புகளை நாம் Physiological Factors அம்சங்களை வைத்து சிகிச்சையை முடிவு செய்கிறோம். அதன் பிறகு pathological என்று மற்ற மருத்துவ அம்ச கண்ணோட்டம், அம்மருந்து வயதுக்கேற்ப எந்த அளவு தேவை, எதுவரை தேவை - என்பதை ஆராய்ந்து பார்த்துதான் முடிவெடுக்க வேண்டும் 32 வயது வாலிபருக்கும், 82 வயது வயோதிக முதியவருக்கும் ஒரே மதிப்பீடு எப்படிப் பொருந்தும் என்று ஆராய்ந்து அதற்கேற்ப மருந்தின் தேவை, தேவையின்மையை முடிவு செய்து கொள்ள சரியான மறு மதிப்பீடு தேவை என்று ஓர் அருமையான வகுப்பெடுத்தார்!
பயன் பெற வேண்டும் நாம் - இத்தகைய மறு மதிப்பீடு மருத்துவத் துறையில் மட்டுமல்ல; மனித வாழ்வின் அனைத்துத் துறைகளிலும் மறுபதிப்பீடு தேவை.
வளர்ச்சிக் கண்ணோட்டத்தில்! - இல்லையா?
மருந்துகள் காலாவதியாகி விடுவது உண்டு. கருத்துக்கள் - அணுகுமுறை....? யோசியுங்கள்.
No comments:
Post a Comment