தமிழர் தலைவருக்கு "தகைசால் தமிழர்" விருது - வாழ்த்துகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

தமிழர் தலைவருக்கு "தகைசால் தமிழர்" விருது - வாழ்த்துகள்!

தகைசால் தமிழர் வாழ்க!
பேராசிரியர் ப.காளிமுத்து எம்.ஏ., பிஎச்டி.

தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கத் 'தகைசால் தமிழர்' விருது வழங்கிப் பீடம் பெருமையும் பெற்ற தமிழ் நாட்டரசுக்கு வாழ்த்தும் வணக்கமும்! 'கற்றாரைக் கற்றாரே காமுறுவர்' என்னும் தொன்மொழிக்கேற்பப் பொதுவாழ்வில் தொண்டறம் பேணிய தூயோர்க்கு, அரசியல் உலகில் அதிர்வலைகளை உண்டாக்கித் திராவிடக் கருத்தியலைப் பேணிக் காத்து நல்லரசு நடத்தும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், 'தகைசால் தமிழர்' விருதுக்குத் தக்காரைத் தேர்வு செய்த தகைமைக்குத் தலைதாழ்ந்த வணக்கம். 'தகைசால் தமிழர்' விருது பெருமை பெறுகிறது!

சிறைகளின் வாயிற்படியைக் கண்டிராத 'சிறுசுகள் எல்லாம் 'ஈகியர்' (தியாகிகள்) என்று பறைசாற்றிக் கொள்ளும் இக்காலத்தில், 'பெரியார் நடத்திய போராட்டங்களில் தீவிரமாக ஈடுபட்டு நாற்பது முறை சிறைவாசம் அனுபவித்தவர்' என்று தமிழ் நாட்டரசின் செய்திக் குறிப்புத் துல்லியமாகக் கணக்கிட்டுக் கூறுகிறது. சிறைக் கொடுமைகளை அனுபவித்தவர்களுக்குத் தானே தெரியும் சிறைவாசம் எத்தகையது என்பது! திராவிடர் இயக்கம் சிறைப் பறவைகளின் கூடாரம் என்பதைத் தமிழ்நாடு அரசின் செய்திக் குறிப்பு தெளிவாக்குகிறது.

எண்பது ஆண்டுகள் பொது வாழ்க்கை! அதில் அறுபது ஆண்டுகள் 'விடுதலை' முதலான இதழ்களின் ஆசிரியர். பன்னாட்டுத் தமிழர்களின் ஒருங்கிணைப்பாளர்! இணைய தளங்கள் வாயிலாகப் பெரியரியலைப் பரப்பி வரும் இளைஞர்! தமிழினத்தின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வரும் தமிழர்! என்று அரசின் செய்திக் குறிப்பு கூறுகிறது.

தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களின் உரிமைப் பட்டயமாக விளங்கும் 69% இடஒதுக்கீட்டைச் சீர்குலைக்கப் பார்ப்பனர்கள் செய்த சதிகளைப் பார்ப்பனரைக் கொண்டே முறியடித்த மாபெரும் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு 'ஆயிரம் தகைசால்'விருதுகளை வழங்கினாலும் அவர்தம் தொண்டறத்திற்கு ஈடாகாது.

தனக்கு வழங்கப்பட்ட இந்த விருது தந்தை பெரியாருக்கும், திராவிடர் இயக்கத்தை அடிநாள் தொட்டுச் செந்நீர் சிந்தி வளர்த்த தோழர்களுக்கும் உரியதாகும் என்று ஆசிரியர் கூறியிருப்பதைப் படிக்கும்போது அவர் இமயக் கொடுமுடியின் உச்சியில் நிற்பதை நாம் அண்ணாந்து பார்க்கிறோம்.

எங்கள் தலைவனே! நீ நீடு வாழ்க!

-------------------------------------------- 

தமிழ்நாடு அரசின் 
"தகைசால் தமிழர்" விருது.!

தமிழர் தலைவர் ஆசிரியர்  பெருந்தகை கி.வீரமணி Asiriyar K Veeramani  அவர்கள் விருது பெறுவதை ஆதித்தமிழர் பேரவை மனம் திறந்து பாராட்டி வாழ்த்துகிறது!

தமிழ்நாட்டிற்கும், தமிழினத்தின்  வளர்ச்சிக்கும் மாபெரும் பங்காற்றியவர்களை பாராட்டி பெருமைபடுத்தும் விதமாக "தகைசால் தமிழர்" விருதினை ஆசிரியர் பெருந்தகை கி.வீரமணி அவர்களுக்கு வழங்கும் மாண்புமிகு முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான தமிழ்நாடு அரசிற்கு எங்களது அன்பான வரவேற்பை பரிமாறிக் கொள்கிறோம்.

நூற்றாண்டு கடந்த திராவிட இயக்கத்தில், முக்கால் நூற்றாண்டைக் கடந்த பொது வாழ்வும்,

தனி மனிதனுக்கு சுயமரியாதை, பகுத்தறிவு கிடைக்க வேண்டுவதற்கு தன் 80 ஆண்டுகால பொது வாழ்வில் ஈடுபட்டு, சிறைக் கொட்டடிகளில் பூட்டப்பட்டு, தன் மீது வீசப்படும் கற்களையும், சொற்களையும் எதிர் கொண்டு கொள்கைப் பகைவர்களின் வசவுகளை உரமாக்கி தமிழ்நாடு அரசியலின் கருத்தொற்றுமைக்கு மூத்தவராக தலைமைப்பண்பிற்கு இலக்கணமாகத் திகழும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தமிழ்நாடு அரசின் "தகைசால் தமிழர் விருது" பெறுவதை ஆதித்தமிழர் பேரவை சார்பில்

பாராட்டையும், மகிழ்ச்சியையும் தெரிவித்துக்கொள்கிறேன்.

வாழ்த்துகளுடன்..

இரா.அதியமான்

நிறுவனர் தலைவர், ஆதித்தமிழர் பேரவை, 2-8-2023

-------------------------------------------- 

தமிழ்நாடு அரசின் "தகைசால் தமிழர்" விருதிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள தமிழனித்தின் தலைநிமிர்வுக்காய் பாடாற்றிய  திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு @AsiriyarKV

அவர்களுக்கு எமது நெஞ்சார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

ம.சிந்தனைச்செல்வன்

பொதுச்செயலாளர், விடுதலை சிறுத்தைகள் கட்சி, காட்டுமன்னார்கோவில் சட்டமன்ற உறுப்பினர், தமிழ்நாடு சட்டமன்றப் பேரவை மதிப்பீட்டுக் குழு உறுப்பினர்

-------------------------------------------- 

"தகைசால்" என்ற சொல்

தகைசால் என்ற சொல் விளம்பி நாகனார் எழுதிய 'நான்மணிக்கடிகை' நூலில் பண்பிற் சிறந்தவர் என்ற பொருளில் இடம் பெற்றுள்ளது.

பூதஞ்சேந்தனார் எழுதிய 'இனியவை நாற்பது' நூலில் தகை என்ற சொல் பெருமை என்ற பொருளில் இடம்பெற்றுள்ளது.

தகை என்ற சொல்லுக்கு அழகு, அன்பு, அருள், கவசம், குணம், தகுதி, பொருத்தம், பெருமை என பொருள் உரைக்கிறது சொல்லகராதி.

சால் என்கிற சொல்லுக்கு செல்தடம், ஏர்கலப்பை, நிறை, மிகு, மேன்மை, சான்றோன் என பல பொருள் உண்டு என்கிறது சொல்லகராதி.

கலப்பை கொண்டு உழும்போது மண்ணில் ஏற்படும் சிறு மேடு சால் எனப்படும். செடி வரிசைக்கு இடையில் உள்ள இடமும் சால் எனப்படும். உழுவதை சாலடிப்பது என்று கூறுவதும் உண்டு. குறுக்குச் சால் ஓட்டுவது என்று கேள்விப்பட்டிருக்கிறோம். கலப்பை கொண்டு நேராகவே உழவேண்டும். குறுக்கே உழுதால் உழவின் பயன் கிடைக்காது.

சால் என்பது சால்பு, சார்ந்த என்ற பொருளிலும் பயன்படுத்தப்படுகிறது.

எந்தப் பொருள் கொண்டு பார்த்தாலும் "தகைசால் தமிழர்" விருதுக்கு முற்றிலும் பொருத்தமானவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.. இ-ந்-தி-யா  விடுதலை நாளில் சமூக நீதி சரித்திர நாயகர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  வழங்குகிறார்.

முதலமைச்சர் அவர்களுக்கு தேனி மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

அன்புடன்,

செ.கண்ணன்

மாவட்ட அமைப்பாளர், தேனி மாவட்டம், ஆண்டிப்பட்டி.

-------------------------------------------- 

கனவு மணி! எங்கள் கண்மணி !

பெரியார் கண்ட கனவெல்லாம்

நனவாகுதே யாராலே ?

69 விழுக்காடு அடைந்தோம்

அதுவும் யாராலே ?

உலகம் இன்று பெரியாரைப்

புகழ்வதுவுமே  யாராலே ?

திராவிடன் மாடல் ஆட்சி என்றே

உலகமே  நன்கு  கூவுவதும்

தமிழன் என்றே பெருமையிலே  

தரணியில் நாமும் மகிழ்வதுமே  .

கனவு மணியாம் கண்மணியாம்

குன்றக்  குடியார் சொன்னாரே

தமிழர் தலைவர் என்றே தான்

வீரமணியார் தகைசால் தமிழர்

அவராலே !

வீரமணியார் வாழ்கவே !

வாழ்க வாழ்க வாழ்கவே !

சோம .இளங்கோவன் &

பெரியார் பன்னாட்டமைப்பு பொறுப்பாளர்கள்.




No comments:

Post a Comment