'இனமுரசு' சத்யராஜ் அவர்களின் அன்னையார் நாதாம்பாள் காளிங்கராயர் மறைவு தமிழர் தலைவர் இரங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

'இனமுரசு' சத்யராஜ் அவர்களின் அன்னையார் நாதாம்பாள் காளிங்கராயர் மறைவு தமிழர் தலைவர் இரங்கல்

'இனமுரசு' நடிகர் சத்யராஜ் அவர்களின் அன்னையார் நாதாம்பாள் காளிங்கராயர் (வயது 94). நேற்று (11.8.2023) மாலை 4 மணிக்கு, கோவையில் வயது மூப்பின் காரணமாக இயற்கையெய்தினார் என்ப தறிந்து மிகவும் வருந்துகிறோம்.

மறைந்த பெருமாட்டி  நாதாம்பாள் காளிங்கராயர் அம்மையார்  'இனமுரசு' சத்யராஜ் அவர்கள் இந்த அளவுக்குத் திரைக் கலை உலகில் தனித்ததோர் இடம் பெறுவதற்கு அடிப்படைக் காரணகர்த்தா ஆவார்!

தந்தை பெரியார் திரைப்படத்தின் முதல் காட்சியை அவரது அன்னையாரும் குடும்பத்தினருடன் பார்த்து பெருமளவில் மகிழ்ந்தார்; அந்த மகிழ்ச்சியை எங்கள் அனைவரிடமும், காட்சி முடிந்தவுடன் பகிர்ந்தார். நம்மிடம் சில மணித் துளிகள் உரையாடினார்!

'இனமுரசு' சத்யராஜ் அவர்கள் இப்படி ஒரு சுதந்திரச் சிந்தனையாளராக, பட்டறிவு, பகுத்தறிவு, சுயமரியாதை, அனுபவம் பெற்றவராக வளர்ந்து முன்னேறியமைக்கு அவரது அன்னையார் அவருக்குத் தந்த சுதந்திரமும் ஒரு முக்கிய அம்சமாகும்!

இன்று (12.8.2023) காலை கோவையில் உள்ள நண்பர் சத்யராஜ் அவர்களிடம் தொலைப்பேசியில் இரங்கலும், ஆறுதலும் கூறியபோது, அவர் என்னிடம் கூறிய ஒரு செய்தி மிகவும் நெகிழ வைத்ததொரு செய்தியாகும்!

முதுமை, உடல்நலக் குறைவு, மரணப் படுக்கையில் இருந்தபோதும் அவரது நெருங்கிய குடும்ப உறவுகளிடம் "சத்யராஜ் ஏற்றுக் கொண்டுள்ள  கொள்கைப்படி  எந்த சடங்கும் எனக்குச் செய்யாமல், இறுதி நிகழ்வுகள் அமையட்டும்" என்று கூறியுள்ளார்.

இத்தனைக்கும் அம்மையார் அவர்கள் கடவுள் நம்பிக்கையுள்ளவர்தான். என்றாலும் தன் பிள்ளையின் பெருமைக்கு இழுக்கு நேர்ந்துவிடக் கூடாது என்று நினைத்து இப்படிக் கூறியது எத்தகைய பெரிய மனதுடன், உயிர்ப்பான பண்புடன் அவர் வாழ்ந்திருக்கிறார் என்பதைக் காட்டுகிறது.

தோழர் சத்யராஜ் ஏற்றுக் கொண்ட  தந்தை பெரியார் அவர்களின் கொள்கைக்குக் கிடைத்த வெற்றியாகும் இது!

அன்னையாரை இழந்து துயரத்திற்கு உள்ளாகியுள்ள இனமுரசு சத்யராஜ், மகள்கள் கல்பனா மன்றாடியார், ரூபா சேனாதிபதி மற்றும் குடும்பத்தினர், உற்றார் - உறவினர்கள் அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும்  தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம் 

சென்னை
12.8.2023




No comments:

Post a Comment