காரைக்கால்,ஆக.30- தமிழர்கள் குறித்துக் கவலைப்பட்ட தலைவர் யார்? என மாணவர்கள், இளைஞர்களிடம் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் விளக்கம் அளித்தார்.
தமிழ்நாடு முழுவதும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்று வருவது யாவரும் அறிந்ததே! ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறு வீதம், மாதம் 8 பயிற்சிப் பட்டறைகள் நடைபெற்று வருகின்றன! அவ்வகையில் 27.08.2023 அன்று காரைக்கால், சுவாதி மகாலில் பயிற்சிப் பட்டறை தொடங்கியது!
"பார்ப்பனப் பண்பாட்டுப் படையெடுப்புகள்" எனும் தலைப்பில் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசியதாவது:
ஆகவே தோழர்களே...!
தமிழ்நாடு முழுவதும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன! இதுபோன்ற பயிற்சி வகுப்புகளைத் தொடங்கியவர் பெரியார்; அந்த இயக்கத்தின் பெயர் திராவிடர் கழகம்! பெரியார் யார் என்பதை மாண வர்கள் முழுமையாகத் தெரிந்து கொள்ள வேண்டும்!
கடவுள், மதம், ஜாதி, மூடநம்பிக்கைகளை ஒழிக்க நினைத் தார்! மனிதநேயம், பெண்ணுரிமை, அனைவருக்கும் அனைத் தும் என்பதை வலியுறுத்தினார். இதுபோன்ற கொள்கைகளைத் தான் மக்களிடம் பேசினார்! இது சரியா? தவறா? என்பதை மாணவர்கள் சிந்திக்க வேண்டும்! சாலையில் பயணம் செய்கி றோம். கற்கள் இடையூறாகக் கிடந்தால் என்ன செய்வோம்? ஓரமாகத் தூக்கிப் போட்டுவிட்டு பயணம் செய்வோம்! இதுபோன்றது தான் பெரியார் கொள்கையும்!
நடக்க முடியாமல், பிறர் தோள் பிடித்து, சிறுநீர்ப் பை கட்டி 95 வயது வரை ஒருவர் பிரச்சாரம் செய்தார் என்றால், உலகில் இதுபோல் ஒரு தலைவரைக் காண முடியுமா? நாகப்பட்டினத்தில் ஒரு கூட்டம் நடைபெறுகிறது. திடீரென வலியால் கத்துகிறார். மணியம்மையார் அவர்கள் புத்தகங் களை விற்றுக் கொண்டிருக்கிறார். நான் பெரியாரின் பேச்சைக் குறிப்பெடுக்கிறேன். அய்யாவோ வலியால் கத்திக் கொண்டே இருக்கிறார். கூட்டத்தில் மக்கள் எழுந்து "அய்யா பேச வேண்டாம், பேச வேண்டாம் எனக் கோரிக்கை வைக் கிறார்கள். இந்தச் சூழலில் அவரது உடல் வலி சற்றுக் குறைகிறது. "ஆகவே தோழர்களே..." என மீண்டும் பேசத் தொடங்கிவிட்டார்!
"நாம் தமிழர்" என்றால் போதுமா?
பெரியார் எப்பேற்பட்ட தலைவர் தெரியுமா? அறிஞர் அண்ணா, டாக்டர் கலைஞர் போன்றோரெல்லாம் பெரியாரின் சிஷ்யர்கள். அவர்கள் தமிழ்நாட்டின் முதலமைச்சர்களாக இருந்தவர்கள். சிஷ்யர்களே முதலமைச்சர்கள் எனும் போது பெரியார் நினைத்திருந்தால் அதைவிட பெரிய பதவிகளில் இருந்திருக்க முடியாதா? மக்களைச் சந்தித்து கேள்விகள் கேட்டு, கேள்விகள் கேட்டு அவர்கள் தம் சிந்தனையை வளர்த்தவர் பெரியார்! மயிலாடுதுறைக் கூட்டம் ஒன்றில் நான்கரை மணி நேரமும், செய்யாறு திருமணம் ஒன்றில் அய்ந்தரை மணி நேரமும் பேசியவர். இப்போது கேட்டாலும் நம்ப முடியாது! தம் பிரச்சாரங்களால் மக்களுக்குத் துணிவைக் கொடுத்தவர் அவர்!
உணவு, உடை, கலாச்சாரம் என நமக்கென்று ஒரு பண்பாடு இருந்தது. சிலர் நாம் தமிழர்கள் என வெற்றுப் பெருமை பேசுவார்கள். அவர்களிடம் தமிழர் நாகரிகம் இருக்கிறதா? அவர்களுக்குத் தமிழர் பண்பாடு தெரியுமா? குறைந்தபட்சம் அவர்கள் பெயர் பெயர் தமிழில் இருக்கிறதா?
தமிழ் உணர்ச்சி எங்கிருந்து கிடைத்தது!
சிந்து சமவெளி, ஹரப்பா பகுதிகளில் வாழ்ந்தவர்கள் திராவிடர்கள். அவர்களிடம் அழகான வீடுகள், நேர்த்தியான அணைகள், சிறப்பான பாதாள சாக்கடைகள், சமையல் கூடங்கள் இருந்தன. உலகம் போற்றும் திராவிடர்களிடம் இத்தனையும் இருந்தன. நம்மீது ஆதிக்கம் செய்த ஆரியர் களிடம் ஆடு, மாடுகள் மட்டுமே இருந்தன. திராவிடர்கள் யார்? அவர்களின் தாய்மொழி என்ன? அவர்களின் சிறப்பு கள் என்ன? என்பது குறித்து அண்ணல் அம்பேத்கர் விரிவாக எழுதியுள்ளார்.
அப்பேற்பட்ட தமிழர்களின் பெயர்களில் தமிழ் இல்லை. மோசமான பொருளடங்கும் பெயர்கள் அதிகம் வந்துவிட்டது. மொழி அடையாளத்தை விட்டுவிடக் கூடாது என்பதற்காகப் பெரியார் உழைத்தார். அதை அறிவியல் மொழியாக ஆக்க வேண்டும் எனப் புதிய முயற்சிகளை மேற்கொண்டார்.
ஹிந்தி எதிர்ப்புப் போரை ஏன் பெரியார் முன்னெடுத்தார்? திராவிட மொழிக் குடும்பத்தில் எப்படி தெலுங்கு, கன்னடம், மலையாளம் இருக்கிறதோ, அதேபோல சமஸ்கிருத மொழிக் குடும்பத்தில் இருந்து வந்ததே ஹிந்தி. முன்பு அக்கிராசனர் என்றனர், பிரசங்கம், நமஸ்காரம் என்றனர். அவற்றைத் தலை வர் என்றும், சொற்பொழிவு, வணக்கம் என்றும் மாற்றியது திராவிடர் இயக்கம் அல்லவா!
நெடுஞ்செழியன், அன்பழகன், மதியழகன், அரங்கண் ணல் போன்ற தமிழ்ப் பெயர்கள் எங்கிருந்து நமக்கு கிடைத் தது? பெரியார் ஏற்படுத்திய உணர்ச்சி அல்லவா! இவ்வள விற்குப் பிறகும் தமிழில் சமஸ்கிருத ஊடுருவல் இருக்கிறதே, அதை மாற்ற வேண்டாமா?
தமிழர்கள் பண்பாடு தனித்துவமானது!
தமிழர் வீட்டுத் திருமணங்களை ஏன் தமிழர்கள் நடத்து வதில்லை? அந்த அதிகாரம் பார்ப்பனர்களுக்கு எப்படி கிடைத்தது? தமிழர் வீட்டு நிகழ்ச்சிகளில் சமஸ்கிருதத்திற்கு என்ன வேலை? விவாஹ சுபமுகூர்த்தம் என்கிறார்கள். விவாஹம் என்றால் தூக்கிக் கொண்டு ஓடுதல் என்று பொருள். இதுவா நமது பண்பாடு? வாழ்க்கைத் துணை நலம் என்கிற சுயமரியாதை வார்த்தையைக் கொடுத்தார் பெரியார். ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்க்கை இணை நலம் என்று மெருகூட்டினார். மதுரையில் கருமாதி மந்திரம் சொல்லி, ஒரு திருமணத்தை நடத்தினார்கள் பார்ப்பனர்கள். அங்கிருந்த நாவலர் சோமசுந்தர பாரதியார் கையும், களவுமாகக் கண்டுபிடித்து, மக்களிடம் அம்பலப்படுத்தினார்.
குற்றாலத்தில் நடைபெற்ற ஒரு பயிற்சி முகாமில் ஒரு இளைஞர், "திருமண மந்திரங்கள் இவ்வளவு கேவலமாக இருக்கிறதே, பார்ப்பனர் வீடுகளிலும் இதே மந்திரங்கள் தான் சொல்லப்படுகிறதா?", என்று கேட்டார். அவர்கள் வீட்டிலும் அதையே சொல்வார்கள். ஆனால் அவர்களுக்கு அதுகுறித்து வெட்கமில்லை. காரணம் அய்வருக்கும் தேவி, அழியாத பத்தினி என்பதுதான் அவாள் கலாச்சாரம். நமக்கு அந்தப் பண்பாடு கிடையாதே!
புழுங்கல் அரிசியும்! கருவாடும்!
மாட்டு மூத்திரம், சாணி, பால், தயிர், வெண்ணை அய்ந் தையும் கலந்து பஞ்சகவ்யம் என்கிற பெயரில் இன்னமும் குடிக்க வைக்கிறார்களே! நம்மாட்களும் சிந்தாமல், சிதறாமல் குடித்து, மீதத்தைத் தலையில் அல்லவா தேய்த்துக் கொள் கிறார்கள்? அதுபோலவே திவசம் என்கிற பெயரில் இன்று வரை மோசடிகள் நடக்கிறது. நம் தாத்தாவுக்குப் பிடிக்கும் என்று கூறி பச்சரிசி, காய்கறிகள் எல்லாம் வாங்கச் சொல் வார்கள். ஆனால் நமது தாத்தா புழுங்கல் அரிசி சோறும், கருவாடும் தானே விரும்பி சாப்பிடுவார்? அதை ஏன் இந்தப் பார்ப்பனர்கள் மேலோகத்திற்கு அனுப்புவதில்லை, சிந்திக்க வேண்டாமா?
தமிழர்கள் குறித்துக் கவலைப்பட்டது யார்?
மயிலாடுதுறை, திருமரைக்காடு, திருமுதுகுன்றம், புளியந் தோப்பு, சிற்றம்பலம், குடமூக்கு என்று அழகழகாய் இருந்த ஊர்ப் பெயர்களை எல்லாம் மாற்றினார்களே! இதுகுறித்து எந்தத் தமிழ் மன்னர்கள் கவலைப்பட்டார்கள்? அருள்மொழி வர்மன் என்கிற அழகிய தமிழ்ப் பெயரை இராஜராஜ சோழன் என்று மாற்றியவர்கள் அல்லவா இவர்கள்? வடஇந்தியாவில் இருந்து பார்ப்பனர்களை அழைத்து வந்து நாசம் செய்தார்கள்! சமஸ்கிருதப் பள்ளியைத் தொடங்கி, வேதம் கற்க வழி செய்தார்கள்!
தமிழர்தம் நாகரிகம், கலாச்சாரம், மொழி அனைத்திலும் பார்ப்பனப் பண்பாடு தானே மேலோங்கி இருந்தது? அதை உடைத்தது யார்? திராவிடர் இயக்கம் தானே செய்தது! தமிழர் தம் சுயமரியாதையை மீட்டது பெரியார் தானே! ஆகவே இளைஞர்களே, மாணவர்களே! மனிதன் தானாக பிறக்க வில்லை; எனவே தனக்காக வாழக் கூடாது", எனத் திராவிடர் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் பேசினார்.
வகுப்பும்! தலைப்பும்!
தொடக்கத்தில் மாவட்டச் செயலாளர் பொன்.பன்னீர் செல்வம் வரவேற்புரை ஆற்றினார். மாவட்டத் தலைவர் குரு.கிருஷ்ணமூர்த்தி தலைமையேற்க, மாவட்டக் காப்பாளர் ஜெயபாலன், பொதுக்குழு உறுப்பினர்கள் பதி.ஜெய்சங்கர், அன்பானந்தம், மாவட்ட இளைஞரணி செயலாளர் லூயிஸ், மாவட்ட மாணவர் கழகத் தலைவர் மோகன்ராஜ், செயலாளர் அறிவுச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
"பெரியார் ஓர் அறிமுகம்" எனும் தலைப்பில் வழக்குரை ஞர் பூவை.புலிகேசி, மந்திரமா? தந்திரமா? ஓர் அறிவியல் விளக்கம் எனும் தலைப்பில் ஈட்டி கணேசன், "தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள்" எனும் தலைப்பில் பேராசிரியர் நம்.சீனிவாசன், "பெரியாரின் பெண் விடுதலைச் சிந்தனைகள்" எனும் தலைப்பில் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், "ஊடகத் துறையில் தடம் பதித்த திராவிடர் இயக்கம்" எனும் தலைப்பில் வி.சி.வில்வம் வகுப் பெடுத்தனர்! பயிற்சிப் பட்டறையை ஏற்பாடு செய்த தோழர் களையும், பங்கேற்றுச் சிறப்பித்த மாணவர்களையும் பாராட்டி திராவிடர் கழக ஒருங்கிணைப்பாளர் இரா.ஜெயக்குமார் உரை நிகழ்த்தினார். வகுப்புகளைச் சிறப்பாகக் கவனித்துக் குறிப்பெடுத்த அபினேசன், ஜீவிதா, சசிக்குமார் மூவருக்கும் நூல்கள் பரிசாக வழங்கப்பட்டன. நிறைவாக சான்றிதழ்கள் வழங்கப்பட்டு, குழுப் படம் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பங்கேற்பும்! பங்களிப்பும்!
நிறைவாகப் புதுச்சேரி மாநிலத் தலைவர் சிவ.வீரமணி வாழ்த்திப் பேசினார். விடுதலைச் சிறுத்தைகள் திருப்பட்டினம் தொகுதி செயலாளர் கனல், மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்டத் துணைச் செயலாளர் ஜெ.செந் தமிழன், துணைத் தலைவர் இராஜரத்தினம், கோட்டுச்சேரி கொம்யூன் தலைவர் பொற்கோ, மாணவர் கழகத் தோழர் சசிகுமார், பெரியார் பெருந்தொண்டர் இராகவன், மருத்துவர் வைக்கம் மதி உள்ளிட்ட பலர் பங்குபெற்றனர்.
தொகுப்பு: வி.சி.வில்வம்
No comments:
Post a Comment