தஞ்சை செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 3, 2023

தஞ்சை செய்தியாளர்களிடையே தமிழர் தலைவர் பேட்டி

 அரியானா மாநிலத்தில் வன்முறை:மதக்கலவரங்களை உண்டாக்கி - 

அவற்றை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தத் திட்டமா?

தஞ்சை, ஆக.3 அரியானா மாநிலத்தில் வன்முறை, மதக்கலவரங்களை உண்டாக்கி - அவற்றை வாக்கு வங்கிகளாகப் பயன்படுத்தத் திட்டமா? என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நேற்று (2.8.2023) தஞ்சைக்குச் சென்ற தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களுக்குப் பேட்டி அளித்தார்.

அப்பேட்டியின் விவரம் வருமாறு:

செய்தியாளர்: மணிப்பூர் பிரச்சினையை, உச்சநீதி மன்றம் தாமாகவே முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டிருக்கிறதே, அதுபற்றி உங்கள் கருத்து என்ன?

ஒன்றிய ஆட்சிக்கு 

வேறு என்ன ‘நற்சான்றிதழ்' வேண்டும்?

தமிழர் தலைவர்: 75 ஆண்டுகால வரலாற்றில் அரசியல் சுதந்திரம் பெற்று, வருகிற 15 ஆம் தேதி சுதந்திர நாளைக் கொண்டாடக் கூடிய இந்தக் காலகட்டத்தில், நமக்குத் தெரிந்த வரையில் எந்தவிதமான வன்முறைப் பிரச்சினையிலும் - உச்சநீதிமன்றமே தலையிட்டு, அவர்களே அந்தப் பொறுப்பை எடுத்துக்கொண்டு, விசாரணை நடத்தியதாகத் தகவல் இல்லை. அரசமைப்புச் சட்டப்படி 356 ஆம் பிரிவுக்கு மேற்பட்ட ஒரு நிலையை நிறைவேற்றவேண்டிய அவசியத்தை, ஒரு நெருக்கடியை மணிப்பூர் பிரச்சினை உருவாக்கி இருக்கிறது; அதை செயல்படுத்தவேண்டிய கட்டம் வந்திருக்கிறது. அரசமைப்புச் சட்டப்படி அங்கு ஆட்சி அமையவில்லை என்பதைச் சொல்லக்கூடிய அளவிற்கு வந்திருக்கிறது. மணிப்பூர் பிரச்சினையில் உள்துறை அமைச்சர் எல்லாம் நேரிடையாகப் பங்கு கொண்டிருக்கின்ற நிலையில், இதைவிட ஒன்றிய அரசுக்கு, மோடி தலைமையில் உள்ள அரசுக்கு, இந்த ஆட்சிக்கு வேறு என்ன நற்சான்றிதழ் வேண்டும்?

எனவே, இதைப் பொருத்தவரையில், இனிமேல் அவர்கள் ஆட்சியில் நீடிப்பதற்குத் தார்மீக உரிமை உண்டா?

8 ஆம் தேதி நம்பிக்கை இல்லாத் தீர்மானம் என்பது எண்ணிக்கையைப் பொருத்தது. ஆனால், உச்சநீதி மன்றம் போன்ற மிக முக்கியமான, ஜனநாயகத்தைக் காப்பாற்றக் கூடிய கடைசி நம்பிக்கையான ஓரிடத்தில், இப்படிப்பட்ட ஒரு தீர்ப்பை அவர்கள் சொல்கிறார்கள் என்று சொன்னால், அதனுடைய முக்கியத்துவத்தைப் பார்க்கவேண்டும்.

இதுவரை 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட எஃப்.அய்.ஆர்.கள் போடப்பட்டு, அந்த 6 ஆயிரம் எஃப்.அய்.ஆர்.கள் என்னாயிற்று என்றே தெரிய வில்லையாம். டி.ஜி.பி.யை நேரிடையாக அழைத்து உச்சநீதிமன்ற நீதிபதிகளே கேட்கிறார்கள். மணிப்பூர் மாநிலம் மூன்று மாதங்களாகப் பற்றி எரிந்துகொண் டிருக்கின்றது. அங்கே நடைபெறும் பாலியல் கொடுமை களைப்பற்றி ஒன்றிய அரசுக்கும், அம்மாநில அரசுக்கும் கவலையில்லை.

பிரதமர் மோடி மணிப்பூர் பிரச்சினை பற்றி 

வாய் திறக்கவில்லையே!

இதுவரை நம்முடைய பிரதமர் வாய் திறந்ததாகவே தெரியவில்லை. 7, 8 நாள்கள் நாடாளுமன்றமே நடைபெறாமல் முடக்கப்பட்டு இருக்கிறது; நாடாளு மன்றம் நடைபெறாமல் இருந்தால் நல்லது; ஏனென் றால், விவாதங்களே இல்லாமல் இருக்கலாம் என்று அவர்கள் மறைமுகமாக விரும்புகிறார்களோ, என் னவோ தெரியவில்லை.

இதுபோன்ற சூழ்நிலையில், அவர்களுக்கு 'புல்டோசர்' மெஜாரிட்டி இருப்பதால், அதனைப் பயன்படுத்தித் தீர்மானத்தை எதிர்கொள்ளலாம் என்று நினைக்கிறார்கள்.

அதைவிட, அந்தத் தீர்மானத்திற்கு முன்பு, உச்சநீதி மன்றம் குறுக்கிட்டதும், தார்மீக உரிமைப்படி நீதிபதிகள் சொன்னதும் - இதுவரையில் இந்த எல்லைக்கு வேறு எந்த ஆட்சியிலும் உச்சநீதிமன்றம் சென்றதாக வரலாறு இல்லை.

ஆகவேதான், மீண்டும் இந்த ஆட்சித் தொடருவ தற்குத் தார்மீக உரிமை உண்டா? என்பதுதான் இப்பொழுது இருக்கும் மிகப்பெரிய கேள்வி.

மதக் கலவரங்களை உருவாக்கி - வாக்கு வங்கியாகப் பயன்படுத்தலாம் என்ற உத்தியா?

செய்தியாளர்: அரியானாவில் நடைபெறும் கலவர ம்பற்றி...?

தமிழர் தலைவர்: நம்பிக்கை இழக்கும்பொழுதெல் லாம் அவர்கள் கலவரம், வன்முறையைத் தூண்டுவது போன்ற வேலைகளைச் செய்கிறார்கள்.

அரியானா, டில்லிக்குப் பக்கத்தில் இருக்கிறது. உள்துறை அமைச்சகத்தின் நேரிடையான கண்காணிப் பில்தான் டில்லி நிர்வாகம் இருக்கிறது. ஆகவே, டில்லி மாநிலத்திற்கும், சட்டம் - ஒழுங்கிற்கும் சம்பந்தமே கிடையாது.

ஆகவே, அரியானாவில் என்ன நடக்கிறது என்பதைப் பார்க்கும்பொழுது, நிச்சயமாக திட்ட மிட்டு திசை திருப்பவேண்டும்; மதக் கலவரங்களை உருவாக்கவேண்டும். அதன்மூலம் மத ரீதியாக, தேர்த லில், ஒருமுனைப்படுத்தி வாக்கு வங்கியைப் பலப் படுத்தலாமா என்ற உத்திக்குக்கூட அடிப்படையாக இது இருக்கலாம்.

பெண்களுக்குப் பாதுகாப்பான 

மாநிலம் தமிழ்நாடு!

செய்தியாளர்: தமிழ்நாட்டில்கூட சட்ட ம்- ஒழுங்கு சரியில்லை என்று சிலர் குரல் கொடுக்கிறார்கள்; ஆனால், மணிப்பூரில் நடைபெறும் வன்முறையைப்பற்றி வாய்திறக்காமல் மவுனமாக இருக்கிறார்களே?

தமிழர் தலைவர்: ஆமாம்! அவர்களிடம் மணிப்பூரில் யாத்திரை செல்லும்படி நாம் பரிந்துரை செய்யவேண்டும். ''இந்தியாவில் குறுகிய நோக்கம் கிடையாது. இந்தியா தேசம் பரந்த பாரத தேசம்'' என்று சொல்லும்பொழுது, கிழக்கு, மேற்கு, தெற்கு, வடக்கு ஒன்றிணைந்தவை என்றெல்லாம் சொல்லும்பொழுது, முதலில் செய்யவேண்டியது என்னவென்றால், மணிப் பூருக்கு எதிர்க்கட்சித் தலைவர்கள்தான் சென்று, அங்கு பாதிக்கப்பட்ட மக்களைச் சந்திக்கிறார்கள். ஆனால், ஆளும் ஒன்றிய பா.ஜ.க. அரசோ, பிரதமரோ அங்கே செல்லவில்லை.

குஜராத்தில் இதுவரை 40 ஆயிரம் பெண்கள் காணாமல் போயிருக்கிறார்கள். அதைப்பற்றி வாய் திறக்கவோ, கண்டித்துப் பாத யாத்திரை செல்லவோ அவர்கள் தயாராக இல்லை.

பெண்களுக்குப் பாதுகாப்பான மாநிலம் தமிழ்நாடு; எனவே, இந்த மாநிலத்தைவிட்டு எங்களை வெளியே அனுப்பாதீர்கள் என்று வழக்குத் தொடுக்கிறார்கள், வெளிமாநிலத்தைச் சேர்ந்த பெண்கள்.

ஆகவேதான், அவர்களுடைய பாத யாத்திரையும், அவர்கள் சட்டம் - ஒழுங்கு சரியில்லை என்று சொல்லி, நீலிக்கண்ணீர் வடிப்பதையும் எப்படிப்பட்டவை என்று தெளிவாகவே தெரிந்துகொள்ளலாம்.

- இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர் களிடம் கூறினார். 

No comments:

Post a Comment