சென்னை, ஆக. 2- தமிழ் நாட்டிற்கும் தமிழினத்திற்கும் பெரும் பங்காற்றி வரும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு, சுதந்திர நாள் விழாக் கொண்டாட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள், “தகைசால் தமிழர்” விருது வழங்கி சிறப்பிப்பார்கள் என, தமிழ்நாடு அரசின் சார்பில் நேற்று (1.8.2023) அறிவிக்கப் பட்டது.
இந்த அறிவிப்பினையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள ‘ட்விட்டர்’ பதிவில், “திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு அடை யாளமாய் விளங்கும் மானமிகு ஆசிரியரின் தொண்டு தொய்வின்றித் தொடரட்டும்!” என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெறும் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்குப் பொன்னாடை அணிவித்து வாழ்த்து தெரிவித்த படத்தை இணைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளதாவது:
‘‘தமிழ்நாடு அரசின் தகைசால் தமிழர் விருது பெற்றுள்ள மானமிகு ஆசிரியர் @AsiriyarKV அவர்களை வாழ்த்துகிறேன், வணங்குகிறேன்.
பத்து வயதில் பகுத்தறிவு மேடையேறி எண்பது ஆண்டுகளாக இன எழுச் சிப் போர்முரசம் கொட்டி வரும் சுயமரியாதைச் சுடரொளி அவர்.
இனம் - மொழி - நாடு மூன்றும் மூச்சென எந் நாளும் ஓய்வறியாமல் உழைத்துவரும் அவருக்கு, கலைஞர் 100-இல் இந்த விருது வழங்குவதைத் தமிழ்நாடு அரசு பெருமையாய்க் கருதுகிறது. திராவிட இயக்கத்தின் நூற்றாண்டு அடையாளமாய் விளங்கும் மானமிகு ஆசிரியரின் தொண்டுத் தொய்வின்றி தொடரட்டும்!''
-இவ்வாறு அப்பதிவில் முதலமைச்சர் குறிப் பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment