ஈரோடு புத்தகக் கண்காட்சி: உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசையும்- காவல்துறையையும் பாராட்டுகிறோம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 8, 2023

ஈரோடு புத்தகக் கண்காட்சி: உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசையும்- காவல்துறையையும் பாராட்டுகிறோம்!

காவல்துறையில் இருக்கும் காவி ஆடுகள் கண்டறியப்பட வேண்டும்!

தமிழர் தலைவர் ஆசிரியர் அறிக்கை

ஈரோடு புத்தகக் கண்காட்சியில் அத்துமீறி நடந்துகொண்டவர்கள்மீது  உடனடியாக நட வடிக்கை எடுத்த தமிழ்நாடு அரசையும்- காவல் துறையையும் பாராட்டுகிறோம்! காவல்துறையில் இருக்கும் காவி ஆடுகள் கண்டறியப்பட வேண்டும் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் 

கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

ஈரோட்டில் நடைபெற்று வரும் புத்தகக் கண் காட்சியில் மதிமுக பொருளாளர் தோழர் செந்திலதிபன் அவர்கள் பல்வேறு சான்றுகளுடன் விரிவாக எழுதியுள்ள "இந்துத்துவப் பாசிசம் வேர்களும் விழுதுகளும்" என்ற தலைப்பிலான புத்தகத்தையும் (அந்த புத்தகத்தின் சிறப்பை எடுத்துக்காட்டி விரிவான அணிந்துரை ஒன்றை நானே எழுதி இருக்கிறேன்), நமது தோழர் எழுத்தாளர் மஞ்சை வசந்தன் அவர்கள் எழுதி, பல லட்சக்கணக்கான பிரதிகள் விற்பனை யாகியுள்ள "அர்த்தமற்ற இந்துமதம்" புத்தகத்தையும், இந்துத்துவத்தைத் தோலுரிக்கும் இன்னும் ஒரு சில புத்தகங்களையும் விற்பனை செய்த நிமிர் புத்தகக் கடையில் காவிக் கும்பலில் ஓரிருவர் பிரச்சினை செய்தார்கள் என்று காரணம் காட்டி, அவர்களைக் கண்டிக்காமல், மாறாக புத்தகக் கடையில் இருந்த தோழர்களிடம் அந்தப் புத்தகங்களை விற்பனை செய்யக்கூடாது என்று காவல்துறை ஆய்வாளர் ஒருவர் மிரட்டினார், அநாகரிகமாக நடந்துகொண்டார் என்ற செய்தி வந்துள்ளது.

தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கது!

இந்தப் பிரச்சினையில் உடனடியாகத் தலையிட்டு தொடர்புடைய காவல்துறை ஆய்வாளரையும், மற்றொருவரையும் இடம் மாற்றம் செய்து உடனடி யாகத் தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்திருப்பது வரவேற்கத்தக்கதாகும்.

அதே போல, சிறுபான்மைச் சமூகத்தினரை அச்சுறுத்தும் வகையிலும், மத வெறுப்புடனும் ‘வாட்ஸ் அப்'பில் பேசிய சென்னை புளியந்தோப்பு போக்கு வரத்துக் காவல்துறை ஆய்வாளர் ராஜேந்திரன் என்பவரும் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

சில காவி ஆடுகள்...

கடந்த ஆட்சிக் காலங்களில் இந்துத்துவாவினரால்  காவல்துறையில் சில காவி ஆடுகள் திட்டமிட்டு நுழைக்கப்பட்டிருக்கின்றன. 

சமூக நீதியும், பாசிச எதிர்ப்பும், மதச்சார்பின்மையும், ஜனநாயகத் தன்மையும் நிலைத்திருக்க வேண்டும் என்ற தமிழ்நாட்டு மக்களின் எதிர்பார்ப்புகளுக்கும், தமிழ்நாட்டு 'திராவிட மாடல்' அரசின் கொள்கை களுக்கும் மாறாக நடந்து கொள்ளும் இத்தகைய அதிகாரிகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையோடு இருக்க வேண்டியது அவசியம் ஆகும்.

தமிழ்நாடு அரசின் மீது களங்கத்தை உண்டாக்கிட முனையும் எவரையும் அனுமதிக்க முடியாது; கூடாது.


கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
7.8.2023

No comments:

Post a Comment