ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : புதுச்சேரியில் புதுப்பிக்கப்பட்ட நகராட்சிப் பூங்காவை அந்த மாநில ஆளுநர் தமிழிசை திறந்து வைத்துள்ளாரே? வார்டு கவுன்சிலர் செய்ய வேண்டியதை, ஆளுநர் செய்துள்ளாரே?

- மன்னை சித்து, மன்னார்குடி-1 

பதில் 1 : புதுச்சேரியை காவி  மயமாக்கவே நாளும் தெலங்கானா மாநிலப் பொறுப்பைக்கூட அலட்சியப்படுத்திவிட்டு அல்லது ஒதுக்கி வைத்துவிட்டு, இப்படி அலைந்து அலைந்து கட்சி வளர்க்கிறார் தமிழிசை அவர்கள்! அது கூடி வராது - கோடியைக் கொட்டினாலும் என்பதே அங்குள்ள யதார்த்தம்! 

----

கேள்வி 2 : கோவில் விழாக்களில் கலவரம் நடப்பது குறித்து - "கோவில்களை இழுத்து மூடி விடலாம்" என்று 'உச்சபட்ச' கருத்து சொல்லும் அளவுக்கு நீதிமன்றங்கள் முன்வந்திருப்பது ஆரோக்கியமானதுதானே?

- சீர்காழி கு.நா.இராமண்ணா, சென்னை

பதில் 2 : "ஆம்! கடவுள் எங்கும் நிறைந்துள்ளாரே! ஏன் இப்படி ஓர் இடத்தில் மட்டுமே கூடவைத்து மக்களைப் பாடாய்ப் படுத்த வேண்டும்?" என்று சற்று நிதானமாகச் சிந்தித்தால் புரியும்! ஆனால், பக்திக்கும், புத்திக்கும்தான் ஒத்து வராதே - என் செய்ய? 

---

கேள்வி 3 : ராஜஸ்தானில் நிலக்கரி சுரங்கத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு நெய்வேலியில் வேலை, நெய்வேலி சுரங்கத்திற்கு இடம் கொடுத்தவர்களுக்கு ராஜஸ்தானில் வேலை கொடுக்கவில்லையே ஏன்?

- மா.ஆறுமுகம், கோவை

பதில் 3 : பாரத் மாதாக்கீ ஜே! வந்தே பாரத் இதுதானோ! யாத்திரை போகிறவர்களைக் கேளுங்கள்!

---

கேள்வி 4 : அசைவம் சாப்பிட வேண்டாம் என்று மிரட்டிவிட்டு, சைவ உணவுகளின் விலையை 24 மடங்கு உயர்த்தி விட்டார்களே?

வே.வேல்முருகன், திருத்தணி

பதில் 4 : அதென்ன 'அசைவம்'? இறைச்சி, மீன் உணவு என்று சொல்லுங்கள். 'சைவம்' என்பதை காய்கறி உணவு என்று கூறுங்கள்!

---

கேள்வி 5 : ''ஆ.இராசாவை ஜெயிலுக்கு அனுப்புவேன்'' என்று விவாதத்தின்போது மிரட்டுகிறாரே ஒன்றிய அமைச்சர் ஸ்மிருதி இரானி?

தி.சிவராமன், மதுரை

பதில் 5 : இன்னும் 6, 7 மாதங்களில் இந்த அரசியல் ஆணவம், தானே புதை குழிக்குள் போய்விடும்! பொறுத்திருந்து பாருங்கள், இராசா எப்போதும் வென்று காட்டுவார்!

--

கேள்வி 6 : காங்கிரஸ் மேனாள் தலைவர் ராகுல் காந்தி நாடாளுமன்றத்திற்குள் மீண்டும் சென்றிருப்பதுபற்றி....?

- லோ.ஜெகதீசன்,  மதுரை

பதில் 6 : உண்மை ஜனநாயகவாதிகள் வாழ்த்தி வரவேற்கிறார்கள்! ஜனநாயகம் பிழைத்தது! பா.ஜ.க.வின் திட்டம் நொறுங்கியது. 

---

கேள்வி 7 : இவ்வளவு நாள்களுக்குப் பிறகு ''மணிப்பூர் கலவரம் ஓர் அவமானம்தான்'' என்று நாடாளுமன்றத்திலேயே உள்துறை அமைச்சர் அமித்ஷா ஒப்புக்கொண்டுள்ளாரே....?

- பா.கண்மணி, வேலூர்

பதில் 7 : அப்படியா சொன்னார் நமது உள்துறை அமைச்சர் அமித்ஷா! பலே பலே இப்போதாவது இது அவருக்குப் புரிகிறதே! மகா மகா வெட்கக் கேடு!

---

கேள்வி 8 : ஏழை - எளிய மக்களுக்குப் பயன்பட்டுவரும் சென்னையில் உள்ள விளையாட்டு மைதானங்களை - நவீனம் என்ற பெயரில், தனியார்வசம் (கட்டணம் செலுத் தினால்தான் பயன்படுத்த முடியும்) ஒப்படைக்க தமிழ்நாடு அரசு முயல்கிறதே?

- பா.முகிலன், சென்னை-14

பதில் 8 : இதுபற்றி தமிழ்நாடு அரசு சரியான முடிவுகளை எடுக்க வேண்டும்.  விளையாட்டுத் துறை அமைச்சர் - எதிலும் துடிப்புடன் மக்கள் நலம் சார்ந்து நடந்துகொள்ளும் நமது அமைச்சர் உதயநிதி இதுபற்றித் தேவைப்படுவனவற்றை மறுபரிசீலனை செய்வார் என்று நம்புகிறோம்.

---

கேள்வி 9 : சென்னை அரும்பாக்கத்தில், பள்ளிக் கூடம் சென்ற சிறுமியை மாடு ஒன்று கொடூரமாக முட்டிக் காயப்படுத்தியுள்ளது; சாலையில் மாடுகள் இப்பொழுது சர்வ சாதாரணமாகத் திரிகிறதே, சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா?

- ச.சரண்யா, குற்றாலம்

பதில் 9 : இந்தக் கேள்வியை சென்னை மேயர் அவர்களது கவனத்திற்குக் கொண்டு செல்கிறோம் - பரிகாரம் தேடிட.

---

கேள்வி 10 :  தங்களுக்குத் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 'தகைசால் தமிழர்' விருது குறித்து சர்ச்சையை கிளப்பியுள்ளாரே, தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை?

- ஆர்.ரமேஷ்,  ஏலகிரி

பதில் 10 : வாழ்க வசவாளர்கள்! வசவுகள் நமக்கு வரவுகள். காரணம், அவையே நம் கொள்கைப் பயிருக்கு நல்ல உரங்கள்!


No comments:

Post a Comment