மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்க உருவானதுதான் வலதுசாரிச் சிந்தனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 5, 2023

மண்ணின் மைந்தர்களின் வாழ்வாதாரத்தைச் சிதைக்க உருவானதுதான் வலதுசாரிச் சிந்தனை

2014ஆம் ஆண்டிற்குப் பிறகு தொலைக்காட்சி பார்ப்பவர்கள் விவாத நிகழ்ச்சியிலும் இதர நேரலை நிகழ்விலும் ஒரு சொல் பயன்படுத்தப்படுவதை புதிதாக கண்டனர். அதாவது வலதுசாரி ஆதரவாளர், வலதுசாரி சிந்தனையாளர், வலதுசாரி பேச்சாளர், வலதுசாரி எழுத்தாளர், வலதுசாரி இதழாளர் என்ற பெயரில் வரிசைகட்டி வந்தனர் - வந்துகொண்டு இருக்கின்றனர். 

இதில் என்ன நகைப்பு என்றால் மாம்பலம் சாலையில் மது அருந்திவிட்டு சாவு ஊர்வலத்திற்கு முன்பு மதுபாட்டிலோடு ஆடிய நபரைக் கூட வலதுசாரி பேச்சாளர் என்று சில தொலைக்காட்சிகள் இழுத்துவந்து அமரவைத்துள்ளன.

இவர்களின் நச்சுக் கருத்துக்களும், சமுக அமைதியை சீர்குலைக்கும் வெறுப்பு பரப்புரைகளும் வரைமுறைகளுக்கு அப்பாற்பட்டவை. இவர்கள் கூறுவதை எல்லாம் கருத்துரிமை என்று எவ்வாறு எடுத்துக்கொள்வது.   கருத்துரிமை என்ற வரைமுறையையே கேலிசெய்யும் அளவிற்கு இவர்களின் பேச்சுக்கள் அடாவடித்தனமாகவும். திமிர்த்தனமாகவும் கொச்சையாகவும் தொடர்ந்து இருந்து வருகிறது. இப்படித்தான், ஆனால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கும் போது எல்லாம் ஒரு சிறுகூட்டம் அய்யோ இவர்கள் கைது கருத்துரிமைக்கு எதிரானது என்று புலம்புகிறார்கள் கருத்துரிமை வேறு வலதுசாரி சிந்தனை வேறு என்பதை நுட்பமாக புரிந்து கொள்வது அவசியம். 

வலதுசாரி என்கிறபோர்வையில் வந்து மணிப்பூரில் நிகழ்ந்துவரும் பயங்கரவாதம் குறித்து குக்கி கிறிஸ்தவ பழங்குடி மக்களுக்கு எதிரான கருத்துகள் வந்து கொண்டே இருப்பதால் அதை ஒட்டியும் இதனைப் புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது.

வலதுசாரி சிந்தனை  என்பது 

1. இஸ்லாமியர், கிறிஸ்தவர் உள்ளிட்ட சிறுபான்மையினர் நாட்டை விட்டு துரத்தி அடிக்கப்பட வேண்டியவர்கள் என்கிற கருத்து.

2. ஜாதி அமைப்பைப் புறந்தள்ளும், அதற்கு எதிராக களமாடும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினரை அடிமைகளாக்கத் துடிக்கும் கருத்து.

3. இந்துக்கள் என்று அடையாள கயிற்றை பிற்படுத்தப்பட்ட சமூகத்தினரின் கழுத்தில் கட்டி அவர்களை அடியாட்களாக  மடைமாற்றத் துடிக்கும் கருத்து.

4. சமத்துவம், சமுகநீதி, பெண்ணுரிமை,  எல்லோருக்கும் எல்லாம் கிடைக்க வேண்டும் என்கிற இடதுசாரி சிந்தனையைக் குழி தோண்டி புதைக்க நினைக்கும் கருத்து.

5. ஆணும் பெண்ணும் சமம் என்பது நம்முடைய பாரத கலாச்சாரத்துக்குக் கேடு விளைவிக்கும் சிந்தனை என்று கதறும் கருத்து.

6. பன்முக பண்பாட்டு அடையாளங்கள் கொண்ட மக்கள், கூட்டாக இணைந்து ஒற்றுமையாக வாழும் சமூகத்தில் இன வெறியைத் தூண்டி பிரித்தாளும் சூழ்ச்சியை முன்னிறுத்தும் கருத்து.

7. அறிவியல் பார்வையை மறுக்கும் கருத்து.

8. பகுத்தறிவை எதிர்க்கும் கருத்து.

9. எல்லோரும் சமம் என்கின்ற நிலைப்பாட்டை எதிர்க்கும் கருத்து.

10. சனாதனத்திற்கு தூபம் போட்டு வர்ணாசிரம முறையை மீண்டும் நடைமுறைக்கு கொண்டு வரத்துடிக்கும் கருத்து.

11. அதிகாரப் பகிர்வைப் பறைசாற்றும் ஜனநாயக முறையைத் தவிடு பொடி ஆக்கும் கருத்து.

12. ஆண்டான் அடிமைத்தனத்தை தூக்கிப் பிடிக்கும் கருத்து.

13. தனியார் மயத்தை சிலாகிக்கும் ஊக்குவிக்கும் கருத்து.

14. ஜாதி வேறுபாடும் குலப்பெருமையும் அழிந்தொழிய வேண்டும் என்கிற அம்பேத்கரிய சித்தாந்தத்துக்கு எதிரான கருத்து. 

15. சுயமரியாதை தமிழருக்கும், சுயாட்சி தமிழ்நாட்டுக்கும் அவசியம் என்று போர்க் குரல் எழுப்பிய பெரியாரியக் கருத்தியலுக்கு எதிரான கருத்து.

16. பிரம்மனின் தலையிலிருந்து உதித்தவர்களாகத் தங்களை மார்தட்டிக் கொள்பவர்களை எதிர்த்து கேள்வி கேட்கும் அதிகாரமோ, கருத்து சுதந்திரமோ எவருக்கும் இல்லை என்னும் கருத்து.

17. தன்னைத் தவிர மற்றவரின் கருத்துரிமையில் துளியும் நம்பிக்கை அற்ற கருத்து.

18. ஒட்டுமொத்தத்தில், தான் தெருவில் இறங்கி அடிதடி வன்முறையில் இறங்குவதற்கு பதிலாக தன்னுடைய கருத்து வழியாக அடியாட்களை உருவாக்குவதே தன்னுடைய முழு நேர சித்தாந்தமாகக் கொண்டிருக்கும் கருத்துதான் வலதுசாரி சிந்தனை.  இவர்களுக்கும் இந்த மண்ணின் மைந்தர்களுக்கு துளியும் தொடர்பில்ல, சமத்துவம் சமூகநீதி, அமைதி, வன்முறையற்ற வாழ்வு, அனைவருக்கும்  அனைத்தும் என்பது 4000 ஆண்டுகளுக்கு முன்பு வடகிழக்கு இந்திய தீபகற்பத்தில் வாழ்ந்த சிந்துவெளி திராவிட நாகரீகம் முதல் அதே காலகட்டத்தில் தென்கோடியில் கீழடியில் வாழ்ந்த திராவிடர்களுக்கு உண்டு.  ஆனால் பிழைப்பிற்காக ஆடு மாடுகளை ஓட்டிக்கொண்டு வந்தவர்கள் அன்று முதல் இன்றுவரை இம்மண்ணின் மைந்தர்களை பிரிக்க விரித்த வலைப்பின்னல் தான் வலதுசாரி சிந்தனை ஆகும்.

No comments:

Post a Comment