கழக - கல்விக் குடும்ப உறவுகளின் வாழ்த்து என்னை மேலும் ‘உழைப்புக் கடனாளி'யாக்கியுள்ளது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 2, 2023

கழக - கல்விக் குடும்ப உறவுகளின் வாழ்த்து என்னை மேலும் ‘உழைப்புக் கடனாளி'யாக்கியுள்ளது!

எனது ஆயுள் முடியும்வரை உழைப்பேன்!

கழகக் கல்விக் குடும்ப உறவுகளின் வாழ்த்து என்னை மேலும் ‘உழைப்புக் கடனாளி'யாக ஆக்கியுள்ளது! எனது ஆயுள் முடியும்வரை உழைப்பேன் என்று நான் உறுதி கூறுகிறேன் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் அறிக்கை விடுத்துள்ளார்.

அவரது அறிக்கை வருமாறு:

இடையறாத சுற்றுப்பயணங்கள் காரணமாக, திருச்சி, தஞ்சை பெரியார் கல்வி நிறுவன உறவுகளைச் சந்தித்து உரையாடி - உறவாடி பல வாரங்கள் ஆகிவிட்டதால், வெளிநாட்டுப் பயணத்திலிருந்து வந்த நிலையில், கழகத்தின் பாசறை, பாடி வீடான திருச்சி, தஞ்சை  கழக உறவுகளையும், கல்வி நிறுவன உறவுகளையும் சந்திக்கத் திட்டமிட்டு, இன்று (2.8.2023) ஒரு நாள் திருச்சி - தஞ்சைக்குச் சென்று, சென்னைக்குத் திரும்பத் திட்டமிட்டிருந்தேன்.

நேற்று (1.8.2023) தமிழ்நாடு அரசின் ‘‘தகைசால் தமிழர்'' விருது அறிவிப்பு வெளியானது முதல் அனைவரும் பாச மழை பொழிந்த நிலையில், தொடர் வாழ்த்துகளும், எனது நன்றி கூறலும் பெரும்பகுதி நேரத்தை எடுத்துக் கொள்கின்றன.

இதனால், பல நட்புறவுகளுக்கு உரிய நேரத்தில், உரிய முறையில் நன்றி தெரிவிப்பதில் தவக்கம் ஏற்பட்டுள்ளமையைப் பொறுத்தருள வேண்டுகிறேன்.

எம்மை வாழ்த்தி மகிழ்ந்து, 

சால்வை போர்த்தினர்!

திட்டமிட்டபடி இன்று திருச்சி வந்து, காலை வழக்கமான நடைப்பயிற்சி சென்றபோது, நூற்றாண்டு கல்வி வளாகத்தில், கைவல்யம் முதியோர் இல்லத்துப் பெரியோர்கள், முதியோர்கள் ஆவலுடன் கைகுலுக்கி எம்மை வாழ்த்தி மகிழ்ந்து, சால்வை போர்த்தினர்!

அந்த முதியவர்களின் அன்பிற்குப் பிறகு, அய்யாவும், அம்மாவும் உருவாக்கி, இன்றும் மிகச் சிறப்புடன் நடைபெறும் நாகம்மை குழந்தைகள் இல்லத்துப் பிள்ளைகளை அன்புடன் சந்தித்து, அள வளாவினோம். அங்கு பணித் தோழர்கள் வாழ்த்துக் கூறி, அன்பளிப்பையும் தந்தது என்னை மவுனமாக் கியது - சில மணித்துளிகள்!

எனது ஆயுள் முடியும்வரை 

உழைப்பேன்!

அரை நூற்றாண்டு தாண்டிய நாகம்மையார் குழந்தைகள் இல்லத்தில், அந்த உறவுகளின் அன்பிற்கு ஏது அடைக்கும்தாழ்?

கல்விக் குடும்ப ஆசிரியர்கள், கழகக் கூட்டுப் பணித் தோழர்களான கருஞ்சட்டைக் குடும்ப உறவுகள் சந்திப்பால் அடையும் மகிழ்ச்சி இச்சமூகத்திற்கு என்னை மேலும் ‘உழைப்புக் கடனாளி'யாக ஆளாக்கி யுள்ளது!

ஒரே உறுதி!

எனது ஆயுள் முடியும்வரை உழைப்பின்மூலம் இந்த நம்பிக்கையைத் தகைமையுடன் திரும்பித் தர உழைப்பேன் என்று அனைவருக்கும் உறுதி கூறி, நெகிழ்கிறேன்!

நன்றி! நன்றி!! நன்றி!!!

உங்கள் தோழன், தொண்டன்

கி.வீரமணி

திராவிடர் கழகத் தலைவர்

(கி.வீரமணி)

திருச்சி

2.08.2023


No comments:

Post a Comment