சென்னை, ஆக. 4 சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட போரூர், ஆலந்தூர், அசோக் நகர் உள்ளிட்ட பகுதிகளில் ரூ.178.91 கோடியில் மேற்கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் உள்ளிட்ட பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆய்வு (3.8.2023) செய்தார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
ஆலந்தூர் மண்டலத்துக்கு உட்பட்ட எம்.ஜி.ஆர். சாலையில் ரூ.71.31 கோடிமதிப்பீட்டில் நடைபெறும் மழை நீர் வடிகால் பணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். 2.29 கிமீ நீளம் கொண்ட இப்பணியில் 1.78 கிமீ தொலைவுக்கு பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் இம்மாத இறுதிக்குள் முடிக்கப்படும்.
நீர்வள துறையின் பராமரிப்பில் உள்ள போரூர் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் மவுலிவாக்கம், மதனந்தபுரம் மற்றும் முகலிவாக்கம் வழியாக சென்று முகலிவாக்கத்தில் உள்ள ராமாபுரம் ஓடையில் கலந்து மணப்பாக்கம் மற்றும் ராமாபுரம் வழியாக சென்று அடையாறு ஆற்றில் சேரும்படி அமைந்திருந்தது.
ரூ.100 கோடியில் வெள்ள தடுப்பு
தற்பொழுது உபரி நீர் செல்லும் நிலங்கள் குடியிருப்பு பகுதிகளாக மாறிவிட்டதாலும், ஏரியின் குறுக்கே புறவழிச்சாலை அமைக்கப்பட்டதாலும், ஏரியின்உபரி நீர் வெளியேற வழியில்லாமல் போரூர் ஏரியின் மேற்கு பகுதியில் உள்ள கொளுத்துவான்சேரி, சீனிவாசபுரம், பரணிபுத்தூர், பட்டூர், அய்யப்பன்தாங்கல் கிராமங்களில் நீர் சூழ்ந்து பாதிப்பு ஏற்படுகிறது. இதைத் தடுக்க முதலமைச்சர் அறிவுறுத்திய தன்பேரில் ரூ.100 கோடியில் போரூர் ஏரி பகுதியில்வெள்ளப் பாதிப்பு தடுப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் புதிய மதகு அமைத்தல் மற்றும் போரூர் ஏரி முதல் ராமாபுரம் ஓடை வரை புதியதாக மூடிய வடிவிலான கால்வாய் அமைக்கும் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டார்.
கோடம்பாக்கம் மண்டலத்துக்கு உட்பட்ட அசோக் நகர் 4ஆ-வது நிழற்சாலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள சாலைகளில் கடந்த 2021 மற்றும் 2022 ஆ-ம் ஆண்டு பருவமழையின் காரணமாக 2 அடி உயரத்துக்கு 10 நாட்களாக மழைநீர் தேங்கியது. இதனால் மேற்கு மாம்பலம் பகுதியும் அதிகம் பாதிக்கப்பட்டது. இப்பிரச்சினைக்கு நிரந்தரத் தீர்வாக, ஜாபர்கான்பேட்டை கால்வாய் வழியாக அடையாறு ஆற்றை குறைந்த தொலைவில் சென்றடையும்படி மாற்றியமைக்கப்பட்டு தொழில்நுட்ப ஆலோசகரின் வடிவமைப்பின்படி 1.313 கி.மீ நீளத்துக்கு மாநில பேரிடர் நிவாரண நிதியின் கீழ், ரூ.7.60 கோடி மதிப்பில் அசோக்நகர் 4-ஆவது நிழற்சாலை மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகளில் மேற் கொள்ளப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளையும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆய்வு செய்தார்.
No comments:
Post a Comment