இன்னும் பசி அடங்கவில்லையா? மேலும் எம் செல்வங்களின் உயிர் வேண்டுமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

இன்னும் பசி அடங்கவில்லையா? மேலும் எம் செல்வங்களின் உயிர் வேண்டுமா?

பாணன்

மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கு நீட் எனப்படும் தேசியத் தகுதித் தேர்வை  தமிழ்நாடு தொடர்ந்து எதிர்த்து வருகிறது

முதல் பலி, 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அரியலூர் மாவட்டம் குழுமூரைச் சேர்ந்த அனிதா என்ற மாணவி, நல்ல மதிப்பெண்களைப் பெற்றிருந்தும் மருத்துவக் கல்லூரியில் இடம் கிடைக்காத காரணத்தால் தற்கொலை செய்துகொண்டார். இந்த மரணம் நீட் தேர்வுக்கு எதிரான உணர்வுகளைத் தமிழ்நாடு முழுவதும் ஒருங்கிணைத்தது.

இதற்கு அடுத்த ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த பிரதீபா  தற்கொலை செய்துகொண்டார்.

இதற்குப் பிறகு திருச்சியைச் சேர்ந்த சுபசிறீ, சென்னை சேலையூரைச் சேர்ந்த ஏஞ்சலின் சுருதி, திருப்பூரைச் சேர்ந்த ரிது சிறீ, மரக்காணம் கூனிமேடு பகுதியைச் சேர்ந்த மோனிசா, பட்டுக்கோட்டையைச் சேர்ந்த வைஸ்யா, திருநெல்வேலியைச் சேர்ந்த தனலட்சுமி, கோயம்புத்தூர் ஆர்.எஸ்.புரத்தைச் சேர்ந்த சுபசிறீ, மதுரையைச் சேர்ந்த ஜோதி சிறீ துர்கா, செந்துறையைச் சேர்ந்த விக்னேஷ், தருமபுரியைச் சேர்ந்த ஆதித்யா, திருச்செங்கோட்டைச் சேர்ந்த மோதிலால், மேட்டூரை அடுத்த கூலையூரைச் சேர்ந்த தனுஷ், அரியலூர் மாவட்டம் துவரங்குறிச்சியைச் சேர்ந்த கனிமொழி, வேலூர் மாவட்டம் தலையாரம்பட்டைச் சேர்ந்த சவுந்தர்யா என பட்டியல் நீண்டு ஜெகதீசுவரன் வரை வந்து நிற்கிறது..

நன்கு கவனிக்கவேண்டியது மேலே கூறிய தன்னுயிர் மாய்த்துகொண்ட மாணவச்செல்வங்கள் அனைவருமே கல்வி கேள்விகளில் தலை சிறந்தவர்கள் - தேர்விற்கு அஞ்சி தன்னுயிர் மாய்க்கவில்லை. 

அனிதா டில்லிவரை சென்று போராடினார் - ஆனால் தமிழ் பேசும் ஒரு ஒன்றிய அமைச்சர் கொடுத்த வாக்குறுதியை நம்பினார். அமைச்சர் கூறினால் அனைத்தும் நடக்கும் என்று நினைத்தார். 

ஆனால் அவரது நம்பிக்கையை தூக்குக்கயிற்றில் கொண்டுவந்து நிறுத்தியது ஒன்றிய அரசு.

கலைஞர், மற்றும் ஜெயலலிதா போன்ற முதலமைச் சர்கள் நீட் என்னும் கொடுங்கோல் அரக்கனின் கோரப் பற்களின் கொடூரத்தை உணர்ந்தே அதை வேங்கடம் கடந்து வரவிடவில்லை. 

ஆனால் ஜெயலலிதாவின் மறைவிற்குப் பிறகு நியமிக்கப்பட்ட தமிழ்நாட்டின் தலைமை நீட் தேர்விற்கு அனுமதி அளித்து தகைசால் தளிர்களின் உயிருக்கு உலை வைத்தது. 

2021ஆம் ஆண்டு தன்னுயிர் மாய்த்துக்கொண்ட சவுந்தரியாவின் குடும்பமே அவருக்காக அனைத் தையும் செய்தனர். 

வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சவுந்தர்யா என்ற மாணவி தன்னுயிர் மாய்த்தார்.

வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே தலையாரம் பட்டு கிராமத்தைச் சேர்ந்த திருநாவுக்கரசு - ருக்மணி தம்பதியரின் நான்காவது மகள் சவுந்தர்யா. 17 வயதாகும் இவர் வேலூர் தோட்டப்பாளையம் அரசினர் பெண்கள் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு முடித்துள்ளார். சௌந்தர்யா பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் 600க்கு 510 மதிப்பெண்கள் பெற்றவர்.  அவர் 12.09.2021 அன்று காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் நீட் மருத்துவ நுழைவுத் தேர்வு எழுதியுள்ளார். 

தேர்வெழுதி மூன்று நாட்கள் கடந்துள்ள நிலையில் நீட் தேர்வில் மதிப்பெண்‌ குறைவாக பெற்று விடுவோமோ என்ற அச்சத்தில் இருந்துள்ளார். சவுந்தர்யாவின் தந்தை மற்றும் தாய் இருவருமே தினக்கூலி வேலை செய்து வருகின்றனர். அன்றைய தினம் தந்தை வேலைக்கு சென்ற பிறகு, தனது தாயாரை அவர் வேலை செய்யும் பகுதியில் விட்டுவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார் சவுந்தர்யா. இதையடுத்து நீட் தேர்வில் குறைவான மதிப்பெண்கள் பெற்று விடுவோம் என்ற அச்சத்தினால் மிகுந்த மன வேதனையில் இருந்த மாணவி சவுந்தர்யா அவரது வீட்டில் தற்கொலை செய்து கொண்டார்.

குடும்பத்தில் நான்காவது பெண் குழந்தை கல்வியில் படுசுட்டி அவரது கல்விக்காக அக்காமார்கள் தங்களின் கல்வியை விட்டுக்கொடுத்து அவருக்காக ஒட்டுமொத்த குடும்பமே உழைத்தது, அவரும் வீட்டின் நம்பிக்கையை காப்பாற்றினார். பள்ளியில் சிறந்த மாணவியாக திகழ்ந்தார். 

ஆசிரியர்கள் சவுந்தரியாவின் தற்கொலையை நம்பவே தயாராக இல்லை.  நீட் மட்டும் இல்லை என்றால் எங்கள் பள்ளிக்கு ஒரு தலைசிறந்த மருத்து வரை உருவாக்கிய பெருமை கிடைத்திருக்கும் என்று அவரது வகுப்பாசிரியர் நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்துக் கொண்டே அழத் துவங்கியுள்ளார். 

5ஆண்டுகளில் 16 மாணவர்கள் பலி

மேலும் தமிழ்நாட்டுக்கு நீட் வந்தபின் 2017இல் நடந்த அனிதா தற்கொலை உள்பட கடந்த 5 ஆண்டு களில் குறைந்தது 16 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.

நீட் நேர்மையானதா? 

2018ஆம் ஆண்டு பீகாரைச் சேர்ந்த மாணவி கல்பனா குமாரி நாட்டிலேயே முதல் மதிப்பெண் பெற்றார். ஆனால் அவர் படித்த பள்ளி என்று கூறிய பீகார் பள்ளிக்குச் சென்று விசாரித்த போது அவரை அந்த பள்ளியில் படிக்கும் மாணவிகள் யாருமே தெரியாது என்று கூறிவிட்டார்கள். 

ஆம். அந்த மாணவியின் பெற்றோர் ஒன்றிய அரசின் கல்வித்துறை உயரதிகாரிகள். ஆகையால் 10 ஆம் வகுப்பிற்குப் பிறகு 11 மற்றும் 12 ஆம் வகுப்பில் அட்மிசன் போட்டு விட்டு இரண்டு ஆண்டு டில்லியில் தங்கி நீட் கோச்சிங்கிற்குப் பயின்றுள்ளார். 

அதாவது அவர் பள்ளியின் பக்கமே போகவில்லை. இருப்பினும் 12 ஆம் வகுப்பில் தேர்ச்சி சான்றிதழ் கிடைத்துள்ளது. நீட் தேர்வில் முதலிடம் பெற்று மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் பல பாடங்களில் தேர்ச்சி பெறதாதால் அவரால் இன்னும் மருத்துவர் பட்டம் பெற முடியவில்லை.

No comments:

Post a Comment