அஞ்ஞானம் தோற்றது விஞ்ஞானம் வென்றது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, August 24, 2023

அஞ்ஞானம் தோற்றது விஞ்ஞானம் வென்றது

23.8.2023 என்பது அறிவியல் உலகில் அரிய நாள்!

இந்திய விண்வெளி ஆய்வின் வரலாற்று நிகழ்வாக சந்திரயான்-3 விண்கலம் நிலவில் வெற்றிகரமாக தரையிறங்கியது.

சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் திட்டமிட்டபடி மாலை 6.04 மணிக்கு நிலவின் தென்துருவப் பகுதியில் தடம் பதித்தது. இதுதான் உலகளவில் முதல் வெற்றியாகும்.

சந்திரயான் -2 தோல்விக்குப் பிறகு, பல்வேறு மாற் றங்களுடன் சந்திரயான்-3 விண்கலத்தை வடிவ மைத்து, எல்விஎம்-3 ராக்கெட் மூலம் கடந்த ஜூலை 14-ஆம் தேதி இஸ்ரோ விண்ணில் செலுத்தியது.

பல்வேறு கட்ட பயணங்களுக்குப் பின்னர் நிலவின் சுற்றுப் பாதையில்விண்கலம் பயணித்தது. சந்திரயான் 3-இல் உள்ள உந்து கலனில் இருந்து லேண்டர் கலன் கடந்த 17-ஆம் தேதி விடுவிக்கப்பட்டது. 

நிலவுக்கும், லேண்டர் கலனுக்கும் இடையேயான தூரத்தை பல்வேறு கட்டங்களாக படிப்படியாக இஸ்ரோ குறைத்தது. இறுதியில், குறைந்தபட்சம் 25 கி.மீ. தொலைவும், அதிகபட்சம் 134 கி.மீ தொலைவும் கொண்ட சுற்றுப் பாதையில் லேண்டர் கொண்டு வரப்பட்டது.

பின்னர் நிலவின் தரையிலிருந்து 150 மீட்டர் உயரத்துக்கு லேண்டர் கொண்டுவரப்பட்டது. சில விநாடிகள் அந்த நிலையிலேயே நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர், அதிலுள்ள சென்சார்கள் மூலம் தரையிறங்க சரியான சமதள பரப்புடைய இடம் தேர்வு செய்யப் பட்டது.

லேண்டரின் வேகம் பூஜ்ஜிய நிலையை எட்டியதும், மெதுவாக நிலவில் தரையிறக்கும் முயற்சியை இஸ்ரோ விஞ்ஞானிகள் மேற்கொண்டனர்.

இந்த முயற்சி பலன் அளித்ததால், சந்திரயான் -3 விண்கலத்தின் விக்ரம் லேண்டர் வெற்றிகரமாக நிலவில் தரையிறங்கியது. 

சந்திரயான் -3 திட்டம் வெற்றி பெற்றதாக இஸ்ரோ தலைவர் சோம்நாத் அறிவித்தார்.

இதனைத்தொடர்ந்து இஸ்ரோ விஞ்ஞானிகள் முழக்கமிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒருவரையொருவர் ஆரத்தழுவி மகிழ்ச்சியை  பகிர்ந்து கொண்டனர்.

கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த சந்திரயான்-3 திட்ட இயக்குநர் வீரமுத்துவேல் "நிலவின் தென் துருவத்திற்கு அருகில் சென்ற முதல் நாடு என்ற பெருமையை பெற்றுள்ளோம்; சந்திரயான் 3 திட்டத்திற்காக கடுமையாக உழைத்த அனைவருக்கும் நன்றி" என்றார்.  

 இஸ்ரோவின் முதல் பெண் திட்ட இயக்குநர் என்ற பெருமையை கொண்டவர் பெண் விஞ்ஞானி வனிதா முத்தையா. அண்ணா பல்கலை.யில் பொறியியல் படித்த வனிதா, சந்திரயான் 2 வெற்றிக்காக அப்போது இரவும் பகலும் பாடுபட்டுள்ளார். கடந்த 4 ஆண்டுகளாக நிலவை சுற்றி வரும் சந்திரயான் 2இல் உள்ள ஆர்பிட்டர் தற்போது சந்திரயான் 3 உடன் இணைந்து செயல்படும் அளவுக்கு பணிபுரிந்து சாதித்து காட்டியவர் வனிதா ஆவார்.

இந்த வெற்றியின் பின்னணியில் உள்ளவர்கள் மூன்று தமிழர்கள் என்று எண்ணும்போது நம் நெஞ்சமெல்லாம் பூரிக்கிறது.

"சந்திரயானின் மூன்று திட்டங்களுக்கும், தமிழ்நாட்டின் மயில்சாமி அண்ணாதுரை, வனிதா தற்போது வீரமுத்துவேல் ஆகியோர் பொறுப்பு என்ற நிலையில் இது தமிழர்களின் சாதனை" என்று கூறி நமது முதல் அமைச்சர் மாண்புமிகு மு.க. ஸ்டாலின் அவர்கள் பாராட்டியுள்ளது. குறிப்பிடத்தக்கதாகும். சாதாரண குடும்பத்தில் அரசுப் பள்ளிகளில் படித்தவர்கள் இவர்கள். தகுதி, திறமை பேசும் தக்கைகள் இனியாவது வாய் மூடுவார்களா?

சந்திரன் குரு பத்தினியைக் கற்பழித்தான் என்றும், ராகு, கேது என்ற பாம்பு சந்திரனை விழுங்கியது என்றும், அதனால் வந்ததுதான் கிரகணம் என்றும் கூறும் மூடக் குப்பைகளை இனிமேலாவது பரப்பு வதைத் தூக்கி எறிய வேண்டும். அஞ்ஞானத்தை விஞ்ஞான வழியாகப் பரப்புதலைத் தவிர்க்க வேண்டும் என்ற திராவிடர் கழகத் தலைவரின் கருத்து முக்கியமானது.

No comments:

Post a Comment