தமிழர் தலைவர்நம் தாய்மண்ணைக் காக்க
உமிபோல் பகைமைகள் ஊதி - நமின்தமிழ்
நாடு பகுத்தறிவு நாளும் வளர்ச்சிபெறப்
பாடுபடும் வீரமணி பாடு
“தகைசால் தமிழர் விருது”கலைஞர்
பகைவெல் மகன்முதல்வர் பண்பாய் - மிகைஅறிந்தே
உன்னத உச்சம் உயர்வாக தலைவர்க்கே
நன்பரிசு தான்வழங்கும் நாடு !
பற்றிலா ஞானியார்? பாசத்தை மக்கள்மேல்
முற்றும் பதியவைத்தே முன்னேற்றம் - சுற்றிவரத்
தன்னலமில் வாழ்வர் தகுஞானி! அவ்ஞானி
நன்றுநம் ஆசிரியர் நம்பு!
பத்து வயதினிலே பற்றிய கொள்கைத்தீ
கத்துகடல் சூழ்ந்த கயமைகளை - யுத்தவெறி
சாதி மத வேறுபாட்டைச் சாடிதொண் ணூற்றின்
நீதிசமம் காண்முயற்சி நீடு!
தீண்டாமைப் பேய்கள் திமிர்பேதங் களோட
மாண்புறு தந்தைநம் மாப்பெரியார் - காண்குறிக்கோள்
வெற்றிபெற ஓயாவிய னுழைப்பார் வீரமணி
கற்றஅறம் தொண்டறம் காப்பு!
ஈடிணை இல்லாதே இவ்வுலகம் நம்தமிழர்
கோடிகோடி மேலுயர்த்தும் கொள்கைகள் - பாடிவென்று
ஒத்துவாழ்ந் தேதமிழர் ஓங்குநிலை பெற்றுயர்த்தும்
வித்தகர் வீரமணி வேந்து!
தன்னேரில் லார்க்கே தகைசால் தமிழரெனும்
மன்பதைப் போராளி மாவிருதை - நன்றளித்த
மாமுதன்மை மாமுதல்வர் மாவரசு தான்வழங்கும்
கோமுதன்மை தந்த கொடை!
ஆசிரியர் வீரமணி ஆக்கம் செயலாக்கம்
மாசில் பெரியார் மறுபதிப்பே! - வீசுதென்றல்
காற்றாய்க்; கனலாய்ப் புனலாய் ஆயுளோங்கி
ஏற்றஆயுள் ஓங்க இனிது!
தமிழர் தலைவர் தானடைந்த இப்பரிசோ
நம்பெரியார் பெற்றபுகழ் நற்பரிசே இத்தகைமைப்
பேறு தமிழ்விருதோ பேசும் தலைமுறைகள்
வீறு திராவிடர் கழகம் மேற்று!
வாழ்க திராவிட மாதிரி நம்அரசே
வாழ்க முதல்வர் மு.க.இஸ்டாலின் - வாழ்கவே
வாழிஅறம் வாழிநலம் வாழிஅன்பு வாழியரோ
வாழிதந்தை பெரியார் வாழ்த்து!
பெருங்கவிக்கோ வா.மு.சேதுராமன்
நன்றி: 'முரசொலி' 11.8.2023
No comments:
Post a Comment