குடியரசுத் தலைவரை அவமதித்ததன் பின்னணி என்ன? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, August 9, 2023

குடியரசுத் தலைவரை அவமதித்ததன் பின்னணி என்ன?

நாடாளுமன்ற திறப்பு விழாவுக்கு நாட்டின் குடியரசுத் தலைவரையே உள்ளே விடவில்லை, உள்ளே விடுவது இருக்கட்டும்,  குடியரசு துணைத் தலைவரிடம் நேரில் சென்று அழைப்பிதழைக் கொடுத்தார்கள். குறைந்தபட்சம் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அஞ்சலில்கூட அழைப்பிதழை அனுப்பவில்லை.

குடியரசுத் தலைவருக்கு புதிய நாடாளுமன்றத்தின் திறப்புவிழா விற்கு, அழைப்பிதழ் தரப்பட்டதா என்று போபாலைச் சேர்ந்த  ஒருவரால் ஆர்.டி.அய். மூலம் கேட்கப்பட்ட கேள்விக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமோ குடியரசுத்தலைவருக்கு அழைப்பிதழ் கொடுக்கப்படவில்லை என்று பதில் கிடைத்தது. 

மேற்கண்ட தகவல்கள் காட்டுவது என்ன? இன்றைய ஒன்றிய பிஜேபி அரசு என்பது பச்சையான பார்ப்பன மேலாதிக்க சனாதன ஆட்சி என்பதைத் தானே இது காட்டுகிறது. ஆர்.எஸ்.எஸ்.இன் கொள்கை என்பது வர்ணாசிரமத்தை ஏற்பது தானே - வலியுறுத்துவது தானே  - அந்த அடிப்படையில்தான் இன்றைய  இந்திய ஒன்றிய பிஜேபி அரசு ஆர்.எஸ்.எஸ்.-இன் அரசியல் வடிவம் என்ற அடிப்படையில் குடியரசுத் தலைவர் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர் என்ற காரணத்தினாலும் கைம்பெண் என்பதாலும் நவீன தீண்டாமை கடைப்பிடிக்கப்பட்டு இருக்கிறது என்பதைத் தானே இது காட்டுகிறது.

குடியரசுத் துணைத்  தலைவருக்கு நேரில் சென்று அழைப்பிதழ் கொடுத்த ஒன்றிய பிஜேபி அரசு குடியரசுத் தலைவருக்கு நேரில் அழைப்பிதழ் கொடுக்காவிட்டாலும் அஞ்சல் மூலமாகக்கூட அனுப்பவில்லை என்பது எதைக் காட்டுகிறது?

வெறும் அரசியல் பிரச்சாரத்திற்காக - பார்த்தீர்களா? பார்த்தீர்களா?  பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த ஒருவரை குடியரசுத் தலைவராக நாங்கள் கொண்டு வந்திருக்கிறோம் என்று  ஏமாற்றும் அரசியல் பிரச்சார விளம்பரத்திற்காக செய்யப்பட்டுள்ள ஏற்பாடு தானே இது!

 இதனை நாட்டு மக்கள் அறிய மாட்டார்களா? இது மட்டுமல்ல, இதற்கு முன்பு குடியரசு தலைவராய் இருந்த மாண்புமிகு ராம்நாத் கோவிந்த் அவர்கள் குடும்பத்தோடு பூரி ஜெகநாத் கோயிலுக்கு சென்ற போதும் சரி,  அஜ்மீர் பிரம்மா கோயிலுக்குச் சென்றபோதும் சரி, தடுத்து நிறுத்தப்பட்டனரே! நாட்டின் முதல் குடிமகனுக்கு,  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் தகைமைசால் தலைவருக்கு,  முப்படைகளின் தலைவருக்கு இழைக்கப்பட்ட இந்த தீண்டாமைக் கொடுமை மீது ஒன்றிய பிஜேபி அரசு எடுத்த நடவடிக்கை என்ன?

இவற்றையெல்லாம் நாட்டு மக்கள் அறிய மாட்டார்களா? ராமராஜ்யத்தை உண்டாக்கப் போகிறோம் என்று சொல்வதன் பொருள்  என்ன? தேர்தலுக்கு முன்பு அயோத்தியில் ராமர் கோயிலை திறக்கப் போகிறார்கள்  - மக்களிடத்தில் போதை ஏறி இருக்கும் பக்தியை பயன்படுத்தி வாக்குகளைப் பெற்று மீண்டும் ஆட்சிப் பீடம் ஏறி விடலாம் என்கின்ற சூழ்ச்சியில் பிஜேபி ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது. 

ராமராஜ்யம் என்றால் என்ன? சூத்திர சம்பூகன் தவம் செய்தான் என்று கூறி, அது வருண தர்மத்திற்கு விரோதமானது என்ற அடிப்படையில் மகாவிஷ்ணு அவதாரமான ராமன் சம்பூகனின் தலையை வெட்டிக் கொலை செய்யவில்லையா? 

இந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கும்பொழுதுதான் ராமராஜ்ஜியம் என்பதும், ராமன் கோவில் என்பதும் எந்த அடிப்படையில் என்பது விளக்கமாகத் தெரிகிறது. 

நாடாளுமன்ற புதிய கட்டட திறப்பு விழாவிற்கு ஓர் அடிப்படை நாகரிகம், மரபுக் கருதிக்கூட குடியரசுத் தலைவருக்கு அழைப்பு அளிக்கப்படவில்லை என்பது அந்த ராம ராஜ்ஜிய தத்துவத்தின் ஒரு கூறு தானே! வருணாசிரம பார்வை தானே! 

450 ஆண்டுகால வரலாறு படைத்த சிறுபான்மை இசுலாமியர்களின் பாபர் மசூதியை பி.ஜே.பி. - ஆர்.எஸ்.எஸ். வகையறாக்கள் ஒரு பட்டப் பகலில் அடித்து நொறுக்கி விட்டு அந்த இடத்தில் ராமன் கோயிலை கட்டுகிறார்கள் - திறக்கிறார்கள்  என்றால் நாடு எங்கே போய்க் கொண்டிருக்கிறது என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா? 

இவ்வளவுக்கும் முதல் முதலாக பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்ற கட்டடத்திற்குள் நுழையும் பொழுது அதன் படிக்கட்டுகளில் சாஷ்டாங்கமாய் விழுந்து அரசமைப்பு சட்டத்தை காப்பாற்றப் போவதாக சபதம் எடுத்தாரே - அந்த அரசமைப்பு சட்டத்தில் மதச்சார்பின்மை என்பது மிக அடிப்படையான அம்சம் அல்லவா? ஊரை ஏமாற்றுவதற்கு வேடம் தரிப்பது -  வேகமாக உரத்துப் பேசுவது -  ஏழை போன்று வித்தைகளை காட்டுவது என்பது எல்லாம் பிஜேபி - ஆர்.எஸ்.எஸ். வகையறாக்களின வழிமுறைகள் தானே?

 மோடி என்ற ஒரு சொல்லை ராகுல் காந்தி பயன்படுத்தியதற்காக பல கோடி மக்களுடைய உள்ளத்தைக் காயப்படுத்தி விட்டார் என்று சொல்கின்றவர்கள் - அவருடைய மக்களவை உறுப்பினர் பதவியை பறித்தவர்கள் -ஆறு ஆண்டுகள் தேர்தலில் நிற்கக் கூடாது என்ற நிலையை உருவாக்கியவர்கள் ஒன்றைச் சிந்திக்க வேண்டும். ஜனநாயகத்தின் அடையாளமான நாடாளுமன்ற கட்டட திறப்பு விழாவிற்கு குடியரசுத் தலைவருக்கே அழைப்பு இல்லை என்றால் - அதற்குக் காரணம் அவர்   பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர் என்ற நிலையில் கோடானு கோடி பழங்குடி  சமூகத்தைச்  சேர்ந்த மக்களை அவமதித்ததாக கருத முடியாதா? ஒன்றிய பிஜேபி ஆட்சியில் ஒடுக்கப்பட்ட மக்களும் - சிறுபான்மை மக்களும் அவமதிக்கப்படுகிறார்கள் - உரிமைகள் மறுக்கப்படுகின்றன என்பதை மனதில் கொண்டால், வருகின்ற மக்களவைத் தேர்தலில் அதற்கான பதிலடியை வாக்குச் சீட்டுகள் மூலம் கொடுக்க வேண்டாமா? 

அதேபோல பிற்படுத்தப்பட்ட மக்களின் இட ஒதுக்கீட்டிலும் சேதாரங்களை ஏற்படுத்திக் கொண்டு, ஏற்கெனவே கல்வியிலும், வேலை வாய்ப்புகளிலும் ஆதிக்கம் செலுத்திக் கொண்டு இருக்கின்றவர்களுக்கு பத்து சதவீத இட ஒதுக்கீடு (ணிகீஷி) என்ற கொல்லைப் புற வழியில் வாரி வழங்குவதையும் கவனிக்கத் தவறக் கூடாது. 

எனவே, ஜனநாயகம்  என்பது பெரும்பான்மையான மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பெரும்பான்மை மக்களுக்கான ஆட்சி என்பதை நினைவில் கொண்டால் ஒடுக்கப்பட்ட மக்களும் சிறுபான்மையினரும் பிற்படுத்தப்பட்ட  மக்களும் தானே இந்நாட்டின் பெரும்பான்மை மக்கள்? 

இவர்கள் ஒரு நொடி சிந்தித்துப் பார்த்தாலே இன்றைக்கு ஒன்றியத்தில் இருக்கக்கூடிய ஆட்சி என்பது பெரும்பான்மை மக்களுக்கு விரோதமான அரசு - பிறப்பின் அடிப்படையில் உயர்நிலையிலும், கல்வி - வேலை வாய்ப்புகளிலும் பாதிக்கும் மேலான  இடங்களை வைத்திருக்கக் கூடியவர்களுக்கான ஆட்சி என்பதை மறக்க வேண்டாம். 

2024 தேர்தலில் இன்றைய பாசிச பிஜேபி ஆட்சியை ஒழிக்காவிட்டால் - எதிர்காலம் என்பது சமூக அநீதிக் கொடி என்ற வல்லாண்மையின் கீழ் - பெரும்பாலான மக்கள் உரிமைகளை இழந்து அல்லல் பட வேண்டிய ஆபத்து காத்திருக்கிறது.

எச்சரிக்கை! எச்சரிக்கை!


No comments:

Post a Comment