காசிக்குப் போன தந்தை பெரியார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 12, 2023

காசிக்குப் போன தந்தை பெரியார்

தந்தையார் கண்டிப்புக்கு அஞ்சி, வீட்டை விட்டு வெளியேறி துறவுக் கோலம் பூண்டு, விஜயவாடா, காசி, கல்கத்தா முதலிய இடங்களில் சுற்றித்திரிந்து பரந்த அனுபவம் பெற்றார். புரோகிதப் பார்ப்பனர்களின் சுயநலம், கயமை, வைதிகத்தின் பொய்மை ஆகியவற்றை நேரில் கண்டுணர்ந்து தெளிவு பெற்றார்.

தந்தையாரால் அழைத்து வரப்பட்ட அவர், "ஈ.வெ.இராமசாமி நாயக்கர் மண்டி" என்று தன் பெயரிலேயே வாணிபம் நடத்தினார். அவரது பொது வாழ்க்கையின் அனுபவத்தை கட்டுரை விவரிக்கிறது.

பெரியாருக்கு வயது 25. ஒரு சமயம் அப்பா மீது வந்த கோபத்தில் காசிக்குப் போய் சாமியாராக முடிவு செய்தார். பெரியார் வீட்டை விட்டுப் புறப்பட்டுவிட்டார். பெரியார் பெஜவாடா எனும் ஊருக்குப் போய்ச் சேர்ந்தார். அவர் தங்கக் காப்பு, கொலுசு, காதில் கடுக்கன், சங்கலி, மோதிரங்கள், தங்க அரைஞாண் முதலியன அணித்திருந்தார். பெஜவாடாவில் அவருக்கு இரண்டு தமிழ்நாட்டு பார்ப்பனர்கள் பழக்கமாகினர். மூவரும் சேர்ந்து அய்தராபாத் சென்றனர். அங்கு அரிசி, காசு பிச்சையெடுத்து சமைத்துச் சாப்பிட்டனர். பெரியாருக்கு அவர்களுடன் அடிக்கடி வாதங்கள் ஏற்படும். பெரியாரின் பேச்சு எல்லோரையும் கவர்ந்தது. அய்தராபாத் சமஸ்தானத்தில் வேலை பார்க்கும் முருகேச முதலியார் என்பவர் மூவருடைய விவாதங்களையும் கவனித்தார். பெரியாரின் பேச்சுத்திறமை அவருக்குப் பிடித்திருந்தது. மூவரையும் தன் வீட்டில் தங்க வைத்தார். ஆனால், அம்மூவரும் பிச்சையெடுப்பதை விடவில்லை. முருகேச முதலியார் அதை அறிந்து தடுத்தார். அங்குள்ள தமிழர்களிடமிருந்து பண உதவி பெற்றுத் தந்தார். அந்த நேரத்தில் உதவியவர்களில் ரங்கநாதம் நாயுடு முக்கியமானவர். அவர் வீட்டில்தான் கதாகாலட்சேபமும், அதில் பெரியாரின் கேள்விகளும் கொண்ட நிகழ்ச்சி நடைபெறும். பெரியாரை இந்த பார்ப்பனர்களுடன் காசிக்குப் போகவேண்டாம். உயிருக்கு ஆபத்து வரும் என்று எச்சரித்தார் முருகேச முதலியார்.

பெரியார் சம்மதிக்கவில்லை. 'நகைகளையாவது கழற்றித் தந்துவிட்டுப் போ, திரும்பி வந்து வாங்கிக்கொள்' என்று முருகேசன் சொன்னார். முதலில் பெரியாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. பிறகு துணிந்து நகைகளைக் கழற்றி சோப்புப் பெட்டிக்குள் வைத்து விவரமும் எழுதிக் கொடுத்தார்.

பெரியார் ஒரு ஒன்றரைப் பவுன் மோதிரத்தை மட்டும் அரைஞாண் கயிற்றில் கட்டி வைத்துக்கொண்டார். மூவரும் காசி வந்து சேர்ந்தனர். அந்தப் பார்ப்பனர்கள் பெரியாரைப் பிரிந்து விட்டனர்.

காசியில் அவர்களுக்கு எளிதாகச் சோறு கிடைத்தது. பெரியாருக்குச் சோறு கிடைக்கவில்லை. பல நாள் பட்டினி. அவர் கையில் காசு கிடையாது. பசியைத் தாங்க முடியவில்லை. ஒரு சாப்பாடு சத்திரத்திற்குள் நுழைய முயன்றார். சத்திரத்தில் பார்ப்பன ஜாதியினருக்குத்தான் இலவசமாக சாப்பாடு கிடைக்கும். இவர் பார்ப்பனர் அல்ல என்பதைக் கண்ட காவலாளி பெரியாரை வெளியே தள்ளினான். அப்போது எச்சிலைகளை வெளியே கொண்டு வந்து எறிந்தனர். பெரியார் பார்த்தார். பசிக்கொடுமை, எச்சிலை அருகில் ஓடினார். சட்டமாக அமர்ந்தார். எச்சிலையிலிருந்து சோற்றை வழித்து சாப்பிட்டார். இடுப்பில் ஒன்றரைப் பவுன் மோதிரமிருக்க பெரியார் இச்செயலைச் செய்தார்.

பிறகு காசியில் பெரியார் வேலை தேடினார். ஒன்றும் கிடைக்கவில்லை. எடுத்தார். தாடி, மீசையை மொட்டையடித்துக் கொண்டு சாமியாரானார். காசியில் பெரியாருக்கு ஒரு மடத்தில் வேலை கிடைத்தது. பெரியாருடைய வேலை பூசைக்காக வில்வ இலை பறிக்க வேண்டும். விளக்குப் போட வேண்டும். இந்தக் காரியங்களை அதிகாலையில் குளித்து உடம்பில் திருநீறு அணிந்து செய்ய வேண்டும். பெரியாருக்கு அதிகாலையில் எழுந்து குளிப்பது கஷ்டமாக இருந்தது. ஒரு நாள் குளிக்காமல் திருநீறு பூசிக்கொண்டு பூசைக்கு வந்தார். இப்படிப் பலநாள் செய்தார். ஒரு நாள் உண்மை தெரிந்தது. வேலையிலிருந்து விரட்டப்பட்டார்.

பெரியார் மறுபடியும் பிச்சை எடுத்தார். சாமியார் வாழ்க்கையை வெறுத்தார். சாமியார்களிடம் இருந்த ஒழுக்கக் குறைவு பெரியாருக்குப் பிடிக்கவில்லை. மோதிரத்தை விற்றார். பணத்துடன் காசியை விட்டுப் புறப்பட்டார். எல்லூரில் உள்ள நண்பர் வீட்டுக்கு வந்து சேர்ந்தார். அங்கு ஒரு மாதம் தங்கினார். இதற்குள் ஈரோட்டில் என்ன நடந்தது தெரியுமா? பெரியாரை ஊர் ஊராகத் தேடினார்கள்.

பெரியாரின் தந்தை நண்பர்களுக்கு கடிதம் எழுதினார். ஒன்றும் பயனில்லை. 'ஒரு பிள்ளையை இழந்தோம்' என்ற முடிவுக்கு வந்துவிட்டார். இதேகாலத்தில் எல்லூரில் ஒரு வேடிக்கை நடந்தது. கடைத் தெருவுக்குப் போன பெரியாரின் வாய் சும்மா இருக்கக் கூடாதா? அவருக்கு இருந்த வியாபார உணர்ச்சி காரணமாக ஒரு கடையில் எள்ளின் விலையை விசாரித்தார். கடைக்காரர் பெரியாரின் தந்தைக்கு தகவல் அனுப்பினார். 'உங்கள் மகன் கடைக்குவந்து விலையை விசாரித்துவிட்டு சும்மா போனது நியாயமா? என்று.'

வெங்கட்ட நாயக்கர் உடனே எல்லூர் வந்து சேர்ந்தார். மகனை வீட்டுக்கு அழைத்தார் பெரியாரும் சம்மதித்தார். முருகேச முதலியாருக்கு தந்தி போயிற்று. நகைகள் வந்து சேர்ந்தன. நகைகளைப் பார்த்த தந்தை, 'நீ இவ்வளவு காலம் எப்படி சாப்பிட்டாய்? நகைகளை விற்கவில்லையா?' என்று ஆச்சரியப்பட்டார். 'ஈரோட்டில் நாம் போட்ட தருமத்தை நான் வசூல் செய்துவிட்டேன்' என்றார் பெரியார். ஒரே சிரிப்புதான்.

பெரியாரின் பொது வாழ்வு

ஒரு சமயம் ஈரோடு நகரம். 'பிளேக்' நோயால் பாதிக்கப்பட்டது. 'பிளேக்' நோய் கொடியது. நோய் வந்தவர்கள் செத்து மடிய வேண்டியதுதான். 'பிளேக்' நோய் தொற்றுநோய், எளிதாக தொற்றிக் கொள்ளும். விரைவாக பரவும். நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்களும் உடனே இறந்துவிடுவர். ஈரோட்டில் 'பிளேக்' நோயால் ஆயிரக்கணக்கானவர் மடிந்தனர். அதனால் மக்கள் பயந்தனர். இறந்து போனவர்களை புதைக்கக்கூட யாரும் முன்வரவில்லை. அவரவர் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள ஓடி ஒளிந்தனர். பணக்காரர்கள் தங்களைக் காத்துக்கொள்ளும் பொருட்டு அனைவருக்கும் முந்தி ஓடிவிட்டனர். போக்கிடமில்லாத ஏழை மக்களே ஊரில் தங்கி பயந்து நடுங்கிக் கிடந்தனர். யாரும் அவர்களுக்கு உதவிட தைரியமாக முன்வரவில்லை.

நம் பெரியார் அஞ்சவில்லை. நண்பர்களைத் திரட்டினார். ஏழை மக்களுக்கு விரைந்து உதவிகளைச் செய்தார். பெரியாரே பிணங்களைச் சுமந்து சென்று அப்புறப்படுத்தினார். பெரியாரை எல்லோரும் புகழ்ந்தனர். அவருடைய தைரியத்தைப் பாராட்டினர். இப்படி பெரியாரின் பொது வாழ்வு  தொடங்கியது.

No comments:

Post a Comment