அறிவியல் மனப்பான்மை நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் கருத்துரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, August 21, 2023

அறிவியல் மனப்பான்மை நாள் கருத்தரங்கில் தமிழர் தலைவர் கருத்துரை

 பகுத்தறிவுக் கருத்துகளை எளிமையான முறையில் எடுத்துக்காட்டி மக்கள் மத்தியில் பதிவு செய்தவர் தந்தை பெரியார் 
குழந்தைகளை வளர்க்கும் போது அறிவுக்குத் தடை போடாதீர்கள்

சென்னை, ஆக.21 பகுத்தறிவுக் கருத்துகளை எளிமையான முறையில் எடுத்துக்காட்டி மக்கள் மத்தியில் பதிவு செய்தவர் தந்தை பெரியார்  என்றார் ஆசிரியர். 

அறிவியல் வளர்க்க ஆயுளைக் கொடுத்த டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களின் நினைவு நாளை முன்னிட்டு "அறிவியல் மனப்பான்மை நாள்" கருத்தரங்கம் பகுத்தறி வாளர் கழகத்தின் சார்பில் சென்னை தேவநேயப் பாவாணர் அரங்கத்தில் நேற்று (20.08.2023) மாலை 6 மணிக்கு நடைபெற்றது.

வேண்மாள் நன்னன் வரவேற்புரை

மூடநம்பிக்கையைப் பற்றி தந்தை பெரியார் சொன்ன கருத்துக்களை கூறி, தொடர்ந்து விழிப்புணர்வு பிரச்சாரத்தை நாடெங்கும் நடத்த வேண்டும் என்ற தமிழர் தலைவர் ஆசிரியரின் கட்டளைக்கு ஏற்ப தமிழ்நாடு முழுவதும் பகுத்தறிவாளர் கழகம் இந்த கருத்தரங்கத்தை நடத்துகிறது என்ற செய்தியோடு வருகை தந்த அனைவரையும் வரவேற்று பகுத்தறிவாளர் கழகத்தின் துணைத் தலைவர் வேண்மாள் நன்னன்  வரவேற்புரை ஆற்றினார்.

வடமாநிலத்தில் செய்ய முடியாததை தமிழ்நாட்டில் செய்வதற்கு எங்களுக்கு வழிகாட்டக்கூடிய ஆசிரியருக்கு நன்றி!
- இரா. தமிழ்ச் செல்வன்

மிக குறுகிய காலத்தில் சிறப்பான நிகழ் வினை ஏற்பாடு செய்து தலைமையேற்ற பகுத் தறிவாளர் கழகத்தின் மாநில தலைவர் இரா. தமிழ்ச்செல்வன் தலைமை உரை ஆற்றினார். 

அவரது உரையில்: 

டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்களு டைய நினைவு நாளை முன்னிட்டு தொடர்ந்து பத்து நாள்கள் கருத்தரங்கம், தெருமுனைக் கூட்டங்கள், மந்திரமா? தந்திரமா?  என்று 58 இடங்களில் இது போன்ற அறிவியல் நிகழ்ச்சிகளை நடத்த இருக்கிறோம் என்றும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் மக்களிடம் இந்த அறிவியல் கருத்துக்களை எடுத்துச் செல்ல வேண்டும், எல்லா மாவட்டங்களிலும் இது நடத்தப்பட வேண்டும் என்று சொன்னதற்கு இணங்க இந்த நிகழ்ச்சிகளை ஒருங்கிணைத் திருக்கிறோம் என்றார். 

மேலும் டாக்டர் நரேந்திர தபோல்கர் அவருடைய மகன் அமீர் தபோல்கர்  தன்னிடம் தொலைபேசியில் பேசியபோது தமிழர் தலைவர் அவர்களைப் பற்றி விசாரித்துவிட்டு, இது போன்ற நிகழ்வுகளை இந்திய அளவில் நாங்கள் செய்ய முடியாததை தமிழ்நாட்டில் சாதாரணமாக செய்து கொண்டிருக்கிறீர்கள் என்று ஆச்சரியப் பட்டதை பதிவு செய்தார்.

வடமாநிலத்தில் செய்ய முடியாததை தமிழ் நாட்டில் செய்வதற்கு எங்களுக்கு வழிகாட்டக் கூடிய ஆசிரியருக்கு நன்றி என்றார். அரசமைப் புச் சட்டம் சொல்லக்கூடிய கடமையான அறி வியல் மனப்பான்மையை வளர்ப்பது என்பது அனைவருக்கும் தேவையான ஒன்று என்றும், "நாம் இன்று தான் மனிதர்களுடைய கழகத்தை தோற்றுவித்திருக்கிறோம்" என்று பகுத்தறிவாளர் கழகத்தை தோற்றுவித்த போது தந்தை பெரியார் அவர்கள் கூறியதை நினைவுப்படுத்தி, இன் றைக்கு பிஜேபி ஆட்சியில் எல்லா வகை யிலும் மூடநம்பிக்கையைப் பரப்ப அவர்கள் தயாராக இருக்கிறார்கள். அதை முறி யடிக்க இது போன்ற பல நிகழ்வுகளை நாம் ஒருங்கிணைக்க வேண்டும்; அந்த வேலையை பகுத்தறிவாளர் கழகம் நிச்சயம் செவ்வனே செய்யும் என்று கூறி தலைமை உரையை நிறைவு செய்தார்.

சட்டம் வருவதற்கு முன்பே சமூக மாற்றங்களை தோள் மீது போட்டுக் கொண்டு செய்தவர்கள் பெரியார் தொண்டர்கள் 
- வீ. குமரேசன் -

நிகழ்வில் தொடக்க உரையாற்றிய கழகத் தின் பொருளாளர்  வீ.குமரேசன் அவர்கள் தனது உரையில்; 

Federation of Indian Rationalist Association   என்ற ஓர் அமைப்பு எப்படி இயங்குகிறது என்றும், இந்திய அளவில் இருக்கக்கூடிய பகுத்தறிவு பேசும் அமைப்புகளும் அதில் அங்கம் பெற்று இருக்கின்றன. அதில் நம்முடைய பகுத்தறிவாளர் கழகமும் இருக்கிறது, நரேந்திர தபோல்கர் அவர்களுடைய மூடநம்பிக்கை ஒழிப்பு அமைப்பும் அங்கமாக இருக்கிறது என்ற செய்தியையும் கூறி தனது உரையை தொடங்கினார்.  2006 ஆம் ஆண்டு இந்த அமைப்பினுடைய மாநாட்டிற்கு புனே சென்றபோது அங்கே அந்த மாநாட்டினை ஒருங்கிணைத்து நடத்தியவர் நரேந்திர தபோல்கர் என்றும், மூடநம்பிக்கையை ஒழிப்பதற்காக, மூடநம்பிக்கை ஒழிப்பு சட்டத்தை கொண்டு வருவதற்காக வாழ்நாள் முழுவதும் போராடிய அவர், அந்த சட்டம் நிறைவேறும் தருணத்தில் உயிரோடு இல்லை என்றார். 

அவருடைய மறைவுக்குப் பிறகு அவரின் அமைப்பின் சார்பில் டாக்டர் நரேந்திர தபோல்கர் விருது அவரைப் போலவே மூடநம்பிக்கையில் உறுதியாக இருந்து, அறிவியல் மனப்பான்மையை வளர்க்கக் கூடியவர்களுக்கு வழங்கப்படுகிறது.

அப்படி அவர்கள் வழங்க முடிவு செய்தவுடன் அந்த விருதை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களுக்குத் தான் வழங்கினார்கள் என்றும்,  அது கரோனா காலகட்டம். காணொலி நிகழ்ச்சியில் ஆசிரியர் அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் தொகை வழங்கப்படுகிறது என்று அறிவித்தபோது, அப்போதே அதனை நரேந்திர தபோல்கர் அமைப்புக்கே நன்கொடையாக வழங்கியவர் ஆசிரியர் என்றார். மேலும் Article 51A(h) என்ற அரசமைப்புச் சட்ட பிரிவு சட்டத்தில் இடம் பெறுவதற்கு முன்பே அதை ஏற்றுக்கொண்டு பிரச்சாரம் செய்த இயக்கம் பகுத்தறிவாளர் கழகம் என்றும், சட்டம் வருவதற்கு முன்பே சமூக மாற்றங்களை தோள் மீது போட்டுக் கொண்டு செய்தவர்கள் பெரியார் தொண்டர்கள் என்றார். இளைய தலைமுறையினரிடம்,  மாணவர்களிடம் இத்தகைய கருத்துகளை கொண்டு போய் சேர்க்கும் பணி நமக்கு இருக்கிறது. நிச்சயம் ஆசிரியரின் நோக்கம் நிறைவேறும் என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.

திறந்த மனதுடன் இருப்பதுதான் அறிவியல்; பெரியார் அப்படிதான் இருந்தார்!
- மருத்துவர் கணேஷ் வேலுச்சாமி

நிகழ்வில் "அறிவியலும் போலி அறிவியலும்" என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார் மருத்துவர் கணேஷ் வேலுச்சாமி.  தமது உரையில் ; ஒவ்வொரு இந்திய குடிமகனின் உரிமை மட்டுமல்லாது அறிவியலை பரப்புவது என்பது கடமை என்று கூறி, இந்திய அரசமைப்புச் சட்டத்தில் இருக்கக்கூடிய வார்த்தைகளான Scientific temper, Humanism, Inquiry and reform என்பதற்கான விளக்கங்களை எடுத்துரைத்தார். 

நாம் எந்தப் பணியில் இருந்தாலும் மருத்துவராக இருந்தாலும் சரி, பொறியாளராக இருந்தாலும் சரி, ஒரு குடிமகனாக இருந்தால் மேற்சொன்ன காரியங்களை நிச்சயம் செய்ய வேண்டும் என்றார். அறிவியல் என்பது செயல்முறை என்றும் ஏன், எதற்கு என்று கேள்வி கேட்பது அறிவியல் என்றார். குழந்தைகள் கேள்வி கேட்டால் அதற்குத் தடை விதிக்காமல், தெரிந்தால் பதில் கூற வேண்டும் இல்லை என்றால் ஆய்வுக்கு உட்படுத்தி பதிலை தெரிந்து கொள்ள வேண்டும் என்றார். தொடர்ந்து எவையெல்லாம் இங்கே போலி அறிவியலாக  (Pseudo Science)  நிறைய மக்களால் பரப்பப்படுகிறது என்பதை விளக்கினார். 

குறிப்பாக மழை பெய்தல், மழை பெய்வதற்கு யாகம் நடத்துதல், கரோனா நேரத்தில் நடந்த அறிவியலுக்கு புறம்பான செயல்கள், ஜோசியம், ஜாதகம் போன்ற போலி அறிவியல்களை விளக்கினார். அறிவியல் மனப்பான்மையோடு இருப்பது என்பது, யார் சொன்னாலும் உன் அறிவுக்கு எது சரியானதோ அதை ஏற்றுக் கொள்வது தான் என்றும், அதை சொன்ன பெரியார், அதற்கு முன் அதை எடுத்துரைத்த புத்தர் ஆகியவர்களின் வார்த்தைகளை மேற்கோள் காட்டினார். 

மூடநம்பிக்கைகளை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக அறிவியல் என்ற பெயரை பயன்படுத்துகிறார்கள். ஆனால் அது அனைத்துமே போலி அறிவியல் என்றும், தவறு செய்தால், தவறான கருத்தை கூறினால் அதைத் திருத்திக் கொள்வது தான் சரி என்றும், அப்படி திறந்த மனதுடன் இருப்பது தான் அறிவியல். அப்படி தான் தந்தை பெரியார் இருந்தார் என்று கூறி நிறைவு செய்தார்.

சமூக சீர்திருத்தக் குழு மீண்டும் செயல்பட வேண்டும்!
- கவிஞர் கலி. பூங்குன்றன்

நிகழ்வில் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி பூங்குன்றன் அவர்கள் கருத்துரை வழங்கினார்.

அவரது உரையில்;

மதவெறியர்களால் நான்கு சமூக சீர்திருத்தவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். சுட்டுக்கொன்றவர்கள் சுதந்திரமாகத் திரிகிறார்கள் அதற்கு பெயர் தான் சுதந்திர நாடு என்றும், எப்படி பிஜேபி அரசு மதவெறியர்களுக்கு பாதுகாவலராக இருக்கிறது என்பதை விவரித்தார். வரலாற்றில் எல்லா கண்டுபிடிப்பின் தொடக்கத்திலும் சமூக சீர்திருத்தவாதிகள் தண்டிக்கப்பட்டார்கள் ஆனால் முடிவில் அவர்களது கண்டுபிடிப்புகளே சரி என்று ஆனது என்பதை விளக்கி அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு கலிலியோ என்றார். கருநாடகாவிலும் மகாராட்டிராவிலும் மூடநம்பிக்கை ஒழிப்புச் சட்டங்கள் இயற்றப்பட்டு இருக்கின்றன. தமிழ்நாட்டிலும் கூட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களால் சமூக சீர்திருத்தக் குழு ஒன்று அமைக்கப்பட்டு அதற்கு தலைவராக புலவர் மா. நன்னன் அவர்களும் அதில் பேராசிரியர் சுப.வீ போன்றவர்கள், நானெல்லாம் உறுப்பினராக இருந்தோம், என்ன காரணத்திற்காகவோ அது தடைப்பட்டு விட்டது. ஆனால், இந்த 'திராவிட மாடல்' அரசு மீண்டும் அதை செயல்படுத்த வேண்டும் என்று கோரிக்கையையும் முன் வைத்தார்.

பகுத்தறிவு என்பது அறிவு நாணயம்!

மேலும், தந்தை பெரியார் எவ்வளவு எளிமையாக மக்களிடம் கடவுள் மறுப்பை எடுத்துக் கூறினார் என்பதை பல்வேறு சான்றுகளுடன் விளக்கி பகுத்தறிவு என்பது அறிவு நாணயம் என்றார். சராசரி வாழ்க்கையில் யாருமே கடவுளை நம்புவதே கிடையாது என்றும், ஒரு மனிதன் தனது வாழ்வில் நல்ல நேரம், கெட்ட நேரம், பண்டிகை செலவு, திருவிழா, குளிகை என்று 180 நாள்களை செலவழிக்கிறான் என்ற ஆய்வு தகவலை கூறி, கடவுள் மறுப்பு கொள்கையோடு இருப்பவர்களுக்கு 180 நாள்கள் லாபம் என்றார்.

கருத்து பலம் இல்லாதவர்கள் ஆயுதத்தை தூக்குகிறார்கள்!
- தமிழர் தலைவர் ஆசிரியர் சிறப்புரை

கருத்தை கருத்தால் எதிர்கொள்ள முடியாதவர்கள், கருத்து பலம் இல்லாதவர்கள் ஆயுதத்தை தூக்குகிறார்கள் என்றார். அதற்கு சான்று தான்  கருத்தோடு எதிர் கொள்ள முடியாதவர்கள்தான் ஆசிரியர்மீது கொலை வெறித் தாக்குதல் நடத்தினார்கள் என்பதை விவரித்தார். எனவே, இந்த பகுத்தறிவு பிரச்சாரப் பணி என்பது கடுமையான பணி; உயிரை பணயம் வைத்து செய்யக்கூடிய பணி தான். ஆனால் மக்கள் மீதுள்ள மனிதநேயத்தாலும், பகுத்தறிவு தேவை என்ற காரணத்தினாலும் அந்தப் பணியை நாம் செய்து கொண்டிருக்கிறோம் என்றார். தந்தை பெரியாரின் கூர்மையான பார்வை எப்படி இருந்தது என்பதை விவரித்து பக்தி வந்தால் புத்தி போகும்; புத்தி வந்தால் பக்தி போகும். இதைவிட எளிமையாக எப்படி ஒருவரால் பகுத்தறிவை விளக்க முடியும் என்றார். இறுதியாக மனிதன் தானாக பிறக்கவில்லை எனவே தனக்காக மட்டுமே வாழக்கூடாது என்ற பெரியாரின் வார்த்தைகளை கூறி, நாம் எத்தனையோ தலைவர்கள் எழுதியதை படித்திருக்கிறோம்; ஆனால் இது போல் வார்த்தைகள் இருக்குமா என்பது தெரியவில்லை என்று கூறி தமது உரையை நிறைவு செய்தார்.

குழந்தைகளை வளர்க்கும் போது அறிவுக்குத் தடை போடாதீர்கள்!

நிகழ்வில் சிறப்புரையாற்றிய தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள், நம்மையெல்லாம் மனிதர்களாக்கும் பணியைத் தான் தந்தை பெரியார் செய்தார் என்றும், உடலால் மனிதர்களாக இருப்பவர்களை உள்ளத்தால் மனிதர்கள் ஆக்கும் பணியே நமது பணி என்றார். எண்ணிக்கை குறைச்சலாக இருக்கிறோம் என்று யாராவது கேள்வி கேட்டால் "ஆம் அறிவாளிகள் குறைச்சலாகத் தான் இருப்பார்கள்; நோபல் பரிசு வாங்கக் கூடியவர்கள் குறைவாகத் தான். இருப்பார்கள் அதற்காக அது தகுதியற்ற பரிசாக ஆகிவிடுமா?" என்று அனைவரையும் சிந்திக்கத் தூண்டும் வகையில் கூறினார். வரலாற்றில் மதத்தை அறிவியல் மண்டியிடச் செய்தது மட்டுமல்லாமல் மன்னிப்பும் கேட்க செய்திருக்கிறது என்றார். தந்தை பெரியார் அவர்கள் எவ்வளவு எளிமையாக இந்த கருத்தை மக்களிடத்தில் கொண்டு போய் சேர்த்தார் என்றும், டாக்டர் நரேந்திர தபோல்கர் அவர்கள் தனது வாழ்நாளில் இந்த அறிவியல் மனப்பான்மையை பரப்புவதற்கு என்னவெல்லாம் செய்தார் என்பதை அவர் எழுதிய புத்தகத்தின் வாயிலாகவும் எடுத்துரைத்தார். அரசமைப்புச் சட்டக் கடமையை செய்ததற்கு தண்டனை உயிர் பலியா? என்று கேள்விக்கணைகளை தொடுத்தார். குற்றம் செய்தவர்கள்  ஆர்.எஸ் எஸ் பிரிவை சார்ந்தவர்கள் என்பது தெரிந்தும் அவர்களை தண்டிக்காமல் இருப்பது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை எடுத்துக் கூறி, வந்திருக்கக் கூடியவர்களுக்கு ஒரு வேண்டுகோளை விடுத்தார். குழந்தைகளை வளர்க்கும் போது அறிவுக்குத் தடை போடாதீர்கள் என்றார்.

இவ்வளவு எளிமையாக பகுத்தறிவு கருத்துக்களை, அறிவியல் செய்திகளை பேச முடியுமா என்ற வியப்பில் வந்திருந்த கூட்டத்தினர் ஆசிரியரின் உரையை ரசித்துக் கேட்டு மகிழ்ந்தனர்.

நிகழ்வின் இறுதியில் வருகை தந்த அனைவருக்கும் பகுத்தறிவாளர் கழகத்தின் பொதுச்செயலாளர் ஆ.வெங்கடேசன்   நன்றி கூறினார். மிக சிறப்பான முன்னுரையோடும், ஒவ்வொருவர் பேசும் முன்பும் ஒரு வரலாற்றுக் குறிப்பையும் கூறி நிகழ்வில் பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் துணைச் செயலாளர் செல்வ. மீனாட்சி சுந்தரம் இணைப்புரை வழங்கினார்.


No comments:

Post a Comment