வாழ்வின் சம தராசு தட்டுகள் அவசியம்
உச்சநீதிமன்றத்தில் உள்ள இந்தியாவின் தலைமை நீதிபதி மாண்பமை ஜஸ்டீஸ் டி.ஓய். சந்திரசூட் அவர்கள் நுண்மாண் நுழைபுலம் பெற்ற சிறந்த சட்ட நிபுணர் மட்டுமல்ல; தேர்ந்த மனிதநேயர்.
மகளிர் உரிமை, மனித உரிமைகளைப் பொறுத்தவரை வழக்குகளில் சுதந்திரத்துடன், அது மாறுபட்ட கருத்தானாலும் - தீர்ப்புகளைத் தருவதற்கு சற்றும் தயங்காத நேர்மைமிக்க ஜனநாயகத்தில், அரசமைப்புச் சட்டத்தினைப் பாதுகாக்கும் கடமையைத் தவறாது ஆற்றி வருபவர்.
இரண்டு நாட்களுக்கு முன், பெண்கள் தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தில், 31ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு அவர் நிகழ்த்திய உரையில் மிக அருமையான ஒரு கருத்தினை பாலியல், சமூகநீதி பற்றிய யதார்த்த நிலையை மிகத் துல்லியமாக, அவரது வாழ்க்கை அனுபவத்திலிருந்தே பட்டம் பெற்றவர்களுக்கு சிறப்பாக எடுத்துரைத்தார்.
அந்த பட்டமளிப்பு விழா பேருரையில் ஒரு சுவையான நிகழ்வையும் கூறி, பட்டதாரி இளைஞர்களை - பால் வேறுபாடின்றி சிந்திக்க வைத்துள்ளார்.
மறைந்த தனது மனைவிபற்றி நினைவு கூர்ந்த தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட் அவர்கள்,
"மறைந்த எனது மனைவி, வக்கீல் தொழில் செய்தார். அவர் ஒரு சட்ட நிறுவனத்துக்கு வேலைக்கு சென்றார். "இங்கு பணி நேரம் என்ன?" என்று அவர் கேட்டிருக்கிறார். அதற்கு அங்கே சொல்லப்பட்ட பதில், "வாரத்தில் ஏழு நாளும், 24 மணி நேரமும் பணியாற்ற வேண்டும். 365 நாள்களும் பணி நாள்கள்தான்" என்பதாகும்.
அப்போது அவர், "குடும்பத்தில் இருப்பவர்களுக்காக நேரம் ஒதுக்க வேண்டாமா?" என்று கேட்டிருக்கிறார். அதற்கு அங்கே "வீட்டு வேலைகள் செய்யக் கூடிய ஒரு கணவரை கண்டுபிடித்துக் கொள், குடும்பத்துக் கெல்லாம் நேரம் கிடையாது" என்று சொல்லி இருக்கிறார்கள்.
ஆனால் இப்போது நிலைமை மாறி விட்டது.
கடந்த ஆண்டு, எனக்கு இருந்த 5 கிளார்க்கு களில் 4 பேர் பெண்கள். அப்படியிருக்கிறபோது அவர்கள் என்னை தொலைபேசியில் அழைத்து "சார் எனக்கு இன்று பீரியட்ஸ்" என்பார்கள். நான் அப்போது அவர்களிடம், அப்படியென்றால் "தயவு செய்து வீட்டிலிருந்து வேலை செய்யுங்கள். உங்கள் உடல் நலத்தைப் பார்த்துக் கொள் ளுங்கள்" என்று சொல்லி இருக்கிறேன். இப்படிப் பேசிக் கொள்வது முக்கியமான ஒன்று. இப்படிப் பட்ட பிரச்சினைகளே இல்லை என்று நாம் நடித்து விட முடியாது" என்று குறிப்பிட்டுள்ளார்.
இதைப் படிக்கும் பல ஆண்கள் "இப்படியும் வீட்டு வேலை, குடும்பத்தைப்பற்றி மட்டும் கவனித்து, வேலைக்குப் போகும் தமது வாழ்க்கைத் துணைவிகளுக்கு வீட்டில் உதவி செய்வதற்கு குடும்பத் தலைவர் அல்லது குடும்ப உறுப்பினர், ஆண்கள் இருப்பார்களா என்ன? இப்படி அந்த நிறுவனத்தவர் கூறியுள்ளார்களே?" என்று நினைக்கக் கூடும்.
நம் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்குச் சென்ற நண்பர்கள் பலரும் தங்கள் குடும்பங்களில் பெண்கள் வேலைக்குச் சென்றபோது, குழந்தைகளைக் கவனித்துக் கொள்வது, உணவு சமைத்து வைத்தல் மற்றும் தங்கள் வீட்டு வேலைகளைச் செய்தல் முதலியவற்றை சற்றும் தயக்கமின்றி செய்து வருவதை நேரிலும் பார்த்து அவர்களைப் பாராட்டியுமுள்ளேன்.
"பெண்களைப் படிக்க வைத்து முன்னேறச் செய்ய வேண்டும். படித்த பெண்களை வேலைக்கு அனுப்பி அவர்களுக்குப் பொருளா தார சுதந்திரம், வாய்ப்பு ஏற்படுத்துவது முக்கியம்" என்கிறோம். அதற்கென உத்தியோகங்களில் இடஒதுக்கீடும் தருகிறோம். பெருமைதான்! சமூக சமத்துவம், சமூக அதிகாரப் பகிர்வு (Equality for Women; Empowerment of Women) இரண்டும் நிறைவேற்றப்படுவது மகிழ்ச்சிதான்!
ஆனால், அந்தப் பெண்களே வேலை யிலிருந்து வீட்டிற்குத் திரும்பி சமையல், பரிமாறுதல், குழந்தை பராமரிப்பு, வீட்டின் தூய்மைப் பணி முதல் அனைத்தையும் செய்வது கூடுதல் சுமையல்லவா?
இதை ஏன் சிந்திப்பதில்லை என்ற கேள்விக்கு நம் நாட்டில் விடையே கிடைக்காது!
அது மட்டுமா? அலுவலகத்தில் அதிகாரி ஒரு "எஜமானர்". வீட்டிற்குத் திரும்பியவுடன் அங்கே கணவர் அல்லது மாமியார் - மாமனார் வகையறா இன்னொரு எஜமானர். இப்படி ஒவ்வொரு வரையும் திருப்திப்படுத்துவதற்காக எவ்வளவு படாதபாடு! 'தாளம்'படுமோ 'தறி'படுமோ என்ற அழு குரலை அடக்கிய குமுறல் தானே கேட்கிறது.
மகளிர் வாய்ப்பு சிறப்புடன் அமைய ஆண் ஆதிக்க மனப்பான்மை இறங்கி வந்து, Earning இரண்டாவது, Sharing முதலாவது என்ற உணர்வை நெஞ்சில் ஏந்தி நாம் நடந்து காட்டுவது மிக மிகத் தேவையானது ஆகும்.
"சுயமரியாதை வாழ்வே சுகவாழ்வு"
இருபுறமும் ஒத்துழைதல் அவசியம்.
No comments:
Post a Comment