காவிரி நதிநீர்ப் பகிர்வு பிரச்சினை தமிழ்நாடு - கருநாடகம் இடையே பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது. காவிரி நதிநீர் தீர்ப்பாயம் கடந்த 2007இல் அளித்த இறுதித் தீர்ப்பை மாற்றி யமைத்து தமிழ்நாட்டுக்கு மாதந் தோறும் காவிரியில் கருநாடகம் திறந்து விட வேண்டிய பங்கீட்டு நீரை உறுதிப் படுத்தும் வகையில், காவிரி நீர் மேலாண்மை வாரியம், காவிரி நீர் ஒழுங்காற்றுக் குழு ஆகியவை அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அதன்படி காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பாக பிரச்சினைகளை காவிரி நீர் மேலாண்மை ஆணையம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் நடப்பு ஆகஸ்ட் மாதத்துக்கான நதிநீர்ப் பங்கை கருநாடகம் வழங்க மறுத்து வருவதாகக் கூறி உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கடந்த 14-ஆம் தேதி புதிய மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த வழக்கின் விசாரணை உச்ச நீதிமன்றத்தில் 25.8.2023 அன்று நீதிபதிகள் பி.ஆர் கவாய், நரசிம்மா மற்றும் பி.கே.மிஸ்ரா ஆகியோர் அடங்கிய அமர்வின் முன்பு நடை பெற்றது.
அப்போது காவிரி நீர் மேலாண்மை ஆணையம் இதுகுறித்து விரிவான அறிக்கை தர நீதிபதிகள் உத்தர விட்டுள்ளனர்.
தற்போது காவிரி நீர் இருப்பு, மழைப் பொழிவு உள்ளிட்ட விவரங்களையும் காவிரி ஆணையம் வழங்கிய உத்தரவை கருநாடகம் செயல்படுத்தியதா என்பதையும் செப். 1ஆம் தேதிக்குள் விளக்க மாக அறிக்கை அளிக்க உத்தரவு பிறப்பித்து அன்றைய தினத்துக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
மேலும் காவிரி மேலாண்மை ஆணையக் கூட்டத்தை வருகிற ஆக. 28 ஆம் தேதிக்குள் நடத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டது.
No comments:
Post a Comment