ஆசிரியர் விடையளிக்கிறார் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, August 19, 2023

ஆசிரியர் விடையளிக்கிறார்

கேள்வி 1 : ஜாதிக் கயிறு அணிவதற்குத் தடை விதித்த போது அதற்குக் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து அந்தத் தடையாணையை திரும்பப் பெறவைத்த பாஜகவினர் பள்ளிகளில் நடக்கும் ஜாதி வெறியாட்டத்திற்கு பொறுப்பேற்பார்களா?

- ப.ஆறுமுகம், வேலூர்

பதில் 1 : இப்போது - நாங்குநேரி சம்பவத்திற்குப் பிறகு - ஜாதி அடையாளக் கயிறு, ஊர் முகப்பு மின் விளக்குக் கம்பங்களில் ஜாதியைக் குறிக்கும் வண்ணங்களை அழித்து மற்றும் ஜாதிய அடை யாளக் குறிப்புகளுக்கும் தடை விதிக்கும் தமிழ் நாடு அரசு மாவட்ட நிர்வாகத்தின் செயல் திறன் வரவேற்கத்தக்கது!

ஜாதிப் பாகுபாடுகள் நிலவும் குறிப்பிட்ட பள்ளிகள் கண்காணிக்கப்பட வேண்டியவை.

ஜஸ்டிஸ் சந்துரு ஒரு நபர் விசாரணைக் கமிஷனின் கவனத்திற்கும், இத்தகைய பள்ளிகள் பற்றி கொண்டு செல்லப்பட வேண்டும்.

----

கேள்வி 2 : பெண்கள், மாணவர்கள், முதியவர்கள், திருநங்கைகள் என்று தொடர்ந்து அவர்களின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை அறிவித்து அதை நடைமுறைப்படுத்தும் முதலமைச்சருக்கு ஆண்கள் குறித்து கவலை இல்லையா?

- வே.தமிழ்வேந்தன், வியாசர்பாடி

பதில் 2 : மேற்சொன்னவர்கள் முன்னேறினால் தானே ஆண்களும் வளருவார்கள்! தங்க ளுடைய "ஆண் கரிசனம்" மறக்க முடியாததே!

----

கேள்வி 3 : "திருமாவளவனும், நீங்களும் இனி உலகின் எந்தப் பகுதிக்குச் சென்றாலும் ஹிந்துக்கள் எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும்" என்று 'தினமலர்' வாசகர் கடிதம் பகுதியில் எழுதியுள்ளதே?

- த.சந்திரசேகர், வந்தவாசி

பதில் 3 : அப்படியா? 'தினமலர்' என்னும் இனமலர் பூணூல் நாளேடு எங்கள் இருவரையும் இணைத்துக் கூறுவது, எங்களது கொள்கைப் பாதையும், பயணமும் சரியாகச் செல்கின்றன என்பதற்குச் சரியான அடையாளங்கள். அதற்கு நன்றி!

----

கேள்வி 4 : "மோடியை எதிர்ப்பதால் தமிழ்நாடு மக்களுக்குக் கிடைக்கும் நலத் திட்டங்கள் கிடைக்காமல் போகும்" என்று தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர் கூறுகிறாரே?

- ம.நீலகண்டன், மதுரை

பதில் 4 : மோடி கட்சியின் ஒருதலைப் பட்ச நடவடிக்கையை பகிரங்கப்படுத்தியுள்ள அண்ணாமலைகளுக்கு நமது நன்றி!

----

கேள்வி 5 : "அடுத்த ஆண்டு இதே மேடையில் நான் நாட்டிற்காக செய்த திட்டங்கள், அதன் பலன்களை அடுக்குவேன்" என்று மோடி கூறியுள்ளாரே?

- வே.முகுந்தன், ஒசூர்

பதில் 5 : ஆசை யாரை விட்டது; அதை முடிவு செய்வது - சரியாகச் சொல்ல வேண்டுமானால் மோடி அல்ல; இந்நாட்டு வாக்காளர் பெருமக்கள்!

----

கேள்வி 6 : ஒன்றிய உள்துறை அமைச்சர், சட்ட அமைச்சர், நிதி அமைச்சர், பெண்கள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சர், பிரதமர் ஆகியோர் தொடர்ந்து நாடாளுமன்றத்தில் பொய்களைத் தோரணமாக்கி வருகின்றனரே?

- தி.கருணாகரன், திண்டிவனம்

பதில் 6 : அதுதானே பா.ஜ.க. - ஆர்.எஸ்.எஸ். கட்சி - ஆட்சியின் தனித்தன்மைகள்! அந்தப் பணியை ஒழுங்காக(!?) செய்கிறார்கள் போலும்!

----

கேள்வி 7 : 2013ஆம் ஆண்டிலிருந்து எவருக்கும் ஒன்றிய அரசின் செம்மொழி தமிழாய்வு மய்யம் வழங்கும் 'குறள்பீட விருது' வழங்கப்படவில்லையே - ஏன்?

- அ.செந்தில்குமார், புதுக்கோட்டை

பதில் 7 : "ஒன்றிய அரசின் அனுமதி வரவில்லை இன்னமும் என்பதால்தான்" என்று தமிழ் வளர்ச்சித் துறை அமைச்சர் கூறியுள்ளாரே!

----

கேள்வி 8 : "இந்த ஆண்டு இறுதிக்குள் புகைப் பழக்கம் இல்லாத இங்கிலாந்து" என்ற திட்டத்தை அறிவித்துள்ளது அந்த நாடு - இது சாத்தியமா?

- வே.செல்வம், வேளச்சேரி

பதில் 8 : சாத்தியமாகலாம் அந்த நாட்டில். கட்டுப்பாடு மிகுந்த மக்கள் அந்நாட்டு குடிமக்கள்!

----

கேள்வி 9 : திருப்பதி மலைப்பாதை வழியாக கோவிலுக்கு வருபவர்கள் சிறுத்தைகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக் கொள்ள கழிகளை கோவில் தேவஸ்தானம் தந்து அனுப்புகிறதே? 

- சா.கந்தசாமி, திண்டுக்கல்

பதில் 9 : "'ஏடு கொண்டல வாடு' எந்துக்கோ? ஏமண்டி தேவுடு சக்தி லேதா?" என்று கேட்கத் தோன்றுகிறதா?

----

கேள்வி 10 : "பகவத் கீதையை பொதுவாகக் கொண்டு புதிய அரசமைப்புச் சட்டத்தை உருவாக்க வேண்டும்" என்று மோடியின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் தலை வரும், நிட்டி ஆயோக் உறுப்பினருமான விவேக் தேவ்ராய் கூறியுள்ளாரே - இப்படி உயர் பதவியில் உள்ள ஒருவர் கூறுவது சரியாகுமா?

- மா.மாதவன், குற்றாலம்

பதில் 10 : மதவெறியர்களுக்கு மகுடத்தை இப்படி சூட்டினால் அதன் விளைவு இத்தகைய அபத்தங்களிலும், ஆபத்துகளிலும் தான் கொண்டு போய் முடியும் போலும்!


No comments:

Post a Comment