திராவிட இயக்கம் மேடைப் பேச்சில் தமிழ் வளர்த்த இயக்கம். திராவிட இயக்கம் வந்த பின் தான் அக்ராசனர் தலைவர் ஆனார். காரியதரிசி செயலாளர் ஆனார். திமுக ஆட்சிக்கு வந்த பின் தான் மதராஸ் பிரசிடென்சி சென்னை மாகாணம் ஆனது. பின்னர் மதராஸ் என்று மாநகருக்கு ஆங்கிலத்தில் இருந்த பெயர் சென்னை ஆனது. எங்கள் ஊர் மாயூரம் 'மயிலாடுதுறை' ஆனது.
ஒடுக்கப் பட்ட மக்களில் பட்டியல் பிரிவினரை தாழ்த்தப்பட்டோர் என்ற சொல்லால் குறிப்பிட்டது. அவர்கள் தாழ்ந்தவர்கள் அல்லர். தாழ்த்தப் பட்டவர்கள் என்பதைக் குறிக்கவே இந்த சொல். மொழியறிவு உள்ளவர்கள் இந்த வேறுபாட்டை அறிந்து கொள்வர். அவர்கள் ஆதி திராவிடர்கள் என்று அழைக்கப்பட்டனர். மற்ற திராவிட மக்களுக்கெல்லாம் காலத்தால் மூத்தவர்கள் என்பதைக் குறிக்கவே 'ஆதி திராவிடர்கள்' என்ற சொல். அதுவும் அவர்களைப் பெருமைப்படுத்தும் சொல் தான்.
முஸ்லிம்களையும் கிறித்துவர்களையும் பொது வெளியில் மதச் சிறுபான்மையினர் என்று யாரும் அழைப்பதில்லை. அரசுத் திட்டங்களையும் நிதி ஒதுக்கீட்டையும் அவர்களுக்கு வழங்குவதற்கான கணக்கெடுப்பில் அவர்கள் 'மதச் சிறுபான்மையினராகக் குறிப்பிடப்படுகின்றனர். இதில் அவர்களுக்கோ மற்றவர்களுக்கோ எந்த அவமதிப் பும் இல்லை. கலைஞர் ஊணமுற்றவர்களை 'மாற்றுத் திறனாளி' என்று அழைத்தார். மூன்றாம் பாலினத்தவர்களை 'திருநங்கையர்' என்று அழைத்தார். திராவிட இயக்கம் உருவாக்கிய ஒவ்வொரு கலைச் சொல்லும் மொழியழகு தான். அதை விட ஒவ்வொரு சொல்லிலும் சமூக நீதி இருக்கிறது. சிந்திப்பவர்களுக்கு இது புரியும்.
- ந. அப்துல் ரஹ்மான்
ஹாங்காங்
No comments:
Post a Comment