நமக்குத்தான் எத்தனை எத்தனை வயதுகள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 1, 2023

நமக்குத்தான் எத்தனை எத்தனை வயதுகள்!


நேற்று (31.7.2023) மாணவர்களிடையே பேசிய நமது முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் "எனக்கு 70 வயது ஆகிறது; என்றாலும் 20 வயது இளைஞனைப் போல் என்னால் மிகவும் சுறுசுறுப்புடன் இயங்க முடிகிறது என்றால் அதற்கு முக்கியக் காரணம் உங்களைப் போன்ற மாணவர்களை அடிக்கடி சந்திப்பது, பழகுவது என்பதேயாகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

வயது முதிர்ந்த பலரும் இளைஞர்களைப்போல ஓடி ஆடி, பணி செய்வதுதான் முதுமையை விரட்டி, இளமையை எதிர் கொள்ளும் வாய்ப்பு - தந்தை பெரியாரைப் போல், கலைஞரைப் போல் தொண்டாற்றிட முடிவதற்குரிய வாய்ப்பாகும். ஆனால் அவர்களது மனோ நிலையில் தமக்கு வயதாகி விட்டது; பிறர் துணையின்றி நாம் இயங்க முடியாது என்ற தன்னம்பிக்கைக் குறைவு - அதன் காரணமாகவே ஒருவகை தடுமாற்ற மனநிலை ஏற்படுகிறது.

வயது ஒரு பொருட்டல்ல...!

அது மனதை - உள்ளத்தைப் பொறுத்தது.

"நான் ஒருவரை வாலிபர் என்று கருதுவதற்கு அடிப்படை அவரது வயதல்ல; அவரது செயல்திறனை வைத்தே - அந்த செயல் திறன் என்பது அந்த நபரின் உள்ள உறுதியைப் பொறுத்ததுதான். ஒவ்வொருவருடைய வாழ்க் கையிலும் அவர் இளமையானவரா, வயோதி கத்தால் வருந்துபவரா என்று அளவீடு செய்வது, அவரது வாழ்வின் ஆண்டுகளைப் பொறுத்து இருக்காமல் அவரது ஆளுமை, ஆற்றல், அதற்கு மூலாதாரமான அவரது சிந்தனை, அவரைப் பற்றிய அவரது உள்ளக் கணக்கு இதை வைத்தே முடிவு கட்ட வேண்டும்!

எத்தனையோ 25 வயது இளைஞர்கள் 60, 70 வயோதிகர்களைப் போல், எல்லா சலிப்பு, சங்கடங் களுடன், அயர்ச்சியான வாழ்வு வாழ்கிறார்கள்.

அவர்களுக்கென குறிக்கோள், இலக்கு இல்லை.

குறிக்கோள், இலக்கு, பொதுத் தொண்டு இவை உண்மையாகவே கடமை - பொறுப்பே தவிர பதவி அல்ல - என்று கருதுபவர்கள் எவ்வளவு முதுமைக்குரிய வயதை அடைந்தாலும் அவர்கள் என்றும் இளையர்களே, இளமை என்பது அவர்களது உற்சாகத் தோட்டத்தில் பூத்துக் காய்த்திடும் கனிகளே ஆகும்!

1. ஒவ்வொருவருக்கும் பிறந்த நாள் கணக்குப்படி உள்ள  பிறந்த ஆண்டையொட்டிய வயது (Biological age)

2. உடலின் பற்பல உறுப்புகளின் ஒத்துழைப்பு அல்லது ஒத்துழையாமை இவற்றைப் பொறுத்து செயல்படுபவரின் வயது - உடற்கூறுபடி செயல்படும் வாய்ப்பினை அளவீடாகக் கொண்ட வயது. (Physiological age)

3. தளராத தன்னம்பிக்கை, இலக்கை எட்டிட என்றும் உழைக்கும் உள்ள உறுதி பொங்கும் உழைப்பின் மாண்பு இவற்றைக் கொண்ட உள்ளத் தின் இளமை காட்டும் உறுதி வயது. (Psychological age)

4. தோற்றத்தில் வயதானவர்களை இளை ஞரைப் போல் காட்டுவதோ, இளைஞர்களை வய தானவர்களைப் போல காட்டுவதோ ஒப்பனை களால் காட்டப்படும் வயது. இது ஒரு செயற்கை யுடன் அமைந்த வயது (Artificial appearance age) கலையுலகத்திற்கு இது முக்கிய தேவை.

இவற்றில் மேலே சுட்டிக்காட்டப்பட்ட வயது களில் அகத்தோற்ற உறுதி - புறத்தோற்ற முயற்சி இவற்றைப் பொறுத்தே வயதுகள்.

"அய்ந்தில் வளையாதது அய்ம்பதில் வளையுமா?" என்று முன்பு சொல்லிக் கொடுத்தார்கள் நமக்கு 

இப்போதெல்லாம்,

"அய்ந்தில் விளையாதது அய்ம்பதில் விளைகிறது" என்பதை பல வெற்றி அறுவடைகள் மூலம் - இன்பம் - துன்பம், வெற்றி - தோல்வி, இனிப்பு - கசப்பு, மகிழ்ச்சி - துயரம் என்ற அனுபவங்கள் மூலம் விளைகிறது என்பது விளையாட்டுப் பருவம் முடிந்து வாழ்வின் வினையாற்றுப் பருவத்தில் நடந்தேறுகிறது!

எனவே இடையறாத இளைஞர் தொடர்பும் இணை உழைப்பும் நம்மை என்றும் சீரிளமைச் செயல் மலர்களாகவே வைத்திருக்கும் என்பதால், சோம்பலை முறித்து சுறுசுறுப்புடன் வாழுங்கள் - வாழ்வின் முழுப் பயன் கிட்டுவது உறுதி! உறுதி!!

No comments:

Post a Comment