திராவிட வரலாற்று மய்யம் சார்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, August 8, 2023

திராவிட வரலாற்று மய்யம் சார்பில் ஒரு நாள் தேசிய கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் ஆசிரியர் விளக்கவுரை

 திரிபுவாதத்திற்கு எதிர்ப்பொருள் உண்மையைப் பேசு என்பதுதான்!

‘‘உண்மையை மட்டும் பேசு'' என்பதுதான் 

பெரியாரின் சுயமரியாதை இயக்கத்தின் தத்துவம்!

சென்னை, ஆக.8 திரிபுவாதத்திற்கு எதிர்ப்பொருள் என்னவென்றால், ‘‘உண்மையைப் பேசு’’ என்பதுதான். உண்மையை மட்டுமே பேசு என்பதுதான் பெரி யாருடைய தத்துவம் - சுயமரியாதை இயக்கத் தத்துவம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

கடந்த 4.8.2023 காலை சென்னை பெரியார் திடலில் உள்ள நடிவேகள் எம்.ஆர்.இராதா மன்றத்தில், திராவிட வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில், ‘‘இந்திய வரலாற்றின் மீதான திரிபுவாதத் தாக்குதல்'' என்ற தலைப்பில் நடைபெற்ற ஒரு நாள் கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார்.

அவரது தொடக்கவுரை வருமாறு:

திராவிட வரலாற்று ஆய்வு மய்யம் சார்பில், ‘‘இந்திய வரலாற்றின்மீதான 

திரிபுவாதத் தாக்குதல்’’ - கருத்தரங்கம்

மகிழ்ச்சியோடும், எழுச்சியோடும் திராவிட வர லாற்று ஆய்வு மய்யத்தின் சார்பில் நடைபெறக்கூடிய தேசிய கருத்தரங்கத்தில் ‘‘இந்திய வரலாற்றின்மீதான திரிபுவாதத் தாக்குதல்'' என்ற தலைப்பு - தேவையான ஒரு தலைப்பாகும்.

அறிஞர் பெருமக்களாக இருக்கக்கூடிய, கல்லூரி பேராசிரியர்களாக, பல்கலைக் கழகப் பேராசிரியர்களாக, அதையும் தாண்டி நிர்வாகத் துறையில் ஆளுமை உள்ளவர்களாக, ஓய்வு பெற்றிருந்தாலும், பொதுப் பணியில், பொதுத் தொண்டில் அறிவார்ந்த ஆய்வில் அக்கறை செலுத்தக்கூடிய பெருமக்களாக இருக்கக் கூடியவர்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார்கள்.

திராவிட வரலாற்று ஆய்வு மய்யம் என்ற பெருமை மிகு இந்த அமைப்பின் சார்பில், ஓர் அருமையான இந்தக் கருத்தரங்கத்திற்கு ஏற்பாடு செய்து, இதனை சிறப்பாக நடத்துவதற்குக் காரணமான அதனுடைய தலைவர் பேராசிரியரும், பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் மேனாள் துணைவேந்தருமான பேராசிரியர் முனைவர் ஜெகதீசன் அவர்களே,

நம் அனைவரையும் வரவேற்று உரையாற்றி, எல்லா மேடைகளிலும், ஊடகங்களிலும் திரிபுவாதங்களின் முகத்திரையைக் கிழித்தெடுத்து, ஒப்பனை இல்லாமல் அப்பட்டமான உண்மைகளை மக்கள் அறிந்துகொள்ளவேண்டும் என்பதற்காகத் தன்னுடைய வாழ்க்கையை, எஞ்சிய வாழ்க்கையை, பதவியைத் தாண்டிய ஓய்வு பெற்ற வாழ்க்கையை செலவழித்துக் கொண்டிருக்கக்கூடிய ஆய்வாளர் முனைவர் அ.கருணானந்தம் அவர்களே,

கீழடியில் இருந்துதான் நம்முடைய வரலாறே கூட புதிய பார்வையோடு செலுத்தப்படவேண்டும்

இந்நிகழ்ச்சியின் முதல் அமர்வில் சிறப்பான ஓர் ஆய்வுரையைத் தரவிருக்கக்கூடிய - கீழடி தொல்லியல் அகழாய்வு என்பது உலகத்தின் பார்வையை ஈர்த் திருக்கக் கூடியது மட்டுமல்ல - சிந்துவெளி நாகரிகத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் வருகிறதோ - அதுபோல, சிந்துவெளியில் இருந்து மட்டுமல்ல; இந்தப் பகுதியிலே கீழடியில் இருந்துதான் நம்முடைய வரலாறே கூட புதிய பார்வையோடு செலுத்தப்படவேண்டும் என்ற அள விற்கு, அருமையான அந்த ஆய்விற்கு மிகவும் உறு துணையாக இருக்கக்கூடிய டாக்டர் அமர்நாத் இராமகிருஷ்ணன் அவர்களே,

பல்கலைக் கழக மேனாள் பேராசிரியர் டாக்டர் பி.சண்முகம் அவர்களே,

பச்சையப்பன் கல்லூரியின் மேனாள் முதல்வர் வரலாற்றுப் பேராசிரியர் அருமைச் சகோதரர் அரங்க சாமி அவர்களே,

இந்த அரங்கத்தில் சிறப்பாகக் குழுமியுள்ள அய்.ஏ.எஸ். அதிகாரிகளாக இருந்து, சமூகத் தொண்டு, சமூகப் பார்வையோடு தங்களுடைய கடமையையாற்றிய அறிஞர் பெருமக்களே,

பேராசிரியப் பெருமக்களே, ஆய்வாளர்த் தோழர்களே, வரவிருக்கக்கூடிய பேராசிரியர் மார்க்ஸ் அவர்களே,

கருத்தரங்கம் மட்டுமல்ல,

 ஓர் ஆய்வரங்கம்

இந்த அரங்கம் முழுவதும் இருக்கக்கூடிய தோழர் களே, நீங்கள் அனைவரும் பெரியார் திடலுக்கு வந்திருப்பதைப் பார்க்கும்பொழுது மிக ஆக்கப்பூர்வ மான விவாதங்கள் இந்த ஆய்வரங்கத்தில், கருத்தரங்கத் தில் வலம்வரும் என்ற நம்பிக்கை ஏற்படுகின்றது. இது வெறும் கருத்தரங்கம் மட்டுமல்ல, ஓர் ஆய்வரங்கமும் கூட.

பேராசிரியர் டாக்டர் சுந்தரம் அவர்களே, மற்றும் இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ளக்கூடிய அருமை நண்பர்களே - இதற்குக் காரணமான கழகப் பொரு ளாளரும், இந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான அருமை நண்பர் வீ.குமரேசன் அவர்களே,

இணைப்புரை வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய கழகத் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னா ரெசு பெரியார் அவர்களே மற்றும் தோழர்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத் தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நான் ஒரு வாழ்நாள் 

பெரியார் மாணவன்!

நான் ஒரு சாதாரண, சமூகப் பணியாளன்; சமூகத் தொண்டன். என்னுடைய வயதையெல்லாம் குறிப் பிட்டுச் இங்கே சொன்னார்கள். எனக்கு மற்ற எல்லா தகுதிகளைவிட, ஒரே ஒரு தகுதி - வாழ்நாள் தகுதி இருக்கிறது என்று சொன்னால், நான் ஒரு வாழ்நாள் பெரியார் மாணவன்.

‘ஆசிரியர்' என்று அவர்கள் ‘விடுதலை'யை வைத்து, அய்யா கொடுத்த பெயரை வைத்து அழைத்தாலும்கூட, நான் ஆசிரியராக இருந்தாலும் வாழ்நாள் மாணவன் - அதுவும் பெரியாரின் மாணவன்.

‘‘உண்மையை மட்டுமே பேசு'' என்பதுதான் பெரியாரின் சுயமரியாதை இயக்கத் தத்துவம்!

ஏனென்றால், அதற்கு ஒரு தகுதி உண்டு. என்ன அந்தத் தகுதி என்றால், உண்மையை மட்டுமே பேசு என்பதுதான் பெரியாருடைய தத்துவம் - சுயமரியாதை இயக்கத் தத்துவம்.

பல பேருக்கு மிகப்பெரிய அளவிற்கு அதிர்ச்சி யூட்டக் கூடிய செய்தி.

தந்தை பெரியார் அவர்கள் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்குவதற்கு முன்பிருந்தே, உண்மையைப் பேசவேண்டும் என்பதற்காக, தன் னுடைய பெற்றோருடைய அறிவுரையை நீதி மன்றத்தில் மறுத்தவர்.

எப்பொழுது?

ஒரு நூற்றாண்டுக்கு முன்பு. பல பேருக்கு இந்தச் செய்தி தெரியாது. நான் அதனால்தான் அவருடைய மாணவன்.

திரிபுவாதத்திற்கு எதிர்ப்பொருள்

உண்மையைப் பேசு என்பதுதான்!

எனவே, திரிபுவாதத்தை நாம் விளக்கவேண்டும் என்று சொன்னாலே - அதற்கு எதிர்ப்பொருள் என்ன வென்றால், ‘‘உண்மையைப் பேசு'' என்பதுதான்.

தொடக்கப் பள்ளிக்கூடத்தில், உண்மையைத்தான் பேசவேண்டும்; உண்மையைத்தான் பேசவேண்டும் என்று ஆசிரியர்கள், மாணவர்களுக்குச் சொல்லிக் கொடுப்பார்கள்.

ஆனால், இப்பொழுது ‘‘உண்மையைப் பேசாதே, உண்மையைப் படிக்காதே, உண்மையை எழுதாதே'' என்பது நம்முடைய நாட்டில் நடைமுறையாக இருக்கக் கூடிய அளவிற்கு இருக்கிறது.

அதன் காரணமாகத்தான், பேராசிரியர் ரஷீத்கான் போன்றவர்கள் எல்லாம் இங்கே வந்து, இன்றைக்கு நாமெல்லாம் சிந்தனையாளர்களாக இந்த அரங்கத்தில் இருக்கிறோம்.

தந்தை பெரியார் அவர்கள், வியாபாரத்தின் பொருட்டு, அவருடைய தந்தையாரின் கையெழுத்தைப் போட்டுக் கொடுத்தார்.

பல பேருக்கு இந்தத் தகவல் தெரிந்திருக்க வாய்ப் பில்லை. அதைச் சொல்கிறேன்.

தந்தை பெரியார் இயக்கத்திற்கு, பொதுவாழ்விற்கு வருவதற்கு முன் அவர் வியாபாரியாக இருந்தபொழுது, வெங்கட்ட நாயக்கர் மண்டி என்பது அவருடைய வியாபார முகவரி.

பிறகு, வெங்கட்ட நாயக்கர், ராமசாமி நாயக்கர் மண்டி என்று, தனது இரண்டாவது பிள்ளையின் பெயரை வைத்தார். ஆனால், பழைய கணக்கு என்று வரும் பொழுது வெங்கட்ட நாயக்கர் என்று கையெழுத்துப் போடுவது - அந்தக் காலத்தில் வழக்கமாக இருந்தது.

அந்த முறையில், தந்தை பெரியார் அவர்கள் கையெழுத்துப் போட்டார்.

110 ஆண்டுகளுக்கு முன்பு...

பொய்க் கையெழுத்துப் போட்டுவிட்டார் என்று தந்தை பெரியார்மீது ஒருவர் வழக்குப் போட்டார் - 110 ஆண்டுகளுக்கு முன்பு. இந்த நிகழ்வை தந்தை பெரியார் அவர்கள் கைப்பட எழுதி பதிவு செய்திருக்கிறார்கள்.

வெள்ளைக்காரர்கள் காலத்தில், ஆட்சியாளர்களே நீதிபதிகளாக இருப்பார்கள்.

வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது - ‘‘இன் னொருவருடைய கையெழுத்தை நீங்கள் போட்டிருக் கிறீர்கள்; ஆகவே, நீங்கள் ஜெயிலுக்குத்தான் போக வேண்டும் - நீங்கள் செய்தது கிரிமினல் குற்றம்'' என்று சொல்கிறார்கள்.

ஜெயிலுக்குப் போவது 

மிகப்பெரிய அவமானம்!

தந்தை பெரியாரின் குடும்பம் ஈரோட்டில் வசதியான குடும்பம். ஜெயிலுக்குப் போவது மிகப்பெரிய அவ மானம் என்று கருதக்கூடிய காலம் அது. ஜெயிலுக்குப் போய்விட்டுவந்தால்,  திருமணத்திற்குப் பெண் கொடுக்கமாட்டார்கள்; அதுபோன்ற காலகட்டம் அது.

ஆகவே, தந்தை பெரியார் அவர்கள் ஜெயிலுக்குப் போகக்கூடாது என்பதற்காக, பெரிய புகழ்பெற்ற வழக்குரைஞரைப் பார்த்து, ‘‘எவ்வளவு பணம் செல வானாலும் பரவாயில்லை, என்னுடைய மகனை ஜெயிலுக்குப் போகாமல் காப்பாற்றுங்கள்'' என்று அவரு டைய தந்தையார் வெங்கட்ட நாயக்கர் சொன்னார்.

வழக்குரைஞர், ‘‘நான் பார்த்துக் கொள்கிறேன். நான் சொல்வதை மட்டும் அவரை செய்யச் சொல்லுங்கள்'' என்றார்.

வெள்ளைக்கார மாவட்ட ஆட்சியருக்கு 

ஏற்பட்ட ஆச்சரியம்!

‘‘அந்தக் கையெழுத்து என்னுடைய கையெழுத்து அல்ல என்று சொன்னால் போதும், நான் உங்கள் மகனை  வழக்கிலிருந்து விடுவிக்கிறேன்'' என்று வழக் குரைஞர் சொன்னார்.

திருச்சியில் வழக்கு விசாரணைக்கு வந்தது- வெள் ளைக்கார மாவட்ட ஆட்சியர் - மாவட்ட மாஜிஸ்திரேட் முன்பு.

தந்தை பெரியாரின் சார்பில் வழக்குரைஞர் எழுந்து பேச முற்பட்டபொழுது, 

‘‘அய்யா, எனக்காக நீங்கள் வாதாடவேண்டாம்; நான் உண்மையைச் சொல்கிறேன். நீதிபதி அவர்களே, நான் தான் என்னுடைய அப்பாவின் கையெழுத்தைப் போட் டேன். அந்தக் கையெழுத்தை நான் போடவில்லை என்று சொல்லமாட்டேன்'' என்று சென்னார்.

தனக்காக வாதாட வந்த வழக்குரைஞரைக்கூட வாதாட வேண்டாம் என்று சொல்லிவிட்டார்.

இதைப் பார்த்த வெள்ளைக்கார ஆட்சியருக்கு ஆச்சரியம் ஏற்பட்டது. தீர்ப்பு எழுதினார்.

உண்மையை சொன்னதற்காக, 

இவரை விடுதலை செய்கிறேன்!

‘‘இது ஒரு விசித்திரமான வழக்கு. நான்தான் கையெழுத்துப் போட்டேன் என்று அவரே ஒப்புக்கொள்கிறார். அதனால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. இன்னொருவர் ஏமாற்றப்பட வில்லை. யாரையும் மோசடி செய்யும் நோக்கில், அவர் அதைச் செய்யவில்லை. உண்மையை சொன்னதற்காக, நான் இவரை விடுதலை செய்கிறேன்'' என்றார் நீதிபதி.

தந்தை பெரியார், தம் வாழ்நாளில் நடந்த இந்த நிகழ்வை மிக விரிவாக ஒரு கட்டுரையில் எழுதி யிருக்கிறார்.

‘‘அன்றைக்கு முதற்கொண்டு நான் சுயமரியாதை இயக்கத்தைத் தொடங்கியதே உண்மையைச் சொல்ல வேண்டும் என்பதற்காகத்தான்'' என்று தெளிவுறுத்து கிறார்.

வடநாட்டில் ஜோதிபாபூலேவின் 

‘‘சத்ய சோதக் சமாஜ்’’ 

இதே கருத்தை நம்முடைய நாட்டில் வடபுலத்தில் பரப்பியவர் ஜோதிபாபூலே அவர்கள். சமூகநீதிக்காகப் பாடுபட்டவர் அவர்.  அவருடைய இயக்கத்திற்குப் பெயரே ‘‘சத்ய சோதக் சமாஜ்'' - உண்மை நாடுவோர் சங்கம். அதைப் பின்பற்றித்தான் பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் போன்றவர்கள் பின்னாளில் வந்தார்கள்.

தந்தை பெரியார் அவர்கள் இங்கே தொடங்கியதும் உண்மை நாடுவோர் சங்கம். அவர் தொடங்கிய அச்சகத்திற்குப் பெயரே உண்மை அச்சகம்தான்.

இன்றைக்கும் நாங்கள் நடத்துகின்ற பத்திரிகை - தந்தை பெரியார் தொடங்கி வைத்த ஒரு பத்திரிகையின் தலைப்பு ‘‘உண்மை'' என்பதாகும்.

ஆகவே, வரலாற்றில் உண்மை இப்பொழுது இருக்க வேண்டும். திரிபுவாதம் இருக்கக்கூடாது என்பதற்காகத் தான் இந்த தேசிய கருத்தரங்கம்.

(தொடரும்)


No comments:

Post a Comment