25 ஹரிஜன நபர்களடங்கிய ஒரு கூட்டம் நேற்று காலை 9 மணிக்கு கொழுத்த பணக்காரப் பார்ப்பனர் வதியும் அம்மன் சந்நிதித் தெரு வழியாக குலசேகர நாதர் கோவிலுக்குச் சென்றனர். அவர்களை கோவில் வாயிலில் நின்று தேவஸ்தான அதிகாரிகள் வர வேற்றனர். பிறகு அக் கூட்டம் கோவிலின் உட் பிரகாரத்தைச் சுற்றி வந்து சுவாமி தரிசனம் செய்த பிறகு பிரசாதங்கள் பெற்று, போன வீதி வழியாகவே வீடு திரும்பினர்.
ஆனால், எலட்டூர் கோவில் பிரவேசத்தின் போது அங்குள்ள முக்கியமான சில பார்ப்பனர்கள் குறுக் கிட்டனர். அவ்விஷயம் போலீசாருக்கு எட்டிற்று. உடனே அவ்வூர் இன்ஸ்பெக்டர் சில ஜவான்களோடு அவ்விடத்தையுற்றதும் ஹரிஜனங்கள் யாதொரு தடையுமின்றி பார்ப்பனர் தெரு வழியே சென்று கோவிலையடைந்தனர். அதற்கு மேல் அசம்பாவித மாக யாதொன்றும் நடைபெறவில்லை.
பிறகு, அன்று மாலை சில பள்ளர்கள் கடவுள் வணக்கத்திற்காக குலசேகரநாதர் கோவிலுக்குச் சென்றனர். அவர்கள் அம்மன் சந்நிதித் தெரு வழியே சென்று கோவிலின் முக்கிய வாயில் வழியாக உட் சென்று கடவுளை வணங்கி, பிரசாதம் பெற்று சென்ற வழியாகவே யாதொரு தடையுமின்றித் திரும்பினர்.
இராஜ பிரகடனத்தின் பேரில் அம்மன் சந்நிதித் தெரு வழியாக தாழ்த்தப்பட்ட மக்கள் அனுமதிக் கப்பட்டது செங்கோட்டை சரித்திரத்தில் இதுதான் முதல் தடவை என்று சந்தேகமின்றிக் கூறலாம்.
கற்பூரம் ஏற்றப்பட்ட தாம்பாளத்தை ஜாதி மத வேற்றுமை பாராது பூசாரி கடைசிவரை எடுத்துச் செல்ல வேண்டுமென்று இலஞ்சிகுமரர் கோவிலின் கோவிலதிகாரிகள் உத்தரவிட்டது குறிப்பிடத்தக்கது.
இன்று காலை கடைசியாக சில ஹரிஜனங்கள் பாண்டு வாத்தியங்களுடன் சந்நிதித்தெரு வழியாக பெருமாள் கோவிலுக்குச் சென்று பிரசாதம் பெற்று வெளிப் போந்தனர். அப்போது சில பார்ப்பனர்கள் தடைசெய்ய முயன்றும், தாழ்த்தப்பட்ட மக்கள் உறுதியுடன் இருந்ததால், விட்டுக்கொடுக்க வேண்டிய தாயிற்று.
- ‘விடுதலை’ 16.12.1936
No comments:
Post a Comment